Monday, January 10, 2022

NANDHIKESWARAN

 நந்தி பற்றி தெரியுமா?  -   நங்கநல்லூர்  J K  SIVAN 


சிவன் கோவிலுக்குள் நுழைந்தால் முதலில் கண்ணில் படுவது நந்திகேஸ்வரர். மூல விக்ரஹத்தை
 பார்த்துக் கொண்டு  நாக்கை மூக்கில் செருகிக்கொண்டு, முன் கால்களை  நீட்டிக் கொண்டோ மடக்கிக் கொண்டோ, இடப்பக்கமாக  லாகவமாக  சாய்ந்தவாறு கழுத்தை வளைத்து சிவனையே  இமைக்காமல் நோக்குபவர்.   நந்தியின் அழகே தனி அழகு.  

கைலாசத்துக்குள்  நந்தி பெர்மிஷன் இல்லாமல் நுழைய முடியாது.  ரிஷபம் என்கிற  சிவனின் காளை வாகனமும்  அவரே.   சைவமதத்தில்  நந்திநாத சம்பிரதாயத்தில்  நந்தி எட்டு  சிஷ்யர்களின் குரு. ஒரு சிஷ்யர்  திருமூலர்.

சிவன்கோவிலில் நுழைந்ததும் முதலில் நந்திகேஸ்வரனை வணங்கி  அனுமதி பெறவேண்டும்: அதற்கு ஒரு குட்டி ஸ்லோகம் உண்டு:

நந்திகேச மஹா பாகா , சிவ த்யான பராயணா ,
கௌரி சங்கர  சேவார்த்தம், அனுஞம் தாதுமர்ஹஸி 

“Nandikesa Maha Bhaga, Shiva dhyana parayana,
Gowri sankara sevartham Anugnam dathumarhasi.”

''என்னப்பனே,  ரிஷபங்களின் அதிபதியே,  நந்திகேஸ்வரா,  சதா   சிவனையே  த்யானிப்பவனே,  ஐயா  பெரிய மனசு பண்ணி  எனக்கு  சிவபெருமானையும், உடனுறை   உமா மகேஸ்வரி
கௌரியையும் தரிசிக்க  அனுமதி வழங்கப்பா'' என்று  வேண்டிக் கொள்கிறோம்..

புத்ர பாக்யம்  வேண்டி  சிலாதர் எனும் ரிஷி  பரமேஸ்வரனை நோக்கி கடும் தவம் பலகாலம் இருந்தார்.  உடல்மேல் புற்று படர்ந்து  புழுக்களும் பூச்சிகளும் அவர்  உடலை தின்று வெறும் எலும்புக் கூடாக காட்சி அளித்தார். 
''பக்தா  உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் ?''என்று ஒருநாள் பரமேஸ்வரன் சிலாதர் முன் தோன்றியபோது  
''பகவானே எனக்கு  மரணமில்லாத  ஒரு  புத்ரனை அருளவேண்டும்'' என  சிலாதர் கேட்டார்.
''ஆஹா  அப்படியே''
''மறுநாள்  காலை  வழக்கம்போல் சிவாலயத்துக்கு செல்லும் வழியில் வயலில்  சிலாதர் ஒரு  சிசுவின்  அழுகுரல் கேட்டு திகைத்தார்.  சூரிய பிரகாசம் போல்  ஒரு  சிறு குழந்தை அவர் முன்  தோன்றியது.  அப்போது வானத்தில் அசரீரியின் குரலும் ஒலித்தது. 
''சிலாதரே, இந்த குழந்தையை ஜாக்கிரதையாக  வளர்த்து ரக்ஷியுங்கள்''
''நந்தி '' என்று அந்த குழந்தைக்கு பெயரிட்டார் சிலாதர்.   ''நந்தி'' என்றால் சந்தோஷம்,   திருப்தி, வளர்ச்சி என்று பொருள்.  அந்த பையன்  சிவபக்தனாக வளர்ந்தான்.அவனைக் கண்ணின்  மணியென போற்றி பெருமையோடு வளர்த்தார் சிலாதர்.  அவனும்  மஹாதேவன் ஸ்மரணை யோடு வளர்ந்தான். 
 ஏழு வயதான  நந்திக்கு  சிலாதர்  வேதம்,புராணம், சனாதன தர்மம், நீதிநூல்கள், எல்லாம் கற்பித்தார்.  கற்று தேர்ந்த நந்தி, நர்த்தனம், சங்கீதம், மற்போர், வைத்தியம் போன்றவற்றையும் கற்று  சிறந்தவனாக தேர்ந்தான் .  இவ்வளவு புத்தி கூர்மையான மகனை அருளியதற்கு சிலாதர்  ஒவ்வொரு கணமும் சிவனுக்கு நன்றி தெரிவித்து வணங்கினார்.

