Monday, June 15, 2020

NOSTALGIA




என் முன்னோர்கள் : J K SIVAN


                                  மறக்கமுடியாத  சினிமா  டைரடக்கர்  

சிறு வயதில்  எனக்கு  விட்டலாச்சார்யா படங்களை பிடித்திருந்தது.  முக்கால்வாசி டப்பிங் படங்கள். தெலுங்கு டயலாக்  க்கு சம்பந்தமில்லாமல்  வாயசைத்து  தமிழ் சப்தம் வரும்.  பேசியதற்கு அப்புறமும் வாய் அசையும்.  ''பட்டமரமே  பறந்து போ''  என்றதும்   கீழே  கிடக்கும் ஒரு மரக்கட்டை ஜம்மென்று மேலே பறக்கும். அதற்கு எங்கிருந்தோ ரெண்டு  ரெக்கைகள் முளைத்திருக்கும்.  ரெண்டு பேர்  சௌகர்யமாக   சோபா மேல் உட்கார்ந்திரு ப்பது போல் அதன் மேல் பயணம் பண்ணி ஒரு  மாடிமேல்  இறங்குவார்கள். பேய் கதைகள்,  மந்திர தந்திர காட்சிகள் நிறைய இருக்கும். அந்த மனிதர் ஆத்மா அசையாமல் சாந்தி யடையட்டும். ஒரிஜினல் தெலுங்கு மட்டுமே டப்பிங் இல்லாமல் பேசட்டும்.    ''

என் தாத்தா  வசிஷ்டபாரத்திக்கும் ஒரு  பாட்டி இருந்தாள் .   அந்த  செல்லம்மா பாட்டிக்கு நிறைய கதைகள் தெரிந்திருந்தது. அது வசிஷ்ட பாரதிக்கு கிடைத்த யோகம் எனலாம். ஒரு நாள்   அவருக்கு  ஒரு  குழந்தையின் கதை சொன்னாள் . அந்த குழந்தை பெயர்   சந்திர ஹாசன். அந்த கதையை விவரிக்கிறேன்.    செல்லம்மா பாட்டி  சொல்லி வசிஷ்டன் அறிந்த கதை உங்களுக்கும்  பாட்டி சொன்ன கதையாக தெரிந்திருக்கட்டுமே .

சந்திர ஹாசன் சிறு பையன்.   விளையாடும் போது  கூட  வாயில் ஒரு கூழாங்கல்லை போட்டு கூட  அவ்வப்போது பொழுது போகாமல் மெல்லுவான்.  அப்போதெல்லாம்  சாக்லேட்,  மிட்டாய் சூயிங் கம்  CHEWING  GUM  எல்லாம் கிடையாது.  என் காலத்திலேயே  80 வருஷங்களுக்கு முன்பு  சூட பெப்பெர்மிண்ட் கோலி மிட்டாய், அரிசி பப்பருமுட்டு   தான்.    சந்திர ஹாசன்  வாயில் போட்டு  மென்றது   ஒரு சாளக்ராமம், சக்தி வாய்ந்த நரசிம்மர் ஆவாகனமானது. அதனால்  அவனுக்கு வாழ்வில் பெரும் திருப்பம். அவன் கதை இதுதான்.

மகாபாரதத்தில் அச்வமேதிக பர்வம் என்று ஒரு அத்தியாயம். அதில் வரும் சுதர்மிகன் என்கிற கேரள ராஜாவுக்கு ஒரு பிள்ளை. அவன்பெயர் சந்திரஹாசன். இந்த துரதிர்ஷ்டசாலி அரிஷ்டாம்ச த்தில் மூல நக்ஷத்ரத்தில் பிறந்தது மட்டுமில்லை, இடது காலில் ஆறு விரல்கள் வேறு. இது நல்ல சகுனம் இல்லை என்று ஜோசியர்கள் சொன்னதற்கேற்ப ராஜா எதிரிகள் அவன் மேல் யுத்தம் புரிய போரில் மாண்டான். அவன் ராணியும் தீக்குளித்து மறைந்தாள். ஒரு சேடி அவனைத் தூக்கிக் கொண்டு கன்னட தேசத்தில் குந்தள ராஜ்ஜியம் சென்றவள் சில காலத்தில் மாண்டாள். அனாதையாகிவிட்ட  சந்திர ஹாசன் தெருவில் சென்று பாடி பிச்சை எடுத்து  வாழ்கிறான்.  ஐயோ  பாவம்  இப்படி  வாடுகிறானே, அப்படியும் நன்றாக  பாடுகிறானே என  சிறுவன் சந்திர ஹாசனை குந்தள தேசத்தில் சிலர் எடுத்து வளர்த்தார்கள். குந்தள தேச ராஜாவுக்கு பிள்ளையில்லை. ரெண்டு பெண்கள். ஒருத்தியை மந்திரி துஷ்டபுத்தி என்கிற மந்திரி மணந்து கொண்டான். (ராஜாக்களுக்கு அந்த காலத்தில் நன் மந்திரி துன்மந்திரி என்று உண்டு. இப்போதெல்லாம் நிறைய மந்திரிகள் ரெண்டாம் வகையாக இருந்தாலும்  எந்த வித  பெரும்  பதவி   வகிப்பவர்களும் அவர்களுக்கு சளைத்தவர் களாகவா இருக்கிறார்கள்.

