Friday, December 31, 2021

thiruvembavai

 திருவெம்பாவை -  நங்கநல்லூர்  J K  SIVAN 

மார்கழி 17ம் நாள்.
                  
 17.  திரு வாசகரும் திருவெம்பாவையும்

ஆண்டாள் இயற்றிய  திருப்பாவை  மணிவாசகர் காலத்துக்கு முற்பட்டது.   எனவே அதை ஒட்டி  தானும்  
ஒரு  திருப்பள்ளி எழுச்சியும்  திருவெம்பாவையும்  பாடினாரோ என்று எண்ண  வைக்கிறது.  நல்ல விஷயம்  ரெட்டிப்பாக கிடைப்பது நமது நல்ல காலம். நல்லதிர்ஷ்டம். திருப்பாவை முடிந்ததும்  திருப்பள்ளி எழுச்சி தொடரும்.

திருவெம்பாவை என்பது மாணிக்கவாசகரால் சைவ சமயத்தின் முழுமுதற்கடவுளான சிவபெருமானைக் குறித்து எழுதப்பட்ட பாடல்களின் தொகுப்பாகும். இந்த திருவெம்பாவை பாடல்களுடன், திருப்பள்ளியெழுச்சி பதிகத்தின் பாடல்களையும் இணைத்து மார்கழி மாதத்தில் பாடுவதை சைவர்கள் மரபாக கொண்டுள்ளார்கள்.

திருவண்ணாமலையை சார்ந்த  சில   கன்னிப் பெண்கள் மார்கழி மாதத்தில் இருக்கும் பாவை நோன்பின் ஒரு பகுதியாக இந்த பாடல்களைப் பாடுவதாக  அமைந்துள்ளது.

இருபது பாடல்களை கொண்ட  திருவெம்பாவை   சிவ பிரான் புகழ்களைப் பாடியபடி நீராடச் செல்லுதலைக் குறிக்கிறது.  முதல்  எட்டு பாடல்கள்  பெண்களை துயிலெழுப்புவதாகவும்,  ஒன்பதாவது பாடல் சிவபெருமானிடம் தங்கள் வேண்டுதல்களைக் கூறுவதாகவும், பத்தாவது பாடல் நீராடுதலையும்   தீந்தமிழில்  பாடப்பட்டுள்ளது.

மாணிக்கவாசகர் திருவண்ணாமலையை தரிசிக்கும்போது இதைப் பாட வேண்டும் என்று எண்ணம் தோன்றி  இயற்றியவை  திருவெம்பாவை பாடல்கள் . சிவனுக்குத் திருத்தொண்டு புரிவதையே வரமாகக் கேட்கிறது திருவெம்பாவை. திருவெம்பாவைக்குச் சிறப்பாக விளங்குவது "எம்பாவாய்" என்னும் தொடர்மொழி.

இருபது பாடல்களிலும் பாட்டின் முடிவில்  ''எம்பாவாய்''  வருவதால் அதையே  பெயராக  திரு அடைமொழி சேர்த்து  ''திருவெம்பாவை''  ஆகிவிட்டது. இந்த "ஏலோர் எம்பாவாய்" என்ற தொடர் பொருளற்றது என்றும், பாவை போன்ற பெண்ணே நீ சிந்திப்பாய் என்று பொருள்  தருவதாகவும் இரு கருத்துகள் நிலவுகின்றன.

சிவசக்தியின் அருட்செயலையும், நவசக்திகள் ஒன்றுசேர்ந்து சிவபெருமானைத் துதிப்பதும் திருவெம்பாவையின் தத்துவம்.   மனோன்மணி, சர்வ பூதமணி பலப்பிரதமணி , பலவிகரணி, கலவிகரணி, காளி, ரெளத்திரி, சேட்டை, வாமை என்ற ஒன்பது சக்திகளின் ஏவலால் பிரபஞ்ச காரியம் நடைபெறும். இதனை உணர்ந்து நோற்பதே பாவை நோன்பாகும்.

இந்த அறிமுகத்துடன் இன்றைய  17வது  திருவெம்பாவைக்குச் செல்வோம்:

17. செங்கண் அவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்
எங்கும் இலாதோர் இன்பம் நம்பாலதாக்
கொங்கு உண் கருங்குழலி நந்தம்மை கோதாட்டி
இங்கு நம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்
செங்கமலப் பொற்பாதம் தந்தருளும் சேவகனை
அங்கண் அரசை அடியோங்கட்கு ஆரமுதை
நங்கள் பெருமானைப் பாடி நலம் திகழ்ந்
பங்கயப் பூம்புனல் பாய்ந்தாடேலோர் எம்பாவாய்.

 கம கம வென நறுமண மலர்கள் வாசம் வீசும் கரிய கூந்தலை உடைய பெண்ணே! சிவந்த கண்களையுடைய திரு மாலிடத்தும், நான்முகனிடத்தும், பிற தேவர்களிடத்தும், எங்கும் மற்றவர்களிடத்தும் இல்லாத, எல்லையற்ற ஆனந்தம் எங்களிடம் உண்டாகும்படி பெருமைப் படுத்தி விட்டாய். நம் இல்லத்தில் வந்து செந்தாமரை போன்ற அழகிய திருவடியை தரிசிக்க தந்தருளும் அந்த ஆடலரசனை, இணையற்ற மா வீரனை, அழகிய கருணை நோக்குடைய மன்னனை, நம்மை தடுத்தாட் கொள்ளும் பேர் அமுதனை எம்பிரானைப் புகழ்ந்து பாடி, நன்மைகள் பெருக, எழுந்து வா. எங்களோடு இந்த பொற்றாமரை நிறைந்த நீரில் குதித்து நீராடுவோம்.


new year wish

 வாழ்க  வளமுடன்  -   நங்கநல்லூர்  J K  SIVAN 


நாம்  வெள்ளைக்காரர்கள்  அல்ல.  
ஜனவரி முதல் நாள்  எந்த விதத்திலும்  நமது  புத்தாண்டு அல்ல. 
ஆனால்  பல  நூறு ஆண்டுகள்  வெள்ளையர் ஆண்ட  நாடு  இது. அவர்கள்   அறிமுகப்படுத்திய பழக்க வழக்கங்கள் இன்றும் நம்மை விட்டு போகவில்லையே.   

 வீட்டில்  ஆங்கிலத்தில்  பேசும்  தமிழ்க் குடும்பங்கள்  அதை  நாகரிகமாக கருதுகிறதா? ஆங்கிலச் பேசாவிட்டால் அநாகரிகமா?  
 தமிழுக்கு பிறகு ஏன்  மதர் டங்   mother tongue .  தாய் மொழி  என்று பொருந்தாத பெயர்?   தாயே வேண்டாமா?  அதன்  சிறப்பு  ஏன் புரியவில்லை?  
கொஞ்சம் கொஞ்சமாக நாம் மேற்கு நோக்கி  ஏன்  நகர்கிறோம்?   உடை, உணவு, பாஷை, உறவு முறை  எல்லாம் மேனாட்டு பாணியிலா ?
இதெல்லாம்  இல்லாவிட்டால்  நாம்  கௌரவம் பெறாதவர்களா?    காட்டு மிராண்டிகளா இன்னும்?   எனக்கு இதற்கெல்லாம் விடை தெரியாது. ஏனெனில்  நானும்  கும்பலில்  ஒருத்தன் தானே.

இந்த புது வருஷம் எத்தனை வினோத செயல்களை செய்ய வைத்திருக்கிறது.

காலண்டர்  என்று பன்னிரண்டு மாசங்களை காட்டும்  12 காகிதங்களோடு, அல்லது ஒரே பக்கத்தில் மேலே படத்தோடு கீழே  12 கட்டங்களோடு அல்லது  தினசரி ஒரு சீட்டு கிழிக்கும் படியாக  அட்டையில் சாமி படத்தோடு  கிடைப்பதற்கு எங்கெல்லாம்  தேடி அலைந்திருக்கிறேன்.  

 காலண்டரை எப்படியாவது நிறைய  வாங்கி  சேர்த்துவிட  வேண்டும் என்று  ஒரு பசி.   கடை கடையாக  அலைந்திருக்கிறேன்.  
அதேபோல்  டயரி எழுதும் பழக்கமே இல்லாவிட்டாலும்  யாரைப்பார்த்தாலும்  டயரி கிடைக்குமா என்று கெஞ்சி இருக்கிறேன்.  
 டயரிகள் , எனக்கு தெரிந்து   சலவைத் துணி  கணக்கு எழுத  பால் தயிர் கணக்கு  மற்றும்  அட்ரஸ் எல்லாம் எழுத தான் நிறைய குடும்பங்களில் பயன் பட்டது.   
டயரி என்பது நாட்குறிப்பு.  என்ன நாள் என்ன குறிப்பு?  
சிலர்  பொன்மொழிகள் எழுதி வைப்பார்கள். 
அநேக  குடும்ப ஸ்த்ரீகள்  கையில் இந்த  பழைய டயரிகள்  ஸ்தோத்ர  புஸ்தகமாக, மற்றவர்கள் கையில்  சினிமா பாட்டு எழுதி வைத்துக்கொள்ளும் புத்தகமாக தான் பார்த்திருக்கிறேன்.  

பலர்  பல நாட்கள் என்னை காலண்டர்களுக்காகவும்,  டயரிகளுக்காகவும் நடக்க விட்டிருக்கிறார்கள். அதெல்லாம் நினைத்துப் பார்த்தால்  இப்போது வேடிக்கையாக  சிரிப்பு வருகிறது.  

இப்போது யாரும்  காலண்டர்  தேடுவதில்லை, '' வீட்டில் மாட்ட இடமில்லை சார். காலண்டர்  வேண்டாம்.  டயரி வேண்டாம்.  எழுதுவதில்லை. '' என்று தான் பதில் வருகிறது.

எழுதும்  பழக்கமே போய்விட்டது.   எல்லாம் மொபைலில் இருப்பதால், எல்லோரிடமும்  மொபைல் டெலிபோன் இருப்பதால்,  வீட்டில் கடிகாரம், கைக்கடிகாரம் எல்லாம்  நிறைய காணாமல் போய்விட்டது.  
 கைக்கடிகாரம் கட்டும் பழக்கமும்  நின்று விட்டது. 

புத்தாண்டில் அடுத்து ,முக்கியம் வகித்தது  வாழ்த்து அட்டைகள் .  முன்பு காசு  கொடுத்து வாங்கி முக்யமானவர்க ளுக்கு  அனுப்புவேன் .  போஸ்ட்  கார்டில்  புத்தாண்டு வாழ்த்துகள் எழுதி நிறைய  பேருக்கு  அனுப்பி இருக்கிறேன்.  15 பைசாவில்  முடிந்த  விஷயம்.

இப்போது  வாட்சாப்  எல்லாவற்றையும்  தூக்கி சாப்பிட்டு விட்டது. வித விதமான  வினோத வகையில்  புத்தாண்டு வாழ்த்துக்கள், இது எத்தனை நாளைக்கோ.

எது எப்படியோ,  சரி, வழக்கம் போலவே பழக்க தோஷத்தில்  ''ஹாப்பி நியூ இயர்''  சொல்கிறேன்.  க்ஷேமமாக  இருங்கள், சுபிக்ஷமாக  தேக ஆரோக்கியத்தோடு  இறைவன் அருளால்  குடும்பத்தில்  எல்லோரும் சுகமாக வாழ்க.
லோகா சமஸ்தா சுகினோ பயந்து:   உலகத்தில் எல்லா உயிர்களும்  சுகமாக வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.  



SRI LALITHA SAHASRANAMAM

 


ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம்-.நங்கநல்லூர்   J K  SIVAN  

ஸ்லோகங்கள்    133-135     நாமங்கள் 678 - 694


भाषारूपा बृहत्सेना भावाभाव-विवर्जिता ।
सुखाराध्या शुभकरी शोभना सुलभा गतिः ॥ १३३॥

Bhasha roopa Brihat sena Bhavabhava vivarjitha
Sukharadhya Shubhakaree Shobhana sulabha gathi

பாஷாரூபா, ப்றுஹத்ஸேனா, பாவாபாவ விவர்ஜிதா |
ஸுகாராத்யா, ஶுபகரீ, ஶோபனா ஸுலபாகதிஃ || 133 ||

राज-राजेश्वरी राज्य-दायिनी राज्य-वल्लभा ।
राजत्कृपा राजपीठ-निवेशित-निजाश्रिता ॥ १३४॥

Raja Rajeswari Rajya Dhayini Rajya vallabha
Rajat krupa Raja peetha nivesitha nijasritha

ராஜராஜேஶ்வரீ, ராஜ்யதாயினீ, ராஜ்யவல்லபா |
ராஜத் க்ருபா, ராஜ பீடா , நிவேஷித நிஜஸ்ரிதா,,

राज्यलक्ष्मीः कोशनाथा चतुरङ्ग-बलेश्वरी ।
साम्राज्य-दायिनी सत्यसन्धा सागरमेखला ॥ १३५॥

 
Rajyalakshmi,  kosnaathaa, chathuranga  baleswari 
samraajyadhaayini, sathyasanthaa,  saagaramekalaa

ராஜ்யலக்ஷ்மீஃ, கோஶனாதா, சதுரம்க பலேஶ்வரீ |
ஸாம்ராஜ்யதாயினீ, ஸத்யஸம்தா, ஸாகரமேகலா || 135 ||

லலிதா ஸஹஸ்ரநாமம் - (678-694 ) அர்த்தம்

* 678 *
भाषारूपा  பாஷாரூபா * 
மொழி எனும் பாஷைக்கு உருவம் இருந்தால் அது அம்பாள் ஒருவள். மொழிக்கான அக்ஷரங்கள் தோன்றுவதே அவளிடமிருந்து தான். மொழியினால் தான் கற்க முடியும், ஞானம் கூடும். புரிதல் ஏற்படும். கல்விக்கடவுள் சரஸ்வதியும் அம்பாள் ஸ்வரூபமே அன்றோ.

*679*
बृहत्सेना  ப்ருஹத் சேனா - 
மா பெரும் சைன்யத்தை உடையவள். இந்த பிரபஞ்சத்தை கட்டி ஆள்வது அவ்வளவு எளிதா?

*680*भावाभाव-विवर्जिता । பாவாபாவ விவர்ஜிதா -
 தோற்றம் மறைவு, பிறப்பு இறப்பு அற்ற நிரந்தரமானவள். மறைவு தோற்றம் அனைத்திற்கும் மாயை ஒன்றே காரணம். தோற்றம் மறைவு எல்லாமே அபாவம் என்கிற ''இல்லாத'' வகையை சேர்ந்தவை. இந்த அபாவம் நான்கு விதமானது. 
1. ப்ராகாபாவம்: உற்பத்தி ஆவதற்குமுன் இல்லாதது. பஞ்சு நூலிலிருந்து ஆடை கிடைக்கிறது. பஞ்சு நூல் இருந்தபோது ஆடை இல்லை. ஆடை ஆனபின் பஞ்சும் நூலும் மறைந்து விட்டது. 
2. த்வம்ஸபாவம் : அழிந்தபின் இல்லாமை. பஞ்சை நூலாக்கி அழித்தபின் ஆடையானது போல. 
3. அத்யாந்தாபாவம் : முழுதுமே இல்லாமை. பிரம்மம் ஒன்றே நிலையானது. ஆதி முதல் அந்தம் வரை மற்றெல்லாம் மறைந்தது. அத்வைதம். இரண்டற்ற ஒன்று. 
4.அன்யோன்யாபாவம்: சமரச நிலையாமை. ஒரு மண் பாண்டம் நூலாடை இல்லை. நூலாடை மண்பாண்டங்கள் இல்லை. வெவ்வேறு. இரண்டும் ஒன்றில் ஒன்று இருக்கிறது. அது இதல்ல. இது அதல்ல. உபநிஷத்துகள் நேதி ந இதி, இதுவல்ல என்று ஒவ்வொன்றாக விலக்கி ஒன்றேயான பிரம்மத்தை அடைவது போல்.

* 681 * 
सुखाराध्या ஸுகாராத்யா: 
அம்பாள் ஆராதிக்க சுகமானவள் என்று சொல்கிறது இந்த நாமம். எந்த வித கஷ்டமும் இல்லாமல் அம்பாளை ஆராதனை செய்யலாம். விரதம், உபவாசம், தவம், தீ மிதிப்பது என்ற எந்த சடங்கும் தேவையில்லை அவளை தொழுவதற்கு.ஶுபகரீ.

* 682 * 
शुभकरी  சுபகரீ .- 
அம்பாள் ஸ்ரீ லலிதை நனமையை புரிபவள். நல்லதே செய்பவள். உடலை வருத்திக்கொண்டு, பயந்து கொண்டு இதை செய்யாவிட்டால் கோபிப்பாளோ என்ற பீதி இல்லாமல் சௌலப்யத்தோடு அவளை மனமார வழிபடுபவர்களை தாயன்போடு அரவணைத்து அருள் பாலிக்கிறாள்.

* 683 *
शोभना सुलभा गतिःசோபனா சுலபா கதி .- 
எளிதில் அடையப்படுபவள் மட்டுமல்ல நன்மையே புரிபவள் ஸ்ரீ அம்பாள்.

* 684 * 
राज-राजेश्वरी ராஜராஜேஸ்வரி - 
சக்ரவர்த்தினி. ராணிகளுக்கெல்லாம் ராணி. ராஜாவுக்கெல்லாம் ராஜா மாதிரி அம்பாள் லலிதா ப்ரம்மா, விஷ்ணு மஹேஸ்வரர்களுக்கெல்லாம் ஈஸ்வரி.

