பேசும் தெய்வம். j k sivan
''சைன் SIGN பண்ணுங்கோ ''
என் ஏழெட்டு வயதில், சூளைமேட்டில், ஆட்டோகிராப் வாங்குவதற்கு என்று அழகாக சின்ன தோல் அட்டை போட்ட கலர் கலர் காகித பக்கங்கள் கொண்ட சிறு பவுண்ட் bound நோட்புக் என் நண்பர்கள் வைத்திருந்தார்கள். எனக்கும் ஆட்டோ க்ராப் வாங்க பிடிக்கும். யார் பெரிய மனிதர்கள் என்று தெரியாது. தெரிந்தவர்களிடம் எல்லாம் நோட் புக் ஐ நீட்டி கையெழுத்து வாங்குவேன்.
ஒன்று சொல்ல மறந்துவிட்டேன். என்னிடம் அப்படி கடையில் அதிக விலை கொடுத்து வாங்கிய ஆட்டோகிராப் நோட் புக் எதுவும் கிடையாது. எங்களோடு குடியிருந்த ஜகந்நாதன் ஒரு பிரின்டிங் பிரேசில் கம்பாசிடர் . (compositor அச்சுக் கோர்ப்பது) அப்போதெல்லாம் அப்படித்தான். எழுத்துக்கள் கொண்ட அச்சுக்கலை ஒவ்வொன்றாக பொருக்கி வரிசைப்படுத்தி கட்டம் கட்டி, மையில் தோய்த்து டிஜிட்டல் என்றால் என்னவென்றே தெரியாது. அவர் என் மேல் பிரியம் கொண்டு எனக்கு நோட் புக், புத்தகம் எல்லாவற்றுக்கும் என் பெயர் எழுதி (அப்போதே என் பெயர் அச்சில் வெளி வந்தது.... வயது -7-8) label பண்ணிக்கொண்டு வந்து தருவார். அச்சாபீஸில் கலர் கலர் துண்டு காகிதங்களை சேகரித்து ஒரு ஆட்டோகிராப் நோட் புக் பைண்ட் bind பண்ணி கொண்டுவந்து கொடுத்த போது என் ஆனந்தம் ஆகாசத்தை தொட்டுக் கொண்டே இருந்தது. கீழே இறங்கவே இல்லை.
என்னுடைய ஆட்டோக்ராபில் முக்கியமாக கையெழுத்திட்டவர்கள் சிலரை இப்போது நினைவு கூறுகிறேன். MKT தியாகராஜபகவதர் முதல் சினிமா சூப்பர் ஸ்டார். GNB , சின்ன அண்ணாமலை, தேவன் (ஆனந்த விகடன் ஆசிரியர்), கி.வா.ஜ .சில்பி, நா. பார்த்தசாரதி. M K ராதா, ராஜாஜி. NSK மதுரம் தம்பதியர்...தர்மபுரம் ஆதினம், GK வேல். போட்டோக்ராபர். .. இதைத்தவிர எல்லா பக்கங்களிலும் அண்டை வீடு, எதிர் வீட்டுக்காரர்கள், வருவோர் போவோர் கையெழுத்துகளை நிரப்பி இருந்தேன். இப்போது அதை இழந்து எங்கே எப்போது தொலைந்தது என்று தெரியாமல் வாடுகிறேன். இது போகட்டும்.
ஒரு சிறு பையனுக்கும் என் போல் ஆட்டோகிராப் பைத்தியம். ஒருநாள் அவன் அப்பா அம்மா அவனை காஞ்சி மடத்துக்கு அழைத்துப் போனார்கள். பெரியவா தரிசனம் வரிசையில் நின்று பெற்றார்கள். பெரியவா ஒரு உயரமான பீடத்தில் அமர்ந்து பிரசாதம் வழங்கினார், பெரிய வரிசை, நல்ல கூட்டம்.. சிலரிடம் பேசினார். இந்த குடும்பம் பெரியவா வை வணங்கியது.
