Wednesday, January 12, 2022

AVVAIYAR

 ஒளவையின் தமிழ்: -   நங்கநல்லூர் J K  SIVAN 


1. அருந்தமிழ் பாட்டி.

நாம்  தமிழ் பேசுபவர்கள்.  தமிழர்கள்.  நம் தாய் மொழி சிறக்க  ஆயிரமாயிரம்  ஆண்டுகளாக  எத்தனையோ பெருமக்கள்  அதை சிறப்புற  வளர்த்தவர்கள் உள்ளனர்.  அவர்களில்  என்றும் நினைவில் இருப்பவள் ஒரு  பாட்டி.  ஒளவையார்.  அருமையான  தமிழ் விருந்து படைத்தவள்.

''ஒளவை  யார்?'' . மூன்று  ஒளவையார்கள்  இருந்ததாக தெரிகிறது. முதல் ஒளவையார்  சங்ககாலத்தவர். அவர் தான்  முருகனிடத்தில்  ''சுட்ட பழம் வேண்டுமா, சுடாத பழம் வேண்டுமா''   வில்  ஏமாந்தவர். 50க்கு மேல் புறநானூற்றில்   பாடலாசிரியர்.  ரெண்டாம் ஒளவையார்  தான் கிழவியாக நமக்கு காட்சி அளிப்பவர். கம்பர் ஒட்டக்கூத்தர் காலத்தவர். கெட்டிக்காரி.  மூன்றாம் ஒளவையார்  நல்வழி, மூதுரை ஆத்திச்சூடி  கொன்றை வேந்தன் எல்லாம் எழுதியவர்.  நாம் மூவரையும் ஒண்ணடி மண்ணடி யாக கலந்து   ஒரே  ஒளவையாராக  ஏற்று மார்கிஸ்கிறோம். அவர் தமிழை அனுபவிக்கிறோம்.

ஒளவையார் எழுத்துக்கள்  காலத்தால் மறையாதவை. சக்தி  வாய்ந்த அந்த  சொற்கள்,  ஆழ்ந்த அனுபவம்,  சிறந்த  எண்ணங்களின்  கோர்வையாக  வெளி வந்தவை.  உள்ளடங்கிய  உண்மை  என்றும்  உலக வாழ்வுக்கு  இன்றியமையாதது.  அவை  இணையற்ற  அறிவுரைகள்.  எளிதில்  நமக்கு  கிட்டியவை.  படித்தாலே  புரியும்  தன்மை  கொண்டவை.   மாதிரிக்கு  கொஞ்சம்  கீழே  கொடுக்கிறேன்.

நாம்   எத்தனை பேருக்கு  எவ்வளவோ   உதவி செய்கிறோம். அவர்கள்   அனைவரும் நாம்  செய்த  உதவிகளை  நினைவில் கொண்டு மனதில்  அன்போடும்  நன்றியோடும்  நாம் எதிர்பாராமலே  நடந்து கொள்கி றார்களா?  அல்லது  ''சரிதான்  போய்யா, ரொம்ப  பெரிசா செஞ்சு  கிழிச்சுட்டே நீ  ''  என்று  தூசியை  தட்டிவிடுவது போல் நம்மையே  உதறி விடுகிறார்களா? - ரெண்டுமே   நடக்கிறதை இன்றும் பார்க்கிறோமே. முதல் வகையினரான, நல்லவர்களுக்கு, நன்றியுள்ளவர்களுக்கு  நாம்  செய்த  உதவி  கல்லில்  செதுக்கி வைத்த  கல் வெட்டு போல்  என்றும்  மறையாது நிற்கும்.  ரெண்டாம் வகை நன்றியற்ற ஜீவன்களுக்கு  நாம் செய்த உதவி,  தண்ணீர் மேல்  எழுதிய  கதை  போல் காணாமல் போகுமாம்.  

''நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்
கல்மேல் எழுத்துப் போல் காணுமே - அல்லாத
ஈரமிலா நெஞ்சத்தார்க்கு ஈந்த 
உபகாரம்
நீர் மேல் எழுத்துக்கு நேர்.''

எவ்வளவு  எளிமையான  பாடல்,   நிறைய பேருடன் பழகுகிறோம்.  நண்பர்கள்  என்று  அவர்களை நினைக்கும்போது அவர்கள்  ஏழைகளாக இருந்தாலும் நேர்மை,  பண்பு, இனிய ஸ்வபாவம் கொண்டு நமது  பெருமதிப்பைப் பெறுகிறார்கள்.  ஏதோ காலத்தின்  கோளாறினால் நொடித்துப் போயிருந் தாலும் அவர்களது  பரந்த மனப்பான்மை, நற்குணம், நம்மை  மகிழ்விக்கிறது.  இது  எது போலவாம்  தெரியுமா?
பாலை  எவ்வளவு  காய்ச்சி சுண்ட வைத்தாலும்  அதன்  சுவை  கூடுமே  தவிர  குறையாது அல்லவா?  அதுபோலவும்,  வெண்மையான  சங்கு  பார்த்திருக்கிறீர்களா.  சென்னைக் கடற்கரையிலும்  பொருட்காட்சி சாலையிலும்  தான்  பெரிய  வெண்  சங்கு பார்க்கலாம்.  அதை நெருப்பில்  வாட்டி  சுட்டால் கூட அதன்  வெண்மை நிறம்  மாறாது.  அது போலவும்  தான்  இப்படிப்பட்ட  நல்லவர்  களுடன் நாம் கொண்ட  நட்பு  என்கிறாள் பாட்டி .  அந்த பாடல்:

