எனக்கு மந்திரம் ஸ்லோகம் தெரியாது J K SIVAN
பன்னீர் செல்வத்தின் பரம்பரையில் இதுவரை தெய்வ பக்தி மிக்கவர்கள் அதிகம். ராமன் கிருஷ்ணன் சிவன் அம்பாள் என்று பல நாமங்களை சொல்லி வாழ்ந்தவர்கள். பன்னீரின் சிறுவயதிலேயே பெற்றோர் மறைந்தனர். அத்தை ஒருவள் எடுத்து வளர்த்தாள் . அத்தையின் கணவன் அரபு நாட்டில் வேலை செய்பவன். பல வருஷங்கள் அங்கேயே இருந்தவன். பன்னீரை படிக்க வைத்து வேலை தேடி, ஒரு அரபு நாட்டில் வாழ்வின் பெரும்பகுதி கழிந்தது. படிப்பு, பணம் இரண்டிலேயே வாழ்வின் பெரும்பகுதி கழிந்தாலும் உள்ளே கிருஷ்ணன் இழையோடிக்கொண்டிருந்ததை உணராமல் இருந்தான் பன்னீர். அவ்வப்போது மேலே எழும்பிய கிருஷ்ணனை பணத்தாசை, தேடல், கீழே அமுக்கி விட்டது. .
வயதாகிவிட்டது. 75வருஷங்கள் பணம் காய்ச்சி மரமாக வாழ்ந்த பன்னீர் தனியனானான். அவன் தனியாக கிராமத்தில் புராதன பாரம்பரிய வீட்டிற்கு சென்று வாழ்ந்தான். அவன் மனம் மெதுவாக கிருஷ்ணனை நினைக்க ஆரம்பித்தது. அவனுக்கு உதவ கோபாலன் என்று ஒரு வாலிபன் வந்து சேர்ந்தான்.
''உன்னை வணங்காமலேயே பெரும்பகுதி வாழ்ந்து முடித்துவிட்டேனே கிருஷ்ணா''
உன் கீதை தெரியாது, ஒரு ஸ்லோகமும் கற்கவில்லை. உன்னை பற்றி புத்தகங்கள் எதுவும் படித்ததில்லை. வேறெதற்கோ என் நேரம் செலவானதே தவிர உன்னை நினைக்கவே இல்லையே''
பன்னீருக்கு முதுகெலும்பில் புற்றுநோய் நோய் வளர்ந்துகொண்டே வந்தது. அதோடு வேறு ஏதேதோ சிக்கல்கள். படுத்த படுக்கையில் பரந்தாமன் நினைவு வந்தது. கோபாலன் பிள்ளை மாதிரி அவனை பார்த்துக்கொண்டான்
ஹரி ப்ரியன் என்ற ஒரு பண்டிதர் அந்த கிராமத் துக்கு வந்தார். பன்னீர் வீட்டுக்கு அடுத்த மதன கோபாலன் ஆலயத்தில் பாகவதம் சொன்னார். நடக்கமுடியாத பன்னீருக்கு பழக்கமானார்.க்ரிஷ்ணனைப் பற்றியே பேசுவார் எப்போதும் ஹரி. பன்னீருக்கு அவரையும் கிருஷ்ணனையும் ரொம்ப பிடித்திருந்தது. நிறைய கிருஷ்ணனைப் பற்றி அவரிடம் கேட்டான்.
''என்னால் இப்போது நடக்கமுடியவில்லையே, உடல் நிலை சரியில்லையே, நான் எப்படி கிருஷ்ணனை பார்ப்பது, வணங்குவது, பிரார்த்திப்பது? ஒன்றுமே தெரியாமல் இத்தனை வருஷங்கள் ஓட்டி விட்டேனே?
'வருஷங்கள் எவ்வளவு போனால் என்ன? பிரார்த்தனை பண்ண தெரியவேண்டாம் . ஸ்லோகம் ஒன்றும் கற்றுக் கொள்ளவேண்டாம். இப்போது அவனை மனம் தேடினால் போதும். பலநாள் இருட்டு ஒரு வினாடி வெளிச்சத்தில் மறையவில்லையா? ஒரு வழி செய்யுங்கள். ஒரு நாற்காலியோ ஸ்டூலோ எடுத்து உங்கள் அருகே போட்டுக்கொள்ளுங்கள். அதில் கிருஷ்ணன் அமர்ந்திருப்பதாக நினைத்துக் கொண்டு மனதில் தோன்றினதை எல்லாம் அதனிடம் சொல்லுங்கள். கிருஷ்ணன் உங்கள் கண்ணுக்கு தெரியாவிட்டாலும் எங்கும் இருப்பவன் அல்லவா, உங்களோடு பேசுவான். நீங்கள் பேசுவதை கேட்பான். போகப்போக அவன் இல்லாமல் உங்களால் ஒன்றும் பண்ண முடியாது என்ற நிலை வந்துவிடும்''
பன்னீர் தனது தனிமையில் அந்த கணம் முதல் தன் படுக்கைக்கு அருகே இருந்த ஸ்டூலில் கிருஷ்ணனோடு பேசுவான். தன் மனதில் தோன்றினதை எல்லாம் சொல்வான். அவன் மனம் லேசாகியது. திருப்தியாக இருந்தது.
