கதையும் நீதியும் - நங்கநல்லூர் J K SIVAN
அதிகம் நாகரீகம் பார்க்காத பட்டி கிராமம் ஒன்று, அதில் ஒரு கூரைக்கட்டு பள்ளிக்கூடத்தில் கோபாலாச்சாரி சத்தம் செய்த மாணவர்களை அடக்கி அவர்களை நோக்கி உரக்க என்ன சொன்னார்?
''பசங்களா, நேத்திக்கு உங்க கிட்ட என்ன சொன்னேன் ஞாபகம் இருக்கா? வீட்டிலே அம்மா அப்பா கிட்டே ஒரு கிராமீய கதை கேட்டுண்டு வந்து சொல்லணும். அதிலே என்ன நீதி இருக்கிறது என்றும் சொல்லணும்னு சொன்னேனே,நீங்கல்லாம் ரெடியா? ஆரம்பிக்கலாமா?
''சரிங்க சார்'' என்று பல ஐந்தாம் வகுப்பு மாணவ மாணவிகளின் குரல்.
ரெடியா. இப்போ முதல்லே கோவிந்த சாமி , நீ எழுந்திருடா?
எழுந்து கை கட்டி நின்றான். பச்சை அரைக்கால் நிஜார், மஞ்சள் கரை படிந்த பட்டன் இல்லாத சட்டை, செம்பட்டை தலை. மேல் வரிசை முன்பற்கள் ரெண்டு இருக்கவேண்டிய இடம் காலியாக இருநதது. மிரள மிரள விழித்தான். உங்க வீட்டிலே என்ன கதை கேட்டே?
"ஸார் , எங்கப்பா ஒரு விவசாயி, கோழி வளக்கிறோம் . ஒருநாள் கோழி முட்டைகளை ஒரு கூடையில் போட்டு எடுத்துக்கிட்டு விக்கிறதுக்கு சந்தைக்கு போனார். கோபால் ஸார் ட்ராக்டர் லே ஏறிக்கிட்டு போனார். வழியிலே ஒரு மேட்டுமேலே ட்ராக்டர் ஏறி தடால்னு இறங்கிச்சு . அப்பா கையில் பிடிச்சிட்டிருந்த கூடை நழுவி கீழே விழுந்து எல்லா முட்டையும் உடைஞ்சு போச்சு''
இதிலே என்ன நீதி இருக்கு?
''ஒரே கூடையில் எல்லா முட்டையும் போடக்கூடாது.''
ரொம்ப சரி.. அடுத்த கதை கேட்போம்.
''பாமா , நீ என்ன சொல்லப்போறே?
''நாங்களும் விவசாயிங்க தான் சார், கோழிக்கதையே சொல்றேன். எங்க வீட்டிலே 20 கோழி முட்டை குஞ்சு பொறிக்க காத்துக்கிட்டிருந்தோம். 2 ஆனா பத்து முட்டையிலிருந்து தான் கோழிகுஞ்சுங்க கிடைச்சுது. என்ன செய்ய?''
''இதிலே என்ன நீதி இருக்கு?''
''முட்டை குஞ்சு பொரிப்பதற்கு முன்னாலே கோழிக்குஞ்சு எண்ணி கணக்கு போடாதே'' Dont count your chickens before they're hatched." "
''வெரி கூட, பாமா, நல்ல அறிவுரை''
''மாயாண்டி வகுப்பிலேயே நெட்டையான பெரிய பையன். மேலே சட்டை இல்லை. வலை பனியன் போட்டிருந்தான். இடுப்பில் ஒரு நாலுமுழ வேட்டி . மீசை முளைத்த பையன்.
இங்கே வாடா, நீ என்ன கதை சொல்லப்போறே, ஆரம்பி''
''எங்க அப்பாரு பேரு துலுக்காணம். அவருக்கு மூணு அக்கா தங்கச்சிங்க. அவரு தான் கதை சொன்னாரு.
''என்ன கதை சொன்னாரு?''
'வெள்ளைக்கார அத்தை ஒருத்தி மிலிட்டரி காரி. ஏரோபிளேன் ஒட்டிக்கிட்டு பறந்து போவா. குண்டு போடுவா. யுத்த காலம். அவ பறந்து போன விமானத்தை எதிரிங்க சுட்டுட்டாங்க. அதிலிருந்து எதிரி நாட்டிலே குதிச்சுட்டா. அவ கையில் ஒரு பாட்டில் சாராயம் இருந்தது. மிஷின் துப்பாக்கி, கூரான வாள் இருந்தது.
''அடேடே வீர மங்கை வேலு நாச்சியாரா அந்த அத்தை? மேலே சொல்லு.
''கீழே குதிக்கறதுக்கு முன்னாலே கையிலிருந்த பாட்டில் சாராயம் முழுக்க குடிச்சுட்டா. நூறு பேர் இருக்கிற எதிரி படை நடுவிலே குதிச்சா. எழுபது பேரை துப்பாக்கியாலே சுட்டு கொன்னுட்டா. துப்பாக்கிலே குண்டு தீந்து போச்சு. விடுவாளா? கையிலிருந்த வாளால் இருப்பது பேரை தலையை சீவிட்டா. வாள் உடைஞ்சு போச்சு. அவ கவலைப்படல . இருக்கவே இருக்கு கை. மீதி பத்து பேரை கையால கழுத்தை நெறிச்சு கொன்னுட்டா. அப்புறம் ஓடி வந்துட்டா''
''அடேங்கப்பா, வெள்ளைக்கார அத்தைக்கு எவ்வளவு வீரம்? அதிருக்கட்டும் இதிலே என்ன நீதி இருக்கு?
''எங்க அத்தைங்க மூணு பேரும் குடிப்பாங்க. நீதி இன்னான்னா, அத்தைங்க குடிச்சிருந்தா கிட்ட போகாதே''
No comments:
Post a Comment