மேற்படி மந்திரி குந்தள  தேசத்தில் ராஜாவு   குடி  மக்களுக்கு   ஒரு அன்ன சந்தர்ப்பணை ஏற்பாடு செய்து ஏராளமான பேருக்கு அன்ன தானம் செய்தான். சந்திர ஹாசன் அங்கு சென்றான். அங்கு வந்திருந்த சில வேத சாஸ்திர நிபுணர்கள் சந்திர ஹாசனைப் பார்த்து அவன் முகத்தில் தெரிந்த   ராஜ களையை மெச்சினார் கள். குந்தள ராஜா இவனை  ஸ்வீகாரம் எடுத்து அரசனாக்கலாமே  அதனால்  ராஜாவுக்கு சுபிக்ஷம்  பலம், வீரம் எல்லாம்  பெருகும் என்று ராஜாவிடம் சொன்னார்கள். ராஜா மந்திரியை அழைத்தான். '' 

''இதோ பார்  மந்திரி.  இந்த பையனை  நீ  வெகு ஜாக்ரதையாக பாதுகாத்து வளர்த்து வரவேண்டும்.   எனக்கு அப்புறம்   இந்த ராஜ்யத்துக்கு   இவன் தான்   அடுத்த  ராஜா. ஆகவே  அவனுக்கு ராஜரீகம் படிப்பு எல்லாம் கற்றுக்கொடுக்க  ஏற்பாடு உடனே செய் '' என்று அவனிடம் சந்திர ஹாசனை ஒப்புவித்தான்.
துஷ்டபுத்தி என்ற  துன்மந்திரிக்கு  அந்த குந்தள தேசத்திற்கு தானே பின்னால் அரசனாக திட்டம். அவனுக்கு சந்திர ஹாசன் முட்டுக் கட்டை அல்லவா?. ஆட்களை விட்டு அந்த சிறுவன் சந்திர ஹாசனை தீர்த்துக் கட்ட திட்டமிட்டான். அதில் ஒரு வேடிக்கை. 

சிறுவன் சந்திர ஹாசனை காட்டில் தனியே அழைத்து வெட்டச் சென்ற கொலையா ளிகளுக்கு அந்த பால் மணம் மாறாத பாலகனைக்  கொல்ல  ஏனோ  மனம் வரவில்லை அந்த காலத்தில் கொலையா ளிகளுக்கு கூட நல்ல மனம் இருந்தது. யோசனை செய்து, அவனது 6வது விரலை  மட்டும்   துண்டித்து, மந்திரியிடம் அவனைக் கொன்றதற்கு அடையாளமாக காட்டினார்கள். பரிசுகளையும் பணமும் பெற்றார்கள். ஆறாவது விரல் போனதால் சந்திரஹாசனைப் பிடித்திருந்த துரதிர்ஷ்டமும் நீங்கியது எனவும் இதை எடுத்துக் கொள்ளலாமே. 

காட்டில் ரத்த வெள்ளத்தில் மயங்கிக்கிடந்த சிறுவன் சந்திரஹாசனை காட்டரசன் ஒருவன் எடுத்து வளர்க்கிறான். அவனுக்கும் பிள்ளை யில் லையே. சகல போர் வித்தைகளையும் கற்றுக்கொடுத்து அவன் வீரனாய் பல அண்டை தேசங்களை வெல்கிறான். காட்டு ராஜாவா கிறான் சந்திர ஹாசன். .அவனைப் பார்க்க குந்தள தேச   துன்மந்திரி வருகிறான்.

சந்திர ஹாசனைப்பற்றியும் அவனது வீர சாகசங்களைப்பற்றியும் காட்டு ராஜா மூலம் அறிந்து குந்தள தேச துன்மந்திரி 

''அடே உங்களுக்கு இப்படி ஒரு வீர மகன் இருப்பது எனக்கு தெரியாமல் போய் விட்டதே'' என்று  வியக்கிறான்.

காட்டுராஜா  சந்திரஹாஸன்  கிடைத்த  பழங்கதைகளைச்  சொல்கிறான். அப்போது  தான் கால் ஒரு விரல் துண்டிக்கப்பட்டு கிடைத்த பையன் தான் சந்திர ஹாசன் என்பதும் தான் அனுப்பிய கொலையாளிகள் அவனைக்   கொல்லாமல் தன்னை ஏமாற்றி விட்டார்கள் என்ற விஷயமும் புரிகிறது.   சந்திரஹாஸனை தனது ராஜ்யத்துக்கு அழைக்கிறான். அங்கு அவனுக்கு விஷம் கொடுத்து கொல்ல மீண்டும் ஒரு திட்டம். இந்த செய்தியை பாவம் சந்திரஹாசனே எடுத்துக் கொண்டு குந்தள ராஜ்ஜியம் செல்ல, வழியே ஒரு நந்தவனத்தில் களைத்துப்போய்   அவன்   தூங்க அங்கு யதேச்சையாக வந்த மந்திரியின்  மகள்    விஷயே தூங்கும் சந்திரஹாசன் அழகில் மயங்கி அவனைக் காதலித்ததோடு அல்லாமல் அவன் உடலில் துருத்திக் கொண்டிருக்கும் கடிதத்தை படித்து விஷயம் தெரிந்து கொள்கிறாள். 

