திருப்பள்ளி எழுச்சி - நங்கநல்லூர் J K SIVAN
மார்கழி 29.பச்சையப்ப முதலியார் தர்மம்
9 விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா
விழுப் பொருளே! உன தொழுப்பு அடியோங்கள்
மண்ணகத்தே வந்து வாழச் செய்தானே!
வண் திருப்பெருந்துறையாய்! வழி அடியோம்
கண் அகத்தே நின்று களிதரு தேனே!
கடல் அமுதே! கரும்பே! விரும்பு அடியார்
எண் அகத்தாய்! உலகுக்கு உயிர் ஆனாய்!
எம்பெருமான்! பள்ளி எழுந்தருளாயே.!
எனையாளும் திருப்பெருந்துறை ஸர்வேசா , விண்ணில் வாழும் தேவர்கள் கூட நெருங்க முடியாத உயர்ந்தவனே, உன்னுடைய திருவடிகளுக்கு சேவை செய்யும் அடியார்களாகிய எங்களை இந்த பூமியில் வாழ வகை செய்து கொடுத்தவனே. நாங்கள் பரம்பரை பரம்பரையாக உன்னுடைய அடிமைகள். எங்கள் எல்லோருக்கும் ஆனந்தம் தருபவனே, இனிமையான தேன் சுவையே, கருணைக் கரும்பே, பக்தியோடு உன்னை வணங்குவோர் நெஞ்சில் குடிகொண்டவனே, எண்ணத்தில் நிறைந்தவனே,உலகமெல்லாம் நீயே, துயிலெழுவாய் தெய்வமே.
10 புவனியில் போய்ப் பிறவாமையின் நாள் நாம்
போக்குகின்றோம் அவமே இந்தப் பூமி
சிவனுய்யக் கொள்கின்ற ஆறு என்று நோக்கி
திருப்பெருந்துறை உறைவாய்! திருமாலாம்
அவன் விருப்பு எய்தவும் அலரவன் ஆசைப்
படவும் நின் அலர்ந்த மெய்க் கருணையும், நீயும்
அவனியில் புகுந்து எமை ஆட்கொள்ள வல்லாய்!
ஆர் அமுதே! பள்ளி எழுந்தருளாயே.!
''திருப்பெருந்துறையில் வீற்றிருந்து அறுப்புரியும் ஆத்மநாதா, திருமாலாகிய மஹா விஷ்ணு, ப்ரம்மா இருவருமே அடடா, நாம் சிவனருள் பெற்ற பூமியில் நாமும் பிறக்கவில்லையே, அதனால் வாழ்நாள் வீணாளாகி விட்டதே என்று எண்ணுகிறார்கள். இந்த பூமியில் பிறக்க விருப்பம் கொள்கிறார்கள். எங்களுக்கு அப்படிப்பட்ட பாக்யத்தை கொடுத்தவனே , உன்னுடைய பாதங்களை அர்ச்சிக்க உனது திருவருள் சக்தியை போற்றிப்பாட வகை தந்து, நீ பூமியில் எழுந்தருளி வந்து எங்களை ஆட்கொள்ள வல்லவனே! அருமையான அமுதம் போன்றவனே! திருப்பள்ளி யினின்றும் எழுந்தருள்வாயாக. அருணன் இந்திரன் திசை அணுகினன்! இருள்போய் அகன்றது; உதயம் நின் மலர்த் திரு முகத்தின் கருணையின் சூரியன் எழ எழ, நயனக் கடிமலர் மலர மற்றண்ணல் அங்கண்ணாம் திரள் நிரை அறுபதம் முரல்வன ;இவையோர் திருப்பெருந் துறையுறை சிவபெருமானே!அருள் நிதி தரவரும் ஆனந்த மலையே! அலைகடலே பள்ளி எழுந்தருளாயே!
ஆவுடையார் கோயிலில் ஒரு கல்வெட்டு என்ன சொல்கிறது தெரியுமா?
''ஆவுடையார்க் கோயிலில் காஞ்சிபுரம் பச்சையப்ப முதலியாருடைய தர்மம் சகலருக்கும் பிரசித்தியாகத் தெரியும் பொருட்டு நிரந்தரமான ஞாபகத்தின் பொருட்டுச் செய்த விளம்பரமாவது-
''இறந்துபோன புண்ணிய புருஷராகிய பச்சையப்ப முதலியார் அவர்களாலே வைக்கப்பட்டிருக்கும் லட்சம் வராகனுக்கு வரப்பட்ட சாயர¬க்ஷ கட்டளைத் தர்மமானது.
''இறந்துபோன புண்ணிய புருஷராகிய பச்சையப்ப முதலியார் அவர்களாலே வைக்கப்பட்டிருக்கும் லட்சம் வராகனுக்கு வரப்பட்ட சாயர¬க்ஷ கட்டளைத் தர்மமானது.
கனம் பொருந்திய சுப்ரீம் கோர்ட் கவர்ன்மெண்டு அதிகாரிகளால் தர்ம வரிசரணைக் கர்த்தர்களாக நியமிக்கப்பட்டுச் சென்னப் பட்டினத்திலிருக்கும் இந்து சபையாரவர்களுடைய உத்திரவின்படி சாலிவாகன சகாப்தம் 1764ஆம் வருஷத்து சரியான சுபகிருது முதல் வருஷம் 120 வராகன் செலவுள்ளதாக நடந்து வருகின்றது. ஷ மூலதனம் சுப்ரீம் கோர்ட்டு அதிகாரிகளுடைய உத்திரவின் படி சென்னப் பட்டணத்திலிருக்கும் ஜெனரல் திரேசரி என்னும் கவர்ன்மெண்டாருடைய பொக்கிஷ த்தில் வைக்கப்பட்டிருக்கின்றது. ஷ தர்மம் கிரமமாக நடவாவிட்டால் தர்மத்தில் சிரத்தையுள்ளவர் ஷ சபையாரவர்களுக்குத் தெரியப் படுத்த வேண்டியது."
ஒரு லக்ஷம் வராகன் என்பது ஒருலக்ஷம் சவரன் தங்கம். அதன் இன்றைய விலை என்ன என்று நீங்களே பெருக்கி பார்த்துக் கொள்ளுங்கள். எவ்வளவு தாராளமான மனது இருந்தால் முதலியார் இப்படிப்பட்ட தர்ம கைங்கர்யம் பக்தி பூர்வமாக செயதிருப்பார்? இது போல் இன்னும் எத்தனையோ ஆலயங்கள், பள்ளிகளுக்கு செய்த வள்ளல் அவர்.
இதெல்லாம் சொல்லாமல் அவர் சிலைக்கு பச்சையப்பன் என்ற பெயர் இருப்பதால் வெறுமே, பச்சை வர்ணம் அடித்து காட்டும்போது மனதை என்னவோ செய்கிறது.
No comments:
Post a Comment