பேசும் தெய்வம் J K SIVAN
உங்களாலே தான் முடியும்
மஹா பெரியவா என்ற உடனே மனதில் தோன்றும் பெயர் ரா கணபதி. இவரைத் தவிர பெரியவா பற்றிய விஷயங்களைத் தேடி தேனாக அளிக்கும் சில பெயர்கள் நமக்கு அறிமுகமானவை. உடனே நினைவுக்கு வரும் ஒரு சில பெயர்கள் தட்டச்சு வரகூர் நாராயணன், கணேச சர்மா, ரமணி அண்ணா மணியன், பரணீதரன்.......இன்னும் சில முக்கியஸ்தர்கள். எங்காவது ஏதாவது கண்ணில் பட்டுக்கொண்டே இருக்கும் அளவுக்கு ஏராளமான பெரியவா அதிசயங்கள்.
இன்று ஒன்று சொல்கிறேன்.
திருவிசநல்லூர்தெரியுமல்லவா? அங்கே ஸ்ரீதர ஐயாவாள் கிரஹத்தில் (இப்போது மடம்) கார்த்திகை அமாவாசை அன்று கிணற்றில் கங்கா பிரவாஹம் வருஷா வருஷம் அதிசய மாக பெருகும்... இது பற்றி எழுதி இருக்கிறேனே. அந்த ஊர்.
திருவிசலூர் என்கிற திருவிசநல்லூரில் மகா பெரியவா தங்கி இருந்தபோது ஒருநாள் ஒரு பக்தை வந்தாள். அந்த அம்மாள் இரண்டு கண்ணிலும் பார்வையற்ற ஸ்ரீவித்யா உபாசகி. பெரியவா அங்கிருப்பது கேள்விப்பட்டு எப்படியோ வந்து சேர்ந்தார்.
''பெரியவாளை தரிசனம் பண்ண ரெண்டு கண்ணும் இல்லாத ஒரு அம்மா வந்திருக்கா'' பெரியவாளிடம் விஷயம் சொல்லப்பட்டது. பெரியவா தனக்கு கைங்கரியம் செய்து வந்த கண்ணனை அழைத்து,
''நீ போய் அந்த அம்மாளுக்கு சௌகரியமாக தங்க இடம் வசதி எல்லாம் ஏற்பாடு பண்ணிக் கொடு . இன்னொண்ணு . அவா ரொம்ப ஆச்சாரம் அனுஷ்டானம் பண்றவா. ஸ்ரீ வித்யா உபாசகி. அதனாலே நீயே சீக்கிரமா ஏதாவது சிற்றுண்டி ஆகாரம் பண்ணிக்கொடு. அப்படியே அவா கிட்டே சொல்லிடு. நானாக வே அவா இருக்கற இடத்துக்கு வந்து பாக்கறேன். கண் தெரியாமல் கஷ்டப் பட்டுண்டு என்னைத் தேடிண்டு இங்கே வர வேண்டாம்னும் சொல்லிடு'' கண்ணன் அவ்வாறே செய்தார்.
சுடச் சுட அரிசி உப்புமா கிண்டி அந்த அம்மாள் எதிரே வாழை இலையில் வைத்து விட்டு
'' பெரியவா கொடுத்து அனுப்பி இருக்கா . அம்மா சாப்பிடுங்கோ'' உபசரித்து பெரியவர் சொன்ன தகவலையும் சொன்னார்.
அதிசயமாக ஒன்று அங்கே அப்போது நிகழ்ந்தது. கண் தெரியாமலேயே எதிரே இருந்த உப்புமாவை தொட்டு நைவேத்தியம் செய்வது போல் சுற்றிவிட்டு அந்த அம்மாள் தன் மார்பிலே கையை வைத்தார். உடனே அவள் கையில் ஒரு ஸ்ரீசக்கரம் வந்து சேர்ந்தது .மறுபடியும் ஏதோ செய்தார். அது மறைந்து விட்டது.
அதைப் பார்த்த கண்ணனுக்கு ஆச்சர்யம். அந்த அம்மாள் பெரியவா தரிசனம் செய்யும்போது தானும் கூட இருப்பதென்று
முடிவு செய்தார்.
"இவர் இன்னும் என்ன மாய மந்திரங்கள் செய்யப் போகிறாரோ! இவருக்கு சுவாமிகளிடமிருந்து என்ன கிடைக்கப்
போகிறதோ?"
''பெரியவா நீங்க கட்டளையிட்டபடியே செஞ்சுட்டேன். அந்த அம்மா தரிசனத்துக்குக் காத்துக் கொண்டிருக்கா''
"ராத்திரி வரேன்னு சொல்லிவிடு"
கண்ணனுக்கு ராத்திரி எப்ப வரும் என்று ஆவல். ஒவ்வொரு வினாடியும் ஒரு யுகமாக நீண்டது. ராத்திரி வந்தது. அப்போதெல்லாம் மின்சார விளக்குகள் கிடையாது. அங்கொன்
றும் இங்கொன்றும் முணுக்முணுக் என்று எரியும் எண்ணெய் திரி தீபங்கள் தான். சிலது அதில் கை விளக்குகள். அது தந்த வெளிச்சத்தில் பெரியவா நடந்து வந்து அந்த அம்மாவின் எதிரில் அமருகிறார்.
