18. மணல் லிங்கம்
பிரசித்தமான வால்மீகி ராமாயணத்தை எழுதிய வாலமீகி தான் ஆனந்த ராமாயணத் தையும் எழுதியவர் என்றாலும் அதற்கும் இதற்கும் கொஞ்சம் வித்யாசம் உண்டு. இது சீதையின் விருப்பத்தை பூர்த்திசெய்ய பரமேஸ்வரன் ராமரைப் பற்றி அவளுக்கு சொல்வதாக அமைந்துள்ளது. வியாசர் எழுதிய அத்யாத்ம ராமாயணம் ஏற்கனவே ''ரமே ராமே மனோரமே'' என்ற புத்தகமாக எழுதினேன். அதிலும் அப்படித்தான். ஒரே விஷயத்தை வேறு வேறு வடிவங்களில் ருசித்தாலும் அதுவும் சுகம் தான்.
முதல் காண்டமான சாரகாண்டம் ஆனந்த ராமாயணத்தின் சாரம். அதில் எல்லாவற் றையும் கதைச் சுருக்கமாக தருகிறார். இன்று 10வது சர்க்கத்தில் நுழைகிறோம்.
''வாயு குமாரா நீ சென்று வந்த லங்கை
யில் பாதுகாப்புக்கு, இரவு பகல் காவலுக்கு, ராவணனின் படை பலம் எப்படி, என்ன ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது என்று சொல் ''
''ப்ரபோ, கடல் சூழ்ந்த இலங்கையில் ராவணன் கோட்டை, அரண்மனைகள் அகழிகளால் சூழப்பட்டது. யானை குதிரை காலாட்படை, அஸ்திர வித்தை வீரர்கள் என்று பலத்த பாதுகாப்பு. அவனுடைய படையில் நாலில் ஒருபங்கை நானே உங்கள் நாமத்தைச் சொல்லி அழித்துவிட்டேன். தாங்கள் சீக்கிரம் புறப்பட வேண்டும். சமுத்திரக்கரைக்கு செல்வோம்'' என்கிறார் ஹனுமான்.
''சுக்ரீவா, இப்போது விஜயம் எனும் முகூர்த்தம் . ஆசுவயஜ மாசம், சுக்லபக்ஷம், ஸ்ராவண நக்ஷத்ரம். தசமி திதி . நல்ல நேரம். உடனே உன் சைன்யங்களை திரட்டு . லவண சமுத்திரம் நோக்கி செல்வோம். இடது வலது பக்க சேனைகள் முன்னே பின்னே என்று அணி வகுத்துவிடு. நமக்கு முன்னே நளன் . பின்னே நீலன் இடப்பக்கம் ஜாம்பவான், அக்னி திசையில் குஜன், நிருதி திசையில் கவாக்ஷன், வாயு திக்கில் கவயன் , ஈசான திக்கில் மயிந்தன், துவிதன் மற்றும் வானர யூதர்கள் சேனையை மொத்தமாக பாதகாக்கட்டும். நான் ஹனுமான் மீது அமர்கிறேன். லக்ஷ்ம ணன் அங்கதன் மீது ஆரோகணிக்கட்டும். நீ என் அருகிலேயே வா''என்று கட்டளையிட்டார் ராமர்.
தாளங்கள் மேளங்கள் வாத்தியங்கள் முழங்க வானரசேனை தென் திசை நடந்து கடற்கரை யை அடைந்தது. எதிரே தோன்றும் பெரிய சமுத்திரத்தை எப்படி கடப்பது?
இலங்கையில் ராவணன் கடுங்கோபத்தில் இருந்தான்.