'' அட்டாலும் பால் சுவையில் குன்றாது அளவளாய்
நட்டாலும் நண்பு அல்லார் நண்பு அல்லர்
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு
சுட்டாலும் வெண்மை தரும்''

தலைகீழே  நின்றாலும்  சில  காரியங்கள்  நமக்கு  கை கூடவில்லை  என்பதை   கண்கூடாக காண்கிறோமே.  இது  எதனால்? அது நடக்கவேண்டிய  வேளை  இன்னும்  வரவில்லை.  நேரம்  நல்ல  நேரமாக  மாறவில்லை .இறைவன் அருள்  இன்னும் கிட்டவில்லை. தக்க நேரத்தில்  தானே  வரும். எடுத்த  காரியம்  அப்போது தான் நிறைவேறும்.  இது எது போலவாம் தெரியுமா? ஒளவை சொல்கிறாள் கேளுங்கள்: 

உயரமாக  வாளிப்பாக  வளர்ந்தாலும்,  வளர்த்ததாலும்  ஒரு  மரத்தில் பழங்கள்  தோன்றிவிடாது.  அது பழுக்கும் காலமும் பருவமும்  வந்தால்,  தானே  குலை குலையாக  பழங்களைத்  தரும்.  அதுவரை  பொறுமை   வேண்டும்.

''அடுத்து முயன்றாலும் ஆகும் நாள் அன்றி
எடுத்த கருமங்கள் ஆகா - தொடுத்த
உருவத்தால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம்
பருவத்தால் அன்றிப் பழா''

சிலர்  உறுதியானவர்கள். தளர்வற்றவர்கள்.  எது  வந்தாலும்  தாங்கக்கூடிய  திட  மனம் பெற்றவர்கள். பயமா?  கிலோ என்ன விலை ? என்று கேட்பவர்கள். உயிர் போகும் வரை,   கடைசி வரை எதிர்த்து நிற்பவர்கள்,  தொய்ந்து போக மாட்டார்களே.  இவர்களை  எதற்கு  ஒப்பிடலாம்  என்று யோசித்தால் ஒரு  உதாரணம்  கிடைத்து விட்டதே.  பெரிய கருங்கல், பாராங்கல்  தூண்  ஒன்று எதிரே தெரிகிறது பார்த்தாயா?  அதன்  மீது  எத்தனை  சுமை ஏற்றினாலும்  தாங்கி நிற்கும். வளையாது. தாங்க முடியாத  அளவுக்கு அதன்  மீது  சுமையேற்றினால்  ஒரு   நிலையில் பிளந்து விழுமே அன்றி வளையாது. அப்படிப்பட்டவர்கள் தான்  ஒளவை மேலே சொன்ன  நபர்கள்.

''உற்ற இடத்தில் உயிர் வழங்கும் தன்மையோர்
பற்றலரைக் கண்டால் பணிவரோ? - கல்தூண்
பிளந்து இறுவது அல்லால் பெரும் பாரம் தாங்கின்
தளர்ந்து வளையுமோ தான்.''

நல்ல  ஆசாமி  அவன்  என்று  ஒருவனைப் பற்றி பேசுகிறோம்.  அவனைப் பார்க்க  விருப்பமாகிறது. அவனோடு பேசும்போது காது இனிக்கிறது.   வாய்  மணக்கிறது. அவனது சிறப்பு  மிக்க  குணங் களை  வருவோர் போவோர் போகும்  இடம்  எல்லாம்   சொல்கிறோம். நினைவு கூறுகிறோம்.  எப்படி  அவர்களிடம்  இத்தகைய  காந்த  சக்தி?  இந்த  வியப்பு,   ஒரு  எளிய ,  அர்த்தம் தேடிப்போகத் தேவையில்லாத  இதோ இந்த  பாட்டில் இருக்கிறது:  

''நல்லாரைக் காண்பதுவும் நன்றே; நலம்மிக்க
நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே - நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் நன்று.''

இந்த பாடல்களை  அந்த காலத்தில் எங்களுக்கு பள்ளிக்கூடத்தில் போதித்தார்கள்.  இப்போதைய  பாட திட்டத்தில் ஏன்  இவை காணாமல் போய்விட்டன.  ஒளவையாரை மறந்து போய்விட்டார்களே?

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...