Saturday, June 6, 2020

KARNATAKA TOUR OCT 1 2010




























































யாத்ரானுபவம்     J K   SIVAN   

            கொட்டும் மழையில் கர்நாடக புனித பயணம்  
 

பத்து வருஷங்களுக்கு முன்பு  நான் எழுத ஆரம்பிக்கவில்லை.  எனக்கு ஒய்வு நேரம் கிடைத்தது கொஞ்சம் தான். நான் கப்பல் நிர்வாக ஆலோசகர் பணியில் இருந்தேன். பணம் தேடினேன். ஆன்மீக  நாட்டம் அப்போது  ஒய்வு நேரத்தில்  ஆலயங்களுக்கு செல்வது. தனியாக அல்ல. ஒத்த மனம் கொண்ட முதியவர்களுடன்.  ஏதாவது ஒரு நாள் தேர்ந்தெடுத்து  15-20 பேர் சேர்த்துக்கொண்டு ஊர்களுக்கு செல்வோம். ஆலயங்கள் தரிசனம்  செய்வோம். அதைப் பற்றி குறிப்பெடுக்கும்போது தான் எழுதுவதில் நாட்டம் வந்தது.  அப்புறம்  வெளியே போவது குறைந்து விட்டது. அதற்குள் ஆயிரக்கணக்கான  ஆழங்களை தரிசித்தாகிவிட்டது.

அப்படி  சென்ற ஒரு புனித பயணம் நினைவுக்கு வருகிறது. இது 10 வருஷங்களுக்கு முன்பு நடந்தது......

எங்காவது எப்போதாவது இருபது பேர் சேர்ந்தால் எதைவேண்டுமானாலும் சாதிக்கலாம் அல்லவா? அதிலும் பெண்கள் பெரும்பான்மையானால் சொல்லவும் வேண்டுமா? இதுதான் உண்மையிலேயே முப்பதாம் தேதி செப்டம்பர் 2010 அன்று  நடந்தது. சென்னை மங்களூர் ரயிலில் பிரயாணம் செய்த இருபது  பேரும்  அக்டோபர் முதல் தேதி மங்களூர் சென்றபோது தான் தெரிந்தது  ஒரு ரகசியம்..... எங்களுடன் மற்றொருவரும் தொடர்ந்து நான்குநாட்களும் இடைவிடாமல் தொடரப் போகிறார் என்று ஆரம்பத்தில் எதிர்பார்க்கவில்லை.  அவர் வேறு யாரும் இல்லை. ஸ்ரீமான் வருண பகவான் தான்.  மங்களூரில் அவருடன் தான் மங்கலாதேவி கோவிலுக்கும் கோகர்ணேஸ்வரர் கோவிலுக்கும் சென்றோம்.

கர்நாடக தேச கோவில்களில் மிகவும் சிரத்தையுடன் பக்தியுடன் வழிபடுகிறார்கள். காசு அங்கு பிரதானமாக இருக்கவில்லை. உடுப்பி ஸ்ரீ கிருஷ்ணன் கோவிலுக்கு செல்லும் முன்பு வழியில் மலைப்பாதையில் காடில் என்கிற ஒரு ஊரில் ஜலதுர்கா தேவி கோவில் இருக்கிறது. இருபுறமும் பெருக்கெடுத்து ஓடும் நதிக்கிடையில் ஜலதுர்கா  தேவி ஆலயம்  ஒரு தீவு போல் காட்சி யளிக்கிறது. கொட்டும் மழையில் பராசக்தியின் அருள் பார்வையுடன் சூடாக ரசம் சாம்பார் சாதமும் சுட சுட பாயசமும் கொடுத்தால் யாராவது வேண்டாமென்பர்களா?  அதுவும்  காசு கேட்காமல் வயிறு நிரம்ப.... 

உடுப்பியில் ஸ்ரீ கிருஷ்ணனை சாளரம் வழியாகதான் அந்தக்காலத்தில் ஸ்ரீ மத்வாச்சார்யாரும், ஸ்ரீ கனகதாசரும் கண்டதுபோல் நாமும் கண்டு மகிழ்ந்தோம். அழகிற்கு மறுபெயர் கிருஷ்ணன் என்பது மறுக்க முடியாத உண்மை. கர்நாடகாவில் எங்குசென்றாலும் கோலி பஜ்ஜி என்று யாராவது கொடுத்தால் அதை மறுப்பவன் அதிர்ஷ்டமில்லாதவன். மங்களூர் போண்டாவுக்கு தான் அந்த ஸ்பெஷல் பெயர் அங்கு. 

எந்த காபிகடையில் நுழைந்து சூடாக காபி சாப்பிட்டாலும் அது அமிர்தம். ஐந்து ரூபாய்க்கு  ஒரு  பெரிய டவரா டம்ப்ளர் கமகமக்கும்  பில்டர் FILTER அருமையான காபி.     சாப்பாடும் அந்த  ஊர்  மக்கள் மாதிரி இனிக்கிறது. . ரசமோ, சாம்பாரோ எது சாப்பிட்டாலும்  இனிப்பு கலந்தது தான். 