* 685 *
राज्य-दायिनी ராஜ்யதாயினி - 
"வைகுண்டம், கோலோகம், கைலாசம், பிரம்மலோகம், எந்த சாம்ராஜ்யம் ஆனாலும் அளிப்பவள் அம்பாள் ஸ்ரீ லலிதாம்பிகை.

* 686 * 
 राज्य-वल्लभा ।ராஜ்யவல்லபா -
 சகல சாம்ராஜ்யங்களுக்கும் மேலான அதிகார நாயகி. வல்லபை.

* 687 *
राजत्कृपा   ராஜத்-க்ருபா - 
அவள் ஆளும் ராஜ்யத்திலிருந்து எட்டு திக்கிலும் கருணையை வாரி வழங்குபவள் ஸ்ரீ மாதா லலிதாம்பிகை.

* 688 *
 राजपीठ-निवेशित- निजाश्रिता  ராஜபீட நிவேஶித நிஜாஶ்ரிதா - 
அம்மா நீயே கதி என்று சரணடைந்தவர்களை ராஜாக்களாகி சிம்மாசனத்தில் அமர்த்தி வைத்து அலங்கரிப்பவள். அவ்வளவு கருணைகொண்ட தாய் அம்பாள்.

* 689 * 
राज्यलक्ष्मीःராஜ்யலக்ஷ்மீ - 
இந்த பிரபஞ்சத்தையே தனது ராஜ்யமாக கொண்டவள் அம்பாள் லலிதை. எல்லையில்லாதது.

* 690 * 
 कोशनाथा கோச நாதா -
 ஒரு ராஜ்யத்தின் நிதியை, செல்வத்தை கோசம் என்பார்கள். அப்படிப்பட்ட திரவியத்தை அருள்பவள் அம்பாள். நமது உடல் அற்புதமானது. அதில் ஐந்து கோசங்கள் அன்னமய கோசம், ப்ராண மய கோசம், மனோமய கோசம், விஞ்ஞான மய கோசம், ஆனந்த மய கோசம் என பஞ்சகோஸம் அமைந்துள்ளது

* 691 *
चतुरङ्ग-बलेश्वरी ।    சதுரங்க பலேஸ்வரி -
 அம்பாளுக்கு இப்படி ஒரு நாமம். நமக்குள் இயங்கும் நால்வகை சேனைகளுக்கு அதிபதி, சக்தி அளிப்பவள். அந்த நால்வகை சேனைகள்: மனம், புத்தி , எண்ணம், அகம்பாவம் எனும் அந்தக்கரண சைன்யங்கள்.

* 692 *
साम्राज्य-दायिनी     ஸாம்ராஜ்யதாயினீ - 
பக்தர்களை சாம்ராஜ்ய அதிபதிகளாக்குபவள் என்று சொல்லும்போது ஸ்ரீ லலிதாம்பாளின் தாராள மனசு, காருண்யம் எல்லாம் எவ்வளவு அழகாக வெளிப்படுகிறது. ராஜசூய யாகம் புரிந்தவன் தான் சாம்ராட். சாம்ராஜ்ய அதிபதி. ராஜாக்களையெல்லாம் தலைவன். தைத்ரிய உபநிஷத் (I.vi.2) ஆப்னோதி ஸ்வாராஜ்யம் என்று சொல்லும்போது, நமக்குள் உறையும் பிரம்மத்தை அறிந்து கொள்ளும் ஆத்ம ஞானிகளாகிறோம். இதற்கும் மிஞ்சிய சாம்ராஜ்ய அதிபதி பட்டம் உண்டா?
  
* 693 * 
 सत्यसन्धा सागरमेखला  ஸத்யஸந்தா - 
உண்மை தவிர சத்யம் தவிர வேறொன்றும் நெருங்காத அம்பாள். அம்பாளின் சொல் செயல், அனைத்துமே சத்தியத்தின் நேர்மை, உண்மையின் அடிப்படையில் என்பதால் அதன் சக்தி அஃகிகம். எதிர்கொள்ளமுடியாதது.

* 694 * 
 सत्यसन्धा सागरमेखला    ஸாகரமேகலா - 

அம்பாள் இடுப்பில் அணியும் மேகலை இருக்கிறதே அது சமுத்ரங்களால் வேயப்பட்டது என்றால் அவள் இடுப்பளவை யூகிப்போம். அவள் விஸ்வரூபி. கதோபநிஷத் சொல்லுமே ஒரு அற்புத வாக்கியம் (I.ii.20) '' அணோரணீயும் மஹதா மஹியான்'' - பிரம்மத்தை இதை விட சிறப்பாக வர்ணிக்க முடியாது. சிறியதில் சிறியது, பெரியதில் பெரியது. அம்பாள் பரப்ரம்மஸ்வரூபி.

சக்தி பீடம்      :திருவெண்காடு.

மயிலாடுதுறை -தரங்கம்பாடி சாலையில் 23 கி.மீ மயிலாடுதுறையிலிருந்து ஒரு வண்டியை பிடித்து சென்றால் திருவெண்காடு எனும் ஸ்வேதாரண்யம் க்ஷேத்ரத்தை அடையலாம். அந்தக்காலத்தில் நடந்தே அடைந்திருக்கிறார்கள். சீர்காழியிலிருந்து பூம்புகார் பாதையில் சென்றால் 13 கி.மீ. தூரம்

சிவன் இங்கே ஸ்வேதாரண்யர், திருவெண்காடர், வெண்காட்டு நாதர். அம்பாள் ஸ்ரீ ப்ரம்ம வித்யாம்பிகை. சக்தி பீடம். ரொம்ப பெரிய 12 ஏக்கரா கோவில். மூன்று தீர்த்தங்கள் சூரியன் , சந்திரன் அக்னி தீர்த்தங்கள். தேவார பாடல்களை இங்கே சைவ  சமய குரவர்கள் வந்து பதிகங்கள் பாடியிருக்கிறார்கள். உட்கார்ந்து ஒருநாள் படிக்க வேண்டாமா? நவகிரஹ பரிஹாரஸ்தலங்களில் இது புதனைச்  சேர்ந்தது. வால் மீகி ராமாயண காலத்தில் இருந்தே இந்த ஸ்தலம் உண்டு. சோழர்  காலத்தில் சிறப்பாக பராமரிக்கப்  பட்ட ஆலயம். சோழ பாண்டிய ராஜாக்கள் பொரித்த கல் வெட்டுகள் பேசுகிறது.

அம்பாள் பிரமனுக்கு ப்ரம்ம கலைகளை உபதேசித்த க்ஷேத்ரம். அம்பாளுக்கு அதனால் ப்ரம்ம வித்யாம்பிகே என்று பெயர்.

ஞான சம்பந்தர் திருவெண்காட்டு பதிகம் ஒன்று தருகிறேன்.

மண்ணொடு நீ ரனல் காலோ டாகாயம் மதி இரவி
எண்ணில் வருமியமானன் இகபரமு மெண்டிசையும் 
பெண்ணினொடாண் பெருமையொடு சிறுமையுமாம் பேராளன்
விண்ணவர் கோன் வழிபடவெண் காடிடமா விரும்பினனே.

''என் மன்னவா, மகாதேவா, இந்த மண், நீர், அனல், கற்று, ஆகாயம் என்ற பஞ்ச பூதங்களுடன், சூரிய சந்திரன் இரண்டும் கண்களாகவும், இகம் பரம் என ஈரேழு புவனங்களிலும் ஆணோடு பெண்ணாக சக்தியும் சிவமுமாக , இரண்டறக்கலந்து, என் பெருமை சிறுமை எதையும் லட்சியப்படுத்தாமல் பேரன்பு கொண்டு, மனதில் அன்போடு கருணையோடு இந்திரன் தவம் மெச்சி அவன் மேன்மையுற வழிகாட்டிய திருவெண்காட்டில் உரை பெம்மானே உன்னை நமஸ்கரிக்கிறேன்.

Thursday, December 30, 2021

NEW YEAR

   விஷ்  யு  ஹேப்பி  நியூ இயர்??? !!!''


ஜனவரி ஒன்று, வருஷா வருஷம் வருகிறது.  புது வருஷம் தொடங்குகிறதாம் அன்றிலிருந்து?  எப்படி? எந்தவிதத்தில்?  தலையைச் சொரிந்து கொண்டு  தேடினாலும் புரியவில்லை.  வாசலில் பார்த்தேன்,  ஒரு நாள்  மழையில் சென்னை  நாறிவிட்டது.  முழங்கால் அளவு தண்ணீர்  தேங்கி தெப்பக்குளம்  வீட்டில் இருக்கிறேன்.  மாடியில்  தங்கி இருப்பதால்  கீழே  ஜலகண்டாபுரம் காட்சி அளிக்கிறது.  

அது சரி,  இதுவரை   எந்த வருஷம்  புது  வருஷமாக  பிறக்கவில்லை?  டிசம்பர் 31 நாள்   போனதும் பாவம் எத்தனை  வருஷங்களை ''இதைப்போன்ற  கரிய  வருஷம்  (black  இயர்)  பார்த்ததில்லை என்று அதற்கு  வர்ணம் பூசியிருக் கிறோம்.   எத்தனை  வருஷங்கள்  இது போல்  பார்த்துவிட்டோம். ஆரம்பத்தில்  நிறைய  எதிர்பார்ப்பு.   கடைசிநாளில்  ''இந்த  வருஷம்   என்னவோ ரொம்பவும்  படுத்தி விட்டது.  யாருமே சந்தோஷமாக  இல்லை,  எத்தனை   விதமான எதிர்பாராத  இன்னல்கள், துக்கங்கள்,  சில சந்தோஷங்கள்,  (அவை   ஏன் நிரந்தரமாக  இல்லை?)  

வரும்  புது வருஷமாவது   இதுகள்  எல்லாம்  இல்லாத  சிறந்த  வருஷமாக  அமையட்டும்  என்ற  நம்பிக்கை தோன்றுகிறது. ஒருவரை  ஒருவர்   ''விஷ் யு  ஆல்  ஹேப்பினஸ் '' என்று  கை குலுக்கி   வாழ்த்துகிறோம்.  ஹாப்பினஸ்க்கு  அர்த்தம் தெரியவில்லை. 

 மேலே கிருஷ்ணன் சிரித்துக்கொண்டு  பார்க்கிறான்  (போன வருஷ  காலண்டரிலும்  இருந்தவன்  இப்போது  புது  வழவழ பேப்பர்  காலண்டரிலும்  சிரிக்கிறான்).  

''தம்பி  உன் சந்தோஷம் (happiness) உன் கையில்  தானடா இருக்கிறது''  என்று   சொல்லாமல் சொல்கிறான்.  கையில் என்று அவன் சொல்வது நமது மனதில் என்று புரிந்துகொள்ளவேண்டும்.  மனது சொல்வதைத் தானே கை செயகிறது.

பண்டைய  காலங்களில்  புது வருஷங்களில் --  ஆங்கிலேயர்  தொடங்கி வைத்த இந்த  மாதிரி  வருஷங்கள்  அவர்களை  நெருங்கவில்லை.   சித்திரை மாதம்  பிறந்த அன்று, எல்லோரும்  ஒன்று கூடி  இறைவனை  பிரார்த்தித்து  நன்றி கூறினார்கள். ஒற்றுமை  நிலவியது. தான தருமங்கள்,   அன்ன தானம், அனைவருக்கும்  உணவு என்று  இருப்பதை பகிர்ந்து கொண்டார்கள்.  ஆலயங்களில்  விசேஷ  வழிபாடு நடத்தினார்கள். அவனருளால்  அவன்  தாளை வணங்கினார்கள்.  

சென்ற எத்தனையோ  இங்கிலிஷ் காரன் புது  வருஷங்களும்  ஆரம்பிக்கும்போது  நிறைய எதிர்பார்ப்புகளோடு,  வாழ்த்துகளோடு  தான்   உதயமாயின.  முடியும்போது  ''அப்பப்பா,  இதுபோல்  இனி வரும்  வருஷமோ, வருஷங்களோ   இது போல்   இருக்கக் கூடாது  என்று அவமானப்பட்டு, அவமதிப்பை பெற்றன.    அங்கலாய்ப்பது நமக்கு என்று  நின்றது?  

இதிலிருந்து  என்ன  புரிகிறது?.  வருஷங்கள்  எல்லாமே  ஒன்று  தான்.  இயற்கை  என்றும்  மாறவில்லை.  நமது பார்வையில்  தான்  வித்தியாசம்,  எதிர்பார்ப்பு.   மனிதனின் வாழ்க்கை  அவனது   மனம் போன வழியில் அமைகிறது.   மனதின்  விருப்பு  வெறுப்பு,  எதிர்பார்ப்பு, அதால்  வரும்  ஏமாற்றம்,  அது  உற்பத்தி செய்யும் கோபம், தாபம், பழி வாங்கும் உணர்ச்சி,  மன்னித்தல்  மறத்தல், இவை  கலந்து கட்டியாகி  அவனை  அலைக்கழிக்கின்றது.   அமைதி  இழக்கிறான்.  உடலும்  உள்ளமும்  ஆரோக்யத்தை தொலைத்து விடுகின்றன.  அவதிப்படுகின்றன.   ''நான்''  ''எனது''  இருக்கும்  வரை  இந்த  நிலை  நீடிக்கத்தான்  செய்யும்.

எது  நடக்கிறதோ  அதில்  நமக்கொரு  பங்கும் இல்லை.  அது  இறைவன் சித்தப்படியே ஒரே சீராகவே  என்றும் அமைந்து  வருகிறது.  ஜனவரி  டிசம்பர்  எல்லாம்  நாம்  போடும் மனப்பால்  கணக்குகள்.  

இறைவன்  படைப்பில் மாமரம், தென்னை, வாழை, ஜந்துக்கள்  உயிரினங்கள் எல்லாமே   ஒன்றே போல்,  மாறுதல் இன்றி  தோன்றி  மறைகின்றன.  மனிதன் மட்டும்  மாறிக்   கொண்டே வருவதன்   காரணம்  அவன் மனத்தில்  தோன்றும் எண்ண  சுழல்களின் வித்யாசங்கள் .. ''மனசு''  தான்  மனிசன்,  ''மனது''  தான்  மனிதன்,  mind   தான்  man.  எனவே   ஆதாரம் அதே.   அதன் இயக்கத்தில்  தான்  நாம்  இயங்குகிறோம்.  தவறுகள்  நம்மால்  தான்  நிகழ்கின்றன.  சந்தோஷம்  நாம்  உண்டாக்கிக்  கொள்வது  தான்.  மற்ற   எதன் மேலோ, எவர் மேலோ,  நமது காரிய  விளைவுகளை சாட்டுவது நம்மை நாமே  ஏமாற்றிக் கொள்ளும் ஒரு  அல்ப  திருப்திக்காக.    இதால் ஏற்படும்  திருப்தி,  பொறுப் பின்மை,  குறிப்பிட்ட  காலத்திற்கு வேண்டுமானால்   நிம்மதியைத்  தரலாம்.  ஆனால்,  வேரில்   தான்  ஒரு  மரத்தின்  உச்சாணிக்கிளை  இலையின்   வளர்ச்சி உள்ளது என்ற  ரகசியம்  புரிந்து விட்டால்   ''எல்லாம்   உன்  அடிமையே, எல்லாம் உன்  உடைமையே, எல்லாம்  உன்னுடைய செயலே'' என்பதின்   அர்த்தம்  புரியும்.  

வரப்போகும் ம் வருஷங்களையும் சென்ற  வருஷங்களோடு  ஒப்பிட தோன்றாது. வரும்  கால  வருஷத்திய  பலனை  ஜோசியரிடம்  கேட்க  தோன்றாது.  ''உன்னை   நீ அறிவாய்''  என்பது ஒவ்வொருவரும்  தத்தம்  ஆன்ம சோதனையில்  ஈடுபடுவதை உணர்த்தும்  வாக்கியம்.  

வெளி உலகைவிட  உள்  உலகம்   மிக பிரம்மாண்டமானது.  மௌனம்  தான்  சகலமும்  விவரமாக  உணர்த்தும் மொழி.  கிடைத்ததில்  திருப்தி  தான், அதற்கு  அவனிடம் செலுத்தும்  நன்றி தான்  மிகச்சிறந்த  ஆரோக்யமான செல்வச் செழிப்பு.  

பண்பட்ட  மனம்  தான் புது வருஷ பரிசு.   காணும்  யாவும் அவனே,  கருத்தில் உறைபவனும்  அவனே  என்னும்போது  உள் நின்று ஒளிரும்   அந்த சக்தி தான்  வெளியேயும்  அதிர்வுகளை  ஏற்படுத்துகிறது என்பது தெரியும்.   அன்பு  எவரிடமும் எதனிடமும்  சுரக்கும்.  இயற்கையோடு  ஒன்றி  வாழ  வழி தெரிந்துவிடும்.  அது  தான்  அவனும்  எதிர்பார்ப்பது.  

VARIYAR SWAMIGAL

  குருவின்  அருளாசி   --  நங்கநல்லூர் J K  SIVAN 


சில  மஹான்கள்  வாழ்க்கையில்  நடந்த  சில  சம்பவங்கள்  சம்பந்தப்பட்ட பக்தர்கள் மூலம் தான் நமக்கு தெரியவரும்.  அவர்களன்றி வெளியுலகிற்கு இவை தெரிய  வழியில்லை.

ஸ்ரீ வித்யாசாகர்  ஒரு தனியார் நிறுவன அதிகாரி. மும்பையில் பல வருஷங்களாக வாழ்பவர்.   அவர்கள் குடும்பத்தில் அனைவரும்  வாரியார்  ஸ்வாமிகளை குருநாதராக  போற்றி  வணங்குபவர்கள்.  ஹைதராபாதில்  ஸ்ரீ  வித்யாசாகர்  அவர்களின்  மாமனார்  வசித்தபோது  தொடர்ந்த  குருபக்தி   உறவு,   அவர்   பின்னர் பம்பாய்  சென்று வசித்தபோதும்  தொடர்ந்தது.  பம்பாய்க்கு   வரும்போதெல்லாம்  ஸ்வாமிகள்  ஸ்ரீ வித்யாசாகர்  இல்லத்தில் தான் தங்குவார். பூஜை செய்வார். 

