Tuesday, January 18, 2022

PESUM DEIVAM

 


பேசும் தெய்வம்  -  நங்கநல்லூர்  J K  SIVAN

105.   ஆந்திர மாநில கிராம  திக் விஜயம்  

அது  அவருடைய முக ராசி,   ஜாதக பலன், யோகம்,  கை  ராசி, அதிர்ஷ்டம்  என்று எது  வேண்டுமானாலும்  ஜோசியர்களோ,  மற்றவர்களோ, சொல்லிக்  கொள்ளட்டும்.   


மஹா பெரியவா வருகிறார் என்று சேதி காதில் கேட்டாலே போதும்,  உடனே  அவரை தரிசிக்க எங்கிருந்தெல்லாமோ பக்தர்கள் குழுமி விடுவது வழக்கம்.  அவர்  நிதி வசூலிப்பதில்லை,  அதைக் கொடு இதைக்கொடு என்று எவரையும் எதையும் கேட்பதில்லை,  சிலர் எவ்வளவு குபேரநிதி எதிரில் வைத்தாலும் கண்ணால் கூட பார்க்கக்கூட மாட்டார் அப்புறம் தானே  கை  நீட்டி எடுத்துக் கொள்வது.  அவரால்  எத்தனையோ குடும்பங்கள் நல்வாழ்வு பெற்றன. எதிர் பாராத உதவிகளை கேட்காமலேயே மற்றவர் மூலம் செய்து கொடுக்கும்  தெய்வம்.    ஆகவே தான் ஹைதராபாதில்  தமிழ் பேசுபவர்கள் தவிர மற்றவர்களும்  மஹா பெரியவா  விஜயத்தை பாக்யமாக  கருதி விழுந்து விழுந்து சேவித்து  பக்தி மேலிட்டு சேவை செய்தார்கள். 

அப்பண்ணா  ஸாஸ்த்ரிகள்  தனது உரையில் மஹா பெரியவா ஆதி சங்கரரின்  அவதாரம் என்று சொன்னதோடு நிறுத்திக் கொள்ளவில்லை.  மஹா பெரியவா பேசுவதெல்லாம்  ஆதி சங்கரரின் வாக்கு என்றும்  எடுத்துக் கொள்ளுங்கள்  என்றார்.  உ.வே.  ராகவாச்சாரியார்  பேசும்போது  மஹா பெரியவாளின்  ஸாஸ்த்ர, வேத உபநிஷத் ஞானம், அவருடைய  அலாதி சிந்தனைத் திறன், ஞாபக சக்தி எல்லாமே   ஈடு இணையற்றவை என்று பாராட்டினார்.   
''இதோ இவர்  வேறு யாருமில்லை, ஸாக்ஷாத் பரமேஸ்வரன் தான், இவருடைய  கங்கா,  காசி யாத்ரையால் உலகமே பயனடையப் போகிறது''  என்றும் சொல்லி முடித்தார்.  அன்று ஆரம்பித்த  அத்வைத  சபாவில் அநேகர் அங்கத்தினர்களாக  சேர்ந்தார்கள்.  சபாவினர்  அனைவரும்  நமது ஸநாதன  தர்மத்தை போற்றி பாதுகாக்க உழைப்போம் என்று உறுதிமொழி ஏற்றார்கள்.  புதிதாக ஆரம்பிக்கப்பட்ட  சபாவிற்கு ஒரு  சொந்த இடம் தேவை என்று முடிவெடுத்தார்கள்.  மஹா பெரியவா காஞ்சி காமகோடி மட சார்பாக நூறு ரூபாய்  நன்கொடை அளித்தார்.   மஹா பெரியவா ஸ்ரீ மஹாதேவ  தாமோதர காட்ஜில் என்பவரை அழைத்து ஹைதராபாத்தில்   இந்த  அத்வைத சபா  துவங்கி இயங்க ஏற்பாடுகளை செய்ய பொறுப்பேற்க வேண்டிக் கொண்டார்.

ஒவ்வொரு  நாளும்  கூட்டம் அதிகரித்துக் கொண்டே வந்தது. மஹா பெரியவா தரிசனம் பெற, அவர் பூஜையை பார்க்க, அவர் பிரசங்கம் உபந்யாசம்  கேட்க, அவரிடம் ஆசிபெற   என்பதால், மஹா பெரியவா பக்தர்கள்  வேண்டு கோளுக்கு இணங்கி 44 நாளுக்கும் மேலாக  ஹைதராபாதில்  முகாம் இட்டார்.

