பேசும் தெய்வம் - நங்கநல்லூர் J K SIVAN
120. சிறைக்கைதிகளுக்கு தரிசனம்.
1935ம் வருஷம் அக்டோபர் மாதம் மூன்றாவது வாரம் சமயத்தில் மஹா பெரியவா கல்கத்தா விஜயத்தை முடித்து ராமேஸ்வர யாத்ரை தொடர்ந்தார். ரூப் நாராயணன், தாமோதர் என்ற பேர் கொண்ட ரெண்டு நதிகள் ஹூக்ளியில் கலக்கிறது. அவற்றை சுற்றி தரை மார்க்கமாக போக வேண்டுமானால் வெகுதூரம் பயணம் செய்ய வேண்டும். ஆகவே ஒரு சிறு படகு மூலம் இந்த நதிகளை கடந்து அக்கரை செல்ல ஏற்பாடு செய்திருந்தார்கள். அந்தர்சோன் காட் என்ற படித்துறையில் அநேக பக்தர்கள் மஹா பெரியவா படகு ஏறும்போது தரிசனம் செய்ய காத்திருந் தார்கள். அங்கேயும் எல்லோருக்கும் ஆசி வழங்கி மந்த்ராக்ஷதை பிரசாதங்கள் வழங்கினார்.
கல்கத்தா சமஸ்க்ரித கல்லூரியை சேர்ந்த ஸ்ரீ ஜீவன்யாய தீர்த்தர் என்பவர் மஹா பெரியவாளோடு படகில் பிரயாணம் செய்தார். கயாவிலிருந்த வந்த காசி நாத சிங் படகில் பெரியாவின் தரிசனம் பெற்றார்.
கோலா காட் என்னும் இடத்தில் 20ம் தேதி படகிலிருந்து பெரியவா இறங்கினார். அங்கு மூன்று நாள் முகாம். அடுத்து பஞ்சகூரா எனும் ஊரில் முகாம். தாமர லிப்தி என்ற புகழ்பெற்ற க்ஷேத்ரத்திற்கு அங்கிருந்து சென்றார்.
என் பள்ளி நாட்களில் தாம்ரலிப்தி பற்றி படித்தது நினைவுக்கு வருகிறது. பாலி மொழியில் அதை தாமலிதி என்று சொல்வதுண்டு. பண்டைய வங்காள துறைமுகம். இப்போது அதன் பெயர் தாம்லுக். ரூப் நாராயண நதிக்கரையில் உள்ளது. தாம்ர என்றால் தாமிரம். செம்பு. அருகிலேயே சிங்பும் பகுதியில் பெரிய தாமிர சுரங்கம் உள்ளது. குப்தர்கள் காலத்தில் பிரபலமான ஊர். கப்பல்கள் நிறைய வந்து போய் கொண்டிருக்கும். எண்ணற்றோர் வெளிநாடுகளில் இருந்து வந்து போவார்கள்.
கிழக்கே ரூபநாராயண நதி, மேற்கே, சுவர்ணரேகா நதி. வங்கக்கடலில் கப்பல்கள் வந்து தாம்ரலிப்தியில் வியாபாரிகளை இறக்கிவிட்டு பொருள்களை ஏற்றிச்செல்லும். கிரேக்க யாத்திரிகர் தாலமி ரோமாபுரி பிளினி, சீன யாத்ரிகர்கள் பாஹியான், யுவான் ஸ்வாங், ஆகியோருக்கு தாமரலிப்தி தெரிந்திருக்கிறது. அர்த்த சாஸ்திரத்தில் கௌடில்யன் இந்த துறைமுகம் பற்றி சொல்கிறார். நாளந்தா பல்கலைக் கழகத்துக்கு தாமரலிப்தி வழியாக வெளிநாடுகளில் இருந்து கப்பல்களில் வந்தவர்கள் பலர். 64 சக்தி பீடங்களில் தாமரலிப்தி ஒன்று. இந்த ஊரை தான் தான் தங்குவதற்கு மஹா பெரியவா தேர்ந்தெடுத்தார்.
1935ம் வருஷ தீபாவளி அக்டோபர் 25-26 தேதிகளில் கொண்டாடப்பட்ட போது மஹா பெரியவா ஜனார்தன் பூர் என்ற ஊரில் இருந்தார்.