 '' இதைக் கொண்டுவருபவனுக்கு விஷம் கொடு'' என கட்டளையிட்டுப்பது தெரிகிறது. சமயோசிதமாக ''இதைக் கொண்டு வருப வனுக்கு விஷயேவைக்  கொடு'' என்று  மந்திரியின்  கட்டளையை மாற்றி இன்னொரு ஓலையில்   எழுதிவிடுகிறாள். எங்கு சந்திரஹாசனை வரவழைத்து கொல்ல வேண்டுமோ அங்கு துன்மந்திரியின் மகனை அனுப்பி அங்கே சென்று  ஓலையைக்  காட்டியதும்  அவன் கொல்லப்படுகிறான். 

சந்திரஹாசன் குந்தள அரண்மனையில் கடிதம் எடுத்துச் சென்று அரசனிடம் காட்ட  மந்திரியின் மகள்  விஷயேவுடன்  அவனுக்கு உடனே  திருமணம் கோலாகலமாக நடந்து அவன் மனைவி ஆகிறாள். அவனும் ராஜாவுக்கு பிடித்த அடுத்த யுவ ராஜாவாகிறான். 

துன்மந்திரி தனது திட்டத்தால் தனது மகனே இறந்து விட்டதாலும் ,  மரண மடைய வேண்டிய    சந்திரஹாசன் தனது  மருமகன் ஆகிவிட்டதாலும்  ராஜாவின்  வாரிசாக   ஆகிவிட்டதாலும் மனமுடைந்து தன் தலையை தானே வெட்டிக்கொள்கிறான்.

சந்திர ஹாசனுக்கும் எல்லா திட்டமும் லேட்டாக புரிந்து தானும் தன் தலையை வெட்டிக்  கொள்ள முற்படும்போது விஷயே தடுக்கிறாள். இருவரும் சந்தோஷாக வாழ்கிறார்கள். 

கதையில் இன்னுமொரு சுற்று. சந்திர ஹாசன் ராஜாவின் மகள் சம்பகமாலினி யையும் மணந்து அவள் மூலம் பத்மாக்ஷன் என்ற மகனையும் விஷயே மூலமாக மகராக்ஷன் என்ற மகனும் பெற்று இந்த இருவரும் அர்ஜுனன் அஸ்வமேத யாகத்துக்கு யுதிஷ்டிர ரின் குதிரையை அழைத்துக்கொண்டு திக்விஜயம் செல்லும்போது அர்சுனனோடு இந்த இருவரும் கூடவே சென்று உதவுகிறார்கள் என்று பாரதத்தில் முடிகிறது. இது கதையின் பெரிய ரீல்.  இவ்வளவு பெரிய  ரீல்  நான் கேட்டதில்லை.  விட்டலாச்சாரியா  படத்தில் பார்த்ததுமில்லை. 

உங்களில்  எத்தனை பேருக்கு  விட்டலாச் சார்யா ஞாபகம் இருக்கிறது?  அவரது தெலுங்கு படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டு  ஓடுமே  பார்த்திருக்கிறீர்களா. நான்   டூரிங் டாக்கீஸில்  டபடபடப் என்று ஜெனெரேட்டர் சத்தத்தில்  ரீல் ரீலாக  பார்த்திருக்கிறேன்.
  
திரையரங்கில் தெலுங்கு நடிகர்கள் தமிழ் வார்த்தைகள் பேச முயற்சிக்கும்போது அவர்கள் வாய் திறக்கும்போது வராத வார்த்தை அவர்கள் வாய் மூடியபோது பேச்சாக வரும். கதவு பேசும். நாய் பாடும். மரங்கள் நடக்கும். மாடு பறக்கும். கற்பனைக்கெட்டாத அற்புதங்களை விட்டலாச்சார்யா படங்களில் பார்த்து மகிழ்ந்தவர்கள் இன்றும் கூட அவற்றை நினைத்து இதைப் படிக்கும்போது வயிறு வலிக்க சிரிப்பார்கள். கதை ஒரு சுழற்சியாக இருக்கும். 

சந்திர ஹாசன் கதையை எழுதும்போது இந்த  கதையின் ஒரிஜினல் பிரம்மா  யாரோ   அவரை  நினைத்து அதிசயித்தேன். வளமான கற்பனை  முடிவிலாத திருப்பங்கள். இந்த கதையை யக்ஷ கானம் என்ற நிகழ்ச்சியாக நடத்தி நிறைய பேர் பொழுது போக்கி யிருக்கிறார்கள்.  ஆங்கிலத்தில்   முடிவில்லா கதைகள்  என்று ஒரு புத்தகம் உண்டு.  NEVER ENDING STORIES ..



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...