 இத்துடன் இணைத்துள்ள படங்களில்  அவர்  வித்யாசாகர்  அவர்களின்   குமாரி ஐயா  குழந்தையாக  இருந்தபோது மடியில் வைத்துக்கொண்டிருப்பதை காணலாம்.   ஜெயாவிற்கு தமிழ் தெரியாது. ஸ்வாமிகளுக்கு அவளோடு விளையாட பிடிக்கும்.  அவளுக்கு மிகவும் கடினமான  திருப்புகழ்  ''சரண கமலாலயத்தில் '' என்ற பாடலை சொல்லிக்  கொடுத்தார். ஆச்சர்யமாக அந்த குழந்தை அதை உடனே பிடித்துக்கொண்டு  பாடியது.    ஸ்வாமிகளுக்கு மிகவும் பிடித்த  திருப்புகழ் அது   https://youtu.be/YDRgBMU4lFw

ஸ்வாமிகள்  வள்ளி தேவானை சமேத சுப்ரமண்யனுக்கு பூஜை செய்யும் போது அந்த குழந்தை ஜெயா பாடுவதை வீடியோவில் காணலாம்.  ரொம்ப பழைய வீடியோ.     சுவாமிகளது ஆசியால்  ஜெயா இன்று சிறந்த குரல்வளம் கொண்ட பாடகியாக  திகழ்கிறார் என்று அறிந்தேன்.  இது தான் குருவருள்.

வெகு காலமாக  இந்த  குரு சிஷ்ய  பக்தி  தொடர்பு  தொடர்ந்து   ஸ்வாமிகள்   கடைசிமுறையாக  பம்பாய்  செல்லும் வரை  நீடித்தது.    வெளிநாடுகளுக்கு  பம்பாய்  வழியாக  தான் வாரியார் ஸ்வாமிகள் செல்வார். அவருக்கு வேண்டிய  பிரயாண வசதிகளை   ஸ்ரீ வித்யாசாகர் நண்பர் குழாம்  பொறுப்பாக ஏற்பாடு செய்தது.  விமானத்தில் அதிகாரிகள் அனுமதி பெற்று அவரை  சாய்வு நாற்காலியில் வைத்து  விமானத்தில் அமர்த்துவது வரை  அவர்களது  குருபக்தி கைங்கர்யம் தொடர்ந்தது.  

வாரியார்  ஸ்வாமிகள் கைப்பட  50க்கு மேற்பட்ட கடிதங்களை எழுதியிருப்பதை  ஸ்ரீ வித்யாசாகர் காண்பித்தார்.
 பல  அனுபவங்களை  ஸ்ரீ வித்யாசாகர்  சொல்லியபோது  மயிர்க்கூச்செரிந்தது.   ஒரு புத்தகமே  எழுதும் அளவு  அவர்  விஷயங்கள்.  எல்லாமே   ஆச்சர்யம் நிறைந்தவை. ஒரு சிலவற்றை மட்டும் இந்த சிறிய  பதிவில்  சொல்கிறேன்.

''நான்  ஹைதராபாத் நகரத்தில் எனது   மனைவியின்  பெற்றோர் இல்லத்திற்கு சென்றபோது  ஸ்வாமிகள் வந்திருந்தார்,  ஆறு நாட்கள்  அங்கே எங்களுடன் தங்கினார்.  தினமும் பூஜைகள் அற்புதமாக செய்வார்.  ஒவ்வொரு  மாலை வேளையிலும் ஸ்வாமிகளின் உபன்யாசம் எங்காவது நிகழும். '' 

ஸ்வாமிகளிடம்  பூஜையில்  ஸ்படிக லிங்கம்,  பாண லிங்கம்  உண்டு..   அவர்  எங்கு சென்றாலும் ஸ்வாமிகளிடம்  கையில் ஒரு மான்  தோலால் ஆன  கைப் பை  ஒன்று இருக்கும்.  பல க்ஷேத்ரங்களை கண்ட  பை  அது. ஸ்படிக லிங்கத்தை எனக்கும்  (ஸ்ரீ வித்யாசாகரிடமும்)    பாணலிங்கத்தை அவர் மனைவிக்கும் ஆசியோடு  அளித்தார்.இந்த தம்பதிகள்    ரொம்ப பாக்கியசாலிகள்.  கடைசியில் அந்த  மான் தோல் பையும்  ஸ்ரீ வித்யாசாகருக்கே  கொடுத்து விட்டார் ஸ்வாமிகள்.

வாரியார்  ஸ்வாமிகள்  லண்டனுக்கு பயணமான   சமயம்  மிகவும்  குளிர் நிறைந்த காலம்.   அவருக்கு தேவையான  பிரயாண ஏற்பாடுகளை வழக்கம்போல்  ஸ்ரீ வித்யாசாகரும்  மற்ற  நண்பர்களும்  செய்தனர்.  அப்போது ஸ்வாமிகள்   வித்யாசாகரை கூப்பிட்டு  :

'' கல்கி  தீபாவளி மலரில் என்னுடைய படம் வந்ததாமே  நீ பார்த்தாயோ?'' என்று கேட்டார்.

''அப்படியா  தெரியாதே சுவாமி,  ''
 உடனே தீபாவளி மலர் ஒரு பிரதி கிடைக்க ஏற்பாடு  செய்கிறேன் என்று   வித்யாசாகர் தமிழ் அன்பர்களிடம் சொல்லி ஒரு பிரதி பெற்றுக்கொண்டார்.  அதில்  இருந்த வாரியார் படத்தை  சட்டம் போட்டு  லேமினேஷன் செய்து பூஜை அறையில் வைத்து தினமும்  பூஜை செய்வார்.   வாரியார் ஸ்வாமிகள்  வித்யாசாகருக்கு ''ஆனந்தமாய்  வாழ  ஆசார்யாள் வழி முறைகள் ''என்ற  புத்தகத்தை கொடுத்து   ''இதைப் படி '' என்று  ஆசி வழங்கினார். 
 
''நான் அந்த புத்தகத்தை  ரசித்து படிக்கிறேன்''   என்றார் என்னிடம்  ஸ்ரீ வித்யாசாகர்.

வாரியார்  சட்டை போட்டுக் கொள்ளாதவர்.  அவருக்கு  மார்பில்  சளி உபத்திரவம் ஏற்பட்டது  நிமோனியா என்று வைத்த்யர்கள் தீர்மானித்து  மருத்துவ  உதவி அளித்தார்கள்.   நவம்பர்  மாதம்  அவரை திரும்ப  இந்தியாவுக்கு அனுப்ப   பக்தர்கள் வைத்தியர்கள் முடிவு செய்தார்கள்.  அதன்படி  7ம் தேதி நவம்பர் 1993 அன்று  வாரியார்  ஸ்வாமிகள் லண்டனிலிருந்து பம்பாய் வழியாக  ஏர் இந்தியா  விமானத்தில்  சென்னை வந்து கொண்டிருந்தார்.  

விடிகாலை நேரம். ப்ரம்ம முகூர்த்த நேரம்.   விமானம்  திருத்தணி மேல்  சென்னை நோக்கி    பறந்து கொண்டிருக்கும் சமயம்  ஸ்வாமிகள் ஒரு பெருமூச்சு விட்டார்.  அருகில் அமர்ந்திருந்த  பெண்மணி அதை கவனித்தார்.  அதன் பிறகு  ஸ்வாமிகள் தலை குனிந்தவாறு  கண்களை மூடிக்கொண்டு அமர்ந்திருந்தார்.  அவர்  தூங்குகிறார் என்று அந்த பெண் கருதினாள் .  அரைமணி நேரத்தில்  விமானம்  சென்னையில் தரையிலிறங்கப்போகிறது.

அந்த நேரம்  பம்பாயில் ஸ்ரீ வித்யாசாகர்  பூஜை  செய்து   கொண்டிருக்கிறார்.  ஸ்வாமிகள் படம் எதிரே இருக்கிறது.  வித்யாசாகருக்கு  ஒரே ஆச்சர்யம். 

'' என்ன இது ?  ஸ்வாமிகள் படத்தில் கண் சிமிட்டுகிறாரே''! என்று. 
 உடல் மயிர்க் கூச்செரிந்தது அவருக்கு.  மீண்டும் உற்று பார்த்தார். கண்கள் பழையபடி படத்தில் காட்சி அளித்தன.  அங்கே  விமானத்தில்  கடைசி நேரத்தில்  பூவுலகை விட்டு மறையும் முன்பு தன்னுடைய  பரிசுத்த  சிஷ்யர் வித்யாசாகருக்கு நயன தீக்ஷை அளித்து  கண் சிமிட்டி ,  ஆசி வழங்கி விட்டு சென்றிருக்கிறாரா ஸ்வாமிகள்?    படத்தில்  கண்சிமிட்டிய  நேரத்தில் தான் ஸ்வாமிகள் பூவுலகத்தை விட்டு  கைலாசம் சென்றதாக பின்னர்  டெலிபோன் வாயிலாக செய்தி வந்தது.  அவர்  ஆவி பிரிந்தது  விமானம் திருத்தணி முருகன் கோவில் மேல்   பறந்து கொண்டிருந்த போது .
 
ஸ்வாமிகள்  அதிஷ்டானம்  காங்கேயநல்லூர் என்ற அவர் ஜென்மஸ்தலத்தில் உள்ளது.  

'என்னால் உடனே  செல்லமுடியவில்லை. சில மாதங்கள் கழித்து  தான்  அலுவலத்தில்  லீவு கிடைத்தவு டன்  நேரே  சமாதிக்கு  சென்று வணங்கினேன் '' என்கிறார்  ஸ்ரீ வித்யாசாகர்.  

ஸ்ரீ  வித்யாசாகர்  போன்ற எத்தனையோ  பக்திமான்கள் நம்மிடையே  இருக்கிறார்கள் அவர்கள் தாமாகவே இத்தகைய   அனுபவங்களை சொல்ல முன் வந்தால்   நம்மைப் போன்றவர்களுக்கு  இத்தகைய    ஆன்மீக விருந்தாக தகவல் கிடைக்க வழி உண்டு.   அவருக்கு நன்றி சொல்வோம்.  

KOTHAIYIN GEETHAI

 மார்கழி 16ம்  நாள்.



16.  மணிக் கதவம் தாள் திறவாய்

வெயில் எவ்வளவு வேண்டுமானாலும் தாங்கி விடலாம். சட்டையைக் கழட்டிவிட்டு வாசல் திண்ணையில் அமர்ந்து
பனை ஓலை விசிறியால்  விசிறிக்கொண்டு ஒருகாலத்தில்  குளிர்ச்சியை பெற்றோம். பிறகு  FAN இல்லாத வீடே கிடையாது.  இப்போது அநேகமாக எல்லா வீடுகளிலும்  AC .
 
மழைக்காலத்தில்  விஷயம் வேறு.  சென்னை மாநகரத்தில்  ஒரு நாள் மழையில் தெருவெல்லாம் குளம்.  தாழ்ந்த வீடுகளில் வெள்ளம் உள்ளே வந்து உறவு கொண்டாடும்.

அதுவும் இந்த மார்கழி  பனியில்  அடேயப்பா,  இந்த குளிர்  பொல்லாதது. துளிக் கூட நிம்மதியாக இருக்க விடுவதில்லை. குளிரும் பனியும் பெரிசுகளுக்கு பரம வைரி. வெட வெட வென்று நடுங்கிக் கொண்டு கம்பளிக ளுக்குள்ளே மறைந்து கண் மட்டும் ரெண்டு வெளியே தெரியும். இந்த வருஷம் கொஞ்சம் அதிகமாகவே குளிர் நடுங்க வைக்கிறது.

ஆனால் ஆயர்பாடியில் நிலைமையே வேறு. சில்லென்று வீசும் இனிய குளிர் காற்றில் சுகமாக ஆடிக் கொண்டும் பாடிக் கொண்டும் தன் சினேகிதிகளோடு ஆண்டாள் பேசிக்கொண்டே போகின்றாள்.

மற்ற பெண்களையும் எழுப்பி நீராட வைக்க வேண்டிய பொறுப்பு இருக்கிறதே.

இன்று மார்கழி 16 நாள் ஆகிவிட்டதே இதுவரை விடாது அந்த பெண்கள் அன்றாடம் யமுனையில் நீராடி விரதமிருந்து,  உள்ளும்  புறமும் தூய்மையோடு கிருஷ்ணனையும் நாராயணனையும் அருள் தா என்று வேண்டுகிறார்கள். சொட்ட சொட்ட  ஈர ஆடையை பிழிந்து சுற்றிக்கொண்டு அந்தப் பெண்கள் இதோ யமுனைக் கரையில் இருக்கிறார்கள். அவர்கள் நீராடி நோன்பிருந்து கூட்டமாக நின்று கொண்டிருக் கிறார்கள்.

'ஆண்டாள் நாமெல்லாம் இப்போ எங்கேடி போறோம்?''

'நந்தகோபனது அரண்மனை போன்ற பெரிய வீட்டுக்கு. இன்று என்ன விசேஷம் தெரியுமா?

இந்த பதினைந்து நாட்களாக எல்லோர் வீட்டிலேயும் சென்று பெண்களை துயில் எழுப்பிய ஆண்டாள் இன்று காலை யார் வீட்டுக்கு சென்றாள் தெரியுமா?

ஆயர்பாடியில் கண்ணன் வசிக்கும் அவன் தகப்பன் நந்தகோபன் அரண்மனைக்கே.   எளிதில் உள்ளே போக முடியுமா? வாசலில் நந்தகோபனின் வாயில் காவலாளி கொடிய கூர்மையான வேல் ஈட்டி போன்ற ஆயுதங் களோடு காவல் காத்துக் கொண்டிருக்கிறான். யாரும் உள்ளே நெருங்க முடியாது. கண்ணனைக் கண் போல் பாதுகாக்கிறான் நந்தகோபன்.
ஏன்?
நாளொரு அரக்கனும் பொழுதொரு ஆபத்தும் தான் அந்தச் சிறுவனைக் கொல்ல கம்சனால் அனுப்பப்படும் ராக்ஷஸர்கள் மூலம் எந்த உருவில் வேண்டுமானாலும் வரலாமே? சொல்லிவிட்டா வருவார்கள்? நாம் தான் ஜாக்கிர தையாக குட்டி கிருஷ்ணனை காப்பாற்றவேண்டும்!! என்ற நினைப்பு அந்த வாயில் காப்பானுக்கு. அவனைக் காப்பதே அந்த கண்ணன் தான் என்று அவன் எப்படி அறிவான். அறிந்தால் ஏன் ஈட்டியையும்  வேலையும் பிடித்துக் கொண்டு வாசலில் நிற்கிறான்?

'சிறுமிகளா , யார் நீங்கள் எல்லாம் ? அதுவும் இந்த அதிகாலை வேளையிலே இந்நேரத்தில் இங்கு என்ன வேலை உங்களுக்கு.?''

''ஐயா,  வாயில் காப்போனே, இந்த உயர்ந்த மணிகள் பொருத்திய பெரிய உங்களது கோட்டை மணிக்கதவைக் கொஞ்சம் திறவுங்கள் எங்களை கொஞ்சம் உள்ளே விடுங்கள்'' என்கிறாள் ஆண்டாள்.

'' சிறு பெண்களே,   யார் நீங்கள், எதற்கு உள்ளே போகவேண்டும்?''

''இந்த தெய்வீக மாதத்தில் விடியலில் நீராடி பாவை நோன்பு நூற்று எங்கள் தெய்வத்தை அந்த கிருஷ்ணனை தரிசிப்பதுடன் அவனைத் துயில் எழுப்பவும் வந்துள்ளோம். உள்ளே இருக்கும் உங்கள் தலைவன், எங்கள் மனம் நிறைந்த அந்த கண்ணன் நேற்று எங்களை இங்கே வரச்சொல்லி அனுமதி கொடுத்ததால் அவனை தரிசனம் செய்து அருள் ஆசி பெற வந்துள்ளோம். இது அவன் நேரம்.   அவன் மாதம். . நாங்கள் உள்ளே சென்று அவன் ஆயிர நாமங்களைச்  சொல்லி அவனை துயிலெழுப்ப விழைகிறோம். எங்களைக் தடுக்காமல் குறுக்கிடாமல் தயவு செய்து கதவை மட்டும் திறவுங்களேன்?''

''விசாரிக்காமல் நான் யாரையும் உள்ளே விடமுடியாது.''
''நாங்களோ சிறு பெண்கள் எங்களால் என்ன துன்பம் உங்களுக்கோ,அந்த மாயக் கண்ணனுக்கோ நேரும்?"
''சூர்பனகை, பூதகி ஆகியோரும் பெண் தானே?'' என சிரித்தான் காவலாளி.
''அவர்கள் வெளியே இருந்து இங்கே வந்தவர்கள்.  ராக்ஷஸிகள்.   நாங்கள் இதே ஊரில் கிருஷ்ணனுடன் பிறந்து வளர்ந்தவர்கள். கோபியர் குடும்பப்  பெண்கள். மேலும் நாங்கள் கொல்ல வந்தவர்கள் இல்லை. எங்கள் மனத்தை அவன் வெல்ல வந்தவர்கள்.புரிகிறதா?'' என்றாள் ஆண்டாள்.

