''இன்று பெண்கள் தினம். '' - நங்கநல்லூர் J K SIVAN
சபாஷ். பெண்ணை மதிக்க, போற்ற, தெரிந்து கொண்டுவிட்டது உலகம். பெண் யார்? சக்தி. சர்வ வல்லமை படைத்தவள் என்பது நமது ஹிந்து சனாதன தர்ம நம்பிக்கை. சக்தியின்றி சிவனே இல்லை. அவள் தான் தெய்வம். கோவிலில் பெண் தெய்வங்கள் தான் அதிகம். நான் ராமகிருஷ்ண பரமஹம்சர் இல்லை. காணும் எல்லா பெண்களும் தாய் என்றோ, தெய்வம் என்றோ என்னால் கருத பக்குவம் இன்னும் வாய்க்கவில்லை.
என் வாழ்வில் பெண் என்றால் தாய்க்கு தான் முதலிடம்.
மாதா, தாய் தான் முதல் தெய்வம். தாயினில் சிறந்த கோயில் இல்லை என்பது நமது சான்றோர் வாக்கு.
ஒரு வீடு வீடாக இருக்கவேண்டுமானால் அதில் அவசியம் ஒரு பெண் வேண்டும். அதனால் தான் இல்லம் எனும் வீட்டுக்கு முக்யமானவள் இல்லாள் என்று அவளுக்கு பெயர்.
கல்யாணமாகாத பேச்சிலர்கள் வசிக்கும் இடம் சுத்தம் சுகாதாரம், அற்றதாக அநேகமாக எல்லோராலும் அறியப்படுகிறது. வீடு வைத்திருப்பவன் கூட அவனுக்கு வீடு கொடுக்க மாட்டான். வாடகை பெரிதல்ல, பணம் பெரிசு இல்லை.
தாய் பொறுமைக்கும் தியாகத்துக்கும் உருவகம். பெண்களைப் போல் ஆண்களால் நிர்வகிக்க முடியாது. அவளைப்போல நிதானமாக ஆழமாக சிந்திக்க முடியாது. அவளைப் போல் ஆண்களால் சரியான முடிவெடுக்க முடியாது. சிக்கனம் அவளிடம் தான் தெரிந்து கொள்ள முடியும் . '' சேர்த்த பணத்தை சிக்கனமா, செலவு செய்ய பக்குவமா அம்மா கையிலே கொடுக்கணும். அவங்க ஆறை நூறு ஆக்குவாங்க '' இப்படி ஒரு சினிமா பாட்டே நாம் பாடியிருக்கிறோம் . நமது நாட்டின் நிதி அமைச்சராகவும் அதற்கு முன் பாதுகாப்பு அமைச்சராகவும் ஒரு பெண் பொறுப்பேற்று இருப்பது நமக்கு பெருமை.
ஒரு பெண் வீட்டில் எப்படி அவசியம் என்பதை பல நூற்றாண்டுகள் முன் ஒளவைப் பாட்டியே அருமையாக பாடியது நினைவிருக்கிறதா?
இல்லாள் அகத்திருக்க இல்லாதது ஒன்றில்லை
இல்லாளும் இல்லாளே ஆமாயின் - இல்லாள்
வலிகிடந்த மாற்றம் உரைக்குமேல் அவ்வில்
புலிகிடந்த தூறாய் விடும்
இல்லாளும் இல்லாளே ஆமாயின் - இல்லாள்
வலிகிடந்த மாற்றம் உரைக்குமேல் அவ்வில்
புலிகிடந்த தூறாய் விடும்
இல்லாள் எனும் பெருமை வாய்ந்த ஒரு பெண் வீட்டில் இல்லாமல் போனால் அந்த வீடு நிலைமை எப்படியாம் தெரியுமா? பாழாய் விட்ட ஒரு புலி வாழும் காடு போல் இருக்கும் என்கிறாள் பாட்டி. நமக்கு அவ்வளவு நிர்வாக திறமை.
