யாத்ரானுபவம் J K SIVAN
அதிசயங்கள் நிறைந்த அரனாலயம்
திருப்பூர் உறவினரை சந்திக்க செல்லும்போதெல்லாம் கோயம்பத்தூர் கோவை புதூருக்கும் அவசியம் செல்வேன். அங்கே எப்போதோ கட்டிய ஒரு வீட்டை வாடகைக்கு விட்டிருந்ததால் அதன் க்ஷேமத்தை விசாரிக்க செல்வேன். ஏதாவது ஒரு செலவு வைத்துக்கொண்டு காத்திருக்கும்.
திருப்பூர் பஸ் கோயம்புத்துர் காந்திபுரத்தில் கொண்டு இறக்கி விடும். அங்கிருந்து பேரூர் வழியாக செல்லும் பஸ்கள் அடிக்கடி செல்லும். நிச்சயம் அரைமணிக்கு ஒன்று ஓடும். கோவைப்புதூர் செல்லும் வழியில் 10 கி.மீ. தூரத்தில் தான் பேரூர். அங்கே பஸ் ஒரு பழைய சிவன் கோவிலை காட்டி விட்டு சில நிமிஷங்கள் நின்று தியானித்து விட்டு தான் என்னை கோவைப்புதூர் தூக்கி செல்லும். சிவன் கோவில் பெயர் பச்சையில் பட்டீஸ்வரர் ஆலயம் என்று பார்த்ததிலிருந்து ஒருநாள் இறங்கி சிவனை தரிசிக்க மனதில் விருப்பம் வந்து ஒரு தடவை பஸ்ஸிலிருந்து பேரூரில் இறங்க வைத்தது..
முதல் முறையாக பல வருஷங்கள் முன்பு பேரூரில் இறங்கினேன்.
சிறுவாணி செல்லும் சாலையில் உள்ள பெரிய ஊர் பேரூர். ஐந்து நிலை ராஜகோபுரம் கம்பீரமாக உள்ளது. அந்தப்பக்கம் அவ்வளவு பெரிய கோவில் வேறு எதுவும் கண்ணில் படவில்லை. புராதன பெயர் பிப்பலாரண்யம் (அரசங்காடு) . ஆங்கிலத்தில் PIPAL என்பதும் சமஸ்க்ரித பிப்பலமும் ஒன்று . அரசமரம். பேரூரின் வேறு பழம் பெயர்கள் காமதேனு பூரி, பட்டிபுரி, ஆதிபுரி, தக்ஷிண கைலாசம்,தவசித்தி புரம் , ஞானபுரம், சுக்லமாபுரம், கல்யாணபுரம், பசுபதி புரம். மேலை சிதம்பரம் . இவ்வளவு புகழும் பெருமையும் கொண்டு சிம்பிளாக இப்போது பேரூர்.
அற்புதமான இந்த கோவில் கரிகால் சோழன் காலத்தை சேர்ந்தது. ஆயிரம் வருஷங்களுக்கு மேலான புராதன கோவில். எனக்கு முன்னே அப்பர், சுந்தரர், சம்பந்தர், அருணகிரிநாதர், கோரக்க சித்தர், கச்சியப்பர், போன்றவர்கள் நடந்தே வந்திருக்கிறார்கள். தேவார பாடல் பெற்ற ஸ்தலம். ஒரு கோவிலையும் விட்டு வைக்காத ராஜராஜன் இதன் அர்த்தமண்டபம், மஹா மண்டபம் எல்லாம் அமைத்தான். நிறைய மானியங்கள் விட்டிருக்கிறான். சுவற்றில் ஜாக்கிரதையாக அதெல்லாம் கல்வெட்டுகளாக எழுதி இருக்கிறது. பின் வந்த விஜயநகர நாயக்கர்கள் பங்கும் இருக்கிறது. கொங்கு அரசர்களும் மக்களும் இதை பராமரித்து இன்று நமக்கு இந்த அற்புத கோவில் கிடைத்துள்ளது. ஆலயத்தின் உள்ளே கனகசபை அழகாத்ரி நாயக்கன் என்ற மன்னனால் 17ம் நூற்றாண்டு நிர்மாணிக் கப்பட்டது. அப்புறம் தோன்றியவை கல்யாண மண்டபம், அறுபத்துமூவர் மண்டபம் போன்றவை. புதை பொருள் ஆராய்ச்சி தோண்டிப்பார்த்தபோது எப்படி ரோமானியர்களின் நாணயங்கள் கூட இங்கே கிடைத்தது? அவ்வளவு பேர் வந்த ஆலயமா இது? சோழர்களைத்தவிர பல்லவர்கள் பாண்டியர்களும் மைசூர் ராயர்கள் கூட இந்த ஆலயத்தோடு சம்பந்தப்பட்டவர்கள். ஹைதர் அலி கூட மானியம் வழங்கி இருக்கிறார். நாம் தாம் இந்த மாதிரி புராதன ஆலயங்களுக்கு செல்லாதவர்கள்.
