பேசும் தெய்வம் - நங்கநல்லூர் J K SIVAN
103 செஞ்சுக்களின் உபசரிப்பு
செஞ்சுக்கள் என்பவர்கள் தெலுங்கு பேசும் ஆந்திர தேச பழங்குடியினர். ஸ்ரீ சைலம், அஹோபிலம் பக்கம் அதிகமாக காணலாம். நரசிம்ம பக்தி மிக்கவர்கள். 1934ம் வருஷம் ஜனவரி பெப்ருவரி மாதம் மஹா பெரியவா ஸ்ரீ சைலம் வந்ததை அறிந்து. நாகலூட்டி என்ற ஊரிலிருந்து நூற்றுக்கணக்கானோர் தரிசனம் செய்ய வந்துவிட்டார்கள்.
'சாமிக்கு என்ன உதவி செய்யணுமோ அதை செய்ய காத்திருக்கிறோம்'' என்ற அவர்களது ஆர்வம் போற்றத்தக்கது. செஞ்சுக்கள் வேடர்கள் குலத்தைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லலாம் ஏனென்றால் வில் வித்தையில் நிபுணர்கள். வேட்டையாடி பிழைப்பவர்கள். கட்டுமஸ்தான தேகம் கொண்ட கோபக்காரர்கள். வெளியாட்களை அவர்களுடைய மலைப்பிரதேச எல்லைக்குள்
நுழைய அனுமதிக்காதவர்கள். அநேகமாக ஆந்திர பிரதேசம், தெலுங்கானா, கர்நாடக, ஒடிஸ்ஸா, பகுதியில் ஆங்காங்கே வாழும் பழங்குடி காட்டு வாசிகள் . அவர்களுக்கு வேட்டையாடுவதேகுலத்தொழில். செஞ்சுக்கள் தமக்கென்று ஒரு மொழியை பேசுபவர்கள். எத்தனையோ தென்னிந்திய திராவிட மொழிகளில் செஞ்சு மொழியும் ஒன்று. மிருகங்களின் தோல், நகம், பற்கள், காட்டில் வேட்டையாடிய உயிருள்ள மிருகங்கள் பக்ஷிகள், தேன், மூலிகைகள் ஆகியவற்றை விற்று ஜீவிப்பவர்கள். அடர்ந்த நல்லமலை காடுகளில் அதிகம் காணலாம்.
மஹா பெரியவா பற்றி செஞ்சுக்களுக்கு எதுவும் ஆரம்பத்தில் தெரியாது. பிறகு ஸ்ரீசைலம் தேவஸ்தானம் மூலம் அவர் பெத்தசரிவு மலைப்பாதையில் வருவதை அறிந்து மகிழ்ந்தார்கள். மிருகங்கள் எதுவும் மஹாபெரியவா மற்றும் மடத்தை சார்ந்தவர்கள் பிரயாணம் செய்யும்போது வழியஹில் குறுக்கிட்டு தாக்காமல் பாதுகாத்தார்கள். மடத்தை சேர்ந்தவர்களுடைய சாமான்கள் பொருள் களை எல்லாம் தங்களது தலையில் முதுகில் எல்லாம் சுமந்து பெத்தசரிவு கடினமான செங்குத்தான மலைப்பாதையில் மேலே ஏறி ஸ்ரீ சைலம் சென்றடைய உதவினார்கள்.
''நீங்கள் இவ்வளவு உதவி செய்வதற்கு ஏதோ எங்களாலான சிறிய பண உதவி செய்வதை பெற்றுக்கொள்ளுங்கள்'' என்று மட நிர்வாகிகள் சொன்னபோது,
''இன்னா சாமி இது, நாங்க காசுக்காக இதெல்லாம் செய்யலீங்க, மகா ஸ்வாமியை பார்க்கற புண்யம் கிடைச்சுதே அது போதுமுங்க '' என்று பணம் பெற மறுத்து விட்டார்கள்.
அவர்கள் குலவழக்கப்படி விருந்தாளிகளை கௌரவிக்க, அவர்கள் முன்பு கூட்டமாக பாடி ஆடுவார்கள். அதுபோல் மஹா பெரியவா முன்பும் ஒரு நடன நிகழ்ச்சி செய்ய விரும்பினார்கள். மடத்து நிர்வாகிகளுக்கு இதில் ஏற்பு இல்லை. இருந்தாலும் மஹா பெரியவாவிடம் சொன்னபோது ''அவர்கள் மகிழ்ச்சியை தடுக்கவேண்டாம்'' என்று சொல்லி அவர்கள் நடனத்தை நிகழ்த்தச் சொல்லி, ரசித்தார். எல்லோருக்கும் பழங்கள் விபூதி பிரசாதங்கள் எல்லாம் வழங்கினார். அவர்களுக்கு சுவையான உணவு நிறைய அளிக்க உத்தரவிட்டார்.
செஞ்சுக்களுக்கு பரம சந்தோஷம். இது போல் ஒரு விருந்தாளியை பார்த்ததே இல்லை. என்னவோ தெரியவில்லை, இவரைப் பார்க்கும்போது மனதின் ஆழத்தில் ஒரு சொல்ல முடியாத ஆனந்தம் பிறக்கிறது என்றார்கள். மஹா பெரியவாளின் பூரண ஆசியை பெற்ற பாக்கியசாலிகள் அவர்கள்.
நமக்கெல்லாம் கிடைக்காததை பெற்ற அந்த புண்யம் செய்த செஞ்சுக்களுக்கு நமஸ்காரம்.
சிவசைலத்திலிருந்து புறப்பட்ட மஹா பெரியவா ஸ்வாமிகளும் மட சிப்பந்திகளும் துங்கபத்ரா நதியை கடந்து கர்னூல் வழியாக ஹைதராபாத் சென்றடைந்தார்கள். ஜல்லாபுரம், அனந்தபுரம் , ஊர்களுக்கு சென்று கத்வால் நகரத்தை அடைந்தார்கள். கத்வால் ஹைதராபாத் ராஜ்யத்தின் ஒரு முக்கிய பகுதியாக அப்போது விளங்கியது. அதற்கு ஒரு ராணி தலைவி. அந்த அரசி மஹா பெரியவாளை வரவேற்று அந்த ஊரில் நான்கு நாள் தங்க ஏற்பாடுகள் செய்தாள். ஆயிரக்கணக்கானோர் மஹா பெரியவாளின் வருகை அறிந்து தரிசனம் செய்ய வந்தார்கள். இதெல்லாம் அறியும்போது மஹா பெரியவாவின் பரந்த மக்கள் தொடர்பு, கருணை உள்ளம், அனுபவம் நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது. பிறகு மஹா பெரியவா கிருஷ்ணா அக்ராஹாரம், ஆத்மகூர் , கொத்த கோட்டா, சின்னகனம் பேட்டா, ஜெட்ஜார்லா, பெத்தகனம்பெட்டா போன்ற ஊர்கள் எல்லாம் விஜயம் செய்து , 1934ம் வருஷம் மார்ச் மாதம் 12ம் தேதி ஹைதராபாத் சென்றடைந்தார்.
No comments:
Post a Comment