பெண் என்றால் முதலில் என் நினைவுக்கு வருவது அம்மா. நான் ராம கிருஷ்ண பரமஹம்சர் இல்லை. எல்லா பெண்களையும் கடவுளாக, மனைவியை தாயாக நினைத்துப் பார்த்ததில்லை. பெண் என்றால் அம்மா. அம்மா என்றால் பெண். நிறைய பேருக்கு நம் குடும்பங்களில் அம்மா பொண்ணு என்ற பேர் இருக்கிறது.
இப்போது ஆணுக்கு பெண் சரிநிகர் சமானம் , என்றாலும் தாய் முழுமையாக மதிக்கப்படவில்லை, எங்கோ இன்னும் சில தாய்கள் ஏக்கத்தில், துயரத்தில் கண்ணீர் வடிப்பது நிற்கவில்லை. தாயை மதித்து தெய்வமாக போற்றி வணங்க முதலில் தெரிந்துகொள்ளவேண்டியது அவசியம்.
எப்போதும் ஒரு சின்ன கதை சொல்லி முடிப்பது வழக்கமாகிவிட்டது. இதோ ஒரு அம்மா கதை.
கதைகள் முழுதும் கற்பனையில் பிறப்பதில்லை. நிஜத்தின் சாயல் தான். நிஜமாக எங்கோ எப்போதோ எவருடைய வாழ்வில் நடந்த சம்பவத்தைதான் அப்படியேயோ கொஞ்சம் கண் காது மூக்கு வைத்து வேறே பேர் ஊர் அடையாளம் கொடுத்து சொல்வது, எழுதுவது தான் கதை. கற்பனை என்பது நிஜத்தின் வர்ணனை கதை என்பது ஏதோ ஒரு நிகழ்வின் வண்ண, கருப்பு வெளுப்பு வெளிப்பாடு. அவ்வளவு தான்.
நாகமூர்த்தி கஷ்டப்பட்டு படித்து, சுயமாக உழைத்து சென்னையில் ஒரு பெரிய கம்ப்யூட்டர் கம்பெனியில் நல்ல வேலையிலிருக்கிறான். ஊரில் கிராமத்தில் அப்பா அம்மா விவசாயிகள். அப்பப்போ பணத்தை ஊருக்கு அனுப்புவான். முடிந்தபோதெல்லாம் ஊருக்கு போவான்.
ஒருநாள் காலை ஒன்பது மணிக்கு செங்கல்பட்டுக்கு அருகே ஒரு முதியோர் இல்லத்தில் சில கம்பியூட்டர்களை நிறுவி இயக்கவேண்டும் என்று அங்கே காலையில் சென்றுவிட்டான். முதியோர் இல்லம் என்பதால் பையில் நிறைய பிஸ்கட் பாக்கெட்கள் கொண்டு போனான்.
காலை ஒன்பது மணிக்கு முதியோர் இல்லத்தின் வாசலில் நுழையும்போது மெயின் கேட் அருகே ஒரு ஓரமாக நிழலில் ஒரு வயதானவள் முகத்தில் நிறைய காலம் தந்த கோடுகள், ஏமாற்றங்கள் , துயரங்களோடும் இன்னும் மறையாத எதிர்பார்ப்புகளுடன் உற்சாகமாக பக்கத்தில் ஒரு பெரிய பையுடன் உட்கார்ந்திருந்ததை நாகமூர்த்தி பார்த்தான்.
''ஓஹோ தனது பிள்ளையோ பெண்ணோ உறவினர் யாரோ வந்து அழைத்துப்போக காத்திருக் கிறாளோ? அது தான் முகத்தில் முழு நிலவோ?
உள்ளே சென்று முதியோர் இல்ல கம்பியூட்டர் வேலைகள் முடிந்து வெளியே வரும்போது மாலை 4 மணி.