"நான் வந்துட்டேன்!" என்று பெரியவா குரல் கேட்டதும் அந்த அம்மாளுக்கு பரம சந்தோஷம். குரல் வந்த திக்கில் நமஸ்கரித்து விட்டு உட்காருகிறாள்.
"எதற்கு வந்திருக்கேள் இந்த ஊருக்கு ?"
"பெரியவாளுக்கு தெரியாததையா நான் சொல்லப்போறேன். சுவாமி! எனக்கு இன்னும் ஸஹஸ்ராரத்தில் ஜோதி தரிசனம் கிடைக்கவில்லையே! எனக்கு அதுதான் வேணும். உங்க கிட்டே தான் அது கிடைக்கும் . அதற்காகத்தான் வந்தேன்!"
"என்ன நடக்கப் போகிறதோ?" -- கண்ணனுடன் நமக்கும் ஆவல். ஆனால் பரமாச்சார்யாளோ, நிதானமாக,
"அப்படியா! கொஞ்ச நேரம் தியானம் பண்ணுங்கோ'' .
கண்ணனை அருகே கூப்பிட்டார்.
''நான் ஜாடை காட்டுவேன்.அப்போது இங்கே இருக்கிற விளக்குகளை அணைச்சுடு"
''அடாடா, நாம காலையிலிருந்து இங்கே என்ன நடக்கப்போறது ன்னு பார்க்க காத்திருந்தோம். இவர் கும்மிருட்டா பண்ண வைக்கிறாரே''
கண்ணனுக்கு ஏமாற்றம். என்ன செய்வது?
பெரியவா ஜாடை காட்டியவுடன் அறையில் இருந்த மூன்று தீபங்களை அணைத்தார் . அடுத்த இரண்டாவது நிமிடம் அந்த அம்மாவிடமிருந்து பெரிய கூக்குரல் .
"நான் ஜோதி தரிசனம் பார்த்துட்டேன். கண்டுட்டேன் . "போதும்!போதும்! காமாட்சி! நிறுத்திவிடு! நிறுத்திவிடு! போதும் ''"என்று
அலறினாள்.
பெரியவா விளக்கையெல்லாம் மறுபடி ஏற்றச் சொல்லிவிட்டு விடுவிடுவென்று நடந்து மறைந்துவிட்டார். போகும் முன்பு கண்ணனி
டம்
"அந்த அம்மாவை ஜாக்கிரதையா ஊருக்கு
அனுப்பி விடு!"
அந்த அம்மாள் கிளம்புமுன், கண்ணன் அவரிடம், "என்னம்மா நடந்தது? ஏன் கத்தினீர்கள்? நீங்களாவது சொல்றேளா?" என்று கெஞ்சினார்.
''நான் கேட்ட ஜோதி தரிசனம் ஸஹஸ்ராரத்தில் கிடைத்துவிட்டது. அதை இரண்டு நிமிடத் துக்கு மேல் என்னால் பார்க்க முடியாததால் நிறுத்தச் சொல்லி அலறினேன்!" என்றார் அந்த அம்மா.
மஹா பெரியவாளின் சக்தியை செயல்களை சாதாரண மந்திரவாதிகளோடு, செப்பிடு வித்தைக்காரர்களோடு சேர்த்து எடை போடக்கூடாது. அவர் அஷ்ட மஹா சித்தி வாய்ந்த யுக புருஷன். நடமாடும் பேசும் தெய்வம். இல்லாவிட்டால் குண்டலினி சக்தியில் ஸஹஸ்ராரத்தில் உன்னதமான நிலையில் உச்சியில் ஒரு சாதகருக்கு ஜோதி தரிசனம் காணும்படிச் செய்ய முடியுமா?
எத்தனை பாடுபட்டாலும் பெற முடியாத ஒரு அனுபவத்தை ஒரு ரயிலில் வந்து பார்த்துவிட்டு, அடுத்த ரயிலில் ஊருக்குப்
புறப்படுகிறார் ஒரு கண் பார்வை இல்லாத பெண். பெரியவா அனுக்கிரகத்தால் பெற முடியாத ஒன்றை கேட்டிரு பெற்ற பாக்கியசாலி .
ஆஸ்திரேலியாவில் இருக்கும் ஒரு பல வருஷ நண்பர், நேரில் இன்னும் பார்க்காத ஒரு நண்பர் தான் பெற்ற இந்த விஷயத்தை எனக்கு தந்தி போல் பாவித்து அனுப்பிய விபரம் ஸ்ரீ எஸ்.கணேச சர்மா சொன்ன ஒரு விஷயமாம். .
No comments:
Post a Comment