ஒருநாள் சிலாதர் ஆஸ்ரமத்துக்கு  வருணன்,  மித்ரன் என ரெண்டு ரிஷிகள் வந்தார்கள்.  நந்தி அவர்களை வரவேற்று உபசரித்து  சிஷ்ருஷைகள் செய்தான்.  அவர்கள் விடைபெறும்போது  அவர்களை வணங்கிய  நந்திக்கு  அந்த முனிவர்கள்  அரைமனதோடு ஆசி வழங்கியதாக  சிலாதருக்கு மனதில் படவே, மனம் வருந்தி அவர்களை பின் தொடர்ந்து நந்தி இல்லாதபோது
கேட்டார்:
''முனிவர்களே, உங்களுக்கு என்ன வருத்தம், ஏன், நந்தி உங்களை சரியாக  மரியாதையோடு  உபசரித்து சேவை புரியவில்லையோ ?'' 
''சிலாதரே , உமது மகன் நந்திக்கு நீண்ட ஆயுள், சுபிக்ஷம் என்று வாழ்த்த வழியில்லை''
'' ஏன்  ஸ்வாமிகளே ? க்ஷமிக்க வேண்டும், நந்தி என்ன தவறு செய்தான்?''
'' இல்லை சிலாதரா,  நந்தியின் கர்மா, விதி, அவனுக்கு  நீண்ட ஆயுள் இல்லை.''

சிலாதர் வருந்தியவாறு  திரும்பினார்.    அப்பாவின் முகம் வாடி இருப்பதை கவனித்த நந்தி,
கேட்டான்: 
''என்னப்பா நடந்தது, ஏன் உங்கள் முகம் வாட்டமடைந்திருக்கிறது?''
நடந்ததை சொன்ன சிலாதர்  நந்தி  திகைப்படைவான், சோர்ந்து வருத்தமடைவான் என்று  எதிர்பார்த்தபோது நந்தி சிரித்தான். 
''நந்தி, இதிலென்னடா  வேடிக்கை இருக்கிறது, சிரிக்க?''
''அப்பா,  நீங்கள் பலகாலம் கடும் தவம் இருந்து சிவனே ப்ரத்யக்ஷமாக தோன்றி  நீங்கள் கேட்ட அமரத்துவம் வாய்ந்த மகனை அடைந்திருக்கும்போது,  எப்படி இந்த ரெண்டு ரிஷிகளின் வாக்கு அதை பொய்யாக்கும்?.  அப்படி  ரிஷிகள் சொன்னது உண்மையாக இருக்கும் பக்ஷத்தில் நாம் இருவரும் சிவனை நோக்கி வணங்கி தியானித்தால்,  அவரே  அந்த  குறைகளை  நிவர்த்தியாக்குவாரே. பரம சக்தி வாய்ந்த பரமேஸ்வரன் பக்தர்களை ரக்ஷிப்பவர்''.  

நந்தி  அப்புறம் ஒரு யாகம் வளர்த்தான்.  தந்தை   சிலாதர  முனிவரை வணங்கி  ஆசி பெற்றான்.   புவனா நதிக்கு சென்று மார்பளவு நீரில் நின்று சிவனை தியானித்தான். சிவன் ப்ரத்யக்ஷமாக காட்சியளிக்க , நந்திக்கு  பரமேஸ்வரனிடம்  ஒன்றும் கேட்க  தோன்றவில்லை.  எல்லையற்ற  ஆனந்த நிலையில் இருந்தான்.  திடீரென்று ஒரு பொறி தட்டியது நந்திக்கு.  

''பரமேஸ்வரா, எனது ஒரே கோரிக்கை,  நான் என்றும்  சதா உங்கள் அருகிலேயே இருக்க அருள்புரிய வேண்டும்'' என்று கேட்டுவிட்டான். 

''நந்தி எனது வழக்கமான  ரிஷப  வாகனம் எங்கேயோ சென்றிருக்கிறது.  உனக்கும் என்னுடனேயே இருக்க  ஆவல். எனக்கும் ஒரு வாகனம் தேவை. ஆகவே இனி நீயே எனக்கு  வாகனமாகவும் இருப்பாயாக''என்றார்  பரமேஸ்வரன்.

நந்தி  காஸ்யப ரிஷி  சுரபி தம்பதிகளுக்கு  மகன்  என்று வாயு புராணம் சொல்கிறது.  சிலாத ருக்கு பிள்ளை  என்ற விவரம்  லிங்கபுராணத்தில் தான்.   

