Friday, June 26, 2020

THIRUK KOLOOR PEN PILLAI


திருக் கோளூர் பெண் பிள்ளை வார்த்தைகள்.


 


75. யான் சிறியேன் என்றேனோ திருமலை நம்பியைப் போலே

ஆளவந்தார்  எனும்  யமுனாச்சார்யாருக்கு  சிஷ்யர்கள் பலர்.   பிரதான சிஷ்யர்கள் ஐந்து பேர்.  அவர்களில் ஒருவர்  பெரிய  திருமலை நம்பிகள்.    திருப்பதி திருமலையில்  பிறந்து வளர்ந்தவர்.  இவருக்கு ஸ்ரீசைல பூர்ணர் என்ற பெயரும் உண்டு. 

இவருக்கு இன்னொரு மகத்தான பெருமை.  பெரிய  திருமலை நம்பிகள்  ஸ்ரீ  ராமானுஜரின் தாய்மாமன். இவரிடம், ஆளவந்தார், ராமானுஜருக்கு ராமாயணத்தை கற்றுக்கொடுக்கும் பொறுப்பினை நியமனம் செய்தார். ராமானுஜருக்கு இளையாழ்வார் எனும் இயற்பெயரை சூட்டிய பெரிய திருமலை நம்பி, திருவேங்கடத்தில் இருக்கும் ஸ்ரீவைஷ்ணவர்களில் முதன்மையானவராக கருதப்பட்டவர். 

 ஆளவந்தார்  தனது பிரதான  ஐந்து சிஷ்யர்களிடமும்  ஒவ்வொருவரும்  ஒவ்வொரு சாஸ்திரத்தின் விசேஷ அர்த்தத்தை  பிற்காலத்தில்  ராமானுஜருக்கு உபதேசிக்க வேண்டும் என்று ஆளவந்தார் கட்டளை இட்டிருந்தார்.  

பெரிய  திருமலை நம்பிக்கு   ''நீ  ஸ்ரீராமாயணத்தை கற்றுக்கொடு''  அதுவே  உயர்ந்த  வைணவ சம்பிரதாய சரணாகதி சாஸ்திரம் ஆகும்.   

இப்படிப்பட்ட  பெரிய திருமலை நம்பிக்கு சகோதரி ஸ்ரீ பெரும்புதூரில்  வசித்தாள்.  அவளுக்கு  குழந்தை பிறந்திருக்கிறது என்ற சேதி வந்தது தாய்  மாமனாகிய  நம்பிகள் ஸ்ரீ பெரும்புதூர் சென்று  குழந்தையை பார்க்கிறார். 

''என்ன  ஆச்சர்யம் இது,   இக் குழந்தையின் முகத்தை கண்டதுமே   பெருமாளுக்கு   மகத்தான தொண்டு செய்யப்போகிறவன் இவன் ''  என்று  பட்டது. பெருமாளுக்கு எப்போதும் தொண்டு செய்யும்  ஆதிசேஷன்  அவர் ராமராக அவதரித்தபோது  தம்பி லக்ஷ்மணனாக வந்து   தொண்டு செய்தது  மனதில் படுகிறது.  இந்த குழந்தைக்கு   “ராமனுக்கு தம்பி '' ராமானுஜன் '' என்று பெயர் சூட்டினார். இவனை கூப்பிடுவது    “இளையாழ்வார் “ என்ற பெயரில்  இருக்கட்டும் '' என்கிறார் 

பெரிய திருமலை நம்பிகளுக்கு  ஆளவந்தாரின்  இன்னொரு கட்டளை:

 ''நீ  திருப்பதி திருமலையில் வாசம் செய்து கொண்டு  பெருமாளுக்கு   திருமலையிலே  தீர்த்த  கைங்கர்யம் பண்ணு ''  என்று ஆளவந்தார்.

ஒருநாள் தீர்த்தகுடத்தை எடுத்துக்கொண்டு கோனேரிக்கு சென்று அங்கே பெருமாளுக்கு தீர்த்தத்தை எடுத்துக்கொண்டு   தோளில்   குடத்தைச் சுமந்துகொண்டு,  சன்னிதிக்குச் செல்லும் வழியில் ஒரு வேடன் அவரை   நிறுத்துகிறான் .

“சுவாமி,   தாகத்தால்  தவிக்கிறேன். கொஞ்சம்  குடிக்க தண்ணீர் தாரும்”

 ''இல்லை அப்பனே, இது  மலைமேல் பெருமாளுக்கு  அர்பணிக்கவேண்டிய  தீர்த்தம்''  என்று தர மறுத்தார் 
வேடன் கையிலிருந்த  வில்லில் அம்பு தொடுத்து  குடத்தின் மீது எய்து குடத்தை அது துளைத்தது. நீர் வழிய ஆரம்பித்தது.   வழிந்த நீரை வேடன் குடித்து தாகம் தீர்ந்தான்.

இப்படி ஒரு   அபச்சாரம் நேர்ந்து விட்டதே.  எப்படி  மறுபடியும் நீர் கொண்டு மலை ஏறுவது என்று நம்பிகள் திகைக்க.   வேடன்  ''இதோ இப்படி போனால்  காட்டில் ஒரு இடத்தில் சுனை இருக்கிறது  அங்கே தீர்த்தம் கிடைக்கும்  வாருங்கள் ''  என்று  வேடன்  திருமலை நம்பியை அழைத்து செல்கிறான். தனக்குத் தெரிந்த ஓரிடத்திலே தீர்த்தம் இருப்பதாகச் சொல்லி அவரை அழைத்து வந்து ஓரிடத்தில் நிற்கிறான்.