''நான் கிருஷ்ணனையே நேரில் கேட்டு அனுமதி தருகிறானா என்று தெரிந்த பிறகு  தான் உங்களை உள்ளே விடமுடியும். அதுவரை வெளியே நில்லுங்கள்'' என்றான் வாயில் காப்போன். அவர்கள் அங்கேயே பாடிக் கொண்டு நின்றார்கள். உள்ளே சென்று வந்த அந்த காவலாளி அந்தப் பெண்களை உள்ளே அனுமதித்தான். ஆண்டாள் எதையும் சாதிப்பவளாச்சே.

வில்லிபுத்தூரில் அப்போது---

ஆண்டாளும் ஆயர்பாடிச் சிறுமிகளும் கண்ணனின் அரண்மனையில் உள்ளே போகும் நேரம் தான்,  அந்த ஆஸ்ரம வாயிற் கதவைத்  திறந்து வெளியே சென்று அழகிய பெரிய கோலம் போட்டுக் கொண்டிருந்த கோதை ஆஸ்ரமத்தில் நுழைந்தாள். அவள் எதிரே அந்த அழகிய அரங்கனின் உருவச்சிலை அவளையே பார்த்துக் கொண்டிருக்க அன்று எழுதிய பாசுரத்தை மனதிலிருந்து வாய்க்கு மாற்றிக்கொண்டு வந்து பாடினாள். மேலே ஆயர்பாடியில் நாம் கண்ட காட்சி அவள் செய்த அந்த அற்புதக் கற்பனை,  தீஞ்சுவைத் தமிழில் ஈடில்லாப்  பாசுரமாக பக்தி சொட்ட வெளிப் பட்டது.

'கோயில் காப்பானே. கொடி தோன்றும் தோரண
வாயில் காப்பானே. மணிக் கதவம் தாள் திறவாய்
ஆயர் சிறுமியரோமுக்கு அறை பறை
மாயன் மணி வண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம் துயில் எழப் பாடுவான்
வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மா. நீ
நேய நிலைக் கதவம் நீக்கேலோர் எம்பாவாய்

விஷ்ணு சித்தர்  ஆனந்தத்தில் குதித்தார்.
‘’'அம்மா கோதை, நீ இந்த 16 நாட்களாக என்னை வைகுண்டத்தில் ஆழ்த்தி விட்டாய் தாயே. நீ சாதாரண கவிதையாக சொல்லலங்காரமாக இதை இயற்ற வில்லை. ஒரு தத்துவத்தையே புகட்டி விட்டாய்.''

''அப்படி என்னப்பா எழுதினேன்?''   சிரித்தாள் கோதை.

சொல்கிறேன் கேள். முதல் 15 நாட்களாக ஆண்டாளும் சிறுமிகளும் யாரை வேண்டி நோன்பிருந்தார்களோ', அவனை , ஏன் 16வது நாளன்று பார்க்க நேரிட்டது?'' யோசித்து பதில் சொல்?

''தெரியவில்லையே அப்பா? நீங்களே சொல்லுங்களேன்?'' சிரித்துக்கொண்டே கேட்டாள் கோதை.

''கிருஷ்ணனை வேண்டித்தானே இந்த மார்கழி முப்பது நாளும் அவர்கள் நோன்பிருந்தார்கள். பாதி மாதம் ஆகி விட்டதே. மீதியை அவர்கள் அவனைத் தேடி போகவேண்டாம் என்பதால் தான்.

''ஏன்  பா  அவர்கள் கிருஷ்ணனைத் தேடி போகவேண்டாம்  என்கிறீர்கள்?''

பக்தன் பாதி வழி கிருஷ்ணனை நோக்கி நடந்தால் மீதி பாதி வழியை கிருஷ்ணனே நடந்து வந்து அவனை எதிர் கொள்ளுவானே  அம்மா..... என்று சொல்லாமல் சொல்லி   விட்டாய் அம்மா. எனக்கு இப்படித்தான் படுகிறது ''என்றார் விஷ்ணு சித்தர்.

THIRUVEMBAVAI

 திருவெம்பாவை. -  நங்கநல்லூர்  J K  SIVAN 

மார்கழி 16ம் நாள்.
                
16.  மணி மணியான  மணி வாசகம்

 16. முன்னிக் கடலைச் சுருக்கி யெழுந்துடையாள்
என்னத் திகழ்ந்தெம்மை ஆளுடையாள் இட்டிடையின்
மின்னிப் பொலிந்தெம் பிராட்டி திருவடிமேற்
பொன்னஞ் சிலம்பிற் சிலம்பித் திருப்புருவம்
என்னச் சிலைகுலவி நந்தம்மை ஆளுடையாள்
தன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு
முன்னி அவணமக்கு முன்சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழையேலோ ரெம்பாவாய்.

மணி வாசகரின்  இந்த  16வது திருவெம்பாவை  பாடல்  எவ்வளவு பொருள் செறிவு கொண்டு  அவறது  பரந்த திறந்த  மனத்தை   வெளிப்படுத்தும் எளிய பாடலாக  பக்திச் சுவை  மிளிர  அமைந்திருக்கிறது பாருங்கள்.

''மேகமே! முதலில் இந்தக் கடல் நீரைக் குடி. நிறைய குடி. பிறகு எழுந்து எம்மையுடையாளாகிய அம்மையினது திருமேனி போல நீல நிறத்தோடு,  ( நாகப்பட்டினத்தில்  நீலாயதாக்ஷி நினைவிலிருக்கிறாளா?  ) மேலே இருந்து எங்களுக்கு  உன் திவ்ய காட்சி தா.       எம்மை அடிமையாக உடையவளது சிற்றிடை போல மின்னி  ஒளிவிட்டு, மின்னலாக பளிச்சிடு . எம்பிராட்டி திருவடிமேல் அணிந்த பொன்னினால் செய்யப்பட்ட சிலம்பு போல ஒலித்து, இடி இடித்து சப்தம் செய். அவளது திருப்புருவம் போல் வானவில் விட்டு, நம்மை அடிமையாக உடையாளாகிய அவ்வம்மையினின்றும் பிரிதல் இல்லாத, எங்கள் தலைவனாகிய அண்ணாமலையாரது   அடியார்களுக்கும், பெண்களாகிய நமக்கும், அவள் திருவுளம் கொண்டு முந்திச் சுரக்கின்ற இனிய அருளே போன்று தேன் மழையாக நிறைய விடாமல் பூமி குளிர பொழிவாயா?

நாம்  எவ்வளவு கொடுத்து வைத்தவர்கள் இந்த உலகத்தில்.  நம்  ஒருவருக்குத்தான்  ஒரு பக்கம் ஆண்டாள் பாடல் மறுபக்கம் ஆண்டவன் பாடல் . மார்கழியே நீ உண்மையிலேயே சிறந்த மாதம் தான். சந்தேகமே இல்லை.  அதற்காகவே  உன் குளிரைப்  பொறுத்துக் கொள்ளலாம்.

 அழகு தமிழை, ஆர்வமுடன், அன்பும் பக்தியும் கலந்து அளித்தவர்கள் ஆழ்வார்களும் அடியார்களும் தான். இவற்றை ஒருவன் ஆழ்ந்து ருசித்து அறிந்தால் வேறெதுவும் கற்க தேவையில்லை. பன்னிரு ஆழ்வார்களும் நான்கு சைவ சமய குரவர்களும் பாடியதை அறிந்து கொண்டாலே  நம்  வாழ்வு  பண்பட்டுவிடும். அவற்றை மனப்பாடம்  செய்ய  வாழ்நாள் போதவே போதாது.
 
மார்கழி மாதம் முழுதும் இதை முடிந்தவரை அனுபவித்தோம்.   திருப்பாவையும்  திருவெம்பாவையையும்  சேர்த்தே  அனுபவிக்கிறோம்.  திருப்பாவை  நமக்கு  இன்னும்  13 நாள் காட்சி தருவாள் மணிவாசகர் ஏனோ 20 திருவெம்பாவை  மட்டும் தந்தாலும்  மீதி பத்து நாளும்  நான் அவரை விடமாட்டேன். அவரது  திருச்சாழலை  அளிக்கப்  போகிறேன்.
 மார்கழி முழுதும்  நாம் அவருடன் இருப்போம்.  எல்லாமே இறைவன் அருள். எதை எப்போது செய்யவேண்டும் என்பதெல்லாம் அவன் கட்டளை அல்லவா?.

உங்களில் எத்தனை பேருக்கு  திருவையாறு   சப்தஸ்தான  உற்சவங்கள் பற்றி தெரியும்?  திருவையாறுடன் சேர்த்து  ஏழு  க்ஷேத்ரங்களில்  சிவன் பார்வதி ஊர்வலமாக  திருவையாறு வருவார்கள் அந்த அற்புதம் பற்றி இனி சொல்லலாம் என்று தோன்றியது. ஒவ்வொன்றாக சொல்கிறேன்.


64TH NAYANMAR KRIPANANDHA VARIYAR

 


அறுபத்து நாலாம்  நாயன்மார்.  -   நங்கநல்லூர்   J K  SIVAN 

திருமுருக கிருபானந்த  வாரியார்.

ஆங்கில  வருஷம் எப்போதும் டிசம்பர் 31  அன்று முடிகிறது. அடுத்த   நாள்  புது வருஷம்  HAPPY  NEW  YEAR   கோஷம் அர்த்தமில்லாமல் கைகுலுக்கி  சொல்கிறோம். அது வெள்ளைக்காரன்   குதூகலமாக  சொல்வது.   முன்பெல்லாம் நிறைய  கலர் கலர்  வண்ண எழுதது வாழ்த்து அட்டைகள் பரிமாறிக் கொள்வார்கள்.இப்போது அது குறைந்து விட்டது.  வாட்ஸாப்ப்  தான் பொங்கி வழிகிறது..  கிட்டத்தட்ட  400 வருஷங்கள் வெள்ளைக்காரனுக்கு அடிமையாக வாழ்ந்து பல தலைமுறைகள் வெள்ளைக்கார  பழக்கவழக்கங்களை பின் பற்றி வருகிறோம்.   அதில் இது ஒன்று.

 பாரத தேசத்தில் பல மொழிகள் பல நூற்றாண்டுகளாக உள்ளவை. அந்தந்த பிரதேசத்தில் அந்தந்த  மொழி பிரஹாரம்   புத்தாண்டு தினங்கள் மாறி மாறி வரும். 

 நமக்கு  சித்திரை முதல் தமிழ் வருஷங்கள் 60 சுற்றி சுற்றி வரும்.  நமது வாழ்க்கையில்  எந்த வருஷம் எந்த மாசம் எந்த நக்ஷத்திரத்தில் பிறந்தோம் என்பதிலிருந்து வயது துவங்குகிறது.

எனக்கு தெரிந்து 31 டிசம்பர் அன்று திருத்தணி படிகளில் திருப்புகழ் பாடல்கள் பாடிக்கொண்டே  இரவு முழுதும் நடப்பது ஒரு அற்புத அனுபவம்.  கல்லிடைக்குறிச்சி  கடையம் பகுதி  மஜீத் என்பவர்  ஒரு முஸ்லீம் ஆனாலும் அற்புதமாக முருகன் பாடல்கள் திருப்புகழ் எல்லாம் பாடுவார்.  நாற்பது ஐம்பது வருஷங்கள் முன்பு  எங்கள்  நங்கநல்லூர்  வீட்டுக்கு வந்திருக்கிறார்.  இடுப்பில் வேஷ்டியில் விபூதி பை  இருக்கும். முருகா முருகா  என்று   மனதார  எல்லோருக்கும் வழங்குவார். நெற்றியில்  பூசுவார்.

 திருத்தணி 365 படிகளிலும் அற்புதமான  365  திருப்புகழ் பாடல்கள்  அவரது கணீர் குரலில்  ஒலிக்கும்.  இரவெல்லாம்  கோலாகலம். 

முருகன்  எனும்போது மற்றுமொரு மகானின் பெயர்  மறக்க முடியாதது. திருமுருக  கிருபானந்த வாரியார்.  அறுபத்து நாயன்மார்களோடு   64வது  நாயன்மாராக  போற்றப்படுபவர்..

நாஸ்திக வாதம் தலை தூக்கி  தமிழகத்தில்  பக்தர்கள் நெஞ்சத்தை புண்படுத்திய காலத்தில்  தனியொருவராக  பட்டி தொட்டிகள் எல்லாம்  சென்று  முருகன் புகழ் பாடி  மக்கள் உள்ளத்தை கொள்ளை கொண்ட மஹான்.
அவரை துளைத்த  நாஸ்திக வாதிகளின் கேலி கேள்விகளும் அவர் பதிலும்:

''ஒரு கல்யாண வீட்டில் வாரியாரை  ஒரு நாஸ்திகர்  
''உங்கள் முருகன் ஆறு தலையோடு எப்படி தூங்க முடிந்துதூங்குவார் ? ஒரே சிரிப்பு.  
வாரியார் கோபப்படாமல் பெண்வீட்டு பெற்றோரை அழைத்தார். 
'' இந்த கல்யாணம் இன்று சிறப்பாக நடைபெறுகிறது. கொஞ்ச நாளாக  சந்தோஷமாக தூங்கினீர்களா? என்று கேட்க,  அவர்கள் 
''சுவாமி  பெண் கல்யாணம்  நல்லபடி நடக்கவேண்டும் என்ற  கவலையில்  எப்படி எங்களால் தூங்க முடியும்?'' என்று சொல்ல,   நாஸ்திக வாதியிடம்  வாரியார்  
'கேட்டியா அப்பா,  ஒரு தலை உள்ள  இவர்களால்  தங்கள் பெண்ணைப் பற்றிய நல்வாழ்வு, சுகம்  பற்றிய  பொறுப்பில்,   தூங்க முடியவில்லையே,  இந்த  உலகத்தில் அனைவருக்கும் நல்வாழ்வு தரும்  பெற்றோராக பொறுப்பேற்ற   முருகன்  எப்படியப்பா தூங்க முடியும்.?  நீயே சொல் , ஆறுதலை அளிக்கும் ஆறுமுகம் எப்படி தூங்குவான்? சொல் '' என்கிறார்.

திருப்பரங்குன்றத்தில் சொற்பொழிவில்  ஒரு சிலர்  வேண்டுமென்றே ''ஐயா  இது  பரங்குன்றம் இல்லை,  சிக்கந்தர் மலை என்ற பெயர் கொண்டது? புரிந்து  கொள்ளவேண்டும்.  என்ன சொல்கிறீர்கள்?  என்று கேட்ட  போது துளியும் யோசிக்காமல்  வாரியார்  சிரித்துக்கொண்டே  
''நீங்கள் சொல்வது ரொம்ப சரி, இது சிகந்தர்  மலை தான்.  கந்தரின் அப்பா சிவன். ஆகவே  இனிஷியல் ''சி.  கந்தர் '' அவர் பெயரில் இப்படி மலை இருப்பது பொருத்தமே  என்கிறார்''

ஒரு சொற்பொழிவில் ஒரு பையனை  கேள்வி கேட்டார்:  
'பையா  குருகனின்  அப்பா பெயர்  தெரியுமா?''
பையன் சிவாஜி கணேசன் படம்  திருவிளையாடல்  பார்த்தவன்.  ஆகவே  அதில் முருகனின் தந்தையாக சிவாஜி வருவதால் பளிச்சென 
''முருகனின் அப்பா சிவாஜி ''  என்று சொல்லிவிட்டான். எல்லோரும் சிரிக்க  வாரியார்  நிலையை புரிந்து கொண்டு  வெட்கமோ,கவலையோ வருத்தமோ படவில்லை.  
 ''பையனுக்கு பரிசு கொடுக்கிறேன். சரியான விடையை சொன்னதற்கு''  என்கிறார்.  
எல்லோருக்கும் ஆச்சர்யம்  எப்படி  வாரியார்  பையன் சொன்னது சரி என்கிறார்.
வாரியார் உடனே விளக்கினார். 
 'முருகனின் அப்பா  சிவன்.  அவனை வடமொழியில் ''ஜி''  என்று மரியாதையாக அழைப்பதை பையன் சொல்கிறான்.  முருகனின் அப்பா ''சிவாஜி''  ரொம்ப சரிதான். என்கிறார்.

அப்படிப்பட்ட வாரியார் மறைந்தபோது  கண்ணதாசன் எங்கள்  ஊரில் வந்து பேசும்போது  
''ஆஹா  வாரியார் போல் ஆன்மீக  விஷயங்கள் ஹாஸ்யம் கலந்து எளிய மொழியில்  இனி  வாரி  ''வாரி யார்''  கொடுப்பார்'' என்றார்.

எனது நண்பர்  ஸ்ரீ  வித்யா சாகர்  பம்பாயில் பல  வருஷங்களாக வாழும் முருக பக்தர்.  வாரியார் பக்தர். வாரியார்  பம்பாய் செல்லும்போது அவர் வீட்டில் தான் தங்குவார் வாரியார்  கடைசி வெளிநாடு பயணம் லண்டன் சென்றபோது அவரை ஜாக்கிரதையாக பிளேனில் சாய்வு நாற்காலியில் அமர்த்தி விமானத்தில் அமர்த்தி விடை கொடுத்தவர்.   உடல் நலம் குன்றி  வாரியார்   ஏர் இந்தியா  விமானத்தில்  சென்னை திரும்பினார். அப்போது  நடந்த அதிசயத்தை  அடுத்த பதிவில்  சொல்கிறேன் .



