Friday, March 18, 2022

vainava vinnoli

 

வைணவ விண்ணொளி -  நங்கநல்லூர்  J  K   SIVAN   


ஸ்ரீ வைஷ்ணவத்  தூண்  1.

வடகலை   தென்கலைக்கு என்ன வித்யாசம்  என்று  நிறைய பேர்  அறிவதில்லை. வித்யாசம் அவரவர் எண்ணத்தில்  தான்  என்கிறது  வைஷ்ணவம்.  

ஸ்ரீ ராமானுஜர்  இரண்டு கலாசாலைகளை  நிறுவினார். ஒன்று  காஞ்சியில்,  மற்றொன்று ஸ்ரீ ரங்கத்தில். காஞ்சி  ஸ்ரீரங்கத்திற்கு வடக்கே  இருப்பதால் அதை வடகலாசாலை என்றும்  ஸ்ரீரங்கக் கலாசாலை  தென் கலாசாலை என்றும் அடையாளம் கொண்டது. கலாசாலை என்றால் அதில்   கற்றுக்கொடுக்க,  தகுந்த பேராசிரியர்கள் வேண்டுமே.  ஸ்ரீ ராமானுஜர்  தனது சிஷ்யர்களில் இரண்டு பேரை   காஞ்சிக்கும் இரண்டு பேரை  ஸ்ரீரங்கத்திற்கும் அனுப்பிவைத்தார். விசிஷ்டாத்வைதம்  கற்றுத்தரப்பட்டது.  
இப்போதெல்லாம்  ஒவ்வொரு பள்ளியிலும் மாணவ மாணவியருக்கு  வெவ்வேறு  சீருடை  தருகிறார்களே  அதுபோல் வட கலாசாலையைச் சேர்ந்தவர்களின்  நாமம்  பாதமின்றியும்  தென் கலாசாலையோருக்கு நாமத்தில்  மூக்கில் மேல் பகுதியில் ஒரு பாதமும் அடையாளமாகியது.  கலாசாலை  சுருங்கி காலப்போக்கில்  வட கலை  தென்கலை ஆகியது.

 ஒரு மாணவன்  B.A. படிக்கிறான்  என்று வைத்துக்கொள்வோம். ஒரு  கல்லூரியில்  ஒருமாதிரியும்  மற்றொரு கல்லூரியில்  வேறு  மாதிரியும் அந்தப்  படிப்பை கற்றுக்கொள்வது போல்.  

 அடிப்படையில் வித்யாசம் இரு கலைகளிலும் இல்லை.   வித்தியாசங்கள்  இருந்த போதிலும் அவை  காலப்போக்கில்  மறைந்து வருகின்றன. வடகலையில் சிறந்த ஆசார்யன்  ஸ்ரீ  வேதாந்த தேசிகரும்  தென்கலையில் ஸ்ரீ  ராமானுஜரும் மணவாள மாமுனியும்  போற்றப்படுபவர்கள். இதில்  மணவாள மாமுனிகளைப் பற்றி  சில  தெரிந்த விவரங்களை  மீண்டும்  ஞாபகப் படுத்தும் வேலை தான் இன்று  எனக்கு.

சிக்கில் கிடாரம் என்று  ஒரு  குக் கிராமம் ஆழ்வார்  திருநகரி அருகே உள்ளது. இந்த ஊரில் பிள்ளை லோகாசார்யர் என்று சிறந்த ஒரு வைஷ்ணவ பக்தர்.  அவருக்கு இன்னொரு  பெயர் கொல்லி காவலதாசர்.  அவரிடம்  சிஷ்யனாக இருந்தவர்  திகழக் கிடந்தான். என்ன  அழகிய  தமிழ்ப் பெயர் அப்போதெல்லாம்  இருந்திருக்கிறது என்று  அறியும்போது அவர்களது மொழிப்பற்றும் , ஞானமும் நம்மைத்  திகைக்க வைக்கிறது.  அப்போதெல்லாம் சிஷ்யன்  என்பவன் இந்தகாலத்தில் நடப்பது போல் காலையில் ஆஜராகி மாலையில் வீடு திரும்புபவன் அல்ல.  குருவின் வீட்டிலேயே  அடிமை யாக  அவர் வீட்டிற்கு உழைத்து  குரு, குருபத்னி ஆகியோரை திருப்திப் படுத்தி  தான்  கல்வி  ஞானம் பெறவேண்டும்.    குரு  எப்போது அழைத்து உபதேசிப்பார் போதிப்பார்  என்பது தெரியாது.

