ஆனந்த ராமாயணம் J K SIVAN
14 சம்பாதி சொன்ன சேதி
கிஷ்கிந்தையில் சுக்ரீவன் ராஜாவாக பரிபாலனம் செயகிறான். மந்திரி ஆஞ்சநேயன் அறிவுரைப்படி எல்லா வானரர்களையும் திரட்டுகிறான். மழைக்காலம் முடிந்து சரத் காலம் துவங்கியது. சுக்ரீவன் வேகமாக செயல்படவில்லை என ராமருக்கு கூட கோபம் வருகிறது.
''லக்ஷ்மணா, சுக்ரீவனுக்கு அவன் கொடுத்த வாக்கை நினைவு படுத்து. வாலியிடம் அவனும் போகவேண்டுமா என்று கேள்?''
லட்சுமணனின் கோபச்சொற்கள் சுக்ரீவனை துளைக்க அவன் வானர சேனை,18 பத்ம வியூக அதிபதிகளுடன் ராமரிடம் ஓடிச்சென்று ஆஜராகிறான். ராமர் சேனைகளை பிரித்து ஜாம்பவான், அங்கதன், ஹனுமான், நளன் , சுஷேணன், சரபன் , மைந்தன் ஆகியோர் தலைமையில் தெற்கே சீதையை தேட அனுப்புகிறார். மற்றவர்கள் மற்ற மூன்று திசைகளில் தேட அனுப்பப்படுகிறார்கள். சுக்ரீவன் அவர்களுக்கு ஒரு மாத கால கெடு கட்டளையிடுகிறான். அதற்குள் சீதை இருக்குமிடம் தேடி கண்டுபிடித்து சொல்லவேண்டும். கெடுவை மீறியவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.
ராமர் அனுமனிடம் தனது கணையாழியை அனுமனிடம் கொடுத்து ''ஹனுமா, இதை சீதையை கண்டுபிடித்து ரகசியமாக கொடு'' என்று அனுமனுக்கு மந்த்ரோபதேசம் செய்கிறார். ராமரை வலம்வந்து வணங்கி ராமர் மந்திரம் ஜபித்துக்கொண்டே சைன்யங்களோடு தென் திசை நோக்கி செல்கிறார்.
''ஹனுமா, சித்ர கூட பர்வதத்தில் மனோசிலை எனும் ஒளஷதியால் நான் சீதையின் கன்னங்களில் கொடி எழுதியதை சீதைக்கு அடையாளமாக ஞாபகப் படுத்து ''
மற்ற திசை சென்றவர்கள் ஒரு மாத காலத்தில் சீதையை காணவில்லை என்று திரும்பி வந்து தெரிவித்துவிட்டார்கள் . தெற்கு திசை சென்ற அங்கதன் தலைமையிலான சைன்யம் காடு மலைகள் கடந்து வழியில் கண்ட ராக்ஷதர்களை கொன்றார்கள். தாகத்தில் தவிக்கும்போது ஒரு குகையிலிருந்து பறவைகள் ஈரமாக நனைந்து வெளி வருவதை கண்டு குகையில் நுழைந்து 18 நாள் இருட்டில் அலைந்து கடைசியில் ஜோதி பிரகாசமான ஒரு இடம் தெரிய அங்கே சென்று ஒரு யோகினியை சந்திக்கிறார்கள்.
சுயம்பிரபை என்ற அந்த தேவஸ்த்ரீ ராமர் வரும் வரை அந்த குகையில் தங்கி அவரை வணங்கியபிறகே விண்ணுலகம் செல்வேன்'' என்கிறாள்.
'' உங்களுக்கு என்ன உதவி தேவை சொல்லுங்கள் செயகிறேன்?''
''அம்மா, நாங்கள் இந்த குகைக்குள் வந்து பல நாள் ஆகிவிட்டது. எங்களுக்கு அவசர ஜோலி இருக்கிறது.எங்களை எப்படியாவது வெளியேற்றுங்கள்.
''கண்ணை மூடிக்கொள்ளுங்கள்'. ஒரு க்ஷண காலம் கழித்து கண்ணைத்திறவுங்கள்''
கண்ணை திறந்தவர்கள் அத்தனைபேரும் வெளியில் காட்டில் இருந்தார்கள். சுயம்பிரபை பின்னர் ராமரை சந்தித்து வணங்கி விண்ணுலகம் சென்றாள் .
''அடாடா குகையில் பல நாள் வீணாக கழிந்துவிட்டதே. முப்பது நாளில் நாம் சீதையை கண்டுபிடிக்கவேண்டுமே ' இன்னும் சில நாட்களே இருக்கிறது. சுக்ரீவன் கொன்றுவிடுவானே. நாமே அக்னிப்ரவேசம் செய்து விடுவோம்.''
