Monday, June 15, 2020

SADHANA/UPADESA PANCHAKAM




 ஆதி சங்கரர்    J K    SIVAN   

               
     சாதனா /உபதேச  பஞ்சகம் 

எழுத காகிதம், பேனா, கம்பியூட்டர் இல்லாத காலத்திலேயே ஓலைச்சுவடியில், ஆணியால் ஓட்டை குத்தி எழுதவேண்டிய காலத்திலேயே 32 வயது குறுகிய காலத்திலேயே, ஆதிசங்கரர் இவ்வளவு எழுதி இருக்கிறாரே, நான் மேலே சொன்ன வசதிகள் வேகமான உபகரணங்கள் இருந்தால் நமக்கு இன்னும் செல்வம் எவ்வளவு கிடைத்திருக்கும். எத்தனையோ பொன் முட்டை இடும் வாத்துகளை இழந்தவர்கள் நாம்.

இன்னொரு சிந்தனை குறுக்கிடுகிறது அதை மடக்க. ''ஆமாம் போங்க ஸார் ,   நீங்கள் ரொம்ப பொறுப் பானவர்கள். இருப்பதையே ஒழுங்காக வைத்துக்கொண்டு உபயோகப்படுத்தி நடைமுறையில் பயனடைய தெரியாதவர் களுக்கு இவ்வளவு பேராசையா?'' . இதற்கு பதில் நாம் தலை குனிந்து கொள்வது தான். கேள்வி ஞாயம் தானே.

எத்தனையோ அற்புத காவியங்கள் நூல்களை படைத்த ஆதிசங்கரின் ஒரு ஐந்து ஸ்லோகங்கள் இன்று அறிந்து கொள்வோம். சாதன பஞ்சகம் எனவும் உபதேச பஞ்சகம் என்றும் இதற்கு பெயர். வேதாந்தத்தை கசக்கி பிழிந்து சாரமாக ஐந்து ஸ்லோக ஏணிப்படிகள். . ஒவ்வொன்றும் 4 வரி X ரெண்டு படிகள். எனவே ஐந்து ஸ்லோகங்களில் 40 படிகள் கடக்கவேண்டும். சாதனை அப்போது தான் பயன் தரும். படிகளில் ஏறுவோமா?

वेदो नित्यमधीयतां तदुदितं कर्म स्वनुष्ठीयतां
तेनेशस्य विधीयतामपचितिः काम्ये मतिस्त्यज्यताम्‌।
पापौघः परिधूयतां भवसुखे दोषोऽनुसन्धीयतां
आत्मेच्छा व्यवसीयतां निजगृहात्तूर्णं विनिर्गम्यताम्‌॥१॥\

வேதோ  நித்யமதீயதாம்  ததுதிதம்  கர்மஸ்வ நுஷ்டியதாம் 
தேநேஸஸ்ய  விதீய தாமப ச்சிதி  காம்யே மதிஸ்த்யஜ்யதாம்
பாபௌக: பரிதூயதாம்  பவஸுகே  தோஷோஅநுஸந்தியதாம் 
ஆத்மேசா வ்யவஸீயதாம்  நிஜகிருஹாத்தூர்ணம் விநிர்கம்யதாம் 

நமது இந்து சனாதன தர்மம் வேத மதம். மற்ற மதங்களை போல் ஒருவரால் உண்டாக்கப்பட்டதல்ல. எண்ணற்ற ரிஷிகள், மந்திர சக்தியால் உணர்ந்ததை மொத்தமாக சேர்த்து அளிக்கப்பட்ட வசதி. வேதம் என்றால் பகவானின் மூச்சு.     எனவே தான் படிப்படியாக ஏணியில் ஏறி முன்னேறு. மேலே செல். கீழேயே எத்தனை காலம் இருப்பாய்?

1.தினமும் வேதம் கொஞ்சமாவது படி தெரிந்துகொள். நிச்சயம் முடியும். ஆத்மா மெதுவாக புரியும்.
2. அனுஷ்டானங்கள் அதில் சொன்னபடி செய்.
3. சொல்லப்பட்ட தெய்வங்களை வணங்கு. வழிபடு.
4. செய்யும் காரியத்தை சுய லாபத்துக்கு செய்யாமல் பரோபகாரணமாக விருப்பு வெறுப்பின்றி செய்.
5. பாபங்கள் தனியாக வராது. கூட்டமாக தான் வரும். கிட்டே அணுகாமல் காத்துக்கொள்.
6.இது வரை என்ன என்ன தவறுகள் தப்புகள் செயதாய். கணக்கு வைத்துக்கொள்.
7. ஆத்மாவா ? யார் அவர்? கொஞ்சமாக அவரை தெரிந்துகொள், அறிந்துகொள்.
8. சம்சாரம் எனும் வீட்டிலிருந்து மெதுவாக விடுபட்டு. (வீட்டில் மனைவி எனும் சம்சாரம் அல்ல இது. வாழ்க்கை பந்தம். பற்று. )