''பெரியவா இன்னிக்கு எங்க ஒரே பிள்ளைக்கு பத்தாவது வயசு பொறந்த நாள். பெரியவாள் ஆசிர்வாதம் பெற வந்தோம். எங்க ஊர் கும்பகோணம்.. பெரியவாளுக்கு நமஸ்காரம் பண்ணுடா ''
பையன் அரை நிஜார், மேலே சட்டை இல்லாமல் ஒற்றை பூணலுடன் கீழே விழுந்து நமஸ்கரித்தான்.
அடுத்து அவன் செய்தது அனைவரையும் திடுக்கிட வைத்தது. சட்டென்று நிஜார் பாக்கெட்டுக்குள் கை விட்டு ஆட்டோகிராப் நோட் புக் கை எடுத்து பெரியவாளிடம் நீட்டினான்.
''என்ன இது ?''
''உங்க கையெழுத்து வேணும் ?''
''எதுக்கு?'' என்று சிரித்துக்கொண்டே கேட்டார் பெரியவா''
''பெரிய மனுஷா கிட்டே இருந்து எல்லாம் கையெழுத்து வாங்கி சேர்க்கறேன். உங்க கையெழுத்து போட்டு கொடுங்கோ''
''நான் பெரிய மனுஷா இல்லேடா. என் கையெழுத்து வேண்டாமே''
''உங்களை எல்லோரும் பெரியவான்னு தானே சொல்றா. போடுங்கோ''
பெரியவா அருகே இருந்த அணுக்க தொண்டர் ஒருவரை அழைத்து இந்த ஆட்டோ க்ராப் நோட்டில் நம்ம மடத்துடைய முத்திரை பதித்து ஸ்ரீ நாராயணஸ்ம்ருதி ன்னு எழுதி மேனேஜர் கையெழுத்து போட்டுக்கொண்டுவந்து அவனுக்கு கொடு '' என்கிறார். பிரசாதம் கொடுத்து அவர்களை அனுப்பினார்.
பெற்றோர்கள் முகத்தில் பயம், நடுக்கம். வியர்த்து கொட்டியது. அதே சமயம் பையன் காரியத்தால் கோபம் எள்ளும் கொள்ளும் வெடித்தது. பிறந்தநாள் அன்று பிள்ளையை கோபித்து கொள்ளமுடியவில்லை. சங்கடப்பட்டார்கள்.
''பெரியவா மன்னிக்கணும். அதிகப்ரசங்கித்தனமா பையன் பண்ணிட்டான். கொஞ்சமும் நாங்க எதிர்பார்க்கலே. பெரியவா க்ஷமிக்கணும்.
''அப்படி நான் ஒண்ணும் தப்பா நினைக்கல்லே. ஒண்ணு தெரிஞ்சுக்குங்கோ. நான் கையெழுத்து கிடையாதுன்னா அந்த பிஞ்சு மனசு ஏமாற்றம் அடையும். அதே சமயம் இதிலே ஒரு நல்லதும் இருக்கு. இந்த நோட்டில் கையெழுத்து போட்டவர்கள் எல்லோருமே அவனைப் பொறுத்தவரை ரொம்ப பெரிய மனுஷாள். அடிக்கடி அந்த கையெழுக்களை பார்த்து பார்த்து ரசிப்பான். அவாளைப் போல தானும் ஒருநாள் பெரிய மனுஷனாகி மத்தவாளுக்கு கையெழுத்து போட்டுக் கொடுக்கணும் என்கிற உத்வேகம் வரும். அவன் ஆக்க பூர்வமா வாழ்க்கையிலே முன்னேற தடையாக நாம் இருக்க கூடாது. போகப்போக எது அவசியம், எது தேவை இல்லை என்று அவனே புரிந்து கொள்வான். இப்போது அதெல்லாம் தெரியாத வயசு. க்ஷேமமாக இருப்பான்.''
No comments:
Post a Comment