Wednesday, December 29, 2021

VAINAVA PEROLI


 



வைணவப் பேரொளி -  நங்கநல்லூர்  J K  SIVAN 
ஆண்டாள் 

''உனக்கெனவே  நான் பிறந்தேன்''

ஒரு நிமிஷம் நினைத்துப் பாருங்கள்.  பல நூற்றாண்டுகளுக்கு முன்பு.  எங்கோ தெற்கு கோடியில் ஒரு ஊரில்  ஒரு பெண் ஒரு முதியவரால் கண்டெடுக்கப்பட்டு  வளர்கிறாள்.. அவர்  ஒருவரைத் தவிர அவளுக்கு வேறு யாரும் தெரியாது.  அவருக்கு  ஒரே ஒருவர் மட்டும் தான் சதா  அவர் நெஞ்சிலே, இதயத்திலே,  அது  ரங்கநாதன் எனும் பெருமாள். விஷ்ணு.   இப்படி விஷ்ணுவையே  எப்போதும் நினைத்து மகிழ்ந்த அவருக்கு என்ன பெயர் என்று யாருக்கும் தெரியாது.  காரணப்பெயர்  நிலைத்துவிட்டது?  எப்போதும் விஷ்ணுவையே  சித்தத்தில் கொண்ட அவரை ''விஷ்ணு சித்தர்''  என்று அழைத்தார்கள்.    குழந்தைகள் பெற்றோரை தான் பின் பற்றி மனா வளர்ச்சி அடைகிறார்கள்   children  are  moulded  by parents  .  ஆகவே  கோதையும் ஒரு  விஷ்ணு  ''சித்தள் ''ஆகிவிட்டாள் . அவர்கள் வசித்த இடம் அருகே  ரெங்கமன்னார்  என்ற பெருமாள் கோவில்.  ரெங்கன் கோதை மனதை ஆண்டான்.  அவள் ஆண்டாள்  ஆனாள் .  அவனோடேயே கலந்தாள் .  தெய்வமானாள் .  ஆண்டாள் சந்நிதி இல்லாத  வைணவ ஆலயமே கிடையாது.  அவள் இயற்றிய  திருப்பாவை பாசுரங்கள், நாச்சியார்  திருமொழி,  பொருட்செறிவு, அருள் நிறைந்த எளிய  தமிழ் பொக்கிஷம். நாலாயிர திவ்ய பிரபந்தம் எனும் உயரிய  நூலில் இடம் பெற்றவை. 

ஒரு சேதி இதுவரை தெரியாதிருந்தால் இனி தெரிந்து கொள்ளலாம். பல திவ்ய தேச ஆலயங்களில் வட மேற்கு பகுதியில் ஆண்டாள் சந்நிதியை ஏற்படுத்தியவர் ராமானுஜர். ஆண்டாள் மீது அத்தனை பற்று, பக்தி. அவள் தமிழின் இனிமையில் கட்டுண்டவர். திருமலையில் அடிவாரத்தில் கீழ் திருப்பதியில் ஸ்ரீ கோவிந்தராஜ சுவாமி சந்நிதியில் பெருமாளுக்கு வலது பாகத்தில் வழக்கமாக அருள் பாலிக்கும் ஸ்ரீ தேவிக்கு பதிலாக ஆண்டாள் சிலையை சாசனம் பண்ணியனார் .ஆண்டாளின் வாக்குக்கு தன்னை அர்ப்பணித்த  ஞானி ராமானுஜர். 

ஆண்டாள் கட்டுக்கதை அல்ல.  நிஜமாகவே வாழ்ந்தவள்.  பரமனைப் பாடியவள். அவனோடு பலர் கண்முன்னே இணைந்தவள். 11 திவ்யதேசங்கள் அவளது மங்களாசாசனம் பெற்றவை. அவை :
ஸ்ரீ ரங்கம், திரு ஆய்ப்பாடி, திருக்கண்ணபுரம், திருக்குடந்தை, துவாரகை, பரமபதம், திருவேங்கடம். திருப்பாற்கடல், திருமாலிருஞ்சோலை, வடமதுரை, ஸ்ரீ வில்லிப்புத்தூர். 

ராமானுஜர் ஆண்டாளின் நாச்சியார் மொழி அருளிச்செயல், திருப்பாவை ஆகியவைகளை பிரசங்கம் உபன்யாசம் எல்லாம் பண்ண தன்னை அருகதையில்லாதவன் என்று சொல்லிக்கொண்டவர் .   அக்காலத்தில்  பெண்களுக்கு  5-6 வயதிலேயே திருமணம் செய்யும் பழக்கம் இருந்தது.   என் அம்மாவுக்கு  10-13   வயதில் திருமணம்  எனும்போது, 7வது 8வது நூற்றாண்டில் என்ன பழக்கமோ?  கோதையின்  குழந்தைப் பருவத்திலேயே  விஷ்ணு சித்தர்  வரன் தேட ஆரம்பித்தார்.

'' என்னப்பா கொஞ்ச நாளாக எங்கெல்லாமோ அலைந்து கொண்டிருக்கிறீர்கள்?''
''என் கடமையை நான் செய்ய வேண்டாமா தாயே?''
''என்னப்பா அப்படி உங்களுக்கு ஒரு முக்கியமான கடமை ?''
''உனக்கு பொருத்தமான ஒரு வரன் தேடுகிறேன் அம்மா ?''
''எதற்கப்பா வீணாக அலைகிறீர்கள் நானே தேடியாச்சே!''
''அடேடே, ஆச்சர்யமாக இருக்கிறதே. யாரம்மா அந்த பாக்யசாலி?''
''உங்களுக்கு தெரிந்தவர் தான் அப்பா"!
''புரியவில்லையே ! விவரமாக சொல்லம்மா "
''நீங்கள் அறிமுகப்படுத்திய அரங்கன் தான் நான் வரித்த மணாளன்"
''ஹா ! என்னம்மா இது'' என்று காதைப் பொத்திக்கொண்டார் விஷ்ணு சித்தர். பகவான் அவன். நாம் எல்லாரும் சாதாரண மனிதர்கள் ஆச்சே. பக்தி ஒன்றுதான் நமது உறவு அவனோடு தாயே!. வாழ்க்கை என்பது நமக்கு நம்முள் ஒருவரோடு அமைவது தான் நியாயமானது. வழக்கமானது அம்மா ''
''அப்பா, உங்கள் மகள் வாழப்போவது அந்த அரங்கன் ஒருவனுடனே தவிர வேறு யாருடனும் கனவிலும் கூட நிச்சய மாக இல்லை. இனி அது பற்றி பேச்சே வேண்டாம். என் சொல் மீறி வேறு ஏற்பாடு ஏதாவது செய்ய முற்பட்டால் இறந்த உங்கள் மகளை வேறு யாருக்காவது திருமணம் செய்து வைக்க வேண்டுமானால் செய்யுங்கள் ''

அந்தக் கணம் முதல் அந்த ஜீவாத்மா பரமாத்மாவுக்கு கைங்கர்யம் இடைவிடாது செய்து பரம புருஷார்த்தம் அடைந்தது.

கோதையை   நினைக்கும்போதே எனக்கு வியப்பு. எப்படி ஒரு சிறு பெண் இப்படி பாசுரங்கள் எழுதினாள் ? உயர்ந்த தத்துவங்களை அந்த சின்ன வயதில் எழுதுவது மனித காரியம்  இல்லையே..  அவளைப்பற்றி ஒரு சிறு புத்தகம் எழுதினேன். 2014 வைகுண்ட  ஏகாதசி அன்று '' பாவையும் பரமனும்'' வெளியாயிற்று.  அதற்குப்பிறகு  2000 பிரதிகள் தீர்ந்துவிட்டது  இப்போது ஒரு பிரதி கூட இல்லை. 

''பாவையும் பரமனும்''   நூலில்  நான் ஆண்டாளை வடக்கே யமுனைக்கரையிலே ஒரு ஆயர்பாடி கோபியாக கிருஷ்ணன் கால துவாபர யுகப்பெண்ணாக உருவமைத்து மற்ற பெண்களோடு மார்கழி முப்பது நாளும் அவர்கள் அவனை அடைய நோன்பு நோற்று அந்த கிருஷ்ணன் வீட்டையே சுற்றி சுற்றி வந்து அவனையே விரத பலனாக அடைவதாகவும், மற்றொரு பெண் கோதை என்பவள் எங்கோ தென் கோடியில் வில்லிப்புத்தூரில் ஒரு காட்டின் மத்தியில் துளசி நந்தவனத்தில் ஒரு சிறு பர்ணசாலையில் தன் வளர்ப்பு தந்தை விஷ்ணு சித்தர் என்கிற விஷ்ணு பக்தரிடம் வளர்வதாகவும், அவரிடம் கல்வி பயின்று பாசுரம் இயற்ற தகுதி பெற்று முப்பது பாசுரங்களை தானே அந்த ஆயர்பாடி ஆண்டாளாக நோன்பு நோற்பதாக கற்பனை செய்து திருப்பாவையாக அளிப்பது பற்றியும், விஷ்ணு சித்தர் நாள்தோறும் காத்திருந்து அன்றைய பாசுரத்தை ஆவலாக படித்து ரசித்து அதிசயித்து பெருமாள் கோவிலில் மற்றவர்களுக்கு திருப்பாவையின் உள்ளர்த்தத்தை எடுத்துரைப்பது போன்ற ஒரே மேடையில் மூன்று காட்சிகளாக அமைத்திருந்தேன் . அதைத்தான்  இப்போது ''கோதையின் கீதை''  என்று  தினமும்  கொஞ்சம் மாற்றி அளிக்கிறேன்.
 இது ஆண்டாளின் அருள் என்று தான் சொல்வேனே தவிர என் முயற்சி என்று சொல்ல இயலாது. 

ஆண்டாள் வாழ்க்கையில் திருப்புமுனை அவள் தன்னை அரங்கனின் மனைவியாக மனதால் வரித்து செயலிலும் அவ்வாறு  காட்டியது. மனத்தை  கொள்ளைகொண்ட அரங்கனுக்கு ஆசையாக மாலை தொடுத்து அதைத் தன் தோளில் சூடி, மாலையும் கழுத்துமாக அழகு பார்த்துவிட்டு '' அரங்கா உனக்கு திருப்தியா?'' என்று கேட்டு அதை தோளிலிருந்து கழற்றி பிறகு அரங்கனுக்கு அது போய் சேர்ந்து ஒருநாள் அந்த மாலையில் கோதையின் தலை முடி இருப்பதைக் கண்ட விஷ்ணு சித்தர், இது மனிதர் உபயோகித்ததாயிற்றே அரங்கனுக்கு உகந்ததாகாதே என்று உணர்ந்து வேறு யாருமே இல்லாததால் அந்த மாலையை கோதை தான் உபயோகித்து இருக்கவேண்டும் என்று அவளை கோபித்து, வேறு மாலை உடனே தயார் செய்து, அரங்கனுக்கு சார்த்த முயல்கையில் அவன் அதை நிராகரித்து கோதை சூடிய மாலையே வேண்டும் என்று சொல்ல,பிறகு தான் விஷ்ணு சித்தர் உணர்கிறார் இவர்கள் இருவருமே ஒருவருக்காக மற்றவர் என்று.

தனது திருமணம் அரங்கனோடு நடந்த வைபவத்தை கனாக் காண்கிறாள் கோதை. ஆண்டாள் என்ற இடை[ப் பெண்ணாக தன்னை பாவித்து மார்கழி மாதம் முழுதும் யமுனையில் விடியற்காலை நீராடி நோன்பு நோர்த்து கன்ணனைத் தேடி அவன் வீட்டை சுற்றி வந்து கடைசியில் அவனை சந்தித்து அவன் அருள் பெறுகிறாள் என்று அவளை காட்டி இருக்கிறேன். ஒரு   சம்பாஷணை :.

''கண்ணா, இந்த மார்கழி முழுதும் பக்தியோடு உன்னை பாடிய இந்த ஆயர்குடி இடைப் பெண்கள் நாங்கள் உன்னிடம் என்ன கேட்கிறோம்? 
நீயார்? எங்களைப்போல் இடையர் குலத்தில் பிறந்தவனல்லவா? அதனால் நாம் எல்லோரும் ஒரே குலம் அன்றோ? ஒரே வித்தியாசம் நமக்குள் என்னவென்றால் நீ ஆண்டான் நான் ஆண்டாள் ஆக இருந்த போதும் உன் அடிமை. எங்களுக்கு நீ அருள வேண்டிய வரம் என்ன தெரியுமா?. 
இனி எங்களுக்கு எத்தனை எத்தனை பிறவி பாக்கியோ அத்தனையிலும் நீ எங்களில் ஒருவன் .  நாங்கள் உன்னுடையவர்கள் புரிகிறதா?
இன்னும்  சொல்கிறேன்.

THIRUVEMBAVAI

 திருவெம்பாவை -  நங்கநல்லூர்  J K  SIVAN 

மார்கழி 15ம் நாள் 

15   வினா விடைகள்

''ஓரொரு கால் எம்பெருமான் என்றென்றே
நம்பெருமான் சீரொருகால் வாய் ஓவாள்
சித்தம் களிகூர நீரொருகால் ஓவா
நெடுந்தாரை கண்பனிப்ப பாரொருகால் வந்து
அணையாள் விண்ணோரைத் தான் பணியாள்
பேரரையற்கு இங்ஙனே பித்தொருவர் ஆமாறும்
ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர் தாள்
வார் உருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி
ஏர் உருவப்பூம்புனல் பாய்ந்தாடலோர் எம்பாவாய்''


ஆஹா இந்த  புனித  திருவண்ணாமலையை சேர்ந்த  அழகிய பெண்களே!    இதோ இந்த  அதிசய பெண்ணை  பாருங்கள்.... பித்தா பிறை சூடி  பெம்மானே, என்று சதா   ஆடிப் பாடி  ஒவ்வொரு சமயத்தில், எம்பெருமான்,   என் பெருமான்  என்று சொல்லி வந்து இப்பொழுது நம்மிறைவனது பெருமையை ஒருகாலும் வாயினால்  உச்சரிப்பதை  விடாதவளாக மன மகிழ்ச்சிகொண்டவளாக இருக்கிறாள்.  பித்தன் மேல் பிச்சியாக  அலைகிறாள்.  அவளது  விழிகளினின்றும்,   ஒருபொழுதும் அவன்   நீங்காதவனாக ,   பொய்கையில்  நீராடிய  நீர்  உடலில் சொட்ட சொட்ட ,  அதைவிட  கண்களில் பக்தியால்  கண்ணீர் பிரவாஹமாக  நீண்ட தாரை தாரையாக ஒழுக,  பூமியின்மேல்  வீழ்ந்து  பரம சிவனை   வணங்குகிறாள்.  என் சிவனே போதும் வேறொன்றும் நான் அறியேன் பராபரமே  என்கிறாள்.

பெரிய தலைவனாகிய  பரமேஸ்வரன் பால்  ஒருவர்  இப்படி  பித்தராக  மாறுவது  சுலபமா?   நான்  ஏன்  நீர் சொட்ட  சொட்ட  ஈரமாக  குளித்துவிட்டு  நிற்கிறேன். அதோ என் சிவன் சிரத்தில் கங்கை ஆறாக பெருகி அவன் உடல் வழியாக ஓடுவது தெரியவில்லையா.  அவன் மீது வைத்த அன்பினால் தானே   ஈரமான அவனை என் நெஞ்சில்  ஈரத்தோடு  பக்தி ப்ரவாஹத்தோடு,  ''அன்பே சிவமாக  அமர்ந்திருக்கிறேன்'' .   பிறரை அடிமை கொள்ளும் ஞான உருவினர் யார் ஒருவரோ, அவருடைய திருவடியை நாம் வாயாரப் புகழ்ந்து பாடி, அழகிய தோற்றமுடைய மலர்கள் நிறைந்த நீரில்  குதித்து   ஆனந்தமாக  நீராடுவோம்  வாருங்கள்'' என்கிறாள் ஒரு பெண்..

சிவபெருமான்,எம்  பரமேஸ்வரன்  எப்படி   தடுத்தாட்கொள்பவர்?  எப்படி கருணை உள்ளம் கொண்டவர்?  இதற்கு விடை தேடினால்  சுந்தரரைக்  கேளுங்கள்.   கதை கதையாக தன் அனுபவத்தைச்  சொல்வார்.  சேக்கிழார்  தான் அதையெல்லாம்  கேட்டு  பெரிய  புஸ்தகமாக  ''பெரிய''  புராணமாக   எழுதி வைத்திருக் கிறாரே.

மணிவாசகரின்  அழகு தமிழில் அற்புத  பாடலை ர் ரசிக்கிறோமே . நமக்கு  இப்படிப்பட்ட அரிய  அழகு தமிழை, ஆர்வமுடன், அன்பும் பக்தியும் கலந்து அளித்தவர்கள் ஆழ்வார்களும் சைவ சமய சிவனடியார்களும் தான். இவற்றை ஒருவன் ஆழ்ந்து ருசித்து அறிந்தால் வேறெதுவும் கற்க தேவையில்லை.

பன்னிரு ஆழ்வார்களும் நான்கு சைவ சமய குரவர்களும் பாடியதை அறிந்து கொண்டாலே வாழ்வின் பெரும்பகுதி பண்பட்டுவிடும் . வேறொன்றும் கற்க தேவையில்லை எனலாம். முதலாவது  நமது  வாழ்வி ன்  நீளம் இதெல்லாம் முழுதும் கற்க  போதுமா?  என்பது தான் கேள்வி.

இறைவன்  அருளால்  எதுவும்  நிகழும்  என்பதை  ஆழ்வார்களும்  சிவனடியார்களும்  வாழ்வில்  அனுபவித்து
உணர்ந்ததைப் பற்றி நாம் நிறைய  கேள்விப்  பட்டிருக்கிறோம், படித்திருக்கிறோம்.   பரமேஸ்வரன் அடியார்களுக்கு இவ்வாறு அருள் புரிந்ததை  திருவிளையாடல் என்கிறோம். 

 மணிவாசகர் வாழ்வில் நடந்த  ஒரே  ஒரு  அற்புத சம்பவத் தை மட்டும் சொல்லி நிறுத்திக் கொள்கிறேன்.   இந்த அதிசயம் நடந்தது சிதம்பரத்தில்.

