Thursday, January 27, 2022

AVVAIYAR

 ஒளவையார்  -     நங்கநல்லூர்  J K   SIVAN 


3.  அற்புத  சொற்கள் 

நல்லாரைக் காண்பதுவும் நன்றே; நலம்மிக்க
நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே-நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் நன்று.8

தீயாரைக் காண்பதுவும் தீதே; திரு அற்ற
தீயார் சொல் கேட்பதுவும் தீதே-தீயார்
குணங்கள் உரைப்பதுவும் தீதே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் தீது.9

ஒளவையார் எழுதிய  மேலே  காணும்  ரெண்டு பாடல்களையும்  தனித்தனியே பிரிக்காமல் சேர்த்து அளித்ததன் காரணம்,  அவை ஒன்றுக்கொன்று  வித்தியாசமானவையாக  இருத்தால் அவற்றின்  உட்கருத்து ஒன்று தான்.  தீயவர்கள்  கண்ணில்  பட்டாலே போதும்.  கொரோனா மாதிரி  கெடுதல் ஒட்டிக்  கொள்ளும்.  அவர்களை  தூரத்தில்  இருந்து  பார்த்தாலே  வேறு பக்கம் ஓடிவிடவேண்டும்.   இப்படி  எல்லோரும் வெறுக்கும்  தீயவர்களின் பேச்சைக் கேட்பது என்பது மன்னிக்க  முடியாத குற்றம் என்கிறாள்  ஒளவைப்  பாட்டி.   தீயவர் ஒருவரின் குணத்தை  லக்ஷியம் பண்ணி, அதைப்   பற்றி   வேறொருவரிடம் சொல்வது  கூட  ரொம்ப  கெடுதல்.   மனதிலிருந்தே  அவர்களைப்  பற்றிய எண்ணத்தை நீக்கிவிடவேண்டும்.  இவ்வளவு சொல்லியும்  தீயவரோடு நட்புக் கொண்டிருப்பது பற்றி என்ன சொல்வது.  அனுபவம் பாடம் கற்றுத் தரும்.  

இதற்கெல்லாம்   நேர்மாறான நன்மை செய்வது நல்லவர்கள் உறவு, நட்பு, பழக்கம்.   மேலே இதெல்லாம் செய்யக்கூடாது என்று சொன்னேனோ  அதெல்லாம்  நல்லவர்கள் விஷயத்தில் கட்டாயம் செய்தால்  நல்ல பலன் பெறலாம் என்கிறாள் பாட்டி.

அடக்கம் உடையார் அறிவிலர் என்று எண்ணிக்
கடக்கக் கருதவும் வேண்டா-மடைத் தலையில்
ஓடுமீன் ஓட உறுமீன் வரும் அளவும்
வாடி இருக்குமாம் கொக்கு.16

 தன்னடக்கத்துடன் இருப்பவரைப் பார்த்து “இவர் அறிவில்லாதவர்” என்று எண்ணி அவரை உதாசீனப்படுத்துவது தப்பு.  அவர்களை  ஜெயிக்க, வெல்ல நினைக்கவும் கூடாது. நீர் பாயும் மடை வாயில் சிறிய மீன்கள் ஓடும்  போது   பசியோடு காத்துக்கொண்டிருக்கும்  பார்த்துக்  கொண்டிருக்கும் கொக்கு பெரிய மீன் வந்ததும் மட்டும்  லபக்  என்று கௌவிக் கொள்வது போன்றது வலிமை உடையவரின் அடக்கம் என உணர்ந்து  கொள்ள வேண்டும்.

