திருப்பள்ளி எழுச்சி - நங்கநல்லூர் J K SIVAN
மார்கழி 26ம் நாள்.
6. ''பப்பற வீட்டு இருந்து உணரும் நின் அடியார்
பந்தனை வந்து அறுத்தார் அவர் பலரும்
மைப்புறு கண்ணியர் மானிடத்து இயல்பின்
வணங்குகின்றார் அணங்கின் மணவாளா!
செப்புறு கமலங்கள் மலரும் தண் வயல்சூழ்
திருப்பெருந்துறை உறை சிவபெருமானே!
இப்பிறப்பு அறுத்து எமை ஆண்டருள் புரியும்
எம்பெருமான்! பள்ளி எழுந்தருளாயே.!
திருப்பள்ளி எழுச்சி பதிகத்தில் ஒவ்வொரு பாடலிலும் மணி வாசகர் திருப்பெருந்துறை எனும் ஆவுடையார் கோயிலில் அருள் பாலிக்கும் ஆத்மநாத ஸ்வாமியையே விளித்து பாடுகிறார் என்று கவனித்தீர்களா.. அந்த க்ஷேத்ரத்தில் அமர்ந்து இயற்றிய பாடல்கள் இவை.
ஆவுடையார் கோவிலுக்கு இருக்கும் வேறு பெயர்கள் - அனாதிமூர்த்தத்தலம், ஆதிகயிலாயம், உபதேசத்தலம், குருந்தவனம், சதுர்வேதபுரம், சதுர்வேதமங்கலம், ஞானபுரம், சிவபுரம், திருமூர்த்திபுரம், தட்சிண கயிலாயம், யோகவனம் முதலியன.
ஆத்மநாதருக்கு 18 பெயர்கள் வழங்கப்படுகின்றன. அவை 1) ஆத்மநாதர் 2)பரமசுவாமி 3) திருமூர்த்திதேசிகர் 4) சதுர்வேதபுரீசர் 5) சிவயோகவனத்தீசர் 6) குருந்தகவனேசர் 7) சிவக்ஷேத்ரநாதர் 8) சன்னவனேசர் 9) சன்னவநாதர் 10) மாயபுரநாயகர் 11) விப்பிரதேசிகர் 12) சப்தநாதர் 13) பிரகத்தீசர் 14) திருதசதேசிகர் 15) அசுவநாதர் 16) சிவபுரநாயகர் 17) மகாதேவர் 18) திரிலோககுரு என்பன. மற்றும் ஷடாராதனர் என்ற பெயருமுண்டு.
சிவாலயங்கள் பெரும்பாலும் கிழக்கு நோக்கியிருக்கும். சில மேற்கு நோக்கியிருக்கும். ஆனால் குருமூர்த்தமாக அமைந்த இத்திருக்கோயில் தெற்கு நோக்கியுள்ளது. தவிர, சிவாலயங்களில் இறைவன், சிவலிங்கபாண வடிவில் அருவுருவாகக் காட்சிதர, இக்கோயிலில் மட்டும் குருந்தம் மேவிய குருபரனான ஆத்மநாதர் அருவமாக இருந்து சித்தத்தைச் சிவமாக்கும் சித்தினைச்
செய்தருளுகின்றார்.
இனி மேலே சொன்ன திருப்பள்ளி எழுச்சி பாடலில் விளக்கம் அறிவோம்:
உமையம்மைக்கு மணவாளனே! கிண்ணம் போன்ற தாமரை மலர்கள் விரியப்பெற்ற குளிர்ச்சி பொருந்திய வயல்கள் சூழ்ந்த திருப்பெருந்துறையில் வீற்றிருக்கின்ற சிவபிரானே! இந்தப் பிறவியை நீக்கி எங்களை ஆட்கொண்டு அருள் செய்கின்ற எம் பெருமானே! மனவிரிவு ஒடுங்க பற்றற்று இருந்து உணருகின்ற உன் அன்பர்கள் உன்பால் அடைந்து பிறவித்தளையை அறுத்தவராய் உள்ளவர்களும் மை பொருந்திய கண்களையுடைய பெண்களும் மனித இயல்பில் நின்றே உன்னை வணங்கி நிற்கின்றார்கள்; பள்ளியினின்றும் எழுந்தருள்வாயாக.
No comments:
Post a Comment