 அரபிக்கடல் ஓரத்தில் முருதேஸ்வர் என்கிற ஒரு அழகிய ஸ்வர்க பூமி உள்ளது. அதை பாதுகாப்பதுபோல பிரம்மாண்டமாக யோக   நிஷ்டையில்  உட்கார்ந்திருக்கும்  சிவன் வானுக்கும் பூமிக்குமாக  இருக்கிறார்.  நான் உன்னைவிட பெரியவன் என்கிற பாவனையில் கோவிலின் கோபுரம் நம் கழுத்தை ஒடிக்க வைத்து  பார்க்க செய்கிறது.  அது ஒன்று தான் நாங்கள் தமிழர் அத்தனைபேரும் தலைநிமிர்ந்து நின்ற இடம்.
 காந்தி பிறந்த இரண்டாம்தேதி அக்டோபர் அன்று கொல்லூர் மூகாம்பிகையை காண புறப்பட்டோம். கொல்லூருக்கு செல்லுமுன் தயவு செய்து எலும்பு எத்தனை என்று மட்டும் எண்ணிக்கொள்ளுங்கள். எத்தனை எண்ணினீர்களோ  குறைந்தது அது  இரட்டிப்பாக  ஆகியிருக்கும்.  புதிதாக அல்ல, இருப்பது துண்டாகி.   இயற்கையன்னை மலைப்பாதையில் அப்படி எங்களுக்கு ஒரு பரிசளித்தாள் . அன்னையைக்  காண  ஆடிக் கொண்டே சென்றோம். 

சிருங்கேரியில் மலைகளின் இடையில் துங்கபத்ரை ஆற்றின் கரையில் அமைதி தவழும் ஸ்தலம் தேடி சாரதா தேவி  இடம் பிடித்து அமர்ந்தவாறு  பக்தர்களை வரவேற்கிறாள். என்ன அழகு முகம்! கண்களில் தான் எத்தனை கருணை வெள்ளம். வீணையுடன் காட்சி தந்து உள்ளத்தை கொள்ளை கொள்ளும் நேர்த்தி.  இது உண்மையிலேயே   வாழ்க்கையில் மறக்கமுடியாத ஒரு  அனுபவம். நுங்கும் நுரையுமாய் ஓடும் துங்கபத்ரை மேல் ஒரு பாலம். கடந்து சென்றால் குருநிவாசத்தில் ஒரு ஆச்சரியம். 

இன்னும் ஐந்து நிமிஷத்தில் ஸ்ரீ சிருங்கேரி சாரதாபீட ஜகத்குரு பாரதி தீர்த்தர் வந்து தரிசனம் கொடுப்பார் என்று கேள்விப் பட்டு மண்டபத்தில் வரிசையில் அமைதியாக   அமர்ந்தோம்.  ரொம்ப  பெரிய  ஹால்.  நல்ல வெளிச்சம்,.  குளிர்ந்த காற்று.  உடலும் மனமும் குளிர்ந்தது அப்போது தான்.   

தெய்வம் மெதுவாக நடந்து வந்தது. அனைவர்க்கும் ஆசி வழங்கியது. தவத்தின் வலிமை முகத்தில் கண்களில் பீறிட்டுக் கொண்டு வெளிவந்தது. அனைத்தும் அறிந்த மகான் அமைதி தவழும் புன்னகையுடன் ஒவ்வொருவரையும் கண்டு ஆசியளித்தார். உள்ளும் வெளியும் அமைதி அடையவைக்கும் இன்ப சூழ்நிலை. நாங்கள் சென்னையிலிருந்து வந்தோம் என்று தமிழில் சொன்னேன். தமிழில்  ''ஆஹா வாங்கோ''  எல்லோருக்கும் புஷ்பம் எனக்கு ஒரு பெரிய  ஆரஞ்சு பழம். நான் பாக்கியசாலி எப்போதுமே. 

ஆற்றைக்  கடந்து விடுதி அடைந்தோம். அந்த இரவு மனநிம்மதியை அள்ளி தந்தது. காந்திஜிக்கு நன்றி. 

