திடீர் விருந்தாளி - ஒரு பழ(ங்)கதை J.K. SIVAN
இப்போது உள்ளபடி அப்போது விமான பயணம் கிடையாது. துவாரகையிலிருந்து ஹஸ்தினாபுரத்துக்கு கிருஷ்ணன் பயணம் செய்கிறான். அங்கங்கே ரத்தத்திலிருந்து குதிரைகளை கழற்றிவிட்டு, ஓய்விடுக்க வைத்து, ஆகாரதிகள் கொடுத்து பயணம் துவங்குவார்கள். தாருகன் தேரோட்டி. அவனுக்கு தெரியும் எங்கே தங்கினால் குதிரைகள் குளித்து இளைப்பாறும். கிருஷ்ணன் எங்கே ஓய்வெடுப்பான். எப்போதுஅவனுக்கு ஆகாரம் தரவேண்டும்...... எல்லாம் தெரியும்.
மூன்று நாள் பயணம் செய்த களைப்போடு, சூரியன் கொஞ்சம் கொஞ்சமாக மேற்கே மறைய முயற்சிக்கும் நேரத்தில் தான் கிருஷ்ணனின் ரதம் ஹஸ்தினாபுரத்திற்குள் நுழைந்து விட்டது.
“”தாருகா, ரதத்தை மெதுவாக செலுத்து”
அமைதியான அந்த நகரத்தை முழுதும் ரசித்து பார்த்தபோது பழைய, பழகிய இடங்கள், மக்களின் களிப்பு எல்லாம் அவனை கவர்ந்தது. இவற்றுக்கு தீங்கு நேரக்கூடாது என மனதில் தோன்றியது. ஆமாம் இவர்கள் யாரும் துன்பப்படக்கூடாது'' --- தனக்குள் சொல்லிக்கொண்டான் கிருஷ்ணன்.
துரியோதன மகாராஜாவின் அரண்மனையை நோக்கி ரதம் திரும்பியது.
\
“ நில். அரண்மனைக்கு எதிரில் இருந்த வீதியில் வளைந்து செல்லும் பாதைக்குள் செல்”
ரதம் திரும்பி அவ்வாறே சிறிது நேரம் ஓடியது. களைத்திருந்த குதிரை ரெண்டும் திரும்பி ரதத்தில் இருந்த கிருஷ்ணனின் முகத்தைப்பார்த்தன. புத்துணர்ச்சியும்மகிழ்ச்சியும் அவைகளுக்கு உண்டானதை சிரித்துக் கொண்டே பார்த்தான் கிருஷ்ணன்.
வளைந்து வளைந்து சென்ற குறுகிய மண் சாலையில் தொலை தூரத்தில் இருந்த ஒரு சிறிய பழைய பர்ணசாலை கண்ணில் பட்டது. அங்கே ஜன நடமாட்டம் அதிகம் கிடையாது. முதியவர் விதுரன் மட்டும் தான் அந்த பர்ணசாலையில் வாழ்ந்து வந்தார். அவர் வீட்டின் முன் ரதம் நின்றது.
அமைதியான சூழ்நிலையில் ஒரு தேர் வாசலில் வந்துநின்றால் குதிரைகள் கனைத்ததால், உள்ளேயிருந்து ஆச்சர்யத்துடன் யார் என்னைத்தேடி, அதுவும் இந்த நேரத்தில் இங்கு வருகிறார்கள் என்று பார்க்க வெளியே வந்த விதுரன் கிருஷ்ணன் தேரிலிருந்து தனியே இறங்கி வருவது கண்டார்.
“கிருஷ்ணா!!! என் கண்களை என்னால் நம்பமுடியவில்லையே??. நீயா? இங்கு இந்த ஏழையின் இல்லத்துக்கு வந்தவன்?”
“கிருஷ்ணன் என்பது உங்களுக்கு தெரிந்து நான் ஒருவன் தானே விதுர மாமா? வேறு யாராவது என் பெயரில் உங்களுக்குத் தெரிந்தவர்கள் இருக்கிறார்களா?””
“”கிருஷ்ணா, உன் வேடிக்கை பேச்சைக் கேட்டு எத்தனை காலம் ஆகிவிட்டது?? ---. கிருஷ்ணா! நான் பாக்யவான். நீ ஹஸ்தினாபுரம் வரப் போகிறாய் என்று கேள்விப்பட்டேன். எனக்குள் உன்னை ஒருதரம் பார்க்க முடியுமா, பேசமுடியுமா என்று ஆவல் பொங்கியது. வாய்ப்பு ஒருவேளை கிட் டாதோ என்ற ஐயம் கூட இருந்தது.
“”பேசமுடியுமாவா?? பேசுவது மட்டும் இல்லை மாமா, இங்கு உங்களோடு தங்கவும் தான் வந்திருக்கிறேன். எனக்கு ஒரு இரவு தங்க இங்கே இடம் கொடுப்பீர்களா??”
“கிருஷ்ணா, என் மனத்திலேயே இடம் பிடித்த நீ என் குடிசையில் தங்க இடம் கேட்கவேண்டுமா "
“மாமா, அரண்மனை வாழ்வு எனக்கும் அலுத்து விட்டது. இங்கிருக்கும் சூழ்நிலையை பார்த்ததும் இங்கேயே உங்களோடு நிரந்தரமாக தங்கிவிடலாமோ என்றும் தோன்றுகிறது””
“ கிருஷ்ணா நீ செய்ய வேண்டியது நிறைய இருக்கிறதே. உனக்கேது ஒய்வு . நீ ஒய்வு எடுத்தால் உலகே ஓய்ந்து விடாதா??”