மணி வாசகர் வாழ்ந்த காலத்தில் சோழநாடு பாண்டியநாட்டில் எல்லாம் சைவமதம் தக்க ஆதரவு பெறாமல் தவிக்க நேர்ந்தது. ஈழத்தில் இருந்து பௌத்தர்கள் இங்கே வந்து அவர்கள் மதத்தை பரப்பி சைவ  மதத்தை இழிவாக பேசினார்கள்.  தமிழ் அரசர்கள் சிலரும்   அவர் களை  ஆதரித்தார்கள். ஈழத்தில்  பௌத்த மதத்தின்  கை  ஓங்கி இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக  தென்னகத்தில் பரவ ஆரம்பித்தது.   பௌத்த மத  குருமார்கள்  சோழ தேசம் வந்து அரசனை மற்றவர்களை பௌத்தர்  களாக்க  வரப்போகிறார்கள். சைவ மதத்திற்கு  அழிவு நிச்சயம், என்ற பயம் எங்கும்  நிலவியது.

இந்த  பௌத்த   மதம் பரவாமல் தடுக்க  பௌத்தர்களை வாதத்தில் வெல்வது தான் அப்போதைய நடைமுறை. இதை சிறப்பாக நடத்த  தக்க சைவ   மத தலைவர் எவருள்ளார் ? என்று  தேடும் நேரத்தில் தான்  மணி வாசகர் சிதம்பரத்திற்கு நடராஜனை தரிசிக்க வந்தார். தில்லை மூவாயிரவ தீட்சிதர்கள்  இந்த சந்தர்ப்பத்தை விடுவார்களா?
நேராக  சோழ ராஜா விடம் சென்றார்கள் 

'மன்னா, சிறந்த சிவ பக்தர்  மாணிக்க வாசகர் என்பவர்  நமது ஊரான சிதம்பரம் வந்திருக் கிறார். தவச்சாலையில் தங்கி இருக்கிறார் . அவரால் பௌத்தர்களை வாதத்தில் வெல்ல முடியும்,தயவு செயது தக்க ஏற்பாடு செய்ய வேண்டும்''   என அரசனிடம் உணர்த்தி யாதும்  ராஜா ஒப்புக்கொண்டான்.    மணிவாசகரை  அழைக்க அவர்களை அனுப்பினான்.   சிதம்பரம்  தீக்ஷிதர்கள் மணிவாசகரை அணுகி  விஷயம் சொல்கிறார்கள்.
  
''என்ன சொல்கிறீர்கள்,   சோழ ராஜா, என்னை ஈழத்திலிருந்து வந்திருக்கும் பௌத்த குருவோடு வாதத்தில் ஈடுபட அழைக்கிறாரா?  என் இறைவனுக்கு நான் செய்யும் ஒரு தொண்டாக மன்னன் அழைப்பை மதித்து தில்லை நடராஜன் அருளோடு வருகிறேன்''

தில்லையில் ஒரு மண்டபத்தில் ஏராளமான பக்தர்கள், புலவர்கள், பண்டிதர்கள் சபையில் கூடி விட்டார்கள். பௌத்த குரு   படாடோபமாக தன்னுடைய சீடர்களோடு ஏராளமான ஓலைகள், , சுவடிகள் சகிதம் வந்து அமர்ந்து விட்டான். வாதத்தில் சைவத்தை தவிடு பொடியாக்கி விடுவோம் என்கிற நம்பிக்கை அவன் முகத்தில் ஆணவமாக தெரிந்தது.

எதிரே  ஒடிசலாக  காவி உடை அணிந்த  ஒரு ஒற்றை மனிதன் கையில் எதுவுமின்றி தான்  மட்டும்  வந்து உட்கார்ந்தி ருப்பதை பார்த்த பௌத்த குரு  ஏளனமாக  சிரித்தான்.

''ஹெ ...  ஹெ ...  ஹெ   .... இந்த பரதேசியா என்னை எதிர்ப்பவன்? சோழனுக்கு  பைத்தியம்  தான் பிடித்திருக்கிறது. எந்த  நம்பிக்கையோடு வாதவூரன்   என்கிற இவன்  என்னை வாதத்தில் வெல்வான்  என்ற  நம்பிக்கை அந்த பௌத்த குருவுக்கு. ..  இந்த  பரதேசி ஒன்றுமே  அறியாத  அன்றாடங்காய்ச்சியாக தெரிகிறானே !''  இவனை ஒரே கேள்வியில் ஊதித்தள்ளி சிறையிலடைக்கச் செய்கிறேன்''

''தீயாரைக் காண்பதுவும் தீது'' என்று தீர்மானித்த மணிவாசகர்   ''சோழ மன்னா நான் இந்த  பௌத்தகுருவை  நேரில் பார்த்து  வாதாட விரும்பவில்லை..  ஆகவே  எனக்கும் இவருக்கும் இடையே ஒரு திரை போடுங்கள்   எங்கள் வாதம் தொடரட்டும்''

பௌத்தகுருவின் கேள்விகள் பிறகு தொடர  திரையின் பின்னாலிருந்து  சைவ மத பண்பாடு, சிறப்புகளை  பதிலாக  மேற்கோள்களோடு  விளக்குகிறார்  மணிவாசகர். சபையில் அரசன் உட்பட அனைவரும்  அமைதியாக கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இவ்வளவு பெரிய  ஞானியா  இவன்  என்று  பௌத்த குரு  திணறினான்.   வாதத்தில் சைவத்தின் கோட்பாடுகளை எதிர்க்க  அவனால்  இயலவில்லை.  உடனே  அவன்   சிவபெருமானை தூஷணையாக, இகழ்ந்து பேச ஆரம்பித்து விட்டான். மணிவாசகர் எவ்வளவோ எடுத்து சொல்லியும் அவன் வாதத்தை முறையாக தொடராமல் இப்படியே இழிவாக பேசிக் கொண்டிருக்கவே மனம் நெகிழ்ந்த மணிவாசகர் மனதால் கலைவாணியாகிய  ஸரஸ்வதியை தியானித்தார்.

'அம்மா,    கலைவாணியே , நாவுக்கரசியே, நாமகளே , இந்த பாதகன் எம்பிரானை இழிவாக பேசுவது என் காதில் நாராசமாக இடிபோல் விழுந்து என்னை வாட்டுகிறதே. அவன்  நாவிலும்   உறையும் நீ எப்படி அம்மா இப்படி அவன் பேசுவதை அனுமதிக்க முடிந்தது? . என் ஈசன் மீது ஆணை, நீ அவன் நாவில் இதை சகித்துக் கொண்டு இந்த பாதகர்கள் நாவில் உறைவது இனியும் ஞாயமாகாது இல்லையா''

என்ன ஆச்சர்யம்!   அடுத்த கணமே பௌத்த குரு மட்டுமல்ல, அவனுடன் வந்த அனைத்து சீடர்களும் வாய் பேசமுடியாமல் ஊமையாகி விடுகிறார்கள். அதிர்ச்சி அடைந்த அவர்கள் வாதவூரர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறார்கள். அவரது தெய்வ சக்தியை உணர்கிறார்கள். எங்களை மன்னித்து, எங்கள் தவறைப்  பொருட்படுத்தாது மீண்டும் பேசும் சக்தியைத்   தந்து  அருளவேண்டும். எங்கள் தோல்வியை ஒப்புக்கொண்டு சைவ மதத்தில் இணைகிறோம் .  அதை ஆதரிக்கிறோம்'' என்று  பேசமுடியாமல்  ஜாடையாக காட்டி  கதறுகிறார்கள்.

''சிதம்பரேசா,  நாவுக்கரசியே,  இந்த  பாதகர்கள்  தவறை உணர்ந்து  திருந்தி விட்டார்கள் என்ப தால்  தயை கூர்ந்து மன்னித்தருள வேண்டும். ''

மணிவாசகரின் வேண்டுகோளுக்கு  செவி சாய்த்த   நாமகள்  அருளால் பௌத்தர்கள் பேசும்  சக்தியை மீண்டும் பெற்று அங்கேயே சைவ மதத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொள்கி றார்கள்.

ஈழத்தை  ஆண்ட  பௌத்த ராஜா  தனது  மதத்தை தமிழ்  நாட்டில் ஸ்தாபிக்க  தான் அனுப்பிய   குருவும் சிஷ்யர்களும் தோற்று, ஊமையாகி பின்னர் மணிவாசகர்  என்ற சிவனடியார் அருளால் பேசும் சக்தி  பிறகு திரும்பப்பெற்று  சைவர்களானதை  அறிகி றான்.  ஈழ தேசத்து  ராஜாவுக்கு  ஒரே மகள்.   அவளும் பிறவி ஊமை.  அவளையும்  மணிவாசகர் பேச வைத்தால் தானும் தனது நாடும் சைவத்தில் இணையும்'' என்று  அறிவிக்கிறான்.

''அழைத்து கொண்டு  வாருங்கள் அந்த பெண்ணை ''என்கிறார் மணிவாசகர்

.தில்லை நடராஜன் சந்நிதியில் மீண்டும் பெருங்கூட்டம்.  அன்போடும் பாசத்தோடும் அந்த சிறிய   ஈழப் பெண்ணைப் பார்க்கிறார்.
''வா குழந்தாய்  வந்து என் அருகில் உட்கார் ''.
அவள்  மெளனமாக அவர் அருகே  உட்காரு கிறாள்.எதிரே ஈழ ராஜா,  சோழ ராஜா,  பௌத்த குருமார்கள், மற்றவர்கள்.  பௌத்தகுருவை அழைக்கிறார்.

''நீங்கள்  என்னைக் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் இந்த சிறிய பெண்ணே பதில் சொல்வாள். கேளுங்கள் '' என்கிறார். தானே பௌத்தகுரு கேட்ட கேள்விகளை அந்த பெண்ணிடம் கேட்கிறார். கணீரென்ற குரலில் இதுவரை பேசா  மடந்தையாக இருந்தவள் பட் பட்டென்று பௌத்த குருவின் கேள்விகளுக்கு சைவமதத்தின் பெருமையை கூறி வாதிடு கிறாள். வெல்கிறாள். அப்புறம் என்ன? ஈழ மன்னனும் மக்களும் சைவத்தை தழுவினார்கள். 

 இது என் கட்டுக்கதை அல்ல.  சரித்திரம்  இதை சொல்கிறது. பண்டைய நூல்கள் பொய்  சொல்ல  வேண்டிய  அவசியம் இல்லை.மணி வாசகர் கேட்ட  கேள்விகள்  என்ன?  அந்த பெண் கூறிய  பதில் என்ன ?  திருவாசகத்தில்  மணிவாசகரின் திருச்சாழல் பதிகங்கள்  தான்  இந்த  வினா விடையாக காட்டுகிறது.  கொஞ்சம்  சாவகாசமாக  அதை முடிந்தால் எழுதுகிறேன்.

   

KOTHAIYIN GEETHAI

 கோதையின் கீதை -  நங்கநல்லூர்  J K SIVAN

மார்கழி 15ம் நாள்.
                       
15.  ''நானே தான் ஆயிடுக''

கிராமம் என்றாலே அமைதி என்று அர்த்தம்.   இது அந்த காலத்தில்   நூற்றுக்கு  ஆயிரம் மடங்கு  வாஸ்தவம்.  ஆனால் இப்போது அந்த  நிலைமை  வேகமாக  மாறி வருகிறது. எல்லோரும் ஒன்றாக ஒரே குடும்பமாக வாழ்ந்த காலம் போய் விட்டது. பக்தி, கோவில், பண்பு,  பரோபகாரம்  ஒருகாலத்தில்  அனைவரையும் இணைத்திருந்த நிலை மறைந்து விட்டது. நகரத்தின் நரக வாழ்க்கை  கிராமங்களையும்  பிடித்துக் கொண்டு   இடம் பெயர்ந்து விட்டது.    ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அப்படி நிச்சயம்  இல்லை.

ஆயர்பாடியில் ஒவ்வொரு நாளும் ஊரில் இதே பேச்சு.  ''அந்த  படு சுட்டி, குட்டி,  ஆண்டாள் எவ்வளவு பக்தி பூர்வமாக,  உற்சாகமாக,  கண்ணனைத் துதித்து வழிபட ஊரிலுள்ள மற்ற பெண்களை எல்லாம் விடியற் காலையில் எழுப்பி நீராடி பாவை நோன்பைப்  பாங்காகச்  செய்ய வைக்கிறாள்''   என்று அவள் மேல் மட்டற்ற அன்பும் பாசமும் அனைத்து கோப கோபியரிடத்தே தோன்றியது.

வைதேகி வீட்டு வாசலில் ஆண்டாள் நிற்கிறாள் .   இன்று   மார்கழி 15ம் நாள். ஒரு வார்த்தை  முன்பே சொல்லி வைக்கிறேன் ஜாக்கிரதை.   வைதேகி பொல்லாத வாயாடி!
“வைதேகி, வாடி வெளியே, நேரமாச்சு!”
ஆண்டாள் குரல் அவளுக்கு உள்ளே கேட்டது. ஆனாலும் வைதேகி  உள்ளிருந்தபடியே பதில்  குரல் கொடுக்கிறாள் .
“ஆண்டாள்,  உன்னை பத்தி எனக்கு நிறையவே தெரியும், உன் அழகு, பேச்சு, பாட்டு, சாமர்த்தியம், பக்தி எல்லாமே. ஏண்டி இவ்வளவு சீக்கிரமே வந்து என்னை எழுப்புகிறாய். மற்ற எல்லாரும் வந்துவிட்டார்களா? எத்தனை பேர் உன்னோடு  இருக்கிறார்கள்?  மற்றவர்களும்  வந்து சேரும் வரை  என்னை இன்னும் கொஞ்சம் தூங்க விடேன்”,

“எல்லாருமே வந்தாகிவிட்டது. யமுனை நதிக்கும் கிளம்பி நடந்தாய்விட்டது. . இன்னிக்கு அந்த குவலயாபீடம் யானையை சம்ஹாரம் பண்ணின கிருஷ்ணனைப் பற்றி நீ அடிக்கடி  ''கஜ ஸம்ஹாரா ''  என்று  நீட்டி  இழுத்து  பாடுவாயே அதை நாங்கள் எல்லோரும் கேட்க வேண்டும்.  ஆகவே   நீ உடனே அதைப் பாட சீக்கிரமாக எழுந்து   வெளியே வாடி”

யாரிடம் என்ன சரக்கு இருக்கிறது என்று ஆண்டாளுக்கு நன்றாகத் தெரியும். அதை உபயோகித்து தானும் மகிழ்ந்து மற்றோரையும் மகிழ்விப்பதில்அவளுக்கு நிகர் அவளே தான். படுக்கையில் கிடந்த அந்தப்பெண்ணுக்கு   பாட  பிடிக்கும்.   எழுந்தாள். கூட்டத்தில் சேர்ந்தாள்,யமுனைக்கு நடந்தார்கள், நீராடினார்கள். பாடினார்கள். வைதேகி  சிறப்பாக பாடினாள். அந்த கிருஷ்ணனே அவள் பாட்டைக் கேட்டு மயங்கினான். அனைவரும் திருப்தியாக அன்றைய நோன்பு முடிந்து வீடு திரும்பினர்.

ஆயர் பாடியில் நம் வேலை முடிந்து இனி வில்லிப்புத்தூருக்குச் சென்று அங்கே நடப்பதையும்  பார்க்கவேண்டாமா?

ரங்கமன்னார்  கோவிலிலிருந்து யாரோ ஒருவர் அதிகாலையிலேயே வந்துவிட்டார். பெரியாழ்வார்  தனது  மகள் கோதை இயற்றும் திருப்பாவை பாசுரங்களை பற்றிச் சொன்னதில் இருந்து அந்த  வைணவருக்கு  பரம சந்தோஷம். தினமும் விஷ்ணு சித்தரிடமிருந்து  அன்றைய தினத்துக்கான  பாசுரத்தைக் கேட்டுத் தெரிந்துகொண்டு மகிழ்வார். இன்று நேரிலேயே கோதை பாடுவதைக் கேட்க   அவள் வீட்டுக்கே விட்டார்.

''கோதை,   ரங்கபட்டருக்கும் இன்னிக்கு எழுதிய  பாட்டை   ஒரு தடவை பாடிக் காட்டம்மா. ரொம்ப ஆர்வமா கேட்க காத்திருக்கிறார்.   அந்த சாக்கிலே நானும் இன்னொரு தரம் சந்தோஷமா அதைக் கேட்கிறேனே.''

கோதை அமர்ந்தாள் . எதிரே இருந்த ஓலைச்சு வடியைப் புரட்டினாள் . அன்று அவளால் இயற்றப்பட்ட பாசுரம் அவள் குரலில் வெளியேறி அந்த நந்தவனத்தில் இருந்த மரம் செடி கொடிகளும் ஆர்வமாக கேட்ட பாசுரம் இது தான்.