மகேஸ்வரியில் (இதுதான் எங்கள் மினிபஸ் பெயர்) அமர்ந்து மழை தொடர மூன்றாம் தேதி காலை தர்மஸதலாவை  தேடி சென்றோம். இல்லை இல்லை ஆடி ச் சென்றோம். கர்நாடக அரசே பயணிகள் மேல் கொஞ்சம், கருணை வையுங்களேன். வாகனங்கள் படும் அவதியும் அதனுள் மக்கள் அல்லாடுவதையும் கூடிய சிக்கிரம் நிவர்த்தி செய்ய மூகாம்பிகையும் சாரதாதேவி யும் உங்களுக்கு அருள் புரியட்டும். இரவுக்குள் எப்படியாவது மேல்கோட்டை, திருநாராயணபுரம்,  சென்று தங்கவேண்டும் என்ற எண்ணம் நிறைவேற வில்லை. மக்கள் தீர்ப்பு மகேஸ்வரன் தீர்ப்பு என்பார்கள். ஆனால் மகேஸ்வரி தீர்ப்பு வேறு விதமாக இருந்ததே! நன்றாக ஓடிக்கொண்டிருந்த மகேஸ்வரி CLUTCH  க்ளச் வயர் அறுந்து இரவு ஒரு பெட்ரோல் பங்க் எதிரில் நின்றுவிட்டது. நல்லவேளை அந்த தெருவில் விளக்கு வெளிச்சம் இருந்தது. நைட் வாச்மன் தன்னுடைய டார்ச் விளக்கையும் கொடுத்து பெண்கள் அனைவருக்கும் இயற்கை உபாதையிலிருந்து மீள  உதவினார். . அவர் வாழ்க! 

வேறு வழியின்றி ஒரு டாட்டா சபாரி வண்டியை   வாடகை பேசி  இருபது பேரையும்  அதில் அமுக்கி அடைத்து புளிமூட்டையாய் ஹிட்லர் யூதர்களை நடத்தியதுபோல் அடைத்துக்கோடு   மேல்கோட்டை  சென்றோம். இரவு முடிந்து மணி இரண்டாகிவிட்டது. எங்களில் ஒரு வீராங்கனை எங்கோ சுற்றி ஒருவரை அணுகி ஒரு சத்திரத்தில் இடம் பிடித்தார். கடுங்குளிரில்  எங்கள்  குழுவினர் மஞ்சுளா செய்த உதவி ராணி மங்கம்மா பல சத்ரங்களை கட்டியதைவிட மேல் என்று என்னுடன் வந்தவர்கள் இன்னும்  சொல்கிறார்கள் .

 அக்டோபர் நான்காம் தேதி காலையில் குளித்து சூடான காபி பருகி மேல்கோட்டை  திருநாராயண புர செல்வபிள்ளையை வணங்கி வெளியே வந்தபோது மகேஸ்வரி ரிப்பேர் ஆகி வந்து நின்றது. வாயு மனோவேகம் ஆக கிளம்ப நல்லவேளையாக வழியில் இடர்ப்பாடுகள் இல்லாததற்கு ஸ்ரீ ராமானுஜர் தான் காரணம். எனென்றால் தொண்டனூர் என்ற பெயரிருந்தாலும் மக்கள் மத்தியில் இன்று தொண்ணுறு என்று அழைக்கப்படும் ஊருக்கு நாங்கள் சென்றபோது மணி பன்னிரண்டு நடுபகல். 

ஸ்ரீ கோபாலகிருஷ்ணன் கோவில், ஸ்ரீ நரசிம்மன் கோயில், தாமுகந்த மேனியுடன் காட்சி தரும் ஸ்ரீ ராமானுஜர் திருவுருவம், ஆதிசேஷனாக ஆயிரம் நாவுடன் சமணர்களுடன் வாதிட்ட அவர் கோபாக்னியுடன் அரவம்போன்ற முகம்படைதவராக காட்சியளித்தது கண்முன்னே என்றும் நிற்கிறது. ராமானுஜரின் பை  ஒன்று ஆயிரம் வருஷமாக தொங்குவதை தொடாமல் பார்த்தோம். 

வரும் வழியில் நாகமங்களா என்ற சிற்றூரில் பாஞ்சஜன்யத்தில் நாகம் சுற்றிக்கொண்டு சங்கம் சக்ரம் இடம் மாற்றி ஏந்தியவாறு  பெருமாள் காட்சியளிக்கிறார். 

பாண்டவபுரா என்ற இடத்தில்  உணவருந்தி (எல்லாம் இனிப்புதான்!) மைசூர் வந்தடைந்தோம். நிமிஷாம்பாள் தேவி கோவில் சிறிதாக இருந்தாலும் கிர்த்தியில் பெரியது. அழகிய அம்பாள் ஆனந்தமாக சில நிமிஷத்தில் காட்சி தந்தாள். கடைசியாக ஸ்ரீரங்க பட்டினம் ரங்கநாதரை சேவித்து விடைபெற்றோம். திப்புசுல்தானை நினைக்காமல் இருக்க முடிய வில்லை

 வெற்றிகரமான இந்த புனித பயணம் சென்னையில் அக்டோபர் ஐந்தாம் தேதி  ரயில் கொண்டு வந்து சேர்த்ததும்  நீங்கா நினைவாக மனதில் இடம்பிடித்தது;

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...