சாதன பஞ்சக ரெண்டாவது ஸ்லோக எட்டு ஏணிப்படிகளை அடுத்த கட்டுரையில் அறிந்து கொள்வோம். எழுதிக்கொண்டே போனால்  ரொம்ம்ம்ம்ப   நீளமாக போகிறதல்லவா.. இப்போதைக்கு மேலே சொன்னதை  நினைவில் வைப்போம்.

இப்போது நாம் ஏறப்போவது 9வது முதல் 16வது படி வரை . அப்புறம் கொஞ்சம் ரெஸ்ட். வாழ்க்கைப் படிகளில் ஏறுவது அவ்வளவு சுலபமில்லை.

सङ्गः सत्सु विधीयतां भगवतो भक्तिर्दृढाऽऽधीयतां
शान्त्यादिः परिचीयतां दृढतरं कर्माशु सन्त्यज्यताम्‌।
सद्विद्वानुपसृप्यतां प्रतिदिनं तत्पादुका सेव्यतां
ब्रह्मैकाक्षरमर्थ्यतां श्रुतिशिरोवाक्यं समाकर्ण्यताम्‌॥२॥
சங்க ஸத்ஸூ  விதீயதாம்  பகவதோ பக்திர் த்ருத  தீயதாம் 
ஸந்த்யாதி பரிசீயதாம்  த்ருததரம் கர்மாஷு ஸந்த்யஜ்யதாம் 
சத்வித்வானுபஸ்ரூப் யதாம் ப்ரதிதினம்  தத்பாதுகா  சேவ்யதாம் 
ப்ரம் மைகாக்ஷரமர்த்யதாம்  ஸ்ருதிசிரோவாக்யம் சமாகர்ண்யதாம்

9. சத் சங்கம் என்று சொல்கிறோமே. நல்லவர்களோடு கூட்டு வைத்துக் கொள்ளவேண்டும். நமக்கு புதிதாக நல்ல பழக்கங்கள் வருவது லேட் ஆனாலும் இருக்கும் கெட்ட பழக்கங்கள் கொஞ்சம் கொஞ்சமாக நிச்சயம் குறையும்.

10. பகவான் மேல் பக்தி விடாமல் வளரவேண்டும். கடவுள் நம்பிக்கை சத் சங்கத்தால் எளிதில் மலரும்.

11. மனம் வெவ்வேறு உணர்ச்சிகள் கிளப்பும் கொந்தளிப்பை தவிர்த்து அமைதியை பெற முயற்சி செய்யவேண்டும்.

12. நமக்கு என்று சில கர்மாக்கள் இருக்கிறது. அதை விடவும் முடியாது. அதுவும் நம்மை விடாது. இதெல்லாம் விடமுடியுமோ அவற்றை ஒவ்வொன்றாக விட்டுவிட்டு செய்யவேண்டிய கர்மாக்களை விடாது பற்றின்றி செய் என்கிறார் சங்கரர்.

13. கற்றறிந்த ஆச்சர்யனை தேடி சரணடைந்து குருவாக கொள்.
14. ஆச்சர்யனின் பாதுகை கூட வழிபடுவதற்கு உரியது.
15. ஏக அக்ஷரமான ஓம் எனும் சக்தி வாய்ந்த பிரம்மத்தை அளிக்கும் மந்திரத்தை விடாமல் உச்சாடனம் செய்.

16. நமக்கு தெரியாவிட்டாலும் யாராவது வேதங்களை பாராயணம் செய்வதை காதால் கேட்போம். நல்ல சப்தம் காதில் விழுந்தாலே நாம் கொஞ்சம் உயர்வோம்.

இனி அடுத்த எட்டு படி மேலே ஏறுவோம்.'
அடேயப்பா, ஆதிசங்கரரின் உபதேச பஞ்சகத்தில் இதுவரை பதினாறு படிகள் ஏறிவிட்டோமே. இன்னும் கொஞ்சம் ஏறுவோம். ஒரு படிக்கட்டு - எட்டு படிகள் கொண்டது. சுலபமாக ஏறுவதற்கு மனதில் தெம்பை தருகிறார் ஆதி சங்கரர்.

மேற்கொண்டு அடுத்த பதிவில் சந்திப்போம் 



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...