அற்ற குளத்தில் அறுநீர்ப் பறவைபோல்
உற்றுழித் தீர்வார் உறவு அல்லர்; -அக்குளத்தில்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி உறவார் உறவு.17

நீர் இல்லாமல்   கோடைகாலத்தில்  பல  நீர்நிலைகள்   வறண்டு போகும்.  நீர் அற்றுப்போன குளம் குட்டைகளை விட்டு  நீர்ப்பறவைகள் அப்போது  வேறு எங்கோ சென்றுவிடும்.   அது  போல துன்பம் வந்த காலத்தில்  நம்மை விட்டு   விலகிப் போய்விடுபவர்கள்   நல்ல  உறவினர் ஆகமாட்டார்கள். நீர் அற்றுப்போனாலும் அந்தக் குளத்தில் கொட்டி, ஆம்பல், நெய்தல் போன்ற   சில  தாவரங்கள், எப்பதும் போல் அதன்  வறட்சியிலும்  அந்த நீர் நிலைகளோடு  நீங்காமல்   தாமும்  வாடி  அதோடு ஒட்டிக் கொண்டே இருப்பது போல  நாம்   துன்பப் படும்போது  தாமும்  அதை தாமதாக ஏற்று  துணை நின்று   ஆதரிப்பவர்கள்,  உதவுபவர்களே,  நல்ல   உண்மையான   உறவுக்காரர்கள் .  ரொம்ப விஷயம் தெரிந்த பாட்டி  ஒளவை.  இன்றளவிலும் நம் வாழ்க்கையிலும்,   ஏன்  அரசியலிலும் இதைத்  தானே  நிறைய  பார்க்கிறோம் படிக்கிறோம்.  

சீரியர் கெட்டாலும் சீரியரே; சீரியர் மற்று
அல்லாதார் கெட்டால் அங்கு என்னாகும்?-சீரிய
பொன்னின் குடம் உடைந்தால் பொன்னாகும்; என் ஆகும்
மண்ணின் குடம் உடைந்தக் கால்?18

பொன்னால் செய்த குடம் உடைந்து  விட்டால் பொன்னாகவே இருந்து மீண்டும் உதவும்.    வீட்டில்  ரஸம்  வைக்கிறேன் என்று  ஈயச் சட்டியை  நல்ல சூட்டில்  அடுப்பில்  உருக வைப்பவர்கள்  நிறைய பேர்.  மொபைல்  டெலிபோன்   நிறைய  பெண்கள்   அடுப்பில் ஈயச் சட்டிகளை இப்படி உருக வைக்க உதவுகிறது.  ஈயமோ, தங்கமோ  உருவம் மாறினாலும்  அதன் மதிப்பு மாறுவதில்லை. ஒஸ்தி தான்.

சிறந்த பண்பாளர் வறுமை அடைந்தாலும் சீரியராகவே விளங்கி மீண்டும் உதவுவர். மண்ணால் செய்த குடம் உடைந்தால் மீண்டும் மண் ஆகுமா? ஆகாமல் உதவாத, மக்காத ஓடாக அல்லவா மாறிவிடும். அதுபோலச் சீரியர் அல்லாதவர் உடைந்து  போனால் மீண்டும் உதவமாட்டார்.  

ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல் நீர்
நாழி முகவாது நானாழி-தோழி
நிதியும் கணவனும் நேர் படினும் தம்தம்
விதியின் பயனே பயன்.19

ஆழமான கடலில் அளவற்ற நீர் இருக்கிறது. படி ஒன்றை அதில் அமுக்கி அமுக்கி  நிரப்பி எவ்வளவு காலமாக  முகர்ந்தாலும்  அதால்  கடல் நீரை அகற்றவோ, குறைக்கவோ  முடியுமா? அது போலத் தான்  உலகில் நாம்  துய்க்கும் வாழ்க்கை அளவும் இருக்கும். அது விதியின் பயன். விதியின் அளவு. ஏராளமான செல்வம் இருந்தாலும் அத்தனையும் அனுபவிக்க முடியுமா? நல்ல கணவன், மனைவி,  இருந்தாலும் அவர்கள் அருமை தெரிந்து அனுபவிக்க முடியாதவர்கள்  எத்தனையோ பேர். 


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...