குரு தம்பதிகளுக்கு  மிகவும் பிடித்துப் போய்  இந்த  சிஷ்யன்  அவருக்கு மருமகனாகவே  ஆகிவிட்டான்.  திகழக்கிடந்தான்  மனைவி கர்ப்பமானாள் . அவள்  கர்ப்பமான நாள் முதலாக  அவள்  முகத்தில் ஒரு  தனி தேஜஸ் உண்டாகி ஒளி  வீசியது.  ஊரார் இதைக்  கவனித்து  ''இவள்  வயிற்றில்  யாரோ  ஒரு  மகாத்மா தோன்றியிருக்கிறார்.  ஊர் உலகமெல்லாம்  இனி  நலம்  பெறும். அவர்  வரவால்  லோகத்தில்  அனைவரும்  பாபங்களிலிருந்து விடுபடுவர். பிறப்பு இறப்பு இன்றி ஜன்ம பந்தங்களிலிருந்து விடுபட்டு மோக்ஷம் பெறுவார்கள்''  என்று பேசிக்கொண்டார்கள்.  

1370ம்  வருஷம் ஐப்பசி மாதம்  மூல நக்ஷத்ரத்தில் ஒரு  அழகிய  பிள்ளையை  பெற்றாள்  அந்தப் பெண். திகழக் கிடந்தான் ஆனந்த சாகரத்தில் மூழ்கிக் கிடந்தான். ஆகாயத்தில் பெருமையோடு பறந்தான்.  குழந்தை வெண்  தாமரை போல்  ஜொலித்தது.  நிறைய தலை முடி. கருநிற மேகம் ஒன்று  கிரீடமாக அமைந்தாற் போல் இருந்தது. அகன்ற ஒளிவீசும்  நயனங்கள்.   இது  நிச்சசயம் தெய்வீகக்  குழந்தை தான்.  ஒரு சந்தேகமு மில்லை  என்று ஏகோபித்து  அனைவரும்  ஒப்புக்கொண்டனர்.    பெற்றோர் அவர்கள்  வழிபடும்  தெய்வமான  அழகிய மணவாளன் தான்  இவன் என்று  அந்தப்   பெயரையே குழந்தைக்கு சூட்டினார்கள். நாளொரு சாஸ்திரமும்  பொழுதொரு  ஸ்தோத்ரமுமாக மணவாளன் வளர்க்கப்பட்டான்.  தக்க காலத்தில் வயதில் உபநயனம் நடந்தது. தந்தை திகழக் கிடந்தானே  ஆசார்யனானார். வேதம் உபநிஷதம் எல்லாம்  கற்றுத் தேர்ந்தான் அழகிய மணவாளன்.
ஆழ்வார்கள் வரலாறுகள், அவர்கள்  படைத்த பாமாலைகள் அனைத்துமே  மணவாளனுக்கு  அத்து படியாயிற்று.

அடுத்ததாக அவனுக்கு  திருமணம் முடிக்க  தந்தை  பெண் தேடலானார். மணமும்  முடிந்தது. ஞானமும்  பக்தியும் சேர்ந்து  சத்வ குண சீலனாக திகழ்ந்தார்  மணவாளன். உலக ஆசாபாசங்கள்  அணுகவில்லை அவரை.  தந்தை  ஆசார்யனின்  திருவடிகளையே பூஜித்தார். சரணாகதி அடைய  அதுவே போதும் என்று  மகிழ்ந்தார்.

அதிக  காலம்  அவரது தந்தை ஆசார்யன் பூமியில் இல்லை.  திகழக் கிடந்தான் வைகுண்டம் ஏகினார். ஆச்சார்யனின் மறைவினால் கொழுகொம்பை இழந்த   கொடியாக  வாடினார் அழகிய மணவாளன்.
 அக்காலத்தில் வாழ்ந்த ஒரு  மகான் வித்வான்  ஸ்ரீ சைலேசர்.  பாண்டிய மன்னனின் அரசவையில் ஒரு மந்திரியாக  இருந்தவர். பணமும் பதவியும் புகழோடும் உள்ள அந்த உத்தியோகத்தைக்  காட்டிலும்   ஆழ்வார்களின் பாசுரங்களில்  தன்னை பறிகொடுத்தவர்   ஸ்ரீ  சைலேசர்.  எனவே  உத்தியோகத்தை உதறித் தள்ளினார்.  முழுநேரமும் அவரை  ஆட்கொண்டது ஆழ்வார்களின் அருளிச்செயல். ஆழ்வார்களின் பாசுரங்களைத் தேடி அலைந்தார்.  கிடைத்ததை பாதுகாத்தார். படித்து மகிழ்ந்தார்.

திருக்குருகூர்   என்கிற க்ஷேத்ரத்தில்  நம்மாழ்வாருக்கு  ஒரு ஆலயம்  நிர்மாணித்தது இந்த  ஸ்ரீ சைலேசர்  தான். நம்மாழ்வார் எம்மாழ்வார் என்று அவர்  ஸ்மரணையாகவே  தன்னை  அர்ப்பணித்துக்   கொண்ட ஸ்ரீ சைலேசர் அடைந்த பெருமை வாய்ந்த  பட்டம் தான்  '''திருவாய் மொழிப் பிள்ளை''.  

