Tuesday, June 23, 2020

ANANDHAMADAM




பங்கிம் சந்திர சட்டர்ஜி  J K SIVAN


தமிழ்நாட்டைப் போலவே  வங்காளமும்  அநேக  தேசபக்தர்களை தியாகிகளை பெற்று தந்திருக்கிறது. ஒரு  மஹா புருஷரை  இப்போது  நினைவு கூர்வோம்.

நாம் இப்போது கூவும்  வந்தேமாதரம்  முதலில் 1876ல் எழுந்தது  பங்கிம்  சந்திர சட்டர்ஜீ  (27.6.1838-8.4.1894) பேனாவில் இருந்து.  18861ல் அவர் எழுதிய  ஆனந்தமடம்  அற்புதமான  ஒரு கதை.  ஒருமுறை எல்லோரும் படியுங்கள். சினிமா கூட வந்தது.  வெள்ளையர் ஆட்சியில் அக்ரமங்களை எதிர்த்து  கதையாக வந்தது

 7.9. 1905 வாரணாசி காங்கிரஸ் கூட்டத்தில்  இந்தியாவின் சுதந்திர கீதமாக வந்தேமாதரம் ஏற்கப்பட்டது. அப்புறம்  தாகூர் எழுதிய  ஜனகனமான  தேசீய  கீதமானது.
கல்கத்தா பல்கலைக்கழக முதல் பட்டதாரிகளில் பங்கிம் ஒருவர். 11வது வயதில் 5வயது  ராஜலக்ஷ்மி தேவி மனைவி.  அப்போது சாரதா சட்டம் அமுலுக்கு வரவில்லை.   என் அம்மாவுக்கு  கல்யாணத்தின் போது 9 வயது.  

ஆனந்தமடம்  என்பது  சந்யாசிகள் சிலர்  ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்து புரட்சி செய்த  சம்பவம். விறுவிறுப்பான  சுதந்திர தாக  கனல் வீசும்  காட்சிகள் கொண்டது. ரெண்டு மூன்று தடவை பல வருஷங்களுக்கு முன்பு படித்தேன். ஒருநாள் சுருக்கமாக கதை சொல்கிறேன்.கர்சன் என்ற ஆங்கில கவர்னர் ஜெனரல்  வங்காளத்தை  கிழக்கு மேற்கு என்று ரெண்டாக பிரித்ததை எதிர்த்த புரட்சி.   மேற்கு வங்காளத்தில் அதிக ஹிந்துக்கள், கிழக்கு வங்காளத்தில் முஸ்லிம்கள்.

பங்கிம் என்றால் கொஞ்சம் கூனல், வளைவு என்று ஒரு அர்த்தம்.    ராமகிருஷ்ண பரமஹம்சர்  பங்கிம் சந்திர சட்டர்ஜீயை பார்த்து பேசும்போது  உங்களை  எது வளைத்தது,  ஏன்  ''வளைவு '' என்று விளையாட்டாக கேட்டார். 


''வெள்ளைக்காரனின்  பூட்ஸ் கால் உதையால்  வளைந்த முதுகு''  என் பேச்சு  எழுத்து அவனுக்கு பிடிக்காதே'' என்கிறார் பங்கிம் .

''விஷ விருக்ஷம்'' என்று  பங்கிம் சந்திர சட்டர்ஜீயின்  ஒரு நாவல் சிறிய வயதில் பள்ளிக்கூட லைப்ரரியில்  எடுத்து  தமிழில் படித்திருக்கிறேன்.  வி. எஸ். காண்டேகர்  என்பவர்  நிறைய மொழி பெயர்ப்பு நாவல்கள்  எழுதுவார்.1838ல் சிப்பாய் கலகத்திற்கு  (1857)  முன்பே  பங்கிம் பிறந்தவர். அவர் எழுதிய ஆனந்தமடத்தில்  விஷ விருக்ஷத்தில் சிப்பாய் கலக வாசனை நெடி  நன்றாகவே  நமக்கு  அனுபவிக்க முடியும்.

இந்தியர்கள் தமது  அடையாளம், தெய்வீகம், ஆன்மிகம், பண்பாடு, ஒழுக்கம்  நம்பிக்கை, வழிபாடு சம்ப்ரதாயம் எதையும் இழக்கக் கூடாது என்று பாடுபட்டவர்களில் பங்கிம்  முக்யமானவர்.  அவரது ''அனந்தமடம்'' 18ம் நூற்றாண்டு இந்தியாவை படம் பிடித்து காட்டும் ஒரு புத்தகம்.  அவர் காலத்திலேயே  அவரது  ''வந்தே மாதரம்''  பாடலுக்கு  ஆங்கிலே யராலும்  முஸ்லிம்களாலும் பலத்த எதிர்ப்பு வந்தது. 

ஆனந்தமடம்  அநேக  இளம் இந்தியர்களை  தேசிய போராட்டத்தில் பங்கேற்க வைக்கும் தன்மையை கொண்டதாக இருந்தது.
56வருஷங்களே வாழ்ந்த இந்த மா மனிதரை கௌரவித்து இந்திய அரசாங்கம் ஒரு தபால் தலை வெளியிட்டது. அவ்வளவு தான்.  எல்லோரும் மறந்து போயாச்சு.   யாரையாவது கேளுங்கள்.  

''பங்கிம் சந்திர சட்டர்ஜீ தெரியுமா?''


''பங்கிம்  மா.... அப்படி ஒரு பேங்க் இருந்ததா, இருக்கிறதா?''

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...