பேசும் தெய்வம் - நங்கநல்லூர் J K SIVAN
104 நிஜாம் ராஜா விருந்தினர்
செய்திகள் எவ்வளவு வேகமாக பரவுகின்றன . சில சமயம் காற்றைக்கூட மிஞ்சிவிடும் அளவுக்கு வேகம். மஹா பெரியவா ஹைதராபாத் வருகிறார் என்று கேள்விப்பட்டு அந்த பகுதி வாழ் பக்தர்களுக்கு எவ்வளவு சந்தோஷம். அவரை வரவேற்க பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்துவிட்டார்கள். வரவேற்பு குழு தயாராகி மும்முரமாக ஏற்பாடுகள் நடந்தன. வரவேற்பு குழு தலைவர் யார் தெரியுமா? திவான் பஹதூர் S ஆராவமுத ஐயங்கார்.
1934 மார்ச் மாசம் 12ம் தேதி மாலை ஆறு மணிக்கு பெரிய கூட்டம் சேர்ந்துவிட்டது. குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் ஸ்ரீ ராஜாராம் ராய், வாமன் நாயக், ஷ்யாம் ராவ், துக்காராம், ரங்கதம் பட், எஞ்ஜினீயர் நடராஜ ஐயர் இன்னும் பல பிரமுகர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தகோடிகள். மஹா பெரியவாளை வரவேற்க அவ்வளவு பேரும் ஊரின் எல்லைக்கே சென்று பூர்ண கும்பத்தோடு வேத கோஷம் முழங்க ஆவலாக காத்திருந்தார்கள். ஹைதராபாத் ராஜ்ய அரசர் நிஜாம் மன்னரின் படை வீரர்கள், ராணுவ அணிவகுப்பு மரியாதை செய்தனர்.
மஹா பெரியவா வந்ததும் அங்கிருந்து ஊர்வலம் துவங்கியது. ஹைதராபாத் பிரதான வீதிகளில் நிற்க இடமில்லை. ஊர்வலம் மெதுவாக சென்றது. அனைவருக்கும் மஹா பெரியவா ஆசி வழங்கினார். ராஜாராம் ராய் இல்லத்தின் வாசலில் ஊர்வலம் முடிந்தது. ராய் அரண்மனை போன்ற இல்லம் கொண்டவர். அதற்கு லக்ஷ்மணேபாக் என்று பெயர். லைதர்வாஜா என்கிற இடத்தில் அமைந்திருந்தது. பல்லக்கிலிருந்து மஹா பெரியவா இறங்கியபோது பெருத்த சத்தம் ''ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர''. அவருக்கு ஒரு ஸிம்ஹாஸனம் அமைத்திருந்தார்கள். அதில் சென்று அமர்ந்தார். அநேகர் அவரை சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தார்கள். வாமன் நாயக் மஹா பெரியவாளின் காசி யாத்திரை பற்றி அனைவருக்கும் விவரித்தார். போகும் வழியில் ஹைதராபாதில் தரிசனம் ஏற்பாடு செய்ததற்கு நன்றி கூறினார்.
மஹா பெரியவா காசியாத்திரைக்கு தேவையான உதவிகளை பொருள்களை அளிக்க அநேகர் முன்வந்தனர். மஹா பெரியவா லக்ஷ்மணேஸ்வர பாக் இல்லத்தில் 24ம் தேதி வரை வாசம் செய்தார். 25ம் தேதி மார்ச்1934 அன்று அநேக பக்தர்கள் பிக்ஷா வந்தனம் பாத பூஜையில் பங்கேற்றார்கள். அந்த நிகழ்வு துளஜா பவன் என்கிற மண்டபத்தில் நடை பெற்றது. 27ம் தேதி வக்கீல் கல்யாணராமய்யர் அழைப்பை ஏற்று அவர் இல்லம் சென்றார். நிஜாம் காலேஜ் ப்ரொபஸர் க்ரிஷ்ணமுர்த்தி ஐயரின் இல்லத்துக்கு 28ம் தேதி விஜயம் செய்தார். ஹைதராபாத் ராஜ்ய முதலமைச்சர் கிஷன் பிரசாத் பகதூர் அவர்களின் வேண்டுகோளை ஏற்று 29ம் தேதி அவர் அரண்மனைக்கு சென்றார். கிஷன் பிரசாத் சிறப்பாக பிக்ஷா வந்தனம், பாத பூஜைக்கு ஏற்பாடு செய்தார். முதலமைச்சருக்கு மஹா பெரியவா ஒரு காஷ்மீர் சால்வை பரிசளித்தார்.
மஹா பெரியவா தங்கி இருந்த சமயத்தில் நிஜாம் ராஜ்ய சமஸ்தான சிப்பந்திகள், பிரமுகர்கள், அதிகாரிகள் அனைவரும் வந்து தரிசித்து அறிமுகம் செய்விக்கப்பட்டனர். நிஜாம் மன்னர் மஹா பெரியவா விஜயம் செய்ததற்கான அனைத்து செலவினங்களையும் ஏற்றார்.
நிஜாம் அரசாங்கத்தின் விதிகள் படி அரசாங்க முக்கிய அதிகாரிகள் சிலர் மட்டுமே யானைகளை வைத்துக்கொண்டு ஆரோகணிக்கலாம். இந்த விதியை தளர்த்தி மஹா பெரியவா மடத்தில் இருந்த யானைகள் மேல் ஊர்வலம் வர அனுமதித்தது.
மஹா பெரியவா ஹைதராபாத் வந்திருந்த சமயம் , நிஜாம் அரச பரம்பரையில் யாரோ உயிரிழந் ததால் ராஜ்ஜியம் முழுக்க துக்கம் அனுஷ்டிக்க பட்டது. எங்கும் சங்கீதம் இசை ஒலி கேட்க அனுமதியில்லை. இருந்தபோதிலும் மஹா பெரியவா வரவால் அவர் இருக்கும் இடத்தில் மட்டும் பூஜை நடக்க, நாதஸ்வர இசை தடையின்றி ஒலிக்க நிஜாம் மன்னர் கட்டளையிட்டார்.
அநேகர் மஹா பெரியவா வரவை ஒட்டி, மடத்துக்கு காணிக்கை அளித்தார்கள். மஹா பெரியவா காசியாத்திரை செலவுகளுக்கு நிதி உதவி அளித்தார்கள். நிஜாம் அரசாங்கமும் நன்கொடை அளித்தது.
30.3.1934 லிலிருந்து 16.4.1934 வரை மஹா பெரியவா சூப்பரின்டென்டென்ட் இன்ஜினீயர் M கோபால ஐயர் இல்லத்தில் முகாம் இட்டார்.
மஹா பெரியவா விஜயத்தை ஒட்டி ஒரு சனாதன சபா மாதவ்ராவ் என்பவர் இல்லத்தில் கூடியது. அந்த சபாவுக்கு மஹா பெரியவாவுக்கு அழைப்பு அளித்தார்கள். மஹா பெரியவா அழைப்பை என்று சபாவை அலங்கரித்தார். சபாவில் பங்கேற்ற பண்டிதர்கள், சாஸ்த்ரா வல்லுநர்களில் சிலர் பெயரை மட்டும் குறிப்பிடுகிறேன். ந்யாய வேதாந்த பாஸ்கர பிரம்மஸ்ரீ புலுசு அப்பண்ணா சாஸ்திரிகள், வணபர்த்தி ஆஸ்தான வித்வான், உபய வேதாந்த நம்பாக்கம் ராகவாச்சாரியார், வேமூரி ரங்கமுலு, இன்னும் பலர். மஹா பெரியவா சபாவை அங்கீகரித்து வரவேற்று துவக்க உரையில் ஒவ்வொரு ஹிந்துவும் நமது தர்மம், மதம் ஆகியவற்றுக்கு புரியவேண்டிய சேவைகளை கடமைகளை விவரித்தார். ஒவ்வொருவரும் அவரவர் ஸ்வதர்மத்தை விடாது அனுஷ்டித்தால் சனாதன தர்மம் தழைத்தோங்கும் என்று அறிவுரை கூறினார். சனாதன தர்மத்தின் வளர்ச்சிக்கு இதோ போன்ற சபாக்கள் ஆங்காங்கே அமைக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார்.
இதற்கு பண்டிதர்கள் பாமரர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பும் ஆர்வத்தோடு ஆதரவும் அளிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். பண்டிதர்கள் மக்களை அடிக்கடி சென்றடைந்து அவர்களுக்கு ஞானம் புகட்ட வேண்டும் அன்று வேண்டினார். அப்பண்ணா சாஸ்திரிகள் தன்னுடைய முடிவுரையில் 'ஆஹா, நமது மஹா பெரியவா, வேறு யாருமில்லை, ஆதி சங்கரரின் மறு அவதாரம் என்று போற்றினார்'' இதில் எள்ளளவும் சந்தேகம் உண்டா?
No comments:
Post a Comment