''என்னப்பா  சுனை இருக்கிறது என்கிறாய். இங்கே ஒன்றையும் காணோமே?''

''சுவாமி  இப்போது பாருங்கள்   என்று  வேடன்  அவர் எதிரே ஒரு இடத்தில்  தனது அம்பினால்  கீறினான் 
''என்ன ஆச்சர்யம்  குபுகுபு வென்று தரையில்  அவன் கிழித்த இடத்திலிருந்து நீர்  ஊற்றாக பெருகியது.''  
பாத்திரத்திலும்  அம்பு துளைத்த இடம் பழையபடி  மூடி இருந்தது...  எதிரே ஆச்சர்யத்தோடு பார்த்த பொது வேடன் இல்லை,  ஒரு அசரீரி குரல் கேட்டது: 

''இனிமேல் இந்த  தீர்த்தத்தையே  நமக்கு நித்யம்  கொண்டு வந்து சமர்ப்பீர் ''

''ஆஹா   வேங்கடவன்  அல்லவோ வேடனாக வந்தவன்'' என்று திருமலைநம்பி தமக்கு கிடைத்த கிருபையை நினைத்து போற்றி வணங்குகிறார்.

வேடனாக வந்து வேங்கடவன் அடையாளம் காட்டியது தான் திருமலைமேல்  இன்றும்  இருக்கும் ஆகாச கங்கை. 

ஆகாச கங்கையிலிருந்து தான்  திருமலை நம்பி  வேங்கடேசனுக்கு  தீர்த்தம்  சமர்ப்பிக்கும்  நித்ய கைங்கர்யபரராக இருந்தார்.   இன்றைக்கும் தினமும்  வெங்கடேசனுக்காக ஆகாச கங்கையிலிருந்து (திருமலையில் உள்ள நீர் ஆதாரம்) தீர்த்தம் கொண்டு வரப்படுகிறது .  

ஒரு சமயம், ராமானுஜர்  திருமலைக்கு முதன் முறையாக வந்த போது, ராமானுஜரின் சீடர்கள் அவரை மலை மீது ஏறி..எம்பெருமானுக்கு மங்களாசாசனம் செய்ய வேண்டினர்.தவிர,  அனந்தாழ்வாரின் நந்தவனத்தையும் பார்க்க வேண்டினர்

''ஸ்வாமிகள்,  இந்த  திருமலை என்பது    ஆதி சேஷன்  அம்சம்.  அதன்மேல்  அபச்சாரமாக   என் கால்கள் படலாமா" ? என்று  பதிலளித்தார். 
 சீடர்கள் தொடர்ந்து வற்புறுத்தியதால் மலை மீது ஏற ஒப்புக் கொண்டு ஏறினார்  

 பெரிய திருமலை நம்பி   திருமலையில் இருந்தார். ராமானுஜரின் வருகையை அறிந்த நம்பி, பெருமாளின் தீர்த்த பிரசாதத்தை எடுத்துக் கொண்டு, ராமானுஜரை வரவேற்க, அவரே மலை இறங்கி சென்றார்.

தனது ஆச்சார்யான் என்ற முறையிலும், முதியவர் என்ற முறையிலும், ராமானுஜர் அவரிடம், 

‘‘அடியேன் போன்ற சிறியோனை வரவேற்க தாங்களே வர வேண்டுமா?  வேறு  யாரேனும் தாழ்ந்தவர், சிறியவர்கள் எவரையாவது அனுப்பி இருக்கலாமே ?’’ என்றார்.

திருமலை நம்பி, பெருந்தன்மையுடன், ‘‘ராமானுஜா! திருமலையில் நான்கு வீதிகளிலும் தேடினேன்; என்னைவிடச் சிறியவர் தாழ்ந்தவன்   எவரும்  கண்ணுக்கு  தென்படவில்லை.  கிடைக்கவில்லை! அதனால் நானே கொண்டுவந்தேன்.’’ என்று பதிலளித்தார். நம்பியின் தன்னடகத்தைக் கண்ட எம்பெருமானார் (ராமானுஜரின் இன்னொரு பெயர்)   பெரிதும் வியந்தார்.
.
இதில் ஒரு உள்ளர்த்தம் உள்ளது.  ஒவ்வொரு வைஷ்ணவரும் வேறு ஒரு வைஷ்ணவரைக் கண்டால் அவரைவிட விட  தன்னை தாழ்ந்தவராக ''அடியேன்''  என்று   எண்ண வேண்டும்.   ஆழ்வார்கள்  அப்படி எண்னிக் கொண்டவர்கள் . திருமலை நம்பி ஆகவே   தன்னை சிறியோன் என்றுக் கூறிக் கொண்டார்.

இதை   மனதில் கவனம் வைத்துக்கொண்டு   ராமானுஜரை திருக்கோளூரில்  கண்டபோது  அவர் கேட்ட ஒரு கேள்விக்கு  பதில் சொல்லும்போது   81  உதாரண புருஷர்களை குறிப்பிடுகிறாள் திருக்கோளூர் பெண்பிள்ளை.

''ஸ்ரீ ராமானுஜரே ,  “ஸ்ரீவைணவ கோட்பாடுகளை பாராட்டி, அதன் வழி வாழ்ந்து,  பெரிய திருமலை நம்பிகளை போல   என்னை சிறியவன் என்று எப்போதாவது, என்றாவது, நான் கருதியதுண்டா, இல்லையே, அப்படி இருக்க எவ்விதத்தில் இந்த க்ஷேத்ரத்தில் நன் தங்கி வசிக்க தகுதி உடையவள் ?'' என்று  கேட்கிறாள்  திருக்கோளூர் பெண்பிள்ளை. 



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...