Tuesday, January 11, 2022

THIRUPPALLI EZHUCHCHI

 திருப்பள்ளி எழுச்சி  -  நங்கநல்லூர்  J K   SIVAN

மார்கழி 28ம்  நாள்.

ஆவுடையார் கோவிலின் அழகு.

8.  முந்திய முதல் நடு இறுதியும் ஆனாய்
மூவரும் அறிகிலர் யாவர் மற்று அறிவார்?
பந்தணை விரலியும் நீயும் நின் அடியார்
பழம் குடில்தொறும் எழுந்தருளியபரனே!
செந்தழல் புரை திருமேனியும் காட்டி
திருப்பெருந்துறை உறை கோயிலும் காட்டி
அந்தணன் ஆவதும் காட்டி வந்து ஆண்டாய்!

'' திருப்பெருந்துறை ஈசனே, என்  அருமையான அமுதமே! எப்பொருளுக்கும் முற்பட்ட முதலும், நடுவும் முடிவும் ஆன  பரப்ரம்மமே,  மும்மூர்த்திகளும் உன்னை அறியமாட்டார்கள்  என்கிறபோது  வேறு யாவர் அறியக்கூடியவர்?    பந்தை ஏந்திய விரல்களை உடைய உமையம்மையும் நீயுமாக உன்னுடைய அடியார்களுடைய பழைய சிறு வீடுகள்  தோறும் எழுந்தருளிய  தயாளா, சிவந்த நெருப்பை ஒத்த வடிவத்துடன்  ஒளிர்பவனே,   திருப்பெருந்துறையில் வீற்றிருக்கின்ற திருக் கோயில் அதிபதியே,  தண்ணொளி மிக்க  தீன தயாளா,  காருண்ய ஸிந்தோ, அருளாளா அன்பும் பாசமும் நேசமும் கொண்டு என்னை  ஆட்கொண்டவனே! பள்ளியினின்றும் எழுந்தருள்வாயாக.
மணிவாசகரின் சிவபக்தி,  நெருக்கமான  இறையன்பு பாடலில்  மேலோங்கி நிற்கிறது.

பொதுவாக,  சிவாலயங்கள் பெரும்பாலும் கிழக்கு நோக்கியிருக்கும். சில மேற்கு நோக்கியிருக்கும். ஆனால் குரு மூர்த்தமாக அமைந்த  ஆவுடையார் கோவில்   தெற்கு நோக்கியுள்ளது. தவிர, சிவாலயங்களில் இறைவன், சிவலிங்கபாண வடிவில் அருவுருவாகக் காட்சிதர, இக்கோயிலில் மட்டும் குருந்த  விருக்ஷம்  மேவிய குரு பரனான ஆத்மநாதர் அருவமாக இருந்து சித்தத்தைச் சிவமாக்கும் சித்தினைச் செய்தருளு கின்றார். 

மனித உடலில் உள்ள  ஆறு  ஆதாரங்களை நினைவூட்டும் வகையில் கனகசபை முதலான ஆறு சபைகளும் இக்கோயிலில் உள்ளன. திருப்பரங்குன்றத் திருப்புகழில்    "அருக்கு மங்கையர்" என்று தொடங்கும் பாடலில் "வழியடியர் திருக்குருந்தடி அருள் பெற அருளிய குருநாதர்" என்று ஆத்மநாதசுவாமியை  அருணகிரிநாதர்  போற்றிப்பாடுகிறார். 

ஆத்மலிங்க வடிவில்  ஈசன் இப்பெருந்துறையில் எழுந்தருளியுள்ள சிறப்பை - அருவ நிலையை - ஆத்மசொரூபமாக உள்ள நிலையை

"பார்த்து நாம் குருவாய் வந்தனுக்கிரம்
பதனமாய் வைத்து மனத்துள்ளே - நிதம்
பத்திசெய் வேறொன்றுமில்லை யில்லை - இது
பரம ரகசியம் என்று கொள்ளே" -

என்று மாணிக்கவாசகர் விலாசம் என்னும் பழைய நூல் புகழ்கிறது.
இத்தலம் வனம், தலம், புரம், தீர்த்தம், மூர்த்தி, தொண்டர் எனும் 6 சிறப்புக்கள் அமைந்தது 
1) வனம் - குருந்தவனம் 
2) தலம் - தீர்த்தத்தலம் 
3) புரம் - சிவபுரம் 
4) தீர்த்தம் - திருத்தமாம் பொய்கை 
5) மூர்த்தி - ஆத்மநாதர் 
6) தொண்டர் - மாணிக்கவாசகர்.

கோயிலின் முன்புறம் திருவாவடுதுறை ஆதீனப் பெயர்ப் பலகையுள்ளது. எதிரில் சற்று உள்ளடங்கி,  ஒரு  சிதிலமான  குளம்.  சாலையிலிருந்து கோயிலுள் நுழையும் முன்பு மண்டபத்தின் மேற்புறம் குருந்தமர உபதேசக்காட்சி  கண்ணில் படுகிறது.   உட்புறம் சென்றால்,  சுற்றிலும் கடைகள், மண்டபத்தின்  மர வேலைப்பாடுகள்  அமைந்த  விதானம்  பராமரிப்புக்கு ஏங்கி நிற்கிறது.

மேலே  பார்த்தால்    விதானத்தின் கொடுங்கையின் மேலே ஒரு குரங்கும் (கீழ் நோக்கியவாறு) , ஒரு உடும்பும் (மேல் நோக்கியவாறு) செதுக்கப்பட்டிருப்பதைக் காணலாம். அலைபாயும் குரங்கு மனத்தை அடக்கி, ஆத்மநாதரின் திருவடியில் உடும்புப் பிடிபோல நிறுத்தி - அவருடைய திருவடிகளைச் சிக்கென பிடித்து, உய்வுபெற வேண்டுமென்னும் எண்ணத்துடன் உள்ளே போ'' என்று  அறிவுறுத்துகிறதோ? 

அடுத்து  காண்பது  ஒரு பெரிய  மண்டபம்  - ரகுநாத பூபால மண்டபம். அற்புதமான  கலைப் பொக்கிஷம். வேலைப்பாடுடைய பெரிய மூர்த்தங்கள், அகோர வீரபத்திரரும், ரண வீரபத்திரரும் உட்புறமாகத் திரும்பியவாறு காட்சி தருகிறார்கள்.  நடுவே,  மேற்புறத்தில்   வண்ணமயமாக  விராட் சொரூபம்.  எத்தனையோ தமிர்ஷ்டர்கள் கைங்கர்யத்தில் இப்படிப்பட்ட ஆலயங்கள் நமக்கு  கிடைத்தும் நாம் பொறுப்பாக  அவற்றை பரம்மரிப்பதில்லையே என்கிற வருத்தம்.

பாலவனம் ஜமீன்தாரர்களின் முன்னோர்கள் ,வேதவனப் பண்டாரம், ஆறுமுகப் பண்டாரம்  ஆகியோர்  இந்த மண்டபத்தை  கிட்டத்தட்ட  350 வருஷங்கள் முன்பு  கட்டியிருக்கிறார்கள்.


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...