Tuesday, January 25, 2022

AVVAIYAR


 ஒளவையார் -    நங்கநல்லூர்   J K  SIVAN 


2.  பாட்டி சொல்லை தட்டாதே.

படிக்கணும்.  எல்லோரும்  படிக்கணும்.  நிறைய  விஷயம் தெரிஞ்சுக்கணும்.  அது தான்  வாழ்க்கைக்கு முக்கியம்.  வாழ்வதற்கு  ஆதாரம்.  கல்வி  கண் போன்றது என்று சொல்வார்கள். அறிவு வளர  அடிப்படை தேவை கல்வி.  ஒளவையார்  என்ற பாட்டி  பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே  கல்விக்கு  எவ்வளவு முக்கியத்வம்  கொடுத்து அறிவுறுத்தி உள்ளார்  என்பது அவருடைய  மூதுரை செய்யுள்களில் பளிச்சென்று தெரிகிறது.

ஒரு ராஜா கல்வி அறிவு இல்லாதவனாக இருந்தால் அவனுக்குப் பெருமை கிடையாது. ஆனால், கல்வி அறிவு உடையவன்  ஏழையாக  சாப்பாடுக்கு வழியில்லாமல் இருந்தாலும்  பெருமை உடையவன் ஆவான் என்னும் கருத்தை  புகுத்த   ஒளவையார் பாடிய  ஒரு பாடல்  சொல்கிறேன். படியுங்கள்:

ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்
மாண்டார் வருவரோ மாநிலத்தீர் - வேண்டா!
நமக்கும் அதுவழியே! நாம்போம் அளவும்
எமக்கென்? என்(று) இட்டு, உண்டு, இரும்
 
நமது  பூலோக  வாழ்க்கை தாமரை இலைத்தண்ணீர்.  ஒட்டியும்  ஒட்டாமலும்  இருக்கவேண்டியது.  அநித்தியமானது.  எந்த நேரமும்  மறையக்கூடியது.  நோ  காரண்டீ.  நேற்று வரை  நம்மோடு  இருந்தவர்  மறைந்து இன்று uஅவரை   எரித்து விட்டாச்சே.    அடுத்த வருஷம் கும்பகோணம் பக்கத்தில் கிராமத்தில் ஒரு வீடு வாங்கி அடுத்த  ஐந்து ஆறு வருஷங்கள் எல்லா கோவில்களும் போகவேண்டும் என்று பிளான் போட்டவர்.  அவரை நினைத்து  பல  ஆண்டுகள்  அழுதாலும்  மீண்டு  வரப்போகிறாரா.  வேண்டவே  வேண்டாம்  இதெல்லாம்.  புரிந்து கொள்வோம்.  நமக்கும்  இதே  தான்  நேரப்போகிறது.  இது ஒன்றே  போகும்  வழி.  எனவே  இதை நினைவு கூர்ந்து இருக்கும் வரை  எம்மானே,  எல்லாம் உன் செயல்  அன்று  அவன் தாள்  பற்றி  வணங்கி,   நம்மாலானதை பிறர்க்கும்  அளித்து பிறகு இருப்பதை உண்டு  இருக்கும் வரை இருப்போம்.   இது  ஒளவைக் கிழவியின்  அரிய  அனுபவ  உபதேசம் .

  
நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்
கல்மேல் எழுத்துப் போல் காணுமே- அல்லாத
ஈரமிலா நெஞ்சத்தார்க்கு ஈந்த உபகாரம்
நீர் மேல் எழுத்துக்கு நேர்.2

நெஞ்சில் ஈரம் உள்ள நல்லவர்க்கு உதவி செய்தால் அது அவர்களின் நெஞ்சில் கல்லில் பொளித்து எழுதிய எழுத்துப் போல அழியாமல் நிலைத்திருக்கும். நெஞ்சில் ஈரமில்லாதவர்களுக்கு உதவினால் அவர்கள் அதனைத் தண்ணீரில் எழுதும் எழுத்து எழுதும் போதே மறைந்து விடுவது போல அப்போதே மறந்து விடுவார்கள்.  இப்படிப்பட்டவர்கள்  நிறையபேர் ஆகி விட்டார்கள்.  அவர்களை கொஞ்சம் கொஞ்சமாக  நல்ல வழிக்கு மாற்றவேண்டும்.

இன்னா இளமை வறுமை வந்து எய்தியக் கால்
இன்னா அளவில் இனியவும்- இன்னாத
நாள் அல்லா நாள் பூத்த நன் மலரும் போலுமே
ஆள் இல்லா மங்கைக்கு அழகு.3

வறுமை வந்து விட்டால் எதையும் செய்யும் இளமைப் பருவமே துன்பப்படும். அளவில்லாத இன்பம் தரும் பொருள்களும் துன்பம் தரும் பொருள்களாக மாறிவிடும். சூடும் நாள் இல்லாதபோது   கொல்லையில்  பூத்துக் குலுங்கி  மலிந்து கிடக்கும்   மலரால் என்ன பயன்? அதுபோல அனுபவிக்கும் ஆண் இல்லாத பெண்ணின் அழகால் என்ன பயன்?