கோவிலின் தூண்கள் சிற்பங்கள் நிறைந்து ஆலய சரித்ரம் புராணம் எல்லாம் கண்ணால் தெரிந்துகொள்ள உதவுகின்றன. அசாத்திய சிற்பக்கலை. ஒரு கல்வெட்டு ஒரு சமயம் யாரோ தண்ணீர் பிரச்னையில் அருகே ஓடும் நொய்யல் ஆற்றின் கரையை உடைத்ததால், அதை சீராக்கும் செலவை யார் எவ்வளவு கொடுக்கவேண்டும் என்று சொல்கிறது நம்மால் படிக்க முடியாத தமிழ்.
பட்டீஸ்வரர் ஸ்வயம்பு. அம்பாள் மரகதவல்லி, தமிழில் பச்சை நாயகி. சைவ வைணவ ஒருமைப் பாடு கொண்ட ஆலயம்.
பட்டீஸ் வரர் கிடைத்தபோது அதிசயமாக தான் கிடைத்திருக்கிறார். தேகத்தில் ஐந்து தலை நாகம், நாக யக்னோபவீதம். நாகமே பூணல். ஜடாதாரி. கங்கை. அரவம். அடிமுடி தேடும் அன்னம், வராஹமாக ப்ரம்ம விஷ்ணு. தலையில் பசுவின் கால் குளம்பு வடு . பின்னல் அளவற்ற பூச்சொரியும் பன்னீர் மரம் ஸ்தல விருக்ஷம். .
ஆலயத்தின் உள்ளே: ஆஞ்சநேயர், ஸ்ரீமாய
கிருஷ்ணர், கொடிமரத்தை ஒட்டி நந்திகேஸ்வரர் . மேற்கே சென்றால் ஒரு பிரஹாரம் , தெற்கு நோக்கி ஒன்று வடக்கு நோக்கி ஒன்று. நடராஜர் சன்னிதியை அடுத்து கோவில் யானை குளிக்கும் இடம் வரை நீளமாக.
பிராஹாரத்தில் நடராஜர் சிவகாமி அம்மன் தரிசனம் கிடைக்கும். கன்னிமூலை கணபதி இருக்கிறார்.
கொடி மரம், பலிபீடம் நமஸ்கரித்து உள்ளே போனால் நந்திகேஸ்வரர், அப்புறம் மகா மண்டபம், அர்த்த மண்டபம், கற்பக்ரஹம். அர்த்த மண்டபத்தை தாண்டி கற்பகிரஹத்தில் தான் தீபாலங்காரம். ஐந்து தலை நாகம் குடையாக லிங்கஸ்வரூபத்தில் பட்டீஸ்வரர். ஸ்வயம்பு ஆதி லிங்க மூர்த்தி தரிசனம்.
பட்டீஸ்வரர் சன்னிதியின் பிரகாரத்தில் கிழக்கு மேற்காக கண்ணுக்கு இனிமையாக வரிசையாக 63 நாயன்மார்கள் கோஷ்டத்தில் தக்ஷிணாமூர்த்தி. மூலவர் பின்புற கோஷ்டத்தில் லிங்கோத்பவர். வடக்கே சன்னிதியில் வள்ளி-தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமி. .
கிழக்கு பக்கம் பட்டீஸ்வரருக்கு வடக்கே துர்க்கைசந்நிதி. சண்டிகேஸ்வரர். கிழக்கு மூலையில் நாய் வாகனம் இல்லாத பைரவர், முக்தி தலம் என்பதால் ‘ஞான பைரவர்’. .
இந்த ஆலய பாலதண்டாயுதபாணியை தரிசித்து அருணகிரியின் திருப்புகழ் உள்ளது. முருகனுக்கு வடக்கே காசி வடக்கே காசி விஸ்வநாதரும், தெற்கே விசாலாட்சி அம்மன். பின் பக்கம் சென்றால் கோரக்க சித்தர் தவம் செய்த இடம் . இங்கே வில்வ மரத்தடியில் பக்தர்கள் உட்கார்ந்து தியானம் பண்ணுவது வழக்கம்.
இந்த ஆலயத்தில் பிராஹாரத்தில் ஆஞ்சநேயர், அம்மன் மாறாதவல்லி சந்நிதிக்கு முன் வதாக்கி வரத ராஜப்பெருமாள் ங்கு, சக்கரதாரி யாக நிற்கிறார். தெற்கே ஒரு தனி சன்னிதியில் துர்க்கை அருள் பாலிக்கிறாள். ராகுகால பூஜைக்கு பெண்கள் கூட்டம் ஜாஸ்தி. பராசக்தி மரகதவல்லி, பச்சைநாயகி அம்மன் கிழக்கு நோக்கி சதுர் புஜங்களோடு, அபாய வரத ஹஸ்தங்களோடு, மற்ற இரண்டில் தாமரை மலர் ஏந்தி நிற்கிறாள்.
