Sunday, January 2, 2022

THIRUVEMBAVAI

திருவெம்பாவை -  நங்கநல்லூர்  J K  SIVAN 
மார்கழி 18ம் நாள்.

18..  திரிபுர சுந்தரி சமேத திருசூலநாதர்  

இன்று  மணிவாசகரின்   பதினெட்டாவது  திருவெம்பாவையோடு  ஒரு  அற்புதமான அமைதியான சிவாலயம் பற்றி சொல்ல விழைகிறேன். அது நமது சென்னையிலேயே இருக்கிறது.  

இந்த  ஆலயம்  கொஞ்சம்  வித்தியாசமான க்ஷேத்ரம். தெருவின் ஒரு பக்கம் அதி நவீன ஆகாய விமான கூடம். அநேக   அதி வேகமான ஊர்திகள் நெரிசலாக செல்கிறது. மேலே ரயில் பறக்கிறது. ''ஆ'' என்று வாய் பிளந்து பார்க்கும்  படியான விமான தளம். தெருவின் இடது பக்கம் ஒரு பழைய சின்ன தெரு. பழைய வீடுகள், ரயில் தண்டவாளத்தை கடக்க ஒரு பழைய  கால   பெரிய இரும்பு கம்பி தடுப்பு. கொஞ்ச நேரம் காத்திருந்து ரயில்கள் போனவுடன், தடுப்பு கம்பம் மேலே உயர்ந்த   வுடன் தண்டவாளத்தை கடந்து நேராக குறுகிய பழைய தெரு நேராக சென்று, பிறகு அதுவாகவே வளைந்து சென்று மலைகள் சூழ்ந்த ஒரு ஆயிரம் வருஷங்கள் கடந்த கஜப்பிரஷ்ட (தூங்கானை) ரக சிவன் கோவிலில்  நம்மை சேர்க்கிறது.   மூலவர் திரிசூல நாதர். அவர் பெயரால் ஆன ஊரே திரிசூலம். விமான கூடமும் அவர் பெயரில்.

அம்பாள் தெற்கு பார்த்த திவ்ய ரூபமாக நின்று கொண்டிருக்கும் திரிபுர சுந்தரி. பெரிய கிழக்கு பார்த்த லிங்க ரூப திரிசூலநாதர். நான் சென்றபோது ஆலயத்தில் யாரும் இல்லை. அமைதியாக அவரை தரிசனம் செய்தேன் . ''ப்ரஹதீஸ்வர மஹாதேவ''  கானடா ராகத்தில்  பாடினேன். 12ம் நூற்றாண்டு முதலாம் குலோத்துங்கன் கட்டிய கோவில். கோவில் சுவற்றில் கல்வெட்டுகள் படிக்க  முடியாத தமிழில் இருந்ததால் வெறுமே பொம்மை பார்க்க தான் முடிந்தது. . கர்ப்ப கிரஹத்திலி ருந்து சுரங்கம் இருப்பதாகவும் அதில் ராஜா தனது செல்வங்களை புதைத்து வைத்திருப்பதாகவும் தகவல். சுற்றிலும் உள்ள மலைகள் பஞ்சபாண்டவர் குன்றுகள் என்ற பெயர் கொண்டவை. நிறைய கல் உடைத்து எடுத்து வீடு கட்டியவர்கள் இப்போது நிறுத்தப் பட்டிருக்கிறார்கள்.

பெயர் மாற்றிவிடுவது நமக்கு கை வந்த கலை . முற்காலத்தில் இந்த ஊர் பெயர் திருநீற்று சோழ நல்லூர் , அப்புறம் , திருச்சுரம்.   மலைகளால் சூழப்பட்ட இடத்தை சுரம் என்பார்கள். நேரம் காலம் சுருங்கி பெயரும் சுருங்கி இப்போது திரிசூலம்..  எப்படியோ  சிவன் சம்பந்தமான சூலம்  பெயரில் இருப்பதில் ஒரு சின்ன சந்தோஷம். சூலத்துக்கு மரியாதை கொடுத்து திரிசூலம் என்று சொல்பவர்களும் உண்டு. சூலத்துக்கு மரியாதை கொடுத்து திரிசூலம் என்று சொல்பவர்களும் உண்டு.   

கோயில் பிரகாரத்தில் அற்புதமான நாக யக்னோப வீத விநாயகர். (நாகம் பூணலாக மார்பில்)
தக்ஷிணாமூர்த்தி வீராசனத்தில் அமர்ந்திருப்பது இங்கே அபூர்வம்.  

