Monday, June 22, 2020

ARUPATHTHU MOOVAR


அறுபத்து மூவர்    J K   SIVAN  
முருகனார் 
 

                       





       சிவனே,   நீயே  புகலிடம்  
                           

 எதுவுமே  தேவைக்கு அதிகமாக  கிடைக்கும்போது அதன் மதிப்பு தெரிவதில்லை.  இல்லாததை மட்டுமே  தேடும் குணம் மனிதனுக்கு. இருப்பதை விட்டு இல்லாததை தேடுவான்.


ஒரு முக்கிய உதாரணம்  தமிழக கோவில்கள்.  நிறைய இருப்பதால்  அதற்கான போதிய பரமாரிப்பு
 இல்லை.  எந்த ஒரு கோவிலுக்கும் அதற்கென்று தனியாக சிறப்பாக  பின்புலத்தில்  சரித்திரமோ, புராண விஷயங்களோ கொஞ்சம் ஒட்டிக்கொண்டிருக்கும். 
  
நன்னிலம் - நாகப்பட்டினம் சாலையில் உள்ள  ஒரு  க்ஷேத்ரம்  திருப்புகலூர்.  நன்னிலத்திலிருந்து 10 கி.மீ.    காவிரியின் தென் கரை  75வது சிவஸ்தலம்.  இங்கே சிவன் பெயர் அக்னீஸ்வரர்.  அம்பாள்   .  உள்ளே கோணப்பிரான் சந்நிதியின் அருகே திருப்புகலூர் வர்த்தமானீச்சுரம் என்ற மற்றொரு பாடல் பெற்ற ஸ்தலமும் அமைந்திருக்கிறது

. நன்னிலம், சன்னாநல்லூர், நாகப்பட்டிணத்தில் இருந்து பேருந்து வசதிகள் உள்ளன. திருப்புகலூருக்கு அருகில் 108 திவ்யதேசங்களில் ஒன்றான திருக்கண்ணபுரம் மற்றும் இராமநாதீச்சுரம் என்ற பாடல் பெற்ற சிவஸ்தலமும் உள்ளன.  இவ்வாலயம் தினந்தோறும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும். 

 திருப்புகலூர் அக்னீசுவரர் ஆலயம் ஒரு பெரிய பழங்கால  பாடல் பெற்ற ஸ்தலம்.  சுமார் 73000 சதுர அடி. பரப்பு.கிழக்கு-மேற்கு மதில் சுவர் நீளம் 325 அடி. வடக்கு-தெற்கு மதில் சுவர் நீலம் 225 அடி. கோவில் மதில் சுவரை ஒட்டி  வெளிப்புறத்தில் நான்கு பக்கமும் அகழி இருக்கிறது. மூலவர் அக்னீசுவரர் சந்நிதிக்கு உள்ள நுழைவு வாயில் கோபுரம் 5 நிலை  கொண்டது. சுமார் 90 அடி உயரம். 

 உள்ளே  முதலில் இருப்பது  அம்பாள்  கருந்தாழ்குழலியின் தெற்கு  பார்த்த  சந்நிதி. இதை ஒட்டி  மூலவர் அக்னீசுவரர் சந்நிதி.  சுயம்பு லிங்கம்.  கோணப்பிரான் என்றும் ஒரு பெயர்.  பக்கத்தில் சந்திரசேகரர் தனிச்சந்நிதி உள்ளது. இங்கு இவரே பிரதானமாவார். கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், நடராசர், தட்சிணாமூர்த்தி, அகத்தியர், லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை, பிட்சாடனர் ஆலிங்கன  கல்யாண சுந்தரர் மூர்த்திகள். வடக்கே வர்த்தமானீசுவரர், அம்பாள் மனோண்மனி  இருவருக்கும்  தனி சந்நிதிகள்.

இந்த வர்த்தமானீசுவரர் மேல்  சம்பந்தர் பதிகம் பாடி இருக்கிறார். மூலவரைச் சுற்றி உள்ள உட்பிரகாரத்தில் சந்திரசேகரர், திரிபுராந்தகர், அக்னி, பிரம்மா ஆகியோரின் செப்புச் சிலை வடிவங்களைக் காணலாம். நவக்கிரகங்கள் இங்கு மற்ற கோவில்களில் இருப்பதைப் போல் இல்லாமல் "ட" என்ற அமைப்பில் இருக்கிறார்கள். அனுக்கிரக சனீஸ்வர பகவானும், நளச்சக்கரவத்தியும் ஒரு சன்னதியில் இருப்பது இந்த ஆலயத்தில் ஒரு விசேஷம். 

இங்கே அக்னி   சிவனை நோக்கி தவம் செய்து பலனடைந்தாராம்.  அக்னி பூஜித்த தலமாதலால் சிவன்  பெயர்  அக்னீஸ்வரர். வெளிப்புறத்தில் அகழியாக, அக்னி தீர்த்தம்.

ஏன்  சிவனுக்கு இங்கே  கோணப்பிரான் என  நாமம் ?  ஒரு கதை கேட்போம். 