இவரை விடுவாரா மணவாளன்.   ஓடினார் அவரைத் தேடி.  குருவே சரணம் என்று அவர் பாதங்களை கெட்டியாக பிடித்துக்கொண்டார். அவர் சிஷ்யரானார்.   குருவும்,   சிஷ்யனின் அருமை  பெருமையை உணர்ந்தவர் அல்லவா?   இவர்  சாதாரணர்  அல்லவே.  இவரால்  வைஷ்ணவ சமுதாயம் ஒரு  மாபெரும் மஹோன்னத  பெருமையை அடையப்  போகிறது என்று ஸ்ரீ சைலேசருக்கு  உள்ளுணர்வு  அடிக்கடி  ஞாபகப் படுத்தியது.  அது தெய்வ சங்கல்பம். 

 ஒவ்வொரு  நல்ல காரியமும்  நிறைவேற அவ்வப்போது ஒரு மகான் இந்த பாரத பூமியில்   தோன்று
வார். உலகம் அவரால் உய்யும் என்பது நாமறிந்தது தானே.

ஸ்ரீ ராமானுஜரின் விசிஷ்டாத்வைத சித்தாந்தம்  உலகறிய வேண்டுமானால்  அதற்கு ஒரு புண்ய புருஷன் தோன்ற வேண்டுமானால்  அது இந்த  அழகிய  மணவாளன் தான் என்று  குரு புரிந்து கொண்டார். புளகாங்கிதம் அடைந்தார்.  ''பெருமாளே என்னே உன் கருணை''   என்று  அடி  நாபியிலிருந்து அவரது நன்றிக் குரல்  எழும்பியது. இரு கரமும் கூப்பியவாறு  சிரமேல் எழுந்தது. கண்களில் ஆனந்த   பாஷ்பம் சிலிர்த்தது.

ஒரு தாய்ப்பறவை எப்படி  தன குஞ்சின் மேல்  அக்கறை காட்டுமோ  அதைப்போல  குரு மணவாளனை அணுகி  அவருக்கு  ஆழ்வார் பாசுரங்களை  வைஷ்ணவ  ஞானிகளின் வியாக்யானங்கள்  பாஷ்யங்களைக் கற்றுக்  கொடுத்தார்.  மணவாளனும்  தேனாக  அனுபவித்தார்.

ஸ்ரீ சைலரின் மற்ற சிஷ்யர்கள்  குரு  மணவாளனிடம் மட்டும்  பிரத்யேக சலுகை காட்டியதில்  வழக்கம்போல அவரை விரோத பாவத்தோடு  பார்த்தனர். மாறும் உலகம் என்றும்  மாறுவதில்லை  சில விஷயங்களில் என்பது  மாறாத உண்மை.  

''குருநாதா,  ஆசார்ய சுவாமிகளே,  ஏன் இந்த பாரபக்ஷம்  எங்களிடம்?''  என்று   குருவிடம் கேட்டனர்.

''என் அருமை சிஷ்யர்களே,  இந்த மணவாளன்  வேறு யாருமில்லை, ஆதி சேஷனின் அவதாரம், போதுமா?''  என்ற  திருவாய் மொழிப் பிள்ளையின் பதில் கேட்டது  சிஷ்யர்களுக்கு  வாயடைத்தது..

'' இவன் ஆதிசேஷன். ஆயிரம் சிரங்கள் கொண்டவன், ஆயிரம் நாப்படைத்தவன். ஒரே நேரத்தில் ஆயிரம்  கலைகளையும்,  ஞானத்தையும்  க்ரஹிக்கும்  சக்தி வாய்ந்தவன்.  எனவே   இந்த  அழகிய மணவாளனைப்  பொன்னே போல் போற்றி அவனது திறனை, திறமையை  வளர்த்து பயனடைய வேண்டியவர்கள் நாமும்  நமக்குப் பின்னால்  பல கோடி  வைஷ்ணவர்களும்.  வேருக்கு நீரூற்றி  விருக்ஷமாக்குவோம்.  பல பறவைகள்,  மாந்தர் பின்னர்  கனிகள்,நிழல் எல்லாம் அநேகம் பெறுவர்'' என்றார்  குரு.   அவரிடமிருந்து   ''யதீந்திர பிரவண'' என்ற பட்டமும் பெறுகிறார்.  படிப்படி யாக 
நாளுக்கு நாள்  அழகிய மணவாளனின்  பக்தி ஸ்ரீ ராமானுஜர் மேல்  பல மடங்கு வளர்ந்து கொண்டே வந்தது.
அழகிய மணவாளரின்  ''யதிராஜ  விம்சதி''   என்கிற  ஸம்ஸ்க்ரித நூல்  விலை  மதிப்பற்ற பொக்கிஷமாக தமிழக  ஆழ்வார்களில்  முதல் வடமொழி  ஸ்தோத்ரமாக வெளிவந்தது. வைஷ்ணவ தத்வ ஸாராம்ஸத்தை வெளிக்கொணர்ந்தது.
இன்னும் வரும்.




No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...