''ப்ரஹஸ்தா, இது தான் உன் வீரமா, நீ தான் மதியாலோசனை மந்திரியா? நம் கண் எதிரே ஒரு சிறு குரங்கு எவரும் புகமுடியா இலங்கை கோட்டைக்குள் நுழைந்து, அசோகவனம் சென்று சீதையை சந்தித்து சேதி சொல்லி, அத்தனை வீரர்களையும் கொன்று, என் பிரியமான அசோக வானத்தை அழித்து நாசம் செய்து, கோட்டை கொத்தளங்களை, மாளிகைகளை தீக்கிரையாக்கி , என் மகன் அக்ஷயனையும் கொன்று தப்பித்து போயிருக் கிறது. உன் பாதுகாப்பில் நடந்த இதற்கு உன் பதில் என்ன?''
''குரங்கு தானே என்று இரக்கம் காட்டியது தப்பு தான் அரசே. ஒரு வார்த்தை கட்டளையிடுங்கள், உலகில் குரங்கு இனமே இல்லாமல் பூண்டோடு அழித்து விடுகிறோம். ''
''அண்ணா, நீ சீதையை அபகரித்து வந்தது தவறு என்றாலும் நான் உன்னோடுதான். உத்தரவு கொடு, ராம லக்ஷ்மணர்களை அழித்து எல்லா வானரர்களை யும் கொன்று விட்டு வருகிறேன்'' என்றான் கும்பகர்ணன்.
விபீஷணன் குறுக்கிட்டு ''அண்ணா , கும்ப கர்ணன் சொல்வது நடக்காது. நீ சீதை யை ராமரிடம் ஒப்படைத்துவிட்டு சமாதானமாக போவது ஒன்றே அனைவரும் உயிர் தப்ப வழி.'' என்று உபதேசித்தான்.
''விபீஷணா, நீ என் உடன் பிறந்தவன் என்பதால் உயிர் தப்பினாய். என் முன்னே நில்லாதே. என் மனம் மாறும் முன் இங்கிருந்து ஓடு. உயிர் தப்பு'' என்று கத்தினான் ராவணன்.
இனி ராவணனுக்கு நற்கதி இல்லை என்று தீர்மானித்த விபீஷணன் நான்கு மந்திரி கள் உடன் வர ராமரை நோக்கி ககன மார்கமாக புறப்பட்டான். சரணடைந்த விபீஷணனை வரவேற்ற ராமர் ராவணன் இலங்கையில் சீதை உள்ள அசோகவனம் பற்றிய விவரங்களை அறிந்து கொள்கிறார்.
சுகன் சார்தூலன் எனும் இரு அசுர மந்திரிகள் சுக்ரீவனிடம் வந்து ''சுக்ரீவா, ராவணன் சீதையை கடத்திக் கொண்டு வந்ததால் உனக்கென்ன நஷ்டம், சொல்லு, உடனே உனக்கு நஷ்ட ஈடு எதுவோ அதை ராவணேஸ் வரன் தீர்த்து வைக்கிறேன் என்கிறார். நீ நமது நண்பன். ஆகவே உன் சைன்யத்துடன் உன் ஊருக்கு திரும்பி போ '' என்கிறார்கள்.
கோபமடைந்த வானர வீரர்கள் சுகனை இரும்பு சங்கிலியால் பிணைத்து கட்டிவிட்டார்கள். சார்தூலன் தப்பி ஓடி ராவணனிடம் நடந்ததை சொல்கிறான்.
சமுத்திரராஜன் தன்னை இன்னும் சந்திக்க வரவில்லையே என்று ராமர் வியந்தார். வியப்பு கோபமாக மாறியது. தர்ப்பை பரப்பி அதன்மேல் படுத்து இரண்டு நாள் ப்ராயோ பவேசம் இருந்தார். மூன்றாம் நாள் காலை சமுத்திரராஜன் அலட்சியமாக இருப்பதால் கோதண்டத்தில் அஸ்திரத்தை பொருத்தி கடலை வற்றச் செய்ய முயலும் போது சமுத்திரராஜன் ஓடி வருகிறான்.
''அபயம் ஸ்ரீ ராமா '' என்னை மன்னியுங்கள். கடல் நீங்கள் இலங்கைக்கு செல்ல வழிவிட வைக்கிறேன் ''என்றான்.