''எல்லே இளம் கிளியே இன்னம் உறங்குதியோ
சில் என்று அழையேன் மின் நங்கையீர் போதருகின்றேன்
வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாய் அறிதும்
வல்லீர்கள் நீங்களே நானே தான் ஆயிடுக
ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ போந்தார் போந்து எண்ணிக்கொள்
வல் ஆனை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடேலோர் எம்பாவாய்

''ரொம்ப ஆச்சர்யம். சுவாமி, உங்க பொண்ணு,  நிச்சயம்  மனுஷி இல்லே. தெய்வப்பிறவி. சாக்ஷாத் அந்த  மஹா  லக்ஷ்மி   தாயாரே வந்து பொறந்திருக்கா '' என்று தான் நிச்சயமாக தோன்றுகிறது. இதிலே பொருந்தியிருக்கிற உள்ளர்த்தத்தை வழக்கம்போலே நீங்களே அடியேனுக்கு சொல்லணும். எனக்கு  புரிஞ்சிக்கிற  சக்தியில்லை ''

''சுவாமி எனக்கு புரிஞ்சதை சொல்றேன்:

ஒருத்தர் கிட்டே ஒரு நல்ல குணம், திறமை, சாமர்த்தியம் இருந்தா அதைப் போற்றணும். ஆயர்பாடியிலே எந்த பொண்ணு தூங்கிக் கொண்டிருந்தாளோ, அவள் கிளி மாதிரி குரல் உடையவள். நன்றாக பாடுபவள். நீ பாடினால் அந்த கிருஷ்ணனே நேரில் வந்து கேட்பவ னாயிற்றே. நீ வந்தால், பாடினால், அவன் வந்து கேட்டால், மனம் மகிழ்ந்தால் அனைவருக்கும் அல்லவோ அந்த மாதவனின் அருள் கிட்டும் என்று  ஆண்டாள்  மற்றவர்களுக்கு சொல்கிற  மாதிரி  இந்த பாசுரம்  அமைஞ்சிருக்கு''

''விஷ்ணு சித்த சுவாமி,   லோக க்ஷேமத்துக்காகவே தான் உங்க பொண்ணு கோதை, இதை பாடியிருக்கா.   முதல்லே, நீங்க எல்லோரும் வந்தாச்சா என்று போய் எண்ணுங்கோ. நான் இப்போ எதுக்கு வரணும். என்னை எழுப்பாதேங்கோ என்று எதிர்த்து அடம் பிடித்த பெண் அப்பறம், தானே முதல்லே, ஆண்டாளோடு நோன்புக்கு வந்தாளே இதற்கென்ன அர்த்தம்?

''ஒரு வைஷ்ணவன் தான் செய்வது தவறு என்று உணர்ந்த மறுகணமே பெருந்தன்மையோடு அதை ஒப்புக்கொண்டு பிராயச்சித்தமாக தன்னைத் திருத்திக் கொள்பவன். மற்றவர் மேல் அதிக அன்புடையவன். அவர்களை மதிப்பவன். சரணாகதி அடைபவன். இல்லையென்றால் விஷ்ணு சம்பந்தப்பட்ட வார்த்தையான  ''வைஷ்ணவன்'' என்ற பெயர் பொருத்தமே அவனுக்கு இருக்காதே''  

'' ராமன் காட்டுக்குச் சென்றதற்கு தன் தாய்  கைகேயியோ, கூனியோ காரணம் இல்லை,  நான்  தான் '  என்று வலிய பரதன் ஒப்புக்கொண்ட மாதிரி தான்  இது.  இதைத்  தான் ''நானேதான் ஆயிடுக'' என்று அந்தப் பெண் கூறுகிறாள் என்று இந்த கோதை எழுதியது அதி அற்புதம்.'' என்று புகழ்கிறார்  ரங்கபட்டர் .

கோவிலில் மணி அடித்தது. வந்தவர் சென்று விட்டார்.  போகும்போது அவர் தனக்குள் முணுமுணுத்தது நம் காதிலும் விழுகிறது:

'ஆண்டாள், இந்த பாசுரத்தில் கண்ணன் குவலயாபீடம் என்கிற பலம் கொண்ட மதயானையையும், கம்ச சாணுரர்  களைக் கொன்றதையும் எதற்கு இங்கு உதாரணம் காட்டுகிறாள்?

ஒருவேளை   உலகில் பிறந்த ஒவ்வொருவனுக் குள்ளேயும், காம,க்ரோத,மோக, மத குவலயாபீடங்கள், கம்சர்கள், சாணுரர்கள்  இருக்கிறார்களே அந்த கிருஷ்ணனைத் துதி பாடி அவனிடம்,  ''அவர்களையும் கொல்லப்பா என் செல்லப்பா''  என்று வேண்டிக் கொள்ளவே தான் ''


Tuesday, December 28, 2021

KOTHAIYIN GEETHAI

 கோதையின் கீதை -  நங்கநல்லூர்  J K SIVAN

மார்கழி 14ம் நாள்.                          

 14.   பங்கயக் கண்ணான் பரம தயாளன்

நாம் என்ன பாவம் செய்தோமோ நமக்கு  இப்படி  ஒரு எண்ணம் தோன்றிவிட்டது.
கிராமங்களில் மனிதர்கள் வாழவே, பிழைக்கவே முடியாது என்று முடிவெடுத்து கூட்டம் கூட்டமாக அநேகர் அருமையான  கிராமங்களை விட்டு வெளியேறி விட்டோம். கிராமங்கள் தான் நகரத்தின், நாட்டின் உயிர் நாடி என்பது மறந்து போய் விட்டது. 

 ''ரிட்டையர் ஆனவுடன்  கிராமத்திலே போய்   அக்கடான்னு  போய் செட்டில் ஆகிட்டு  கோவில் குளம்னு  காலத்தை சுகமா கழிக்கப்போறேன்''   என்று  பிளான் போடுகிறவர்கள் பல பேர்.  இப்போது அதிக பணம் சேர்த்து கிராமங்களில் சென்று வாழ  முயல்கிறோம்.!!

கர்ப்பத்தின் இருட்டறையில் அதிகமாக இடமின்றி கைகால்களை குறுக்கிக்கொண்டு முழங்காலோடு  தலை சேர்த்து குனிந்து கொண்டுதான் முதலில் உருவானோம். பிறகு தான்  பெரிய பங்களா, கார், ஏரோபிளேன்  ஐந்து ஆறு ஏழு எட்டு நக்ஷத்திர ஹோட்டல்.  அது இல்லை யென்றால் இது இல்லை.

நல்ல வேளை அந்த காலம் கொஞ்சம் கொஞ்சமாக மாறி, மீண்டும் அநேகர் கிராமங்களை திரும்பி பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். இது சுபிக்ஷத்தின் அறிகுறி. ஆரம்பத்தில் பட்டணம் ஸ்வர்க பூமியாக காட்சியளித்தது. கை நிறைய காசு. வசதிகள், நாகரிக வாழ்க்கை, சொகுசு என்று கனவில் மிதந்து இங்கே நாளாக நாளாக நகரவே இடம் இல்லாமல், தண்ணீர் இல்லாமல், மின்சாரம் குறைந்து, வெட்டப்பட்டு, திருடும் கொலை கொள்ளையும் அதிகரித்து பயத்தில் வாழ்ந்து, ஒன்றுக்கு பத்தாக பணம் இறைத்து நகர வாழ்க்கை நரக வாழ்க்கையாகி விட்டது. நட்பு, பிரேமை, அன்பு எல்லாம் பறிபோனது. மனிதாபிமானம் ஏட்டுக்குள் அடங்கி விட்டது. இப்போது கெட்டுப்  போனபின் சூரிய நமஸ்காரம் செய்ய தோன்றி இருக்கிறது.

' காசு கொடுத்து இந்த ஜென்மத்தில் இனிமேல் கத்திரிக்காய் கொத்தமல்லி கூட வாங்கமாட்டேன். குழாய் தண்ணீருக்கு சண்டைபோடமாட்டேன்.  தோட்டத்தில்  எல்லா  காய் கறிகளும் விளையும்.  குளத்தில் நீஞ்சுவேன்''

'' சாரி, நாம் ரொம்ப லேட். கிராமங்களும் கெட்டுப்  போக ஆரம்பித்துவிட்டன. நமது தவறான முடிவால் அவசர வாழ்க்கை முறை அங்கும் பரவிவிட்டது.... போகட்டும்.... இருந்தாலும் மீண்டும் அவற்றை புனருத்தாரணம் செய்வோம். ஒவ்வொருவரும் அவரவர் பிறந்த , அவர்கள் பெற்றோர்கள் முன்னோர்கள் வாழ்ந்த ஊர்களை நாடுவோம், திரும்ப அவற்றை பரிமளிக்க உதவுவோம். கோவில்கள் குளங்கள்  எல்லாம்  காணாமல் போகிறது.  மீட்போம்.

கிராமங்கள் என்றால் பொழுதே போகாது என்பார்கள். ரொம்ப தவறு. பொழுது போய்விடுகிறதே என்று ஏங்கும் அளவுக்கு இயற்கை அங்கே   கொழிக்கிறது  அங்கே. இப்பவே இப்படியென்றால் 5-6000 ஆண்டுகளுக்கு முன்பு
ஆயர்பாடி கிராமம் எவ்வளவு  தேவ லோகமாக இருந்திருக்க வேண்டும். குறிப்பாக தெய்வமே கிருஷ்ணனாக  அங்கே வாழ்ந்தபோது!

அதற்குள் மார்கழி 13வது நாள் நகர்ந்து மார்கழி 14வதுக்கு வழி விட்டுவிட்டதே .

ஆண்டாள் ஒரு இயந்திரம் மாதிரி. சொல்லி வைத்தாற்போல் அதிகாலையில் எழுந்து மற்றவர்களையும் எழுப்ப வந்துவிட்டாள். அவள் தோழியர்கள் அனைவரும் ஏறக்குறைய வந்தாகி விட்டதே. ஒரு சிலரைத் தவிர. ஆண்டாள் தேடுகிறாள் யார் இன்னும் வரவில்லை என்று.?

''ஆண்டாள்,  இதைப் பார்த்தாயா, இந்த கோமளா வீட்டு புழக்கடையில் இதோ தெரிகிறது பார் இந்த அல்லிக் குளத்தில் நேற்று ராத்திரி பூத்த ஆம்பல் தூக்கம் வந்து மெதுவாக கூம்பிவிட்டது. பக்கத்தில் இருக்கும் அல்லி எல்லாமே ஜோராக மொட்டவிழ்ந்து மெதுவாக மலர்கிறதே. "

ஆண்டாள் தலை அசைத்தபடியே கோமளா வீட்டு வாசலில் வந்து கதவைத் தட்டி எழுப்புகிறாள்.

''அடியே, கோமளா, உன் வீட்டு பின்புறம் குளத்துக்கு அப்பால் இருக்கும் பெருமாள் கோவிலுக்கு சில துறவிகள் யோகிகள்  செல்வதை வெளியே வந்து பாரடி பெண்ணே!    வெள்ளையாக தாடி, மீசை, பல், உடலில் செங்கல் நிற காவி உடை, கையில் வெள்ளை சங்கு.    அதன் ஓசை மூலம்   பெருமாளை  துயில் எழுப்ப,   பெருமாள் முன் நின்று பரவசத்தோடு  அவர்கள்  வெண் சங்கை ஊதி சுப்ரபாத சேவை பண்ணப் போகிறார்கள். ''வா, அவர்களை பார்த்துக் கொண்டே நாம் நதிக்கு சென்று நீராடி, வழக்கமாக செய்யும் நோன்பு பிரார்த்தனைகள் முடித்து பிறகு நாமும் பெருமாள் கோவிலுக்கு செல்வோம்''

ஆண்டாள் குரல் கோமளாவுக்கு உள்ளே கேட்டதோ இல்லையோ, தென்கோடியில் வில்லி புத்தூரில் விஷ்ணு சித்தருக்கு ஸ்பஷ்டமாக கணீரென்று கேட்டது. நேற்றைய குளிர் இன்று இன்னும் அதிகமாகிவிட்டது.     எனினும் அதி காலையில் எழுந்து ஸ்நானம் முடிந்து  நித்ய  பூஜைக்கு ஆயத்தம் செய்து  கொண்டிருந்தார். கோதை அன்றைய பாசுரத்தை எழுதி தயாராக வைத்திருந்ததால் அதையும் ஆவலாக ரசித்து படித்தாகி விட்டது. அவரது மனம் அந்த ரசானுபவத்தில் தான் ஆயர்பாடி ஆண்டாளை நினைவில் கொண்டு நிறுத்தியது.

மார்கழி மாதத்தில் 29- 30 நாளுக்கு பதிலாக முன்னூறு நாளாக இருக்கக்கூடாதா என்ற எண்ணம் அவருக்கு தோன்றியது. ஒருவேளை அப்படி இருந்தால் நமக்கு தினமும் ஆண்டாளின் பாசுரங்கள் கிடைத்துக்கொண்டே இருக்குமே என்ற பேராசை!

மீண்டும் ஓலைச்சுவடியை எடுத்து கோதையின் வார்த்தைக் கோர்வை அழகைப் படித்தார்.

'' உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுனீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்
செங்கற் பொடிக் கூரை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதன்றார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்.

மேலெழுந்தவாரியாக இதில் வர்ணனை என்று வார்த்தைகள்  தென்பட்டாலும் வார்த்தைகளின் உள்ளர்த்தம் அவரைக் கவர்ந்தது. ஞானத்திலும் கண்ணன் மீதுள்ள பற்றிலும் கோதை சிறு பெண்ணல்ல. பழுத்த கிழவி. அவளது திருப் பாவை ஒரு உபநிஷதம்,   கோதை எழுதியது   கோதோ பநிஷதம் . என்ன ஞானம் அவளுக்கு! நாக்கு உணவை ருசிக்க மட்டுமல்ல. சாக்ஷாத் கிருஷ்ணனின்  பெருமையைப் பாடுவதற்காகவே .

'வா, வந்து க்ரிஷ்ணனைத் துதி செய்' என்று அந்த தூங்கும் பெண்ணையா எழுப்புகிறாள்.? அல்ல, அஞ்ஞானத்தில் உழலும் மாந்தர்களே,   நீவிர் உய்வீர்களாக என்று உலகத்துக்கே ஒரு வரியில் வழி காட்டுகிறாளே !

''அப்பா''
கோதை அழைக்கும் குரல் கேட்டு சிந்தனை தடைப்பட்டு ஆஸ்ரமத்தின் உள்ளே சென்றார் விஷ்ணு சித்தர்.  மீண்டும்  மார்கழி 15ம் நாள் தான் அவரை சந்திக்கமுடியும். ATTACHED IS THE  PHOTO OF  PARTHASARATHI TEMPLE TRIPLICANE  TAKEN IN 1851

 

 

UDIPI KRISHNA

 நாமக்கட்டி  கிருஷ்ணன்    ---     நங்கநல்லூர்  J K   SIVAN  


ஹிந்து சனாதன தர்மத்தை   தங்கி நிற்கும்  பலமான   மூன்று  தூண்கள்   அத்வைதம், த்வைதம், விசிஷ்டாத்வைதம்.   அப்படி  என்றால் என்ன?    என்னைப்போன்ற அஞ்ஞானிகள் புரிந்து கொள்ள ஒரு உதாரணம் சொல்கிறேன

ராமையா  வெளியூருக்கு  புளியோதரை   மூட்டை கட்டி  சுமந்துகொண்டு  பிரயாணம்  நடக்கிறான்.   புளியோதரை வேறு.   ராமையா   வேறு. ரெண்டும்   வெவ்வேறு  வஸ்துக்கள் .   இது தான்  சார்  த்வைதம்.  ராமையாவையும்  புளியோதரை டப்பாவையும்   ஜீவாத்மா பரமாத்மா என்று வேறு வேறாக  புரிந்துகொள்ளுங்கள்.

ராமையா தலையில் புளியோதரை மூட்டை யோடு  நடந்து போகிறான்.   வெகுநேரம் நடந்தாகி விட்டது. ;இப்போது  சூர்யன் உச்சிக்கு போய்விட்டான்.   ராமையாவும்   பசி  கபகபவென்று  வயிற்றை கிள்ளுகிறது.  ராமையா   ஒரு மரத்தடியில் உட்கார்ந்து  புளியோதரை பொட்டலத்தை பிரித்து புளியோதரையை முழுதும் விழுங்கிவிட்டான். டப்பா காலி.   இப்போது  புளியோதரை  ராமையாவின் வயிற்றுக்குள்  இருக்கிறது.  புளியோதரையும்  ராமையாவும் ஒன்று.   வேறு வேறல்ல.   ரெண்டல்ல .   எல்லாம் ஒன்றே.  இது அத்வைதம்.  இப்படித்தான் நமக்குள் இருக்கும் ஜீவாத்மாவும் பரமாத்மாவும்  பிரிக்கமுடியாத  ஒன்று.   இரண்டும்  
 வேறு வேறாக காணப்பட்டாலும்   எல்லாம்   ஒன்றே.

இப்போது  ராமையாவின்   வயிற்றில்  உட்கார்ந்திருக்கும் புளியோதரை இன்னும் ஜீரணமாகவில்லை.  இன்னும் முழுதுமாக  ஜீரணம் ஆகி   கரைந்து அவன் ரத்தத்தோடு கலந்து மறையவில்லை.  சற்று நேரமாகியபின்னர்  அவனோடு கலந்து விடுகிறது.  இது விசிஷ்டாத்வைதம்.     ஜீவாத்மா பரமாத்மா ரெண்டும் ஒன்றாக காணப்பட்டாலும்   ஜீவாத்மா பரமாத்மாவை  சரணாகதி அடைந்த பின் சேர்கிறது.

இதற்கு மேல் விவரமாக உள்ளே சென்றால் என்னை புளியோதரை ஆக்கி விடுவீர்கள் என்பதால் இது புரிந்தால் போதும்.

