Monday, January 31, 2022

SURDAS & TULSIDAS

 


துளசி தாசர் -   நங்கநல்லூர்  J K  SIVAN

2  துளசிதாஸும்   ஸூர் தாஸும் !
                                                                                                                           
சில கதைகள்,  சரித்திரங்கள் படிக்கும்போது  அதில் வரும்  பாத்திரங்கள், அவர்கள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள்,  பாத்திரங்கள்  நடந்து கொள்ளும் விதம், எல்லாமே  நமது மனதில் பதிந்து விடுகிறது. அதே கதையை  வேறு ஒரு சந்தர்ப்ப சூழ்நிலையில் இன்னொருவருடைய  அனுபவமாக படிக்கும்  போதோ, கேட்கும் போதோ, அடடே, இப்படியுமா?  என்று தோன்றி   எது சரியானது என்று கேள்விக்குறி  மண்டையில் நுழைகிறது.  ரெண்டு பேர் எங்கெங்கோ ஒரே மாதிரி அனுபவத்தை கொஞ்சமும் மாறாமல் பெற முடியாதே.  ஒரே சம்பவத்தை பலர்  பலவித ரூபங்களில் அல்லவோ வெளிப்படுத்துகிறார்கள்.  நமக்கு  அதனால் தான்  ராமாயணம் , மஹா பாரதம், பாகவதம்,  பக்த விஜயம்  போன்றவை எத்தனை முறை, யார் யார் வாய் கேட்பினும் அலுப்பு  தட்டுவதே இல்லை.  மேலும் மேலும் கேட்க  துடிக்கிறோம்.
   
பெண்ணின்பமே பேரின்பம் என வாழ்ந்து கொண்டிருந்தார் ஒருவர். ஒருநாள் இரவு வேளை...
மனைவியின் நினைவுடன் வீட்டுக்குச் செல்லும் போது பெருமழை பிடித்துக் கொண்டது. அதைப் பொருட்படுத்தாமல் வீடு நோக்கி நடந்தார். மனம் முழுவதும் அவளது நினைப்பு!  மழை காலம்.  வீட்டுக்குப் போக வேண்டுமானால், இடையிலுள்ள நதியை கடக்க வேண்டும். ஆற்றில் வெள்ளம் வந்ததால், ஓடக்காரன் வீட்டுக்கு போய் விட்டான். இவருக்கோ, எப்படியும் ஆற்றைக் கடந்து வீடு போய் சேர மனம் துடித்தது.  அந்த காலத்தில் எல்லோருக்குமே  நீச்சல் நன்றாக  தெரியும். 

ஆற்றில் பாய்ந்தார். ஏதோ ஒன்று கையில் சிக்கியது.  நல்லவேளை ஒரு மரக் கட்டை  கிடைத்ததே.  அதைப் பற்றிக் கொண்டு அக்கரை  போய்  சேர்ந்து விட்டார். வீடு இருளில் மூழ்கிக் கிடந்தது. விளக்கை அணைத்து விட்டு மனைவி உறங்கி விட்டாள் போலும்! மழையின் சப்தத்தில், அவர் கதவைத் தட்டிய ஒலி அவளுக்கு கேட்டிருக்க வாய்ப்பில்லை. எனவே மாடிக்கு ஏறுவதற்காக, மாடியில் இருந்து தொங்கிய கயிறைப் பிடித்து ஏறினார்.  ஒரு வழியாக மனைவி தூங்கும் அறைக்குள் நுழைந்தார். தொட்டு எழுப்பினார்.

திடுக்கிட்டு எழுந்த மனைவி, கணவன் அங்கே நிற்பது கண்டு, ""நீங்களா! இந்தக் கடும் மழையில் ஆற்றைக் கடந்து எப்படி வந்தீர்கள்? வீடு வேறு பூட்டியிருந்ததே!'' என்றாள்.
நடந்ததைச் சொன்ன கணவர், அவளது ஸ்பரிசத்திற்காக கடலையும் கடப்பேன் என்று மோக வெறியில் ஆசைமொழி பேசினார்.

மறுநாள் விடிந்தது.  மனைவி எழுந்தாள்.  மாடிப்படியில் தொங்கிய கயிறைப் பார்த்தாள், அது கயிறல்ல, பாம்பு என்பது தெரியவந்தது. அவரை அழைத்து வந்து காட்டினாள். ஆற்றுக்கு நீராட இருவரும் சென்றார்கள். கரையில் அவர் பிடித்து வந்த கட்டை கிடந்தது. அருகே சென்று பார்த்தபோது, அது கட்டை இல்லை, ஆற்றில் அடித்து வரப்பட்ட பிணம் என்று தெரிந்தது.