'' சமுத்ரராஜா, , ஒரு தரம் அஸ்திரத்தை கோதண்டத்தில் பொருத்தினால் அஸ்திரம் எதையாவது ஒரு லட்சியத்தை அழித்த பிறகு தான் ஓயும். ஏதேனும் ஒரு இலக்கு ஒன்று சொல்லு. வேறு வழியில்லை'' என்கிறார் ராமர்.
''ஸ்ரீ ராமா, சமுத்திரத்தின் வட திசையில் த்ரும கல்பம் என்ற தேசத்தில் சில பாபிகள் என்னை வாட்டுகிறார்கள். அவர்களை ஒடுக்க வேண்டுகிறேன்'' என்றான் சமுத்திரராஜன். ராம பாணம் அவர்களை அழித்துவிட்டு ராமரின் அம்புறா துணிக்கு திரும்பியது.
நன்றியோடு வணங்கிய சமுத்திரராஜன் '' ஸ்ரீ ராமா, இந்த வானர சைன்யத்தில் உள்ள வீரன் நளன் விஸ்வகர்மாவின் புத்ரன். அவனை விட்டு அணை கட்ட சொல்லுங்கள். ஒரு முனிவர் சாபத்தால் அவன் விட்டெறியும் கற்கள் நீரில் மிதக்கும். முனிவர் சாபமாக கொடுத்தாலும் அது இந்த சமயத்தில் தேவையான வரம் இப்போது. '' என்று சொல்லிவிட்டு வணங்கி சென்றான்.
நளன் மூலம் சேது பந்தனம் கட்டும் முன்பு ராமர் விக்னேஸ்வர பூஜை செய்து ஒன்பது பாஷாண கற்களை நளன் கையால் நட்டு அங்கே ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்ய ஆஞ்சநேயனை அழைத்து ''காசிக்கு சென்று விஸ்வநாதர் ஆசியுடன் ஒரு சிவலிங்கம் கொண்டு வா. '' என்று அனுப்புகிறார் .ஹனுமான் நிமிஷத்தில் காசி சென்று விஸ்வநாதரை வணங்கி ராமர் வேண்டுதலை சொல்கிறார். சிவன் ரெண்டு லிங்கங்களை தரும்போது
'' ஹனுமா, நீ கேட்டதும் உடனே நான் ஏன் என்னை லிங்க வடிவில் உனக்கு தந்தேன் தெரியுமா? நானே தெற்கு திசையில் வர மனதில் எண்ணம் கொண்டேன். காரணம் ஏற்கனவே அகஸ்தியர் கேட்டுக் கொண்ட தாலும் இப்போது ராமனும் அழைக்கிறதாலும் .''
''அப்படியா சுவாமி? அகஸ்தியர் எப்போது உங்களிடம் வேண்டினார் ?''
''அகஸ்தியர் ஒருமுறை விந்திய பர்வதத் தின் அழைப்பை ஏற்று அதில் தங்கி உபசாரங்களை பெற்றார். விந்தியமலைக்கு தான் இந்த பூவுலகை தாங்கி நிற்பவன் என்கிற மமதை, கர்வம் இருப்பதை, அது இமயமலை,மேருமலை, உதயகிரி, அஸ் தமனகிரி, ஹேமகூடம், திரிகூடம் போன்ற மற்ற பர்வதங்களை இகழ்ந்து பேசியதில் அவருக்கு புரிந்தது. சூரியன் நாள் தோறு ம் வலம் வருவதால் தானே மேரு மலை பெருமை கொள்கிறது. இனி சூரியன் எவ்வாறு என்னை தாண்டி செல்கிறான் பார்க்கிறேன்?'' என்று வளர்ந்தது. சூரியனின் நித்ய பிரயாணம் இவ்வாறு தடை விந்திய பர்வதத்தால், தடைப்பட்டதால் சூரியன் பிரவேசிக்காத மற்ற இடங்களில் அந்தகாரம் சூழ்ந்தது. தேவாதி தேவர்கள் அகஸ்தியர் விந்தியமலைக்கு குரு என்பதால் அவர் விந்தியபர்வதனுக்கு அறிவுரை கூறி சூரியனின் பிரயாணம் தடையின்றி நடக்க வேண்டினார்கள்.
