Saturday, March 26, 2022

THIRUMALA VENKATESA

 


ஸ்ரீநிவாஸா  கோவிந்தா...   நங்கநல்லூர் J K  SIVAN 

திருப்பதி வெங்கடாசலபதி,  ஏழுமலையான், பாலாஜி,  ஆலயம் ஆழ்வார்களால் மங்களாசனம் செய்யப்பட்ட 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று .ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தின் திருப்பதி எனும் ஊரில் அமைந்துள்ளது.  சேஷாத்திரி, கருடாத்திரி, நீலாத்திரி, அஞ்சனாத்திரி, விருஷபாத்திரி, நாராயணாத்திரி, வெங்கடாத்ரி என ஏழு மலைகளின்  சூழலில்  இருப்பதால்  ஏழுமலையான் என பெயர் பெற்ற பெருமாள்.   தாயார்  பத்மாவதி. அவளை  அலமேலு மங்காபுரத்தில் கீழ் திருப்பதியில் சென்று தரிசிக்கவேண்டும்.

வெங்கடாத்ரி மலை 3200 அடி உயரமும், 10.33 சதுர மைல்கள் பரப்பு கொண்டது. லட்டு பிரசாதம்  உலகப்புகழ் பெற்றது.  பிரத்யேகமாக தயாரிக்கப்படுவது. புவிசார் குறியீடு கொண்டது. இங்கு முடி காணிக்கை செலுத்துவோர்  தான் உலகிலேயே அதிகமான  எண்ணிக்கை கொண்ட பக்தர்கள் தான்.  பாரத தேசத்திலேயே  அதிக  வருமானம் பெரும் ஆலயம். பெருமாள் ஸ்ரீனிவாசன் கலியுக வரதன்.
ஒரு சமயம்  பிருகு போன்ற முனிவர்கள் யாகம் செய்து, யாக பலனை சாந்தமான மூர்த்திக்கே  அர்ப்பணிக்க எண்ணி  பிருகு  மும்மூர்த்திகளில் திருமாலின் இருப்பிடத்திற்கு சென்றார். பிருகு முனிவரின் வருகையை அறியாது உறங்கிக் கொண்டிருந்த திருமாலின் மார்பில் எட்டி உதைத்தார். அதனால் திருமாலின் இதயத்தில் இருந்த திருமகள் கோபம் கொண்டு அவரிடமிருந்து சென்றார்.

திருமால் பூமியில் திருமகளைத் தேடி வேங்கட மலையில் ஓரிடத்தில் தவமிருந்தார். அவரைச் சுற்றி புற்று உருவானது. அப்புற்றில் தவமிருந்த திருமாலின் மீது புற்றினை உடைக்க வீசப்பட்ட ஒரு  கோடாறியால் திருமாலின் தலையிலிருந்து ரத்தம் வெளிப்பட்டது. திருமால் தவம் கலைந்து வகுளாதேவி ஆசிரமம் சென்றார். அங்கு சீனிவாசன் என்று  பெயரிட்டு  வகுளாதேவி அன்புடன் உபசரித்து  தாயாக வளர்த்தாள். .
 
அவர்களின் ஆசிரம  பகுதி சந்திரிகிரி நாட்டினை சேர்ந்தது.  அதன் ராஜா ஆகாசராஜனுக்கு  அழகிய ஒரு மகள்  பத்மாவதி.     வகுளாதேவி   பத்மாவதியை  சீனிவாசனுக்கு   மணம்  முடித்தாள். திருமணமும் மிகச் சிறப்பாக நடந்தேற சீனிவாசன், குபேரனிடம் கடன் வாங்கினார் இன்னும்  செலுத்த முடியாமல் பாக்கி இருந்து கொண்டே இருக்கிறது.

இக்கோயிலின் நிர்வாகம்   திருமலை திருப்பதி தேவஸ்தானம்  கையில்  உள்ளது.  வெள்ளைக்காரன் காலத்தில்  நிர்வாகம் ஹதிராம்ஜி மடத்தினை சேர்ந்த சேவா தாஸ்ஜி  வசம் இருந்தது. 1932 வரை  மதராஸ் அரசாங்கத்தை சேர்ந்த ஆலயம்.   1933ல் தான்  திருமலை திருப்பதி தேவஸ்தானம் உருவாகியது.