சந்நிதியை பார்த்து நந்திகேஸ்வரர் அழகாக வீற்றிருக்கிறார். கோவிலுக்கு எதிரே ஒரு பாழடைந்த சத்திரம் குலோத்துங்கன் காலத்திலிருந்து அப்படியே இருக்கிறது.

இந்த ஆலயத்தில் ஆதி சங்கரருக்கு ஒரு சந்நிதி அழகாக இருக்கிறது. ஆலய தூண்களில் சில அற்புத சிலைகள் வடித்திருப்பதை பார்த்து வியந்தேன். ஒன்றில் அழகிய வேணுகான கிருஷ்ணன், இன்னொன்றில் ஆஞ்சநேயர்.  விமான  நிலையத்துக்கோ   அதைக் கடந்தோ  போகிறவர்கள்  இடது பக்கம் உள்ளே நுழைந்து இந்த  அற்புத கோவிலை தரிசிக்கலாம்.
இனி  பதினெட்டாவது திருவெம்பாவை:

திருவெம்பாவை பாடலில் '' அண்ணாமலையான் அடிக்கமலம் சென்றிறைஞ்சும்'' என ஆரம்பிக்கிறார். மாணிக்கவாசகர் திருவண்ணாமலையில் தான் திருவெம்பாவை இயற்றி பாடினார் என்று தோன்றுகிறது. சிவனது செம்பொற் திருவடிகள் அனைத்திற்கும் முதலும் முடிவும் ஆகும் என கூறுகிறார்.

தேவர்கள் சிவன் திருவடிகளில் அடி பணிந்து வணங்க, அவர்கள் சிரங்களில் இருந்து மாணிக்க கற்கள் எல்லாம் ஒளி வீச சிவனின் திருவடிகளே பேரொளி வீசுகிறது என்கிறார். "விண்மீன் ஒளிகள் கதிரவன் ஒளியால் மறைவதற்கு முன் நீராட வேண்டும்' என்பதைக் குறிக்கிறது.

திருவெம்பாவையில்மு முதல் 8 பாடல்கள் விடிகாலை எழுந்து நீராட செல்வது குறித்து. தூங்குபவர்களை தட்டி எழுப்பி ''வா நீராட'' என்று அழைப்பவை.  

18. அண்ணா மலையான் அடிக்கமலஞ் சென்றிறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித்தொகைவீ றற்றாற்போல்
கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்பத்
தண்ணார் ஒளிமழுங்கித் தாரகைகள் தாமகலப்
பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கொளிசேர்
விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக்
கண்ணா ரமுதமுமாய் நின்றான் கழல்பாடிப்
பெண்ணேயிப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய்.

எழுந்திரடி பெண்ணே,  சீக்கிரம்.  நாம்  திருவண்ணாமலையில் இருக்கிறோம். அதோ அந்த அருணாசலேஸ்வரர் திருவடிகளை சுற்றி  எத்தனை தேவாதி தேவர்கள்  முற்றுகை இட்டிருக்
கிறார்கள் பார்.  ஆஹா  அந்த  தேவர்களின் சிரத்தை அலங்கரிக்கும்   நவமணிகள் எவ்வளவு ஒளி வீசுபவையாக இருந்தாலும் அங்கே ஒரு அதிசயம் நடைபெறுகிறது.   பரமேஸ்வரனின் திருவடி தாமரை களிலிருந்து வீசும் பொன்னொளி  அந்த தேவர்கள் தங்கள்  சிரங்களை அந்த பொற்பாதங்கள் மேல் பொருத்தி வணங்கும் போது  அவர்கள் அணிந்திருந்த  நவமணிகள்  ஒளியிழந்தன, இரவெல்லாம் ஒளிவீசும் தாரகைகள்  சூரியன் பொன்னொளிக்கதிர்கள் முன்  ஒளியிழந்து போல இருக்கிறது இது  என்கிறார்  மணிவாசகர்.
 அவன் எந்த உருவம் கொண்டவனாகவும்  இல்லாதவனாகவும்   காட்சி தருகிறார்.  பெண்ணாக,  ஆணாக,  இரண்டு மில்லாத ஜீவன்கள், எப்படி காட்சி தந்தாலும் அவன் உருவற்றவன். அவனே  ஜொலிக்கும் ஆகாயம், அவனே பரந்த பூமி,  வேறுபட்ட   பஞ்சபூதங்களாக  காட்சி தந்து அருளும்  மாயவன்  அவன். அவன் திருவடிகளை, எழுந்து   வா ஆலய  தீர்த்தத்தில்  நீராடிவிட்டு  நாம் சேர்ந்து வாழ்த்தி வழிபடுவோம்.

 



 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...