ஒரு தடவை  சிவபெருமானும்  பார்வதியும்  சொக்கட்டான் ஆடிய  போது நந்தி தான் நடுவர், ஜட்ஜ்,  அம்பையர், நந்திகேஸ்வரன்  தான்.    பார்வதி நன்றாக விளையாடி  ஜெயிக்கும்  நிலை என்றாலும் சிவனே ஜெயித்தார் என்று தனது பக்தியால் பாரபக்ஷ  தீர்ப்பு அளித்த ஒரு விவரம் சுவாரஸ்ய மானது.  இந்த விஷயம்  நடந்த  காலத்தில்  எலக்ட்ரானிக் மூன்றாவது அம்பயர் பிறக்கவில்லை.   தப்பான தீர்ப்பால் கோபமடைந்த பார்வதி நந்திக்கு சாபமிட்டு,  விநாயகருக்கு  சதுர்த்தி, சதுர்தசி  இரு நாளிலும் பசும்புல் அளித்து நந்தி சாபம் நீங்கியதாக ஒரு வரலாறு.  விநாயக சதுர்த்தியில் அருகம்புல் அதனால் தான் பூஜைக்கு உபயோகமாயிற்று.

ஒரு கதை.  ஒரு முறை  ஞானோபதேசம் செய்து  கொண்டிருக்கும்போது பார்வதியின் கவனம் எங்கோ இருப்பதை கவனித்த பரமேஸ்வரன் அவளை சபித்தார். அவள்  ஒரு மீனவ பெண்ணாக பிறந்தாள். அவளை சபித்த பரமேஸ்வரன் பிறகு  அவளில்லாமல் தனிமையில் வாடுவதை உணர்ந்த நந்தி,  கடலில் ஒரு சுறாவாக உருவெடுத்து மீனவர்களை தாக்க ,  ''இந்த சுறாவை பிடிக்கும் வீரனுக்கு என் அழகிய மகள் மனைவி''  என்று மீனவராஜா,அறிவிக்க,  சிவபெருமானே  மீனவனாக வந்து  சுறாவாக இருந்த நந்தியின் ஒத்துழைப்போடு வென்று, பார்வதியை மீண்டும் மனைவியாக அடைகிறார் என்பது  கதைச் சுருக்கம்.  திருவிளையாடல் படத்தில் சிவாஜி ஜம்மென்று இதை நடித்துக் காட்டுவார்.

பாற்கடலில் அம்ருதம் தோன்றியபோது வாசுகியின் விஷம்  நஞ்சாகி வெளிப்பட,  மூவுலகும் அதால் அழியாமல் காப்பாற்ற சிவன் அதை விழுங்க, பார்வதி அவர் கழுத்தை இறுக்கி பிடிக்க, அவர் நீல கண்டனாக மாறி அந்த நஞ்சு வெளியேற, நந்தி அதை  விழுங்க,  எல்லோரும்  நந்தியைப் பற்றி  கவலைப்பட சிவன்  '' காவல் வேண்டாம், என் பக்தன் நந்திக்கு என் அருள் என்றும் உண்டு, அவனுக்கு ஒன்றும் நேராது'' என்று சொல்கிறார் .  

நந்தியின் பக்தியை மெச்சிய  பரமேஸ்வரன்   ''எனது பரம பக்தன் நந்தியின் காதில் யார்  பிரார்த்தனை செய்து கொண்டாலும்  அது என் காதில் விழும்' என்று  வரமளித்ததால் 
சிவன் கோவில்களில் நந்தியின் காதில் குனிந்து நாம்  பிரார்த்திக்கிறோம்.  பார்த்திருக்கிறீர்களா?  பிரதோஷ காலத்தில் நந்திக்கு தான் முதலில் பூஜை.

நந்தியின் மனைவி  சுயாஷா. சிவ புராணம்,  சிவபக்தர்கள் முதலில்  நந்தி சுயாஷாவை  பிரார்த் தித்து விட்டு, கார்த்திகேயன் கணேசரை பிரார்த்திவிட்டு, அப்புறம் தான் சிவன் பார்வதிக்கு  பிரார்த்தனை செய்யவேண்டும் என்பது மரபு.
.
நந்தியின்  ஆசி, அருள் இல்லாமல் சிவனருள் பெற வழியில்லை என்றதால் ஒரு நந்தி  ஸ்லோகம் அவசியம் சிவன் கோவில்களுக்கு செல்பவர்கள் சொல்லலாம். நந்தி மந்திரம் ரொம்ப சின்னது.

ॐ महाकालयम महावीर्यं   शिव वाहनं उत्तमम  गणनामत्वा प्रथम वन्दे   नंदिश्वरम महाबलम
Om Mahaakaalyam Mahaaveeryam Ganaanamtwa Pratham Vande Nandishwaram Mahabalam
ஓம்  மஹா காலயம் மஹா  வீர்யம், சிவ வாஹனம் உத்தமம் கண நாமத்வா பிரதம வந்தே  நந்தீஸ்வரம் மஹாபலம்.


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...