Saturday, March 26, 2022

  ஸூர்தாஸ்   -   நங்கநல்லூர்  J K  SIVAN 


''யாரிந்த  தேவதை?''

காலை மாலை என்று எல்லாம் தனியாக நேரம் ஒதுக்காமல் குழந்தைகளுக்கு எப்போதும் விளையாட்டு தான். பிருந்தாவனத்தில் வசித்த அனைத்து பையன்கள் பெண்கள் எல்லோருக்கும் அந்த குறும்புக்காரனை  வெகு நன்றாகத் தெரியும். அவனில்லாமல் எந்த விளையாட்டும் இல்லை. அதனால் தான்  மஹான்கள்  கூட  அவனை  ''அலகிலா விளையாட்டுடையான்''  என்கிறார்கள். ரொம்ப  சரியான வார்த்தை.

 வ்ரஜ பூமியில் இருக்கும் அத்தனை வீடுகளிலும் உள்ள கோபியர்கள் அவனை நன்றாக அறிவார்கள். ஒவ்வொருவர் வீட்டிலும் என்ன இருக்கிறது. எவ்வளவு வெண்ணை, தயிர் வைத்திருக்கிறார்கள் எனும்  கணக்கு அவர்களை விட அவனுக்கு தான் நன்றாக தெரியும். அவ்வளவும் அத்துபடி .

நந்தகோபன் வீட்டுக்குப்  பின்னால் ஒரு பெரிய கிழ  நாவல் மரம். அதில்  தாழ்ந்தும்  உயரமாகவும்  நிறைய கிளைகள். அது தான் அந்த கிராம  வாண்டுகளின் முக்கிய வாசஸ்தலம். சின்ன  சின்ன  வளைந்த குறுகலான தெருக்கள்,  இல்லை  இல்லை, சந்துகள்,  அந்த கோபியர்கள் வீடுகளை முன்னும் பின்னுமாக இணைத்தது. அந்த ஒவ்வொரு மண் தெருவும் அவனது காலடி பட்டதுதான். எப்போது எந்த நேரத்தில் எந்த கோபியின் வீட்டில் அவன் நுழைவான் என்று யாருக்குமே தெரியாது.

எந்த  வீட்டிலாவது  சட்டியோடு , பானையோடு  வெண்ணை காணாமல் போனாலோ அல்லது சட்டி உடைபட்டு வெண்ணையின்றி தரையில்  விழுந்து கிடந்தாலோ  , அல்லது சட்டி காலியாக வெண்ணை இன்றி உறியில் தொங்கிக்   கொண்டிருந்தாலோ  அதற்கு காரண கர்த்தா வான
அந்தப் பயல்   கிருஷ்ணன்  விஜயம் செய்திருக்கிறான் என்பது புரியும்.

ஒருநாள் கண்ணன் வழக்கம்  போல் நொண்டி அடித்துத்  தாவி தாவி ஒரு சந்தில் ஓடிக் கொண்டி ருந்தான் . நான்காவது வரிசை கடைசியில்  பெரிய  வீடு, வாசலில் புங்கமரம் அதை ஒட்டி ஒரு சின்ன வளைந்த குறுகல் சந்து. இடுப்பில் மஞ்சள் வஸ்த்ரத்தில் புல்லாங்குழல் செருகி  இருக்கிறது.   வாய் என்னமோ பாட்டை பாடிக் கொண்டிருந்தது. ஆறு வயது சிறுவன் கிருஷ்ணன்.
 
அந்த சந்தின் மூன்றாம் வீட்டு தாழ்வாரத்தில் ஒரு பொன்னிற கன்றுக்குட்டி. அது அவனை ஈர்த்தது. ஓடி அதன் அருகே சென்றவன் மலைத்து நின்றான். அதன் அருகில் ஒரு பெண். சிவந்த நிறம் . அழகு முகம். அந்த ரோஜா  மலரில் கருவண்டுகளைப்  போல் இரு கண்கள். காந்த விழிகள். அவனைப் பார்த்தன. முகத்தில் லேசாக ஒரு புன்னகை.

''யார் நீ? எவ்வளவு அழகா இருக்கியே? ''
''நான்  யாரோ? உனக்கென்னடா?''
''சொல்லு''
''உனக்கு எதுக்கு சொல்லணும்?''
''நீ இந்த வீட்டிலே தான் இருக்கியா?''
''தெரிஞ்சு நீ என்ன பண்ணப்  போறே?''
''சொல்லேன்.சொன்னா  என்ன?  குறைஞ்சு போவியா?''
''எதுக்கு கேக்கறே அதைச்  சொல்லு நீ முதல்லே?''
''நீ இந்த வீட்டிலேயா இருக்கே, யார் உங்க அப்பா அம்மா?''
.''..........''..
''சொல்லு?''
''ஏன்?''
''இதுக்கு முன்னாலே உன்னைப்  பார்க்கலியே இங்கே.?''
''நீ சரியாக பார்த்திருக்க மாட்டே''
''எனக்கு தெரியாமல் இங்கே யாருமே கிடையாது.கேட்டுப்பார் எல்லோருக்கும் என்னைத்  தெரியும் இங்கே.''
''அதனாலே என்ன. நான் இந்த பக்கமே இந்த சந்துகள் எதிலும் வந்ததில்லே ''
''ஏன்?''
''ஏன்? எதுக்கு வரணும் இங்கே இந்த சந்திலே எல்லாம்?
''நீ எங்கே போய் விளையாடுவே அப்போ?
''என் வீட்டு வாசலிலேயே விளையாடுவேன்''
''எல்லா சந்துலேயும் வந்து ஓடி ஆடி விளையாடினால் என்ன?''
''வேண்டாம் வேண்டாம். இங்கே ஒரு பொல்லாத பையன் இருக்கானாம். அதனால் வர்ரதில்ல''
''யார் அவன் அப்படி பட்ட பையன்'?'
''நந்தகோபன் மாமா ரெண்டு  பசங்களில் ஒருத்தனாம். ''
''அவன் பேர் என்ன
?   என்ன அப்படி பொல்லாதவன் அவன்?''
''கிருஷ்ணனாம்.  கருப்பா இருப்பானாம்  உன்னை மாதிரி.    எல்லார் வீடு வெண்ணையும் திருடறவன். தயிர் சட்டியை காலி பண்றவன். விஷமக்காரன்''
''நிறுத்து உன் பேச்சை... நான் தான் அவன். நான் எதுக்கு எல்லோர் வீட்டு வெண்ணை தயிர் எல்லாம்  திருடணும்? ''
'ஓஹோ, அப்போ  நீ தானா அது?  நீ இங்கே எங்க வீட்டுக்கு வராதேடா  போ ''
''நான் எதுக்கு உங்க வீட்டு தயிர் வெண்ணெய் திருடணும். நான் ஒண்ணும்  திருடன் இல்லை''.
''சரிதான்  போடா''
'' வா வா,   நீயும்  எங்களோடு சேர்ந்துக்கோ. இன்னிக்கு நாங்க ஒரு புது விளையாட்டு விளையாடப் போறோம்''
அந்த பெண் தலை ஆட்டியது. அவன் பேச்சில் பூவில் வண்டாக மயங்கியது. அதை அறியாமலேயே அந்த பிஞ்சு உள்ளத்தில் அந்த பையன் பாவம் திருடன் இல்லை. சாது, பொய் சொல்லத் தெரியாதவன். வெகுளி, ஆனால்  நல்ல பையன் என்று அபிப்ராயம் மனதில் எழுந்தது. அவன் பின்னால் ஓடியது.
யமுனை ஆற்றங்கரையில் ஒரு பெரிய ஜமாபந்தி.

இப்படித்தான்  ராதா கண்ணனோடு சேர்ந்துகொண்டாள் என்கிறார் ஸூர்தாஸ். அவர் நினைவில் எழுந்த காட்சி மேலே சொன்னது.

KRISHNA APPROACHES RADHA
KRISHNA SAYS '' O FAIR DUTY, WHO ARE YOU?''
WHERE DO YOU LIVE? WHOSE DAUGHTER ARE YOU?
I NEVER YET SAW YOU IN THE LANES OF BRAJ''
RADHA SAID, ' WHAT NEED HAVE I TO COME THIS WAY?'
I KEEP PLAYING BY MY DOOR
BUT I HEAR SOME SON OF NANDA
IS IN THE HABIT OF STEALING BUTER AND CURDS''
KRISHNA SAYS: ' LOOK, WHY SHOULD I APPROPRIATE
ANYTHING THAT IS YOURS? COME LET US PLAYTOGETHER ,
SURDAS: SAYS ''BY HIS HONEYED WORD
KRISHNA, THE CRAFTY PRINCE OF AMORISTS
BEGUILED RADHA AND PUT HER AT EASE

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...