''அட இதென்ன ஆச்சர்யம்? காலையில் பார்த்த அதே கிழவி, வாசல் அருகே பையோடு. முகத்தில் மலர்ச்சியோடு. ஐயோ பாவம் காலையிலிருந்து மாலை நாலு மணி வரையா ஒருவள் காத்திருக் கிறாள்? நாம் வேண்டு மானால் அவளை எங்கே போகவேண்டுமோ அங்கே நமது காரில் உட்காரவைத்து கொண்டுவிடுவோமா?'' என்று தோன்றியது . அருகில் இருந்த செக்யூரிட்டி ஆபிஸ் மேனேஜரிடம் கேட்டான்:
''ஏன் சார் அந்த அம்மாள் காலையில் நான் ஒன்பது மணிக்கு பார்த்ததிலிருந்து இன்னும் இதுவரை வாசலையே பார்த்துக்கொண்டு உட்கார்ந்து கொண்டிருக்கிறாங்க? யாருக்காக காத்திருங்காங்க? யாரும் இன்னும் வரலையா? நான் வேண்டுமென எங்கே போகவேண்டுமோ அங்கே காரில் கொண்டுவிடட்டுமா?''
''அந்த அம்மா பத்தியா கேக்கறீங்க? பாவங்க அது. நாப்பது வயசு வரை புள்ளை இல்லாம எல்லா சாமியையும் வேண்டிக்கிட்டு ஒரு புள்ள பிறந்தான் . ஒரே பையன், லேட்டா பிறந்தவன். செல்லமா வளத்தாங்க. படிச்சு பெரிய ஆளா யிட்டான். அப்பா செத்துட்டார். பையனுக்கு அம்மாவை பத்தி கவலை இல்லே. எப்படியாவது அமேரிக்கா போவணும்னு ஒத்தக்கால் லே நின்னு வேலை கிடைச்சுடுது. அம்மாவை எங்கே கூப்பிட்டு போறது? இந்த முதியோர் இல்லத்தை பத்தி எங்கேயோ கேள்விப்பட்டு இங்கே வந்தான்.எங்கிட்டே தான் பேசினான்.
' சார் எனக்கு வெளியூர் அர்ஜென்ட்டா போவணும். வீட்டிலே என்னை தவிர வேறு யாரு மில்லை. எங்கம்மாவை ஒரு கார்லே அனுப்பறேன். இங்கே வருவாங்க. வந்தா இங்கே சேர்த்துக்குங்க, முடிஞ்சா நானே கொண்டுவந்து விடறேன். ஒரு வருஷம் பணம் கட்டிடறேன். நடுவிலே நான் வரமுடியாது. எனக்காக காத்திருக்கவேண்டாம். பேப்பர்ல என் கையெழுத்து எங்கே வேணுமோ அங்கெல்லாம் வாங்கிக்கிங்க இப்போவே'' என்று பணம் கட்டிட்டான் . நாங்களும் ஒத்துக்கிட்டோம்.
''நாங்க அவங்களை ஜாக்கிரதையா பாத்துக்கிறோம். உங்க அம்மா எப்போ இங்கே வருவாங்க?'' '
'ரெண்டு மூணு மணி நேரத்திலே அனுப்பறேன்'' னான்.
சொன்னபடியே அம்மாவோடு அவனே வந்தான். என் எதிரே அம்மாகிட்டே என்ன சொன்னான் தெரியுமா?
''இது என்ன இடம் டா நாகு?'' அம்மா கேட்டாள் .
'இது ஒரு கோவில் மாதிரி மா, இதுலே உன்னை மாதிரி நெறைய பேரு சந்தோஷமா இருக்காங்க மா. நீ உள்ளெல்லாம் போய் பாரும்மா. இந்தா இந்த கூடையில் நிறைய பழம் வாங்கி வைச்சிருக் கேன். அதெல்லாம் எல்லாத்துக்கும் கொடுத்துட்டு அவங்க கூட பேசிக்கிட்டு இரும்மா . நான் அர்ஜண்டா வேலையா வெளியே கொஞ்ச நேரம் போவணும். வேலை முடிஞ்சதும் அப்புறமா வரேன்.''
அந்த அம்மா சந்தோசமா உள்ளே வந்தாங்க. இங்கே இருக்கிறவங்க கிட்டெல்லாம் பழம் கொடுத் தாங்க. அவங்களும் சந்தோஷமா வாங்கிக்கிட்டாங்க. அவங்கள யார் என்னன்னு எல்லாம் கேட்டாங்க பேசினாங்க. அழுதாங்க. அப்புறமா அவங்களை ஒரு ரூம் கிட்டே அழைச்சிட்டு போனேன். அதுலே ஒரு படுக்கை. ஒரு ஜன்னல். மேலே மின்விசிறி. ஒரு லயிட் எல்லாம் காட்டினேன்''
''எதுக்குங்க இந்த ரூமை எனக்கு காட்டறீங்க, இங்கே யாரும் இல்லையே?''