ஜாம்பவான் ஹனுமான் முதலியோர் ராமரின் ப்ரபாவத்தை சொல்லிக்கொண்டு இன்னும் இருக்கும் சில நாளில் சீதை தென்படவேண்டும் என்று வேண்டிக்கொண்டு நடக்கிறார்கள். அவர்கள் ராம பிரபாவம் சொல்வதை ஒரு பெரிய மலை போன்ற உருவம் கொண்ட வயதான கழுகு கேட்டுக்கொண்டிருந்தது. அவர்கள் ராமர் ஜடாயுவுக்கு அந்திம கிரியை முடித்த்து மோக்ஷம் தந்ததை சொல்வதை கேட்ட அந்த கழுகு ஓடிவந்தது. அவர்களை உணவாக கொள்ள எண்ணம்.
''யார் நீங்கள் என் சகோதரன் ஜடாயுவை பற்றி பேசுவது'' அதன் பெயர் சம்பாதி. வானர வீரர்கள் ஜடாயு மரணம் பற்றி சொன்னதும் தனது தம்பியான ஜடாயுவுக்கு நீர் அஞ்சலி அஞ்சலி செலுத்தி ''நாங்கள் சீதையை தேடி செல்கிறோம் '' என்றதை கேட்டு ''இலங்கை செல்வதானால் நூறு காத வழி இந்த சமுத்திரத்தை தாண்டி செல்ல முடியுமா உங்களால்? எனக்கு இறக்கைகள் இல்லை, இருந்தால் நானே உங்களை சுமந்து செல்வேன் '' சீதை இருக்குமிடத்தை இந்த மலை மேல் இருந்தே என்னால் பார்க்கமுடியும்..இலங் கையில் அவள் இருக்குமிடம் தெரிகிறது'' என்றது சம்பாதி.
''உங்கள் இறக்கைக்கு என்ன ஆயிற்று ?''
''ஸ்வர்கத்துக்கு போக நானும் என் தம்பி ஜடாயுவும் பறந்து சூரியன் அருகே சென்றுவிட்டோம். தம்பி ஜடாயுவை காப்பாற்ற என் இறக்கைக்குள் அவனை மறைத்தேன். சூரியன் என் இறக்கையை எரித்துவிட்டான். என் தம்பி கீழே பறந்து சென்று தப்பினான். நான் இறக்கை எரிந்து இந்த மலையில் விழுந்து வாழ்கிறேன். சந்திர சர்மா என்ற முனிவர் என் மேல் இரக்கம் கொண்டு
''சம்பாதி, சில காலம் கழித்து ராம தூதர்களாக சில வானரர்கள் இங்கே வருவார்கள். சீதை இருக்கும் இடத்தை நீ அவர்களுக்கு சொல்வாய். அப்போது மீண்டும் உனது இறக்கைகள் முளைக்கும்'' என்று சொன்னதால் உங்களுக்காக பல வருஷங்கள் காத்திருக்கிறேன்.
என் மகன் ''அப்பா மேலே ராவணன் சீதையை தூக்கி செல்கிறான் என்று பார்த்துவிட்டு என்னிடம் சொன்னபோது. முட்டாளே, ராவணனை கொல்லாமல் விட்டுவிட்டு என்னிடம் சேதி சொல்ல வருகறாயே '' என்று கோபித்தேன். அப்போது போன என் மகன் இன்னும் திரும்பவில்லை'' என்றது சம்பாதி.
வானரர்கள் கலந்து ஆலோசித்தார்கள். எதிரே சமுத்திரம். யார் தாண்டமுடியும் இதை ? ஒவ்வொருவரும் எவ்வளவு தூரம் கடலை தாண்டமுடியும் என்று சொல்லும்போது ஜாம்பவான், உங்களில் யாராலும் இதை தாண்ட முடியாது. ஒரே ஒருவன் இருக்கிறான் அவனால் மட்டுமே முடியும் என்று அனுமனை காட்டுகிறார். ஆஞ்சநேயரின் ஜனனம் துவங்கி அவனது பராக்கிரமங்களை எடுத்து சொல்லி அவன் பலத்தை அவனுக்கு நினைவூட்டுகிறார் ஜாம்பவான். ஹனுமான் தைர்யம் அடைந்து மஹேந்திர பர்வதம் உச்சி மேல் ஏறி நின்றான். ராமனின் நாமத்தை பலமாக உச்சரித்து காலால் பர்வதத்தை உதைத்துக்கொண்டு மேலே தாவினான்....ஆகாயத்தில் இலங்கையை நோக்கி பறந்தான்.
No comments:
Post a Comment