''பார்த்தீரா! அழியும் என் உடல் மீது கொண்ட ஆசையில் என்னவெல்லாம் செய்திருக்கிறீர் நீர்  என்று! இந்த உடல் தரும் சுகம் தற்காலிகமானது தான்.   இதன்  மீது பற்றுக் கொண்டிருப்பதை விட, ராமநாமத்தின் மீது பற்றுக் கொண்டால், என்றும் நிரந்தர சுகம் தரும் வைகுண்டமே கிடைக்கும்! பிணத்தையும், பாம்பையும் கட்டிக் கொண்டு சுகம் பெற வந்த உம் நிலையை நீரே ஆராய்ந்து பாரும்!'' என்றாள்.  அவருக்குள் ஏதோ பொறி தட்டியது.

''சே,   என்ன காரியம் செய்தேன். ஒரு பெண்ணுக்காக இவ்வளவு கஷ்டப்பட்டிருக்க வேண்டுமா? அவள் சொன்னது சரிதான்.  மனைவியென்றும் பாராமல் அவள் காலில் விழுந்தார்.
"நீயே என் குரு' என்றார். 
உடனேயே எழுதுகோலை எடுத்தார். ராமாயணத்தை இந்தியில் மொழி பெயர்த்தார். "ஸ்ரீராமசரிதமானஸ்' என்று பெயர் சூட்டினார்.  அவர் தான் துளசி தாசர் என்று இப்போது அறிமுகப்படுத்துகிறேன்.   ஆனால் இதே கதை ஈயடிச்சான் காப்பியாக   ஏற்கனவே  படித்துவிட்டு உங்களுக்கும் சொல்லி இருக்கிறேன்.   பில்வ மங்கள்  என்ற  ஹரிதாஸ் ... அங்கே மனைவிக்கு பதிலாக  ஒரு  நாட்டிய மாது. பொதுமகள் . மற்றபடி பாம்பு, பிணம், இரவு, ஆற்றில் நீச்சல், பெண் மோகம் எல்லாம் டிட்டோ டிட்டோ டிட்டோ...
ஹும் .  அப்படிப்பட்ட வீர சாகச  ஆசாமி துளசிதாசர் என்றே  எடுத்துக்கொண்டு  மேலே தொடர்வோம்.  துளசிதாசர் எழுதிய அந்த நூல் தான் "துளசி ராமாயணம்' என  உலகம் இப்போது பாராயணம் செய்கிறோம் .

இப்போது நமக்கு  ஏற்கனவே அறிமுகமான இன்னொரு மஹானை பற்றி சொல்லியாகவேண்டும். அவர் பெயர் நீங்கள் அறிந்த  ஸூர்தாஸ். பிறவியிலே கண்பார்வை  அற்றவர்.  கண்ணற்ற குழந்தையை  குடும்பம் ஒதுக்கி வைத்தது.

ஒருநாள்  யாரோ தெருவில் கிருஷ்ண பஜனை பாடிக்  கொண்டு  சென்றது சிறுவன்  ஸூர்தாஸ் காதில் நுழைந்து  மனதுக்கு பிடித்தது.

சிறுவன் ஸூர் தாஸ் உரக்க குரல் கொடுத்தான்.
'ஐயா நீங்கள் யார்  இவ்வளவு நன்றாக பாடுகிறீர்கள்?  நீங்கள் பாடியது எனக்கு ரொம்ப பிடிக்கி
 றதே. யாரைப்  பற்றி இந்த பாட்டு  பாடுகிறீர்கள்  ?''
''அடே பையா, இது  பாட்டு இல்லை.   கிருஷ்ண பகவான்  மேலே  பஜனை?''
''யார் கிருஷ்ணன், அவனை பற்றி கொஞ்சம்  சொல்லுங்களேன்?''
பஜனை செய்தவர் இந்த  கண்ணற்ற சிறுவன் மேல் இரக்கத்தோடு  கிருஷ்ண சரித்திரம் சுருக்கமாக சொல்லக் கேட்டு  மனம் பரவசமாகிறது. 

''ஐயா. கிருஷ்ணன் எப்படி இருப்பான்?
''அவன் பால கிருஷ்ணன், குழந்தை, புல்லாங்குழல், பசுக்கள், பிருந்தாவனம், கோப கோபியர்கள், வெண்ணை திருடன், நீல வர்ணன், பீதாம்பர வஸ்திரம், யமுனை நதி விளையாட்டு, மயில்தோகை அணிந்தவன், என்றும் புண்ணை தவழும் முகம், அவன் இசையால் புவியே மயங்கும்'''  என்று அவனை வர்ணிக்கிறார்  பாகவதர்.  பிறகு  தெருவோடு  போய்விட்டார்.

அன்று முதல் ஸூர்தாஸ் மனதில்  கண்ணன் உறைந்தான். பாடல்களாகினான். எண்ணற்ற பக்தர்கள் கேட்டு மயங்கினார்கள், இன்றுவரை   நாமும் அந்த கூட்டத்தில் உண்டு.

ஆற்றங்கரையில் கண்ணனை தன்  மனதில் நினைத்து பாடினார். பக்தர்கள் அவர் பசியாற உணவு அளிக்க  ஆயிரக்கணக்கான பாடல்களாக  ஸூர் சாகரமாக  கிருஷ்ணன் மாறினான்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...