மஹாமஹோபாத்யாய பிரம்மஸ்ரீ திருக்கோஷ்டியூர் ஹரஹர சாஸ்திரிகள் - நங்கநல்லூர் J K SIVAN
நான் அடிக்கடி சொல்வேனே , எத்தனையோ பெரிய பெரிய மஹான்கள் ஞானிகள் முனிவர்கள், தவசிகள் வாழ்ந்த பூமி இது. தமிழகத்தில் என்று சொன்னால் இப்போதிருப்பது அல்ல, நூறு இருநூறு வருஷங்களுக்கு முன்பு தென்னகம் என்று சொல்லலாம். தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் பேசும் மக்கள் சேர்ந்து வாழ்ந்து மொழி வாரி மாகாணங்கள் பிரிக்கப்படாத காலம். எங்கும் ஒற்றுமையும் , