ஸூர்தாஸ் - நங்கநல்லூர் J K SIVAN
38. என் கேள்விக்கென்ன பதில்?
ஏன் ஸூர்தாஸ் பாடல்கள் அவ்வளவு பிரசித்தமானவை?
யோசித்தால் காரணம் புலப்படும். அவர் எழுத்தில் அலங்கார சொல் இல்லை, கவிதை நடை ப்ரமாதம் இல்லை, உயர்ந்த வேதாந்த சித்தாந்தம் எதுவும் இல்லை. மிகவும் எளிமையான பாஷையில் குழந்தை கிருஷ்ணனோடு இணைந்து பிணைந்து தன்னை அவன் பால்ய லீலைகளுக்கு ஒரு சாக்ஷியாக நிலை நாட்டிக்கொண்டு சம்பவங்களை சொல்லும் அழகும் அற்புதமும் தான்.
பக்தி பாவம் நிறைந்து காணப்படும் பாடல்கள்.
தியாகய்யர் மாதிரியோ தீக்ஷிதர் மாதிரியோ இந்த பாடல் இந்த ராகத்தில் தான் பாடவேண்டும் என்ற என்று எந்த இசையும் அமைக்கவில்லை, ராகமும் தேடவில்லை. ஏதோ தனக்கு தோன்றிய ராகத்தில் பாடியவர். பாட்டே பாடலாக அமைந்தது. எழுத படிக்க தெரியாதவர். கண்ணற்ற கவிஞர்.
இதோ ஒரு காக்ஷி .
நந்தகோபன் வீட்டில் கண்ணனும் அம்மா யசோதையும் மட்டுமே வாசலில் திண்ணையில் அமர்ந்திருக்கிறார்கள். கண்ணன் ஆயிரம் கேள்விகள் கேட்பவன். அவனுக்கு பதில் சொல்லி மாளாது. அவன் சாப்பிட தகராறு பண்ணிக்கொண்டிருக்கிறான். யசோதா வழக்கம் போல தாஜா பண்ணிக்கொண்டிருக்கிறாள்.
திடீர் திடீர் என்று அவன் எடக்கு மடக்காக ஏதாவது கேட்பான். கோபிப்பான். எழுந்து ஓடிவிடுவான். பிடிக்க முடியாது. பளிச்சென்று எதிர்த்து பேசுவான். கொஞ்சுவான். சாகசம் பண்ணுவான். நடிப்பான். பொய் சொல்லுவான். அவன் என்ன செய்தலும் அது ஒரு தனி அழகு என்பதால் அவன் மேல் அளவு கடந்த பாசம் யசோதைக்கு.
என்ன தவம் செய்தனை யசோதை!
” ஏ. அம்மா, இதோ பார், நான் இனிமே இந்த வீட்டில் இருக்க மாட்டேன்''.''
'' ஏண்டா கிருஷ்ணா அப்படி சொல்றே ?''
'' பின்னே என்ன, அண்ணா பலராமன் என்னை எப்பவும் கேலி பண்றானே''
''அப்படி என்ன சொல்றான் உன்கிட்டே?
'' நீ எனக்கு அம்மா இல்லியாம், நா இந்த வீட்டிலே பிறக்க வில்லையாம்.''
''அப்படியா சொன்னான் அவன், வரட்டும் ஒரு கை பாக்கறேன்''
''நீ என்னை யார் கிட்டேயோ கருவேப்பிலை, கீரை கொடுத்து வாங்கினியாம் ''
'' யார் சொன்னா இப்படி அபாண்டமான பொய்யை?''
'' அண்ணா பலராமன் தான் வேறே யார்? நான் இனிமே விளையாட வெளியே எங்கேயும் போகமாட்டேன்.''
''அவன் கிடக்கான் நீ என் செல்ல குட்டிடா''
எப்ப பார்த்தாலும் என் கிட்டே ''கிருஷ்ணா, யாரடா உங்கப்பா, உங்கம்மா? எங்கே இருக்கா? என்கிறான்.''
''நான் ஏண்டா இப்படி கேக்கிறே, இந்த வீட்டிலே இருக்கறவங்க தான் என் அப்பா அம்மான்னு சொன்னா சிரிக்கிறான். நீ ஏன் என்னை மாதிரி செவப்பாக இல்லை, அப்பா அம்மா ரெண்டு பெரும் சிகப்பா தானே இருக்காங்க, நீ மட்டும் ஏன் அட்டை கருப்பா இருக்கேன்னு கேட்கறான்''
அவன் சொல்றதை கேட்டு எல்லா பசங்களும் சிரிச்சு கை தட்றாங்க'' எனக்கு எப்படி இருக்கும்?
நீ அம்மாவே இல்லை. எப்பவும் அவனை கோச்சுக்கறதே இல்லை. என் மேலே தான் தப்பு கண்டுபிடிக்கிறே''
''அவ்வளவு தானே . இதோ பார் கிருஷ்ணா , பலராமன் எப்பவுமே முரட்டு பையன். எல்லோர் கிட்டேயும் சண்டை போடறவன். நாமெல்லாம் கும்பிடுற சாமி மேலே சத்தியமா சொல்றேன் கேட்டுக்கோ. நீ தாண்டா என் ஆசை பிள்ளை. நான் தான் உன் ஆசை அம்மா. நீ என் செல்ல குட்டிடா''
-- சாமி கிட்டேயே யசோதை அவன் யார் என்று தெரியாமல் சொல்கிறாள்...
இப்படி எந்த கவிஞர் நிறைய குட்டி குட்டி பாட்டாக எழுதி இருக்கார்? எந்த அளவுக்கு ஸூர்தாஸ் மனசு பிருந்தாவனத்தில் கண்ணனோடு, அவன் பெற்றோரோடு, இணைந்து அன்றாட சம்பவங்களை நேரில் மனக்கண்ணால் பார்த்து மகிழ்ந்தாது என்பதை நமக்கும் பாடல்களில் காட்டுகிறார்.
No comments:
Post a Comment