சில மாதங்கள் இப்படி ஓடின. அவன் உடல் நிலை ரொம்ப மோசமாகிவிட்டது. மறுநாள் கிருஷ்ண ஜெயந்தி. கோபாலன் டாக்டர் ஷியாம் சுந்தரை கண்டு மருந்துகள் வாங்கி வந்து வேளா வேளைக்கு சிஸ்ருஷை செய்தான். இரவு சுரம் கட்டுக்கடங்காமல் போகக்கூடாதே என்று டாக்டரை வீட்டுக்கு அழைத்து வந்தான்.
பன்னீருக்கு டாக்டர் மருந்து எல்லாம் பிடிக்காது.
''அப்பா டாக்டர் வந்திருக்கிறார். உங்களை செக்கப் பண்ணபோகிறார்'' என்ற கோபாலனின் நிழலாக டாக்டர் உள்ளே நுழைந்தார்.
''எப்படி இருக்கிறீங்க பன்னீர் சார் ?
''நல்லா இருக்கேன்'' . கதவை திறந்து டாக்டர் நுழையும் வரை இத்தனை நேரம் ஸ்டூல் மேல் இருந்த கிருஷ்ணனிடம் பேசிக்கொண்டிருந்தவன் அதையே பார்த்ததால் டாக்டர் அதை கவனித்து விட்டு
''நான் வருவேன் என்று தெரியுமா?
''தெரியாது டாக்டர்''
''எனக்காக ஸ்டூல் போட்டு அதை காட்டிகிட்டே பேசுறீங்க. நான் உட்கார தானே போட்டுவச்சீங்க''
''இல்லே டாக்டர் என் பிரெண்ட் கிருஷ்ணனுக்காக''
''உங்க பிரெண்ட் வருவாரா, வந்தாரா, இன்னிக்கு ''
''கொஞ்சம் கதவை சாத்துங்க, சொல்றேன்'' என்ற பன்னீர் ' ஹரிப்ரியன் வந்தது முதல் ஸ்டூலில் தினமும் வந்து உட்கார்ந்த கிருஷ்ணனோடு நாள் முழுதும் பேசுவதை சொன்ன போது டாக்டர் அசந்துபோனார்'.
டாக்டர் உங்களிடம் மட்டும் சொன்னேன். இந்த வீட்டில் என்னைப் பார்த்துக்கொள்ளும் கோபாலனுக்கு கூட சொல்லவில்லை. சொன்னால் நம்பமாட்டார்கள். பைத்தியம் என பட்டம் கட்டிவிடுவான், எங்காவது ஆஸ்பத்திரியில் சேர்த்து விடுவான் ''
'' உங்களுக்கு கிருஷ்ணன் இருக்கிறானா என்று நம்பிக்கை இருக்கிறதா,?
''துளியும் சந்தேகமில்லை டாக்டர். இழந்த நாட்களை இருக்கும் நாளில் சரிசெய்து விட்டான் கிருஷ்ணன். என் உடல் உபாதையைப் பற்றி நான் இப்போதெல்லாம் நினைக்க கூட நேரமில்லை.''
டாக்டர் செக்கப் செய்த போது காய்ச்சல் அதிகமாக நின்றது. குறையவில்லை. அன்று இரவு தாண்டிவிட்டால் மறுநாள் ஆஸ்பத்திரியில் சேர்த்துவிட முடிவெடுத்தான் கோபாலன்.
மறுநாள் காலை கோபாலன் அறையில் நுழைந்த போது பன்னீருக்கு பெருமூச்சு வாங்கியது. உடனே டாக்டரை அழைத்து வந்தான். உள்ளே வந்த டாக்டர், பன்னீரின் இரு கரங்கள் ஸ்டூலின் அடிப்பக்கம் சாய்ந்து அவன் தலை ஸ்டூள்மேல் படிந்து கிடந்தது. ''
அப்பாக்கு என்ன ஆச்சு டாக்டர் . ''போய்ட்டாரா?'' இப்போ என்ன பண்றது ?''
''நாமும் அவர் மாதிரி போக முடியுமா என்று பார்ப்போம் '' என்று சொல்லி விட்டு டாக்டர் சென்றார்.
நண்பர்களே, கடவுள் நம்பிக்கை, பிரார்த்தனை நமக்கு கிடைத்த சிறந்த பரிசு. பூ ஒன்று கேட்டால் நந்தவனம் தருகிறான். சொட்டு தண்ணீர் கேட்டபோது கடலையே படைத்தான். ஒரு நண்பனைத் தா என்றேன் உங்கள் எல்லோரையும் உலகமுழுதும் உள்ளவர்களே, உங்களை எனக்கு கொடுத்தவன் கிருஷ்ணன்.
துன்பம் வரும்போது அவனை தேடுவோம். இன்ப நேரத்தில் அவனை நன்றியோடு பாடுவோம். எப்போதும் உள்ளே அவனை நாடுவோம்.
No comments:
Post a Comment