1934 ஏப்ரல் 22ம் தேதி  கங்கா காசி யாத்திரை  ஹைதராபாத்தில் இருந்து துவங்கியது.  எல்லோரு டனும் யாத்ரை தொடர்வது சாத்தியமில்லை என்று மஹா பெரியவா குறிப்பாக  ஹைதராபாதிலிருந்து கிளம்பும்போது,  ஒரு சிலருடன் மட்டும் யாத்ரை  தொடர்ந்தார்.   ஒன்றரை மாத காலம் அவரை  விடாமல் தரிசித்து விட்டு,  கடைசியில் பிரிய   ஆயிரக்கணக்காக  கூடியிருந்த  ஹைதராபாத் பக்தர்களுக்கு மனமே இல்லை. மீண்டும் அவரை  இது போல்  எப்போது காண்போம் என்ற ஏக்கம்  கேள்வியாக  தலைக்கு மேல்  விடையின்றி  தொங்கியது.  மஹா பெரியவா எல்லோ ருக்கும் ஆசி, மந்த்ராக்ஷதை  கொடுத்தார். 

செகந்திராபாத்தில் மக்கள் அழைப்பை ஏற்று ஒரு நாள் தங்கினார். அங்கே  திவான் பகதூர்  ராம்கோபால் ஷெட்டி என்பவர் பேரன்    ஸ்ரீ கிருஷ்ணன் ஷெட்டி  என்பவர் வீட்டில் தங்கி சந்திரமௌலீஸ்வரர் பூஜை  நடத்தி விட்டு அடுத்த  நாள் பயணம் தொடர்ந்தது.

1934 ஏப்ரல்  24அன்று துவங்கிய   கங்கா யாத்திரை,  செகந்திராபாத்திலிருந்து  மேச்சால், துப்ரான், நரசிங்கி, பிக்னூர், குமாரரெட்டி பேட்டா,   இந்தைவை ,  மேதா, ராஜ்பள்ளி ,வழியாக  ஸோன்னா என்கிற ஊரை   மே மாதம் 5ம் தேதி அடைந்தது.  இந்த பெயர்களை இன்று தான் வாழ்க்கையில் முதல் முறை அறிகிறேன்.

கோதாவரி நதி,  ஸோன்னா  எனும் அந்த ஊரை தொட்டுக்கொண்டு ஓடுவதால், மஹா பெரியவா கோதாவரி ஸ்னானம் செய்தார்.  பிராமணர்களுக்கு தானம் வழங்கினார்.  15ம் தேதி  பெண்டாலவாடாவுக்கு   நீர்மலி, அதிலாபாத் வழியாக சென்றார். 

 நூறு வருஷங்கள் வாழ்ந்து  பாரத தேசத்தில் இத்தனை கிராமங்களுக்கு விஜயம் செய்து எண்ணற்ற கோடி மக்களை சந்தித்து ஆசி வழங்கிய ஒரே ஜகத் குரு,  சந்நியாசி,  மஹாபெரியவா என்று தான் எனக்கு சொல்லத் தோன்றுகிறது.  இதில் என்ன ஆச்சர்யம் என்றால், எந்த ஊர் சென்றாலும், அங்கே சிலருக்காவது மஹா பெரியவாளை அந்த காலத்திலேயே,  பிரச்சாரம், பத்திரிகை, மீடியா, அதிகம் வளராத போதே தெரிந்திருந்தது. எங்கும் முகங்கள், ஆசையோடு, பாசத்தோடு, பக்தியோடு  தங்கள் ஊருக்கு அவர் வந்த மட்டற்ற மகிழ்ச்சியில்  வரவேற்று மகிழ்ந்தன.

பெண்டலவாடா கிராமம், மத்திய பிரதேசத்தை சேர்ந்தது.  மஹா பெரியவா  15ம் தேதி முதல் 22ம் தேடி வரை ஒரு வார காலம் அங்கே முகாம்  இட்டிருந்தார்.  அங்கே  சங்கர ஜெயந்தி நடந்தது. அங்கேயும்  வித்வான்கள் கூடினர், வேத பாராயணம் முழங்கியது. இதை தொடர்ந்து உபநிஷதுகள் பாராயணம்,  கீதை பாராயணம், கீதா பாஷ்ய , ப்ரம்ம  ஸூத்ர உபன்யாசங்கள், என்று  சங்கர ஜெயந்தி வெகு விமரிசையாக நான்கு நாட்கள் கொண்டாடப்பட்டது.  ஆதி சங்கரரின் பாரத விஜயம், அவரது கீர்த்தி, அவர் நிகழ்த்திய  அற்புத செயல்கள் பற்றி  பேசுவதென்றால் மஹா பெரியவாளுக்கு ரொம்ப பிடிக்குமே. அழகாக ஜனரஞ்சகமாக பேசினார்.   கேட்க கொடுத்து வைத்தவர்கள் உண்மையிலே அடுத்த பிறவி இல்லாதவர்கள் என்று தாராளமாக சொல்லலாம்.


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...