அட்டாலும் பால் சுவையில் குன்றாது அளவளாய்
நட்டாலும் நண்பு அல்லார் நண்பு அல்லர்
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு
சுட்டாலும் வெண்மை தரும்.4

எவ்வளவு  சுண்டக் காய்ச்சினாலும் பால் சுவை குன்றாது.  சுவை கூடும்.  அதுபோல நல்ல நண்பர்கள் நட்பு  நமக்கு இருந்தால்,  நமக்கு  எவ்வளவுக்கவ்வளவு  துன்பம்  வந்தாலும்,  துயரம் சோதனைகள்  நம்மை சூழ்ந்தாலும் நம்மை விட்டு  விலகமாட்டார்கள். நல்லவரல்லாதோர்  நட்பு  கை  மேல் பலனளிக்கும். நமக்கு  ஏதோ கஷ்டம், துன்பம்  என்று கேள்விப்பட்டாலே  போதும்,  அடுத்த கணமே நம்மை உதறி விடுவார்கள்.  நாம் செய்த நன்மைகள் உதவிகள் எல்லாம் மறந்து போகும்.  வெள்ளை நிறம் கொண்ட சங்கு சுட்டாலும் சுண்ணாம்பாக மாறி வீட்டில் அடிக்கும்போது வெள்ளை நிறத்தையே தரும். அதுபோல வறுமையுற்றுக் கெட்டுப்போனாலும் மேன்மக்கள் மேன்மக்களாகவே திகழ்வர்.

அடுத்து முயன்றாலும் ஆகும் நாள் அன்றி
எடுத்த கருமங்கள் ஆகா-தொடுத்த
உருவத்தால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம்
பருவத்தால் அன்றிப் பழா.5

உயரமாக  வளர்ந்தால்  மட்டும்  போதாது.  எவ்வளவு பெரிய ஓங்கி உயர்ந்த மரமானாலும் அதன் பருவ காலத்தில்  தான்  பூ, பிஞ்சு, காய், பழம்  எல்லாம்  தோன்றும்.  அதுபோல அடுத்தடுத்து முயன்றாலும் செயல் நிறைவேற வேண்டிய காலம் வந்தால்தான் நாம் எடுத்துத் தொடுத்த (தொடங்கிய) செயல் எதுவுமே நிறைவேறும்.  இதைத்தான்  நமக்கு  ஒருநாள் நல்ல காலம் வரும் என்று சொல்வது. 

உற்ற இடத்தில் உயிர் வழங்கும் தன்மையோர்
பற்றலரைக் கண்டால் பணிவரோ?-கல்தூண்
பிளந்து இறுவது அல்லால் பெரும் பாரம் தாங்கின்
தளர்ந்து விளையுமோ தான்.6

கல்லால் ஆன தூணின் மேல் அது தாங்க  முடியாத அளவு பெரிய பாரத்தை ஏற்றினால் ஒரு லிமிட்டுக்கு  மேல் போனால், எவ்வளவு தான் கனமான  பாறையோ, கல் தூணாகவோ இருந்தாலும்  டப்  பென்று பிளந்து நொறுங்கிப் போகுமே   தவிர   மூங்கில் போல்  வளைந்து கொடுக்காது. தங்கள் நாட்டு  அரசனுக்காக உயிரையே தரும் பண்புள்ளவர்கள் அரசனின் பகைவரை எதிர் கொள்ளும் போது பணிந்து  போவார்களா? கற்றூண் போன்றவர்கள் அல்லவா?  நமது நாட்டில் நாம் எல்லோரும் அப்படி தான் இருக்கவேண்டும். 

நீர் அளவே ஆகுமாம் நீர் ஆம்பல்; தான் கற்ற
நூல் அளவே ஆகுமாம் நுண் அறிவு-மேலைத்
தவத்து அளவே ஆகுமாம் தான் பெற்ற செல்வம்
குலத்து அளவே ஆகும் குணம்.7

நீரில் பூத்திருக்கும் ஆம்பல் பூ நீர்  மட்டத்திலேயே தலையை நீட்டிக் கொண்டு  மிதந்தவாறு காணப்படும்.  (நீர் உயர்ந்தால் உயரும். நீர் தாழ்ந்தால் தாழும்.) அது  போல ஒருவரது அறிவு அவர் கற்ற நூலினது அளவாக இருக்கும்.    அது  மாதிரியே தான், நமது முந்தைய பிறவியில் எந்த அளவு நற்பணி செய்து தவப்பயன் பெற்றிருக்கிறோமோ  அந்த அளவு இந்தப் பிறவியில் செல்வத்தின் அளவு இருக்கும்.  ஒவ்வொருவருடைய குணமும்  அவரைப் பெற்றெடுத்த தாய் தந்தையரைப் பொருத்தே இருக்கும்.  children  are  moulded  by  parents   என்று ஆங்கிலத்தில் இதை சொல்வது வழக்கம்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...