 பாணாசுரன் என்ற அசுரனின் தாயார் சிவபூஜை செய்பவள். தாயாரின் பூஜைக்காக சுயம்பு லிங்கங்களைப் பெயர்த்து எடுத்து வருகிறான் பாணாசுரன். ஆணால் திருப்புகலூர் அக்னீசுவரரை பெயர்த்து எடுக்க முடியாமல் போகவே தன்னையே பலி கொடுக்க முயர்ச்சி செய்யும் போது இறைவன் அவனை தடுத்து ஆட்கொள்கிறார். பாணாசூரன் தோண்டிய அகழியே நாற்புறமும் தீர்த்தமாக உள்ளது. அவன் தாயாரின் பூஜையை இருந்த இடத்தில் இருந்தே  தலையை கோணலாக சாய்த்து  சிவன்  ஏற்றுக் கொண்டதால்  கோணப்பிரான். 

இங்கே  நடந்த ஒரு அதிசயம்:  சுந்தரருக்கு செங்கற்களை பொன்கற்களாக  சிவன்  மாற்றி கொடுத்து அருளியது. அக்னி பகவான் பாபவிமோசனம் பெற்றது.   ஆகவே    யாரவது புது வீடு  கட்டும்போது  இங்கே முதலில் ஒரு செங்கல்லை  வைத்து மனைமுகூர்த்தம் செய்த பிறகே  வீடுகட்ட ஆரம்பிப்பது வழக்கம்.

செங்கற்கள் பொற்கட்டிகளாக மாறிய விஷயம்  சொல்லவேண்டாமா?

 திருவாரூரில் பங்குனி விழா.  ஒரு சமயம்  மனைவி பரவையார்  செலவிற்குப் பொன் வேண்டுமே என்ன செய்வது என்று  அவருக்கு தெரிந்த  ஒரே ஒரு நம்பிக்கை நக்ஷத்ரமான சிவனை நாடி  திருப்புகலூர்.  புகழ் என்றால் அடைக்கலம். வேறு வழியில்லை உன்  திருவடியே  புகல் என்று பாடுகிறோம் அல்லவா. அப்படி  பொன்  கேட்டு  சுந்தரர்  திருப்புகலூர் வந்தார்.  எல்லோருக்கும் புகல்  இடம் அளித்து காப்பவர்  அக்னீஸ்வரர் என்பதால்  இந்த ஊரே  திருப்புகலூர். 

திருப்புகலூரில் கோயில் கொண்டுள்ள இறைவனை வணங்கி தனது கருத்தைப் பதிகத்தில் வைத்துப் பாடினார். பிறகு மற்ற அடியார்களுடன் கோவிலில் சிறிது நேரம் இளைப்பாறினார். தூங்குவதற்காக அங்கிருக்கும் செங்கற்களை தலைக்கு உயரமாக வைத்துத் தம் மேலாடையாகிய வெண்பட்டை விரித்துப் படுத்தார். துயில் நீங்கி சுந்தரர் எழுந்தபோது தம் தலையணையாக வைத்திருந்த செங்கற்களெல்லாம் பொற்கட்டிகளாக மாறி இருக்கக் கண்டு வியப்படைந்தார். இறைவனை 'தம்மையே புகழ்ந்து' என்று தொடங்கும் திருப்பதிகம் பாடி வணங்கினார்.

அப்பர் (திருநாவுக்கரசர்) தனது 81-ம் வயதில் இத்தலத்தில் உழவாரப் பணி செய்த போது, இறைவன் சித்திரை சதய நட்சத்திர நாளில் அவருக்கு முக்தி கொடுத்தார். எனவே, இது சதய நட்சத்திர ஸ்தலம்.  அப்பருக்கு  தனி சந்நிதி உண்டு.
எண்ணுகேன் என்சொல்லி எண்ணுகேனோ?
எம்பெருமான் திருவடியே எண்ணின் அல்லால்
கண்ணிலேன், மற்றோர் களைகண் இல்லேன்,
 சுழல் அடியே கைதொழுது காணின் அல்லால்
ஒண்ணுள்ளே ஒன்பது வாசல் வைத்தாய்,
ஒக்க அடைக்கும்போது உணரமாட்டேன்,
புண்ணியா உன்னடிக்கே போதுகின்றேன்
பூம்புகலூர் மேவிய புண்ணியனே     

என்று இந்த  பாடலை பாடிக்கொண்டே   இப்பர்  அக்னீஸ்வரனோடு   ஒரு சித்திரைச் சதய நாளில் இரண்டறக் கலந்து விட்ட  புகழ்/புகல்  அடைந்த  சிவஸ்தலம் திருப்புகலூர்.

63 நாயன்மார்களில் ஒருவரான முருக நாயனாருடைய பிறந்த ஊர். முருக நாயனாருக்கும் இங்கே சந்நிதி உண்டு.  இங்கே  இருக்கும்  முருகநாயனார் திருமடத்தில் சம்பந்தர், அப்பர், சிறுத்தொண்டர், திருநீலநக்கர் முதலியோர் கூடியிருந்து மகிழ்ந்த செய்தி பெரிய புராணத்தில் வருகின்றது.

ப்ராமண குளத்தில் பிறந்த  முருகனார், சிறுவயதிலிருந்தே  சிவபக்தர்.   வாழ்வின் ஒரே பயன் இன்பமாக சிவன் மீது பற்றுக்கொள்வதால் மட்டுமே கிடைக்கும் என  சிவனடியார்களை அக்னீஸ்வரரை  சதா சர்வகாலமும் தொழுதவர்.  நந்தவனம் வளர்த்து நிறைய  வித வித  புஷ்பங்களை தொடுத்து சிவனுக்கு சூட்டி  தனது கடைசி நிமிஷம் வரை  சிவபக்தியில்  மகிழ்ந்தவர். 


 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...