''பார்வதி, நானும் அகஸ்தியரிடம் நீங்கள் விந்தியமலைக்கு அறிவுரை செய்யுங் கள். தெற்கே சென்று என்னை பூஜியுங்கள், ராமனும் நான் வரவேண்டும் என்று கேட்கிறார். விரைவில் நானே வருவேன் என்று சொல்லி அனுப்பினேன்'' என்று சொன்னார் பரமேஸ் வரன்.
அகஸ்தியர் விந்தியமலைக்கு லோபாமுத்திரை எனும் தனது மனைவியோடு செல்கிறார். அவரை சிரம் தாழ்த்தி வணங்குகிறான் விந்திய பர்வதன் .
''விந்தியா உன் பக்தியை மெச்சினேன், இப்படியே தலைகுனிந்து தரைமட்டமாக நான் திரும்பிவரும் வரை இருப்பாயாக'' என்று ஆசிர்வதித்து தெற்கே பிரயாணமானார் அகஸ்தியர். இன்னும் அவர் வடக்கே திரும்பவில்லை. விந்தியனும் குனிந்த தலை நிமிரவில்லை. சூரியனும் தங்குதடையின்றி தனது நித்ய பயணத்தை நடத்திக்கொண்டு தான் வருகிறான்''.
ஹனுமார் சிவலிங்கங்களுடன் திரும்பி வர தாமதமாகியதால், முகூர்த்த காலம் தப்பு முன்பு சேது பந்தனம் ஆரம்பிக்கும் இடத்தில் தானே மணலால் ஒரு லிங்கம் செய்துவிட்டார். பூஜை முடிந்தபின் ஹனுமார் இரு லிங்கங்களோடு வருகிறார். ஒன்று தனக்கு ஆத்மலிங்கம், மற்றொன்று ராமருக்காக.
நீங்கள் கேட்ட லிங்கத்தை பிரதிஷ்டை செய்யலாமா ஸ்ரீ ராமா? ''என்று ஹனுமான் கேட்டபோது
''உன்னால் முடிந்தால் இந்த மணல் லிங்கத்தை அப்புறப்படுத்திவிட்டு நீ கொண்டு வந்த லிங்கத்தை பிரதிஷ்டை செய் ''
என்கிறார் ராமர். எவ்வளவோ பலத்துடன் முயன்றும் ஹனுமானால் மணல் லிங்கத்தை அசைக்க கூட முடியவில்லை. ராமரை வணங்கி கைகட்டி நிற்கிறார். இலங்கை சென்று வெற்றிகரமாக ராவணன் சேனையை அழித்து, லங்கையை எரித்ததில் அனுமாருக்கு தனது பலத்தில் கர்வம் இருப்பதை ராமர் கவனித்திருந்தார். அதைப் போக்க முற்பட்டார். அதனால் தான் இந்த சோதனை.
''இந்த மணல் லிங்கத்துக்கு சற்று வடக்கே நீ கொண்டுவந்த காசி லிங்கத்தை பிரதிஷ்டை செய் '' என அருள்கிறார் ராமர். விஸ்வேஸ்வர லிங்கம் ராமேஸ்வரத்தில் ராமநாத சுவாமி ஆலயத்தில் பூஜிக்கப்படாமல் இருக்கிறது.
பார்வதியிடம் பரமேஸ்வரர் ''ராமேஸ்வர ராமநாத லிங்கத்தில் நான் எப்படி ஆவிர்பவித்தேன் என்பதை உனக்கு சொல்கிறேன் கேள்'' என்றதால் நாமும் கேட்போம்.
No comments:
Post a Comment