மூன்று பிரகாரங்கள் , ராஜகோபுரம்.  ரங்க மண்டபம்  சரித்திரம் வாய்ந்தது.  இஸ்லாமியர்கள் தாக்குதலின்  போது ஸ்ரீ ரங்கம்  உத்ஸவர்  ரங்க நாதரை திருப்பதிக்கு இங்கே கொண்டு வந்தார்கள்.

முதல் பிரகாரம் சம்பங்கி பிரதட்சணம். இதில் பிரதிம மண்டபம், ரங்க மண்டபம், திருமலைராய மண்டபம் (துவஜஸ்தம்ப மண்டபம்), சாலுவ நரசிம்ம மண்டபம் ஆகியவை  அடக்கம்.
 
விமான பிரதட்சணம்  ரெண்டாவது பிரகாரம். இதில் கல்யாண மண்டபம், விமான வேங்கடேசுவரர், ஸ்னபன மண்டபம், சயன மண்டபம், ஆனந்த நிலையம், மூலவர்  கர்ப்பகிரஹம் ஆகியவை அடக்கம்.
 மூன்றாவது  வைகுண்ட பிரகாரம்.  வருஷாவருஷம் வைகுண்ட ஏகாதசி அன்று  திறக்கப்படுகிறது.
மூலவர்  பல நூற்றாண்டுகளாக நிற்பவர்.   மூலவர்  சந்நிதி மண்டபத்தில் ஒரு படியின் பெயர்  ரு படி குலசேகர ஆழ்வார் படி.  மூலவர்  வேங்கடநாதன்  உண்மையில் ஒரு  காளி  சிலை என்றும்  சுப்ரமணியன் என்றும்  கருத்துகள் உண்டு என்றாலும்  வேங்கடேசனை  பெருமாள் என்று வழிபடுபவர் லக்ஷக்கணக்கான பக்தர்கள்.
மூன்றாவது பிரகாரத்தில் விஷ்வக்சேனர் சந்நிதி.  சதுர் புஜங்கள்  சங்கு சக்கரம் கொண்டு மஹா விஷ்ணுவைப் போல்  இருக்கிறார்.  சிவாலயங்களில்  சண்டீசுவரர்  மாதிரி இவர்.  திருமாலுக்கு சமர்ப்பிக்கப்படும் மாலைகள், பிரசாதங்கள் விஷ்வக்சேனருக்கு சமர்ப்பிக்கப்படுகிறது.
இரவும் பகலும்  மக்கள் வெள்ளம் நிரம்பிய இந்த ஆலய மண்டபங்களின் பெயர்கள்:
கிருஷ்ண தேவராய மண்டபம்
ரங்க மண்டபம்
திருமலை ராய மண்டபம்
ஜனா மண்டபம்
துவஜஸ்தம்ப மண்டபம்
திருமாமணி மண்டபம்
உண்டியல் மண்டபம் -  பரகாமணி மண்டபம்.  இங்கே தான் கோயிலின்  காணிக்கை  உண்டியல் உள்ளது.  இவ்வுண்டியல் காவாளம் எனப்படும் பித்தளை அண்டாவினைச் சுற்றி துணி கட்டி அமைத்திருக்கிறார்கள்.

திருப்பதி வெங்கடாசலபதி கோயிளுக்கு நடப்பதற்காக  கீழ் திருப்பதியிருந்து  ஆரம்பம். பாதையின் இருபுறமும் ஆழ்வார்களின் சிலைகள். அலிபிரி பகுதியில் கருடாழ்வாரும், கபில தீர்த்தமும். இதைத் தாண்டி சென்றால் ஆஞ்சநேயர் சிலையும், முழங்கால் முறிச்சான் மலைப்படிகள்,  காளிகோபுரம்
எல்லாம் வரும்.  நடந்து வருபவர்களுக்கு  தர்ம தரிசனமும், தங்குமிடமும் இலவசமாக தேவஸ்தானம் தருகிறது.

இந்த கோவிலைப் பற்றி நான் எழுதியது கடுகை விட சிறியது. நிறைய  சொல்லவேண்டி இருக்கிறது.


 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...