மேலே சொன்ன மூன்றில்   த்வைத சித்தாந்தத்தை பரப்பியவர்  மத்வாச்சாரியார் (1238-1317).  அவர் உடுப்பியில் ஒரு அற்புதமான கிருஷ்ணன் கோவிலை உண்டாக்கியது  மேற்கே  அரபிக்கடல் ஓரத்தில்  இன்றைய கர்நாடகாவில் இன்றும்  நாம்   சென்று தரிசிக்கும்   உடுப்பி  ஸ்ரீ  க்ஷேத்ரம்,   ஸ்ரீ கிருஷ்ண மடம்  என்றும் அதற்கு பெயர் உண்டு.    கோடிக்கணக்கான  பக்தர்கள் சென்று உடுப்பியில் கிருஷ்ணனை தரிசனம் செய்கிறார்கள்    

உடுப்பி   என்ற  பெயர்  வர  ஆதாரம்    கன்னடத்தில்   உடு + பா  எனும்   வார்த்தைகள்.   ''உடு''  என்றால் நக்ஷத்ரம்  ''பா''  என்றால் அணிபவன்,  தலைவன்.    சிவன் தான் சந்திரசேகரன், சந்திரமௌளி.   மத் வாச்சாரியார் காலத்துக்கு முன்பே   இந்த பெயர் இருந்தது.  இன்று வரை   மாறுதல் இல்லை.    சிவன் பெயர் இருந்தாலும்  உடுப்பி என்றால்  கிருஷ்ணன்  இருக்கும்  க்ஷேத்ரம்  என்று   உலகம் முழுக்க  பிரபலமாகிவிட்டது. .   உடுப்பியை  வைகுண்டம்  என்பார்கள். கிருஷ்ணன் மத்வாச்சாரியார் வேண்டுகோளுக்கிணங்கி  தானே  அவரை அடைந்து  தங்கிய க்ஷேத்ரம்.
உடுப்பி  மங்களூரிலிருந்து 60 கி.மீ.    கர்நாடகாவில்  ஒரு முக்கிய  யாத்திரை ஸ்தலம்.   ரெண்டு மூன்று  முறை  தரிசித்த  பாக்யம் எனக்கு உண்டு.  உடுப்பி கிருஷ்ணனை பற்றி நிறைய  பதிவுகள் இட்டிருக்கிறேன். 

உடுப்பி  கிருஷ்ணன்  ஆலயத்தில்  மூல ஸ்தானத்தின்  வலது பக்கம்  ப்ரதக்ஷிணம் வரும் இடத்தில்  மத்வாச் சாரியார் சிலை உள்ளது.  வடக்குப்  பக்கம் பாண்டுரங்கன் விக்ரஹம்.  

அதெல்லாம்  இருக்கட்டும். உடுப்பியில்   ஸ்ரீ கிருஷ்ணன்  எப்படி  மத்வாச்சாரியாரை தானே  தேடி வந்து அடைந்து தங்கி கோவில் கொண்டான் என்பது தெரிய வேண்டாமா?

மத்வ  விஜயம் என்கிற  மத்வாச்சாரியார்  வாழ்க்கை வரலாறு  புத்தகம் ஒரு கதை சொல்கிறது.  அதன் சாராம்சம்:
 
உடுப்பியில்  நிற்கும்  பால கிருஷ்ணன் எப்படி அரபிக்கடலில் பிரயாணம் செய்து  இந்தியாவின் வடமேற்கில் உள்ள துவாரகாவிலிருந்து   தெற்கு மார்க்கமாக உடுப்பிக்கு  வந்தான்? ஒரு சுவாரஸ்யமான சம்பவம் இதன் பின்னால் இருக்கிறது.

ஐந்தாயிரம் வருஷங்களுக்கு முன்பு,  ஒரு முறை பால கிருஷ்ணன் நாம்  நெற்றியில் இட்டுக்கொள்ளும்   கோபி சந்தனம் செய்ய  உதவும்   களிமண் கட்டிக்குள்  விக்ரஹமாக  ஒளிந்து மறைந்து  இருந்தது  நம் யாருக்காவது தெரியுமா?

இந்த கோபிசந்தனம் செய்யும் களிமண் கட்டியை  துவாரகையில்  ஒரு  கப்பல் சொந்தக்காரன்  வாங்கி  தனது மரக் கப்பலில்  அதை பின்  பாரமாக  ஏற்றி  வைத்து  அந்த  வியாபாரக்  கப்பல் கடலில்  தெற்கு நோக்கி  ஒருநாள்  மிதந்தது.  

குதிரை, மாட்டு வண்டிகளில்   பிரயாணம் செய்தவர்களுக்கு   பின்  பாரம் என்று  சொன்னால்  தெரியும்.  வண்டியில்  ரெட்டை நாடி   குண்டு  ஆசாமியை  வண்டியில்  பின்னால்   உட்காரவைத்து,  
காலைத் தொங்கப்  போட்டுக் 
கொண்டு கம்பியை வயிற்றுக்கு குறுக்காக  பாதுகாப்பாக  செருகி விட்டு  பிடித்துக் கொண்டு பிரயாணம்  தொடரும். 
அவர், அவர்கள் தான் பின் பாரம்,   அவர்கள் எடையால் தான் வண்டியின் முன்பக்கம் சற்று  மேல் நோக்கி  மாடோ, குதிரையோ வண்டியை  இழுக்க சௌகர்யமாக இருக்கும்.  அதே போல்  கடலில் கப்பல் மிதக்கும்போது  கப்பலின் பின் பக்கம் ஒரு குறிப்பிட்ட அளவு நீரில் அமிழ  வேண்டும். முன்பக்கம்  சற்று உயர்ந்து  நீர்மேல்  மிதக்கும். அப்போது தான்   எதிர்நோக்கி செல்லும்போது  கப்பல் காற்றினால் தூக்கி எறியப்படாமல் அலைகளை எதிர்கொண்டு மிதக்கும். ரொம்ப அமிழ்ந்தால்  முழுகிவிடும்.  கப்பல் விஷயத்தில் இந்த பின்பாரத்தை  ஆங்கிலத்தில்  BALLAST என்று சொல்வோம். இப்போது களிமண் கட்டி எல்லாம் இல்லை.  கடல்  நீரை கப்பல்  அடிபாகத்தில் TANK  என்று தொட்டிகளில்  நிரப்பி எடையை   வேண்டிய அளவு சமன்  செய்வது  தான் STABILITY.

மேலே சொன்னேனே  அந்த  களிமண் கட்டி வைத்த  மரக்  கப்பல்  அரபிக்கடலில்  துவாரகையிலிருந்து   தெற்கு நோக்கி  சென்றது.   உடுப்பி அருகே   கப்பல் புயலில் சிக்கியது.  மாலுமியால்  புயலைச் சமாளிக்க முடியவில்லை.   கப்பல் கரையை நோக்கி புயல் காற்றில்  வீசப்பட்டு  கடற்கரை மண்ணில்  தரை தட்டியது.  

தரை  தட்டிய கப்பலை   கப்பலில் இருந்த அனைவரும்  கரையில் இறங்கி மீண்டும்   இழுத்து கடலில் தள்ளி மிதக்க வைக்க பிரயாசை பட்டுக்  கொண்டிருந்ததை  அந்த பக்கமாக தனது  சிஷ்யர்களோடு   சமுத்திர ஸ்னானத்துக்கு வந்த மத்வாச்சாரியார் பார்த்துவிட்டார்.  அன்று தான் ''துவாதச ஸ்தோத்ரம்''   எனும் 12 ஸ்லோகங்களை  கிருஷ்ணன் மேல்  புகழ் மாலையாக  இயற்றிக்  கொண்டிருந்தார். முதல் ஐந்து ஸ்தோத்ரம்   பாடி முடித்திருந்தார்.  கிருஷ்ணனை  புகழ்ந்து பாடப்பட்ட  அந்த  அற்புதமான  12   துவாதச  ஸ்லோகங்கள்  கொண்ட   ஸ்தோத்ரத்தை   ஒருநாள்  விளக்குகிறேன்.

தரை தட்டிய  மரக்கப்பலை  மீண்டும் கடலுக்குள் தள்ளி மிதக்க வைக்க  மாலுமிகள் கூட்டமாக  வெகுநேரமாக   பிரயாசைப் பட்டு தள்ளிக்கொண்டிருந் தார்கள் அல்லவா ?   அதைப் பார்த்த  மத்வாச்சாரியார்  அவர்கள்  அருகே  வந்து  தனது  மேல் அங்கவஸ்திரத்தை   உயரே தூக்கி   அதை கடல் பக்கமாக   காற்றில் அசைத்தார் .

என்ன ஆச்சர்யம்  அவர் அசைத்த  அங்கவஸ்திரம் அங்கே வீசிக்கொண்டிருந்த  பலத்த  காற்றை  அவர்களுக்கு   சாதகமாக  மாற்றி  கப்பல் மெதுவாக தரையிலிருந்து கடலுக்குள்  நகர்ந்தது.  மீண்டும் நீரில் மிதந்தது.   கப்பல் சொந்தக்காரன்  மாலுமிக்கு  ஆச்சர்யம்.   பரம சந்தோஷமும் கூட.     தனது கப்பலை காப்பாற்றி மீண்டும்  கடலில் செலுத்தியதற்கு மத்வாச்சார்யரை  வணங்கி  நன்றி சொன்னான்.  

''சாமி,  உங்களுக்கு கோடி நன்றி . நீங்க செய்த  இந்த  உதவிக்கு   கப்பல்லே இருக்கிற   சரக்குலே  எதை வேண்டுமானாலும்   கேளுங்க.  தரேன்''

''கப்பல் பின்னாலே  அதோ வச்சிருக்கியே  கோபி சந்தன மண் கட்டி. அதைக்  கொடுப்பியா?. அது தான் வேணும். கோபி சந்தனம் செய்து பக்தர்கள்  எல்லோருக்கும் கொடுக்கலாம்''

''சாமி கப்பல்  ஜாக்கிரதையா மிதக்க  அது பின் பாரம் ஆச்சே  சாமி.  அதான் யோசிக்கிறேன்.''

''நீ  ஒண்ணும்  யோசிக்க வேண்டாம்,  அந்த கலிமண் கட்டிக்கு  சரிசமமான எடையா   இதோ  பார்  இங்கே  நிறைய  பாறாங்கல்கள்    கிடக்கு பாரு.   அதோ இருக்கிற  உருண்டை பாறை  சரியான  எடையா இருக்கும். களிமண் கட்டியை கொடுத்துட்டு அதை எடுத்துக் கொண்டு போ''.

மத்வாச்சார்யரும் அவருடைய  முப்பது   சீடர்களுமாக அந்த  பெரிய  கோபிசந்தன களிமண் கட்டியை தூக்கிக்  கொண்டு திரும்பினார்கள்.   கடற்கரையை  தாண்டி  உடுப்பிக்குள் நுழையும்  வழியில்  களிமண் கட்டி  ரெண்டாக உடைந்தது.  அதன்  உள்ளே இருந்த  அற்புத வடிவம் கொண்ட அழகான  ஒரு  பால கிருஷ்ணன் கீழே  மண்ணில் விழுந்தான். அவனுக்கு மண் பிடிக்குமே.   அதற்குள்  அவர்கள்  கடற்கரையிலி ருந்து  நாலு மைல்  தூரம்  வந்தாகி  விட்டது.  சிஷ்யர்களால்  அவனை  தரை  யிலிலிருந்து  தூக்க முடிய வில்லை.  

''ஹா,   என்  பரமானந்த  தெய்வமே என்று  ஆசையாக  மத்வாச்சாரியார்  பாலகிருஷ்ணனை பார்த்து  பெற்ற தாய்ப்பாசத்தோடு  அவனை அணைத்ததும்  எளிதில் அசைந்தான் கிருஷ்ணன். அவரால் குழந்தையை ப்போல் அவனைத்  தூக்க முடிந்தது.   அவனைத்  தூக்கியபடியே  மீதி ஏழு ஸ்லோகங்கள் கடகடவென்று  அவரால் இயற்ற முடிந்தது.   உரக்க  பாடிக்கொண்டே, ஆடிக் கொண்டே  நடந்தார்.  

பால  கிருஷ்ணனைத்  தூக்கிக்கொண்டு போய்    உடுப்பியில்  மாத்வ ஸரோவர்  எனும் குளத்தில்  ஸ்னானம் செய்வித்தார்.  அதன் கரையிலேயே  ஒரு  ஸ்ரீ கிருஷ்ணமடம்  நிர்மாணித்து  அவனை அதில் ஸ்தாபனம் செய்தார். பால கிருஷ்ணனுக்கு   எப்படி பூஜை வழிபாடுகள் செய்யவேண்டும் என்று  வழிமுறை  வகுத்தார்.  உடுப்பியில் இருக்கும்போதெல்லாம்  தானே  நித்ய பூஜைகள் செய்வார்.       மத்வாச்சார்யார் ஏற்படுத்திய ஆலய பராமரிப்பு தான்  பர்யாயம் என்ற வழிபாட்டு முறை.   இதற்கு  எட்டு மாத்வ   மடங்கள் பொறுப்பேற்பவை.   அவற்றின் பெயர்கள்:   

புட்டிகே, 
ஷிருர் , 
பெஜவார், 
பாலிமார் ,
சோதே , 
கணியூரு, 
அதமார், 
க்ரிஷ்ணபுரா,   
அஷ்டமடம் 

மேலே சொன்ன மடங்கள் ஒவ்வொன்றிலிருந்தும் ஒரு  ஸ்வாமிஜி ரெண்டு   மாதத்திற் கொருமுறை  மாறி மாறி  பூஜை வழிபாடுகள் செய்து ஆலயத்தை பராமரிப்பவர்கள்.  பின்னர்  வந்தவர்கள்   ரெண்டு   மாதம் என்பது மிகவும் குறைவான காலம் என்பதால்  அதை ஒவ்வொரு  மடத்துக்கும் ரெண்டு வருஷ காலமாக்கினார்கள்.    

இதில் நீங்கள் ஒரு முக்கியமானகேள்வியை இன்னும்   கேட்கவில்லையே?

கிருஷ்ணன் எப்படி த்வாரகையில் நாமக்கட்டி க்குள் அடைந்தான்?   இதை  ''ப்ரமேய நவமாலிகா டிகா''  எனும் 17ம் நூற்றாண்டு  ரகுவாரிய தீர்த்தரின் நூல் சொல்கிறது.

அன்னை தேவகி பிற்காலத்தில்  ''அடே  கிருஷ்ணா, பிருந்தாவனத்தில்  உன்  பால்ய  சுட்டித்தனத்தை எல்லோரும் கண்டு வியந்தார்கள்.   ஆனால்  உனைப் பெற்ற   தாய் நான் காணவில்லையே கண்ணா,  எனக்கும் காண  ஆசையாக இருக்காதா?  ' என்று வருந்துகிறாள்.  

'சரி  அம்மா, முதலில் உன்  கண்ணை துடைத்துக்கொள், உனக்கு  நான் என் பால்ய லீலைகள்  சிலவற்றை  ரீ வைண்ட் செய்து காட்டுகிறேன் '' என்கிறான் கிருஷ்ணன்.    அடுத்த கணம்  ஒரு சிறு  குழந்தை  தேவகியின் மடியில் புரண்டு விளையாடியது.  அவள் தயிர் கடைய சென்றபோது பின்னாலேயே புடவையை பிடித்துக்கொண்டு நடந்து அவள் மத்தை பிடுங்கியது.  தயிர் சட்டியில் கையை விட்டு அளாவி நிறைய வெண்ணையை எடுத்து மேலே பூசிக்கொண்டது. அவள் மேலும்  பூசியது. வாயெல்லாம் வெண்ணை.  மத்து கடையும் கயிற்றை எடுத்து ஒளித்து வைக்கிறான். பின்னர் கயிற்றை  கையில் வைத்துக்கொண்டது.

கணநேரத்தில் குழந்தை மறைந்து அங்கே  துவாரகை கிருஷ்ணனாக கம்பீரமாக நிற்கிறான்.  இதெல்லாம் பார்த்துக்  கொண்டிருந்த ருக்மணிக்கு  கிருஷ்ணன்  பால்ய வயது சிறு குழந்தையாகி மத்து, கயிறோடு நின்றது மனதில்  பதிந்துவிட்டது.  இதை என்றும்  காணவேண்டும் என்று  தோன்றியது.  உடனே அதைப் போல  ஒரு பொம்மை செய்தாள்.  தான் படைத்த அந்த  பதுமையை  ருக்மணி விடாது பூஜை செய்தாள்.

பின்னர்  அந்த விக்ரஹம்  அர்ஜுனனை அடைகிறது.  கிருஷ்ணன் பூலோகத்தை விட்டு மறைந்ததும்  துவாரகையை விட்டு எல்லோரும்  வெளியேறியபோது அருகே   ஒரு இடத்தில்  ருக்மிணிவனம்   எனும்   ஸ்தலத்தில் அர்ஜுனன்  பால கிருஷ்ணன்  விக்ரஹத்தை பிரதிஷ்டை செய்கிறான். 

பல நூறு ஆண்டுகளில்  அதை சுற்றி இருந்த களிமண் மேட்டில்  அந்த விக்ரஹம் புதையுண்டு மறைகிறது. ஒரு பெரிய மண் கட்டியாகிறது.   இந்த மண் கட்டி யாரோ ஒரு துவாரகை வியாபாரி கண்ணில் பட்டு அதை அவன் ஒரு கப்பல் காரனுக்கு விற்கிறான்.  

இனிமேல்  புறம் மேலே  12வது பாராவில்  ''ஐந்தாயிரம் வருஷம்..... என்று  துவங்குவதிலிருந்து  மீண்டும்  படித்தால் உடுப்பி  கிருஷ்ணன் நன்றாக புரிவான். தெரிவான்...

பாலகிருஷ்ணனை  மதவாச்சாரியார் கிழக்கு நோக்கி பார்த்தவாறு பிரதிஷ்டை செய்தாலும்  இன்று வரை மேற்கு நோக்கி தான் நமக்கு உடுப்பியில் தரிசனம் தருகிறானே  எப்படி என்பதை விளக்க  இன்னொரு அற்புதமான  பதிவு  ஏற்கனவே  பதிவிட்டிருந்தாலும் மீண்டும் நாளை சொல்கிறேன். 


GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...