“மாமா, அதெல்லாம் சரி, பசியோடு வந்திருக்கிறேன். ஏதாவது பருகவும் உண்ணவும் தருவீர்களா.?. ஏதாவது சாப்பிடுகிறாயா, பருகுகிறாயா என்று கூட நீங்கள் கேட்கவில்லையே.''
“கண்ணா,உன்னைக் கண்டவுடன் எனக்கு உண்டான ஆனந்தத்தில் கையும் காலும் ஓடவில்லையப்பா, உபசரிக்க தெரியவில்லை, இன்று காலையிலிருந்து என்னுள் ஒரு அடையாளம் காண முடியாத சந்தோஷம். இனம் புரியாத மகிழ்ச்சி. சில பழங்களைத் தோட்டத்தில் இருந்து பறித்து வைத்தேன். நீ வரப்போகிறாய் என்றோ, உனக்குத் தருவதற்கோ என்று கூட தெரியாமல் என்னை மீறி அவ்வாறு செய்யத்தூண்டியது உன் கருணை தான் கிருஷ்ணா. உனக்குத் தருவதற்கென்றே சில பழங்கள் வைத்திருக்கிறேன்” வா கிருஷ்ணா வா இந்தா ஜலம் தருகிறேன். கைகால்கள் முகம் கழுவிக்கொண்டு அமர்வாய். நான் உனக்கு விசுறுகிறேன் அப்பா ''. கண்ணன் வரவால் விதுரர் மிகவும் பதட்டம் அடைந்திருந்தார். சற்றும் எதிர்பாராத அதிசய விஜயம் அல்லவா?.
விதுரர் பழங்களை எடுத்து பக்குவமாக அடுக்கி அவைகளின் தோல் நீக்கி எறிந்து விட்டு ஒரு தட்டில் கண்ணன் எதிரே வைத்தார். இருவரும் ராஜ்ய வியவகாரங்களையும் தர்ம ஞாயங்கள் பற்றியும் நேரம்போவது தெரியாமல் பேசினார்கள் . கடைசியில் கண்ணன் சொன்னான்":
“ மாமா, வெகு நாட்களுக்கு பிறகு இன்று தான் மிக்க மகிழ்ச்சியுடன் வயிறார உண்டேன்!!. ஹஸ்தினா புரத்திலிருந்து த்வாரகை திரும்பும் வரை எனக்கு பசியே இருக்காது போல் தோன்றுகிறது”.
“நான் என்ன உனக்கு விருந்தா வைத்தேன்?''. இந்த ஏழையின் குடிசையில் கொஞ்சம் பழங்கள் தான் இருந்தது” என்று சொல்லிக்கொண்டு விதுரர் கண்ணன் முன் இருந்த தட்டை பார்த்த போது பெரும் அதிர்ச்சி அடைந்தார். கைகால்கள் நடுங்கின. வியர்த்துக் கொட்டியது. பெருமூச்சு ஒன்று வெளிவந்தது. பழங்கள் தோல் உறிக்கப்பட்டு வீசியபடி வெளியே சிதறிக் கிடந்தன. பழங்களின் தோல்கள் மட்டும் தட்டில் நிரம்பியிருந்தது அவற்றில் சில மட்டும் தான் எஞ்சி தட்டில் காணப்பட்டன. மற்ற தோல்கள் எல்லாம்??? தன்னெதிரே தட்டில் வைக்கப்பட்டது வெறும் தோல் என்று உணர்ந்தும் அவற்றை கண்ணன் ஒன்று விடாமல் கிருஷ்ணன் உண்டிருக்கிறான்!!!!
“கிருஷ்ணா, நான் எத்தகைய மஹா பாவி, பசியோடு வந்த உனக்கு வெறும் பழங்களைக் கூட அளிக்க யோக்யதை அற்றவனானேனே !!!” நீயும் ஏன் கண்ணா வெறும் தோல் மட்டும் உண்டாய்? ஒரு வார்த்தை ஏன் சொல்ல வில்லை ?
"மாமா, எனக்கு என்னவோ ஒரு பழக்கம். யார் எதை அன்போடு கொடுத்தாலும் ஏற்றுக் கொள்வது. பழங்கள் போல் தோலும் எனக்கு இனித்தது மாமா. நீங்கள் கொடுத்த துளசி ஜலம் பூரண திருப்தியை அளித்தது. வேன்றோன்றும் எனக்கு வேண்டாம் "
பாரதப் போர் ஆரம்பத்தில் இதையே கண்ணன் அர்ஜுனனுக்கும், ஏன் அவன் மூலம் நமக்கும் பகவத் கீதையில் சொன்னானே !!!
पत्रं पुष्पं फलं तोयं यो मे भक्त्या प्रयच्छति |
तदहं भक्त्युपहृतमश्नामि प्रयतात्मन: || 9.26||
patraṁ puṣhpaṁ phalaṁ toyaṁ yo me bhaktyā prayachchhati
tadahaṁ bhaktyupahṛitam aśhnāmi prayatātmanaḥ
மனத்தூய்மையோடு, உள்ளன்போடு, என் மேல் பக்தியோடு, எனக்கு ஒரு சிறு இலை , பூ, கனி, கொஞ்சம் நீர் எதை அளித்தாலும் நான் மன நிறைவோடு அதை ஏற்றுக்கொள்வேன்.
No comments:
Post a Comment