Saturday, January 29, 2022

AVVAIYAR

 ஒளவையார்  -     நங்கநல்லூர்  J K   SIVAN 


4.   ஆஹா   அற்புத சொல் !

''உடன் பிறந்தார் சுற்றத்தார் என்று இருக்க வேண்டா
உடன் பிறந்தே கொல்லும் வியாதி-உடன் பிறவா
மாமலையில் உள்ள மருந்தே பிணி தீர்க்கும்
அம் மருந்து போல் வாரும் உண்டு.20

நம்மோடு  கூட  பிறந்தவர்கள், நம் குடும்பத்தை சேர்ந்தவர்கள்  மட்டுமே சுற்றத்தார் என்று நினைத்துக்  கொண்டு   இருக்கிறோம்.   நம்மோடு கூடவே இன்னும் சிலதும்  நம்மோடு பிறந்தவை  இருக்கிறது.   சர்க்கரை  நோய் போன்ற சில வியாதிகள்  நம்முடன் சேர்ந்தே    வளர்ந்து  நம்மைக் கொல்கின்றன.   அதே சமயம்  நம்முடன் சம்பந்தமே இல்லாத,  கூடப்  பிறக்காமல்,  எங்கோ ஒரு  பெரிய மலையில்  பிறந்து வளர்ந்த  ஒரு  மூலிகை, இலை, தழை,  நம்மிடம் வந்து   நம்மை துன்புறுத்தும்   வியாதியைப்  போக்குகிறது.  இந்த மாதிரி வியாதி நிவாரணி தாவரம் போன்றவர்களும் நம்முடன் இருக்கிறார்கள்.  அவர்களை கண்டுபிடித்து அவர்களோடு பழகவேண்டும்.

''இல்லாள் அகத்து இருக்க இல்லாதது ஒன்று இல்லை
இல்லாளும் இல்லாளே ஆமாயின் - இல்லாள்
வலி கிடந்த மாற்றம் உரைக்குமேல் அவ்இல்
புலி கிடந்த தூறாய் விடும். 21

மனைவி வீட்டில் இருந்தால், கணவனுக்கு இல்லாத பொருள் ஒன்றுமே இல்லை. எல்லாம் அவளாக இருந்து பயன்படுவாள்.  அவளுக்கு தெரியாதது ஒன்றுமில்லை.  அவள்  நல்லதை தான் நினைப்பவள்.  அவள்  முடிவே  பாரபக்ஷமின்றி சரியானது, என்று நம்பி  வாழத்தக்க  சில  மனைவிகளும் இருக்கிறார்கள்.  அப்படி இல்லாமல், அந்த மனைவி பண்பு இல்லாதவளாக இருந்தால், எதற்கெடுத்தாலும் முரண் பாடாகவே பேசிக்கொண்டிருந்தால், அந்த நிலையில் அவன் வாழும் வீடு புலி பதுங்கியிருக்கும் புதராக மாறிவிடும்.  இது நான் சொல்வதில்லை. ஒளவைப்  பாட்டி  ஆயிரம் வருஷங்களுக்கு முன்பு சொன்னது.  அப்பவும்  அப்படி சிலர் இருந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது.

எழுதியவாறே தான் இரங்கும் மட நெஞ்சே!
கருதியவாறு ஆமோ கருமம்? - கருதிப் போய்க்
கற்பகத்தைச் சேர்ந்தோர்க்குக் காஞ்சிரங்காய் ஈந்ததேல்
முற்பவத்தில் செய்த வினை. 22

''என்ன சார் செயறது . பிரமன் தலையில் எழுதிட்டானே.  ப்ரம்ம லிபி.  அதை யாரும் மாத்த முடியாது.' இப்படி சிலர் பேசுவதை கேட்கிறோம்.  எந்தச் செயலும் ஒருவன் தலையில் எழுதியவாறே (nucleus-egg) நிகழும். மரபணுக்களின் பதிவில் உள்ளவாறே நிகழும். எண்ணிய செயல் நடக்கவில்லையே என்று வருந்திக்  கொண்டிருக்கும் மடத்தனமான நெஞ்சமே! எண்ணிப்பார். நீ  நினைத்தபடி எல்லாச் செயலும் நடந்து  விடுமா? கற்பக விருக்ஷம்  விரும்பியதை எல்லாம் தரும் என்பார்கள். ஒருவன் தானும்  பிள்ளையார் பெற்றது போல் மாம்பழம்  ஒன்றைப்  பெற வேண்டும் என்று எண்ணிக் கொண்டு கற்பக மரத்தடியில் அமர்ந்தான். ஆனால் அந்தக் கற்பக மரம் (தின்றதும் சாகும்) எட்டிப் பழம்  போல் ஒன்றை  அவனுக்குக் கொடுத்தது.   ஏன்?  என்ன காரணம்? அவன் முன் பிறவியில் செய்த வினையின் பயன்  அது.

''கற்பிளவோடு ஒப்பர் கயவர்; கடும் சினத்துப்
பொற் பிளவோடு ஒப்பாரும் போல்வாரே - வில்பிடித்து
நீர் கிழிய எய்த வீடுப் போல மாறுமே
சீர் ஒழுகு சான்றோர் சினம். 23

எவ்வளவு  தான்  பலமான  பாறையாக இருந்தாலும்   ஒரு முறை  பிளந்த கல் மீண்டும் தானே ஒட்டிக்  கொள்ளாது.  ஒட்டவைத்தாலும்  சேராது.  அதுபோல, பிரிந்து போன  தீயவர்கள் மீண்டும் ஒன்று  சேர மாட்டார்கள். பிரிந்த தங்கத் துகளைகள் ஒட்டிக்கொள்வது போலக் கடுமையான கோபத்தில் பிரிந்து விட்டாலும் மீண்டும் ஒட்டிக் கொள்பவர்களும் இருக்கிறார்கள். வில்லைப் பிடித்து  வேகமாக  செலுத்திய  ஒரு  அம்பு   விர்ரென்று  தண்ணீரைப்  பிளந்து  உள்ளே புகுந்தாலும்,  நீர்  மறுபடியும் அடுத்த கணமே பழையபடி   பிளவில்லாமல் ஒரே சீராக  ஒட்டிக்கொள்வது போலச் சீர்மை ஒழுகும் சான்றோர்கள்  கோபம்  அடுத்த கணமே மாறிவிடும்.  ஒரு கண  நேர கோபம் அவர்களது இயற்கை சாந்த ஸ்வரூபத்தை மாற்றாது.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...