''இது தாங்கம்மா உங்க ரூம். அது தான் உங்க படுக்கை''
''எனக்கு எதுக்குப்பா இங்கே படுக்கை?''
''உங்க பையன் உங்களை இங்கே சேர்த்துட்டாரும்மா''
அதிர்ச்சியிலே அந்த அம்மா கீழே விழுந்துட்டாங்க. அழுதாங்க. ராத்திரி பூரா தூங்கலே . அப்புறமா களைச்சு போய் தூங்கிட்டாங்க.''
மறுநாள்லே இருந்து தினமும் வீட்டுக்கு போக கையிலே இருந்த பை, மூட்டையோடு வாசலே வந்து உட்கார்ந்துக்குவாங்க. சாயந்திரம் வரை காத்திருப்பாங்க. அப்புறம் ரூமுக்கு அனுப்புவோம், கத்தி அழுது, தன்னை தானே அடிச்சுக்குவாங்க. களைச்சு தூங்கிடுவாங்க. மென்டலா யிட்டாங்க ஸார்''
அவங்க பையனைக் கூப்பிட்டு விஷயம் சொல்லலாம்னு நான் எவ்வளவோ அவன் கொடுத்த போன் நம்பர், வீட்டு அட்ரஸ் எல்லாம் தேடி அலைஞ்சும் அவன் கிராதகன் தப்பு அட்ரஸ், ராங் போன் நம்பர் கொடுத்திட்டு போயிருக்கான். யாருன்னு தெரியலே சார்.
அன்னிக்கிலே ருந்து இன்னிக்கி வரைக்கும் நானே இந்த அம்மாவை என் சொந்த பொறுப்பிலே வளக்கறேன் ஸார். அவன் பையன் பண்ண விஷயம் கேட்டு யாராவது அந்த அம்மாவுடைய பிள்ளையை திட்டியோ, தப்பாவோ பேசிட்டா அவ்வளவு தான், சிங்கம் மாதிரி பாஞ்சு அடிச்சுடுவாங்க. ''என் பையன் கோபால் நல்ல பையன் இதோ வந்துடுவான் ''னு தினமும் காத்திருக்காங்க பாவம்.''
ஒண்ணரை வருஷம் ஆயிடுச்சி சார். அந்த அம்மாவுக்கும் அவனைப் பத்தி ஒன்னும் சொல்ல தெரியலே இப்போ.
ஸார், என்னுடைய ரிக்வெஸ்ட். உங்களுக்கு தெரிஞ்சவங்க கிட்டே எல்லாம் சொல்லுங்க ஸார் .
''அம்மா அப்பாவை கை விட்டுட்டு கை நிறைய சம்பளம் ஒருத்தருக்கும் வேண்டாம் ஸார் . அவர்களோடு கூழோ கஞ்சியோ காச்சி குடிச்சுட்டு சந்தோஷமா ஒண்ணா இருக்கறதுக்கு எதுவும் ஈடாகாது சார். நம்ம மேலே அவங்க வச்சிருக்கிற அன்புக்கு பாசத்துக்கு எவ்வளவு பணம் கொட்டினாலும் ஈடாகாது ஸார். நானும் ஒண்ணரை வருஷமா இதை இங்கே வரவங்க கிட்டே எல்லாம் சொல்றேன். இங்க பெற்றோரை ஏதோ காரணமா சேர்த்தா சீக்கிரம் அவங்களை வீட்டுக்கு கூட்டிட்டு போயிடுங்கன்னு.....
''இந்த அம்மாவை என் அம்மா மாதிரி பாத்துக்கறேன் சார். எனக்கு சின்ன வயசிலேயே அம்மா போய்ட்டாங்க ஸார்''
இதை படிப்பவர்களும் அந்த முதியோர் இல்ல மானேஜர் சொன்னதையே உங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் சொல்லுங்க, நானும் அடிக்கடி சொல்லிண்டு தான் வரேன்.
No comments:
Post a Comment