கல்கத்தாவிலிருந்து 60 மைல் தூரத்தில் மிதுனபுர் இருக்கிறது. அந்த ஊருக்கு 27ம் தேதி சென்ற மஹா பெரியவாளுக்கு பக்தர்கள் சிறந்த வரவேற்பு அளித்தார்கள். சில அரசியல் கலவரங் களுக்காக மிதுனப்பூரில் ஊரடங்கு சட்டம் போட்டிருந்த வெள்ளைகார அரசாங்கம் மஹா பெரியவா வருகையின் போது பொதுமக்கள் வசதிக்காக அவரை வரவேற்று தரிசனம் பெற சட்டத்தை தளர்த்தி தடையை விலக்கியது . மிதுனபூரில் கோலாகலம். தெருவெல்லாம் தோரணம். அலங்காரம். சுதந்திரம் பெற்றது போல் மக்கள் ஆனந்தமடைந்தார்கள்.
பிரபுல் குமார் மல்லிக் எனும் ஜமீன்தார், உள்ளூர் வக்கீல்கள், டாக்டர்கள், வியாபாரிகள், நில சுவான்தார்கள்,எல்லோரும் ஒன்றுசேர்ந்து வரவேற்பு விழா நிகழ்த்தி மஹா பெரியவா ஊர்வலத்திற்கு ஏற்பாடு செய்தார்கள். தெருக்களை அடைத்து இரு மருங்கிலும் மக்கள் வெள்ளம் கூடி மஹா பெரியவா தரிசனம் அருளாசி பெற்றது மறக்கமுடியாத ஒரு சம்பவம். 12 இடங்களில் ஊர்வலத்தை நிறுத்தி மஹா பெரியவா மக்களுக்கு ஹிந்தியிலும் ஸமஸ்க்ரிதத்திலும் தர்மம், பக்தி பற்றி எளிமையான உபதேசங்கள் செய்தார். மஹா பெரியவா நிகழ்த்தும் அன்றாட சந்திர மௌளீஸ்வரர் பூஜையைக் காண ஆர்வமாக கூடினார்கள். பூஜை முடிந்து அவரிடம் பிரசாதம் பெற்றார்கள்.
மிதுனப்பூரில் ஒரு சிறைச்சாலை இருந்தது. சுதந்திர போராட்ட தியாகிகள் அங்கே அடைக்கப்பட்டி ருந்தார்கள். எண்ணற்றோர் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட காலம். கல்லூரி மாணவர்கள், பட்டதாரிகள், வக்கீல்கள் டாக்டர்கள், பொது மக்கள் அதில் பங்கேற்று சிறை சென்றவர்கள். சிறை அதிகாரி வெள்ளையன் என்றாலும் மஹா பெரியவா வருகையை உத்தேசித்து கைதிகளுக்கு சலுகை அளித்தான்.
கைதிகளின் வேண்டுகோளை ஏற்று, அவர்களுக்கு வெளியே செல்ல அனுமதி அளித்து மஹா பெரியவா தரிசனம் செய்ய அந்த ஆங்கிலேய அதிகாரி ஒப்புக்கொண்டது போற்றத் தக்கது. கைதிகளை போலீஸ் பாதுகாப்புடன் வெளியே போக விட்டு மாலை ஆறுமணிக்குள் சிறை திரும்ப அந்த அதிகாரி அனுமதி கொடுத்தார். அவர்கள் மடத்தில் சென்றபோது மாலை ஐந்தரை மணி. மஹா பெரியவா நித்யபூஜை முடித்து சற்று ஓய்வெடுத்த நேரம். பத்து நிமிஷத்தில் மஹா பெரியவா தரிசனம் பெற்று சிறை திரும்பவேண்டும். எப்படி முடியும்? ஓய்வெடுத்துக் கொண்டிருந்த மஹாபெரியவாளை யார் எழுப்புவது? ஊரடங்கு சட்ட கெடுபிடியால் மஹா பெரியவா தரிசனம் பெறாமல் ஏமாற்றத்தோடு சிறைக்குத் திரும்பிச் செல்ல நகர்ந்தார்கள்.
சில நிமிஷங்களில் மஹா பெரியவா விழித்துக்கொண்டு நடந்ததை அறிந்தார். உடனே ஒரு சிப்பந்தியை அனுப்பி அவர்களை திரும்ப அழைத்தார். அதிகாரி விஷயமறிந்து அவர்களை மீண்டும் மடத்துக்கு அனுப்ப அத்தனை கைதிகளுக்கும் பரம சந்தோஷம். மஹா பெரியவா தரிசனம் ஆசி பிரசாதம் பெற்றார்கள். தேச சேவைக்கு தியாகம் புரிந்தவர்கள் என்று அவர்கள் மேல் மஹா பெரியவாளுக்கு அத்தனை மதிப்பு.
அக்டோபர் 28ம் தேதி மிதுனாபுரிலிருந்து மஹா பெரியவா கரக்பூர் விஜயம் செய்தார்.
No comments:
Post a Comment