பேசும் தெய்வம் - நங்கநல்லூர் J K SIVAN
118. கல்கத்தா பக்தர்களின் ஆனந்தம்.
இப்போது நாம் எல்லோரும் 1935 ம் வருஷத்துக்கு சென்று விட்டோம்.
ஜுலை மாதம் 19ம் தேதி கல்கத்தாவில் இருக்கிறோம். கல்கத்தாவில் ஒரு பக்தர் பெயர் தாமோதர தாஸ் கன்னா , அவர் வீட்டுக்கு அவர் வைத்த பெயர் ''தேவி மந்திரம்'' . அங்கே தான் மஹா பெரியவா தங்குவதற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். கல்கத்தாவில் வசித்த மஹாமஹோபாத்யாய சீதாராம சாஸ்திரிகள் வரவேற்பு பத்திரிகையை ஸமஸ்க்ரிதத்தில் வாசித்தளித்தார்.
ஆகஸ்ட் 2ம் தேதி பாத பூஜை விமரிசையாக நடந்தது. கல்கத்தா தேவாலய பாதுகாப்பு சங்கம், மார்வாடி மஹாஜன சபை, விசுத்தானந்தா வித்யாலயா ஆகிய நிறுவனங்களைச் சேர்ந்த அங்கத்தினர்கள் எல்லோரும் இதை சிறப்பாக நடத்தினார்கள். வித்யாலயத்தில் மஹா மஹோபாத்யாய துர்கா சரண் என்ற பண்டிதர் ஸமஸ்க்ரிதத்தில் வரவேற்புரை வழங்கினார். வித்யாலயத்தில் பயின்ற நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு மஹா பெரியவாளைக் கண்டதும் அதிசயம். இப்படியும் ஒருவர் இருப்பாரா என்று வியந்தனர். பெரியவாளுடைய சந்திர மௌலீஸ் வரர் பூஜைக்கு உபயோகமாக இருக்கும் என்று ஒரு வலம்புரி சங்கு பரிசளித்தார்கள்.
ஆகஸ்ட் 7ம் தேதி, மஹா பெரியவா ரத்தன் சர்க்கார் முராரிலால் மேஹ்தா சமாஜ அங்கத்தினர்கள் , மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இணைந்தளித்த அழைப்பை ஏற்று சமாஜத்துக்கு விஜயம் செய்தார்.
வங்காள மொழியில் சமாஜ அங்கத்தினர்கள், கிரிதாரிலால் தலைமையில் வரவேற்பளித்தார்கள். மஹா பெரியவா ஸமஸ்க்ரிதத்தில் ஏற்புரை வழங்கும்போது ஹிந்துக்களாக பிறந்த நாம் நாடெங்கும் எவ்வாறு ஒற்றுமையோடு ஒருங்கிணைந்து சனாதன தர்மத்தை பின்பற்றி போற்றி பாதுகாக்கவேண்டும் என்றும் வருங்கால சந்ததியர்க்கு நாம் ஆற்றவேண்டிய கடமை பற்றியும் விளக்கினார்.
ஆகஸ்ட் 23ம் தேதி அன்று விதேக பரிஷத் பண்டிதர்கள் மேற்கே சௌராஷ்ட்ரம், சோம்நாத்திலிருந்து கல்கத்தாவுக்கு வந்து மஹா பெரியவா தரிசனம் பெற்றார்கள். எங்கள் ஊர்களுக்கும் நீங்கள் வரவேண்டும் என்று பெரியவாளை வேண்டிக்கொண்டு அழைப்பு விடுத்தார்கள். அவர்களுக்கு காஷ்மீர் சால்வை போர்த்தி பெரியவா கௌரவித்தார்.
செப்டம்பர் 1ம் தேதி அன்று கல்காத்தா காளி கோவிலின் தர்ம கர்த்தாக்கள், நிர்வாகிகள் பக்தர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து பெரியவாளுக்கு ஆங்கிலம், வங்காளி, சமஸ்க்ரித
மொழிகளில் வரவேற்பு அளித்தார்கள். காளிகோவில் சார்பில், தர்ஷண சாகர், ஸ்ரீ குருபாத ஷர்மா ஹல்தார் அற்புதமாக பேசினார். தன்னுடைய பேச்சில் ஆதி சங்கரர் எப்படி தேச முழுதும் பாதயாத்திரையாக விஜயம் செய்து அத்வைத சித்தாந்தத்தை நிலைநாட்டினார். தெற்கே காஞ்சிபுரத்தில் காமகோடி பீடம் ஸ்தாபித்து சர்வஞ பீடத்தை அலங்கரித்தார் என்பதை அழகாக விவரித்தார். அப்படிப்பட்ட பெருமை வாய்ந்த பீடத்தை தற்போது அலங்கரிப்பவர் என்று மஹா பெரியவாளைப் போற்றி வணங்கினார். மஹா பெரியவா தன்னுடைய ஏற்புரையில் காஞ்சி காமகோடி பீடத்தின் சிறப்புகள் பற்றியம் ஆசார்யர்கள் பற்றியம் விளக்கினார்.
செப்டம்பர் 4ம் தேதி கல்கத்தா வாழ் பக்தர்கள் மஹா பெரியவாளுக்கு பாதபூஜை செய்தார்கள். கல்கத்தா உயர்நீதி மன்ற நீதிபதி மன்மதநாத் முகர்ஜி பிக்ஷாவந்தனம் அளித்து பாதபூஜை செய்தார்.
செப்டம்பர் மாதம் 12ம் தேதி சாதுர்மாஸ்ய விரதம் முடிந்ததும் மஹா பெரியவா பாகீரதி நதியை கடந்து அகர் எனும் கிராமத்தை அடைந்தார். அந்த கிராமத்தில் வசித்த ஸ்ரீ சிவராம கிருஷ்ணன் என்பவர் இல்லத்தில் மகா பெரியவாளை வரவேற்று வசதிகள் செய்து கொடுத் தார்கள். நாதோர் , பர்த்வான் சமஸ்தான ராஜாக்கள் பிக்ஷா வந்தனம் அளித்து பாதபூஜை செய்தார்கள்.
ரெண்டு நாள் கழித்து 14ம் தேதி மஹா பெரியவா, மஹாமஹோபாத்யாய ஸ்ரீ N S அனந்த கிரிஷ்ண சாஸ்திரிகள் இல்லத்துக்கு விஜயம் செய்து அங்கு அவர் அளித்த பிக்ஷா வந்தனம் பாத பூஜைகளை ஏற்றார். ஹை கோர்ட் ஜட்ஜ் மற்றும் கல்கத்தா நகர அரசாங்க ஸமஸ்க்ரித தலைவரான ஸ்ரீ துவாரகாத் மிட்டர் என்பவர் ஸமஸ்க்ரிதத்தில் வரவேற்பளித்தார். நகரத்தை சேர்ந்த எல்லா பண்டிதர்களும் இந்த விழாவில் சிறப்பாக பங்கேற்றார்கள்.
செப்டம்பர் 18ம் தேதி பாகீரதி நதிக்கரை கிராமமான பட்டபல்லிக்கு சென்ற மஹா பெரியவா அங்குள்ள பண்டிதர்கள் வித்வான்கள், அளித்த வரவேற்பை ஏற்றார் . இதற்கென அங்கிருந்த ஐந்து சிவாலயங்களுக்கு இடையே இருந்த ஒரு பெரிய திறந்தவெளி மண்டபத்தில் மேடை அமைத்திருந் தார்கள். மஹாபெரியவா வேத மந்திரங்கள் பற்றியம் , அவற்றை உச்சரிப்பதால் ஏற்படும் நன்மை
களை விளக்கியும் எங்கும் வேதமந்திரங்கள் ஒலிக்க அந்த பண்டிதர்கள் செய்ய வேண்டிய கடமையை எடுத்துரைத்தார்.
வங்காளத்தில் ஒரு முக்கிய இடம் நவத்வீபம் அங்கே ஒரு கிராமத்தின் பெயர் காஞ்சன்பள்ளி . ஒரு கோசாலை அங்கு இருந்தது. செப்டம்பர் 19ம் தேதி அந்த கோசாலைக்கு மஹா பெரியவா சென்று கோ பூஜை செய்தார். வங்காள ப்ராமண சபை அவரை வரவேற்றதால் அழைப்பை ஏற்று அங்கே செப்டம்பர் 23 அன்று சென்றார். பெங்காலி பிராமணர்கள் மட்டும் அல்ல, கூடவே ஹிந்துஸ்தானி, குஜராத்தி, மராத்தி, தெலுங்கு, தமிழ் பிராமணர்களும் சேர்ந்து கொண்டனர். சபையின் தலைவர் பஞ்சானன தாரக ரத்ந பட்டாச்சாரியார். இவரைப் பற்றி முன்பே குறிப்பிட்டிருக்கிறேன். ரொம்ப ப்ரக்யாதி பெற்றவர். நிறைய கற்ற பண்டிதர். சாஸ்திர ஞானி. வெள்ளைக்காரன் கொடுத்த விருது மஹா மஹோபாத்யாய எனக்கு வேண்டாம் என்று உதறித் தள்ளியவர். சாரதா சட்டம் அமுலுக்கு வரவேண்டாம் என்று எதிர்த்தவர்.
No comments:
Post a Comment