அற்புதமான கலை சிற்பங்கள் நிறைந்த கனகசபை மண்டபம் முன் கோமுனி, பட்டிமுனி ஆகியோரை காணலாம்
மண்டப நான்கு தூண்களும் நான்கு வேதங்கள் என்பார்கள். நர்த்தன கணபதி, ஷண்முகம், அக்னி வீரபத்திரர், அகோர வீரபத்திரன், ஆலங்காட்டு காளியம்மன், யானையுரி போர்த்த சிவன், பிக்ஷாடனர், ஊர்த்துவ தாண்டவ சிவன் எல்லோரையும் . அடே தெய்வீக சிற்பி எங்கிருந்தாலும் வாழ்க. மண்டப சுவரில் சிவபெருமானின் திரு விளையாடல்கள் வண்ண ஓவியங்களாக. இரும்பு சங்கிலி போல் பின்னிப் பிணைந் கற்களில் செதுக்கப்பட்ட சங்கிலி, சிற்பியின் கற்பனா சக்தி அதற்கேற்ப அமைந்த கலைத்திறனை பறை சாற்றுகிறது. இதை இன்னும் ஒரு ஆயிரம் வருஷம் நாம் பாது காக்க வேண்டாமா.
தலைப்பில் ''அதிசயங்கள் நிறைந்த'' என்று சொன்னதால் அவை என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டாமா? அதை சொல்லாமல் எப்படி கட்டுரையை நிறைவு செய்வது.?
1. இறவாத பனை?? எவர் க்ரீன், என்றும் பசுமை மாறாத, இளமையான மார்க்கண்டேய பனைமரம் ஒன்று இங்கே நிற்கிறது... இந்த பனைமரத்தின் பட்டையை இடித்து கஷாயம் பண்ணி குடித்தால் எல்லா வியாதிகளும் ஓடிவிடும் என்று சொல்லியும் எப்படி இந்த மரத்தை விட்டு வைத்திருக்கிறார்கள்? பாதுகாக்கும் நிர்வாகிகளுக்கு நன்றி. தூரத்தி லிருந்து பார்க்க மட்டும் அனுமதி யுங்கள், பட்டையை கிளம்பிவிடுவார்கள். அடுத்த தலைமுறைகளுக்கு இறவாத பனை பார்ப்ப தற்கு வேண்டாமா?
2. பிறவாத புளி ? இங்கே ஒரு புளியமரம். இந்த மரத்தின் புளியங்கொட்டை மீண்டும் முளைப்ப தில்லை யாம். வெளி நாட்டு நிபுணர்கள் கூட வந்து எப்படியாவது இந்த மரத்தின் புளியங் கொட்டைகளை விதைத்து செடி காட்ட முயற்சி செய்து '' சே இந்த பழம் புளிக்கும் ''என்று தோற்று திரும்பினதாக சொல்கி றார்கள். ஆனால் மரம் இன்றும் இருக்கிறது.
3 புழுக்காத சாணி: சாணி ஒரு சானிடைசர் SANITIZER என்று இப்போது புரிகிறது. ஏன் வீட்டு வாசலில் சாணம் தெளித்தார்கள் என்று. மாட்டு கொட்டகைகளில் சாணி குழிகளில் சாணத்தில் புழுக்கள் தோன்றி எருவாக பயன்படுகிறது. இந்த ஊரில் என்ன அதிசயம் என்றால் இந்த பேரூர் எல்லைக்குள்ளே இருக்கும் எந்த இடத்திலும் எத்தனை நாள் ஆனாலும் ஆடு மாடு இதன் சாணத்திலும் புழுக்கள் தோன்றாது. ஏன் எப்படி என்று என்னை கேட்கவேண்டாம்
4. எலும்பு கல்லாகிறது. எலும்பு கால்சியம் CALCIUM கால செல்ல பூத்து சாம்பலாகிவிடும். ஆனால் பேரூரில் யாராவது இறந்து விட்டால் அவர்கள் உடல்களை எரித்தபின் எலும்பு களை நொய்யல் ஆற்றில் இட்டால் புண்ணி யம் என்று நம்பிக்கை. அந்த எலும்புகள் நாளாவட்டத்தில் குறைவதில்லை. கல்லாக மாறிவிடுகிறதாம். ஏன் எதற்கு ? அதிசயத்தில் இதற்கு பதில் தேடவேண்டாம்.
5. வலது காது மேல் நோக்கி வைத்து மரணம் , பேரூரில் எந்த ஜீவராசி மரணமடைந்தாலும் , அதன் வலது காது மேலே பார்த்து இருக்கும்.
ஒரு கிசுகிசு. இந்த அதிசயங்களை நாம் மட்டும் அல்ல. ஒரு காலத்தில் திப்பு சுல்தான் கூட ஒரு திருவாதிரை அன்று வந்து பார்த்து விட்டு கோவிலை இடிக்காமல் திரும்பி போயிருக்கிறான்.
இந்த ஆலயத்தை பற்றி சில ருசிகர குட்டி குட்டி புராண கதைகள் இருக்கிறது அவற்றை இன்னொருமுறை இந்த கோவிலை பற்றி எழுதும்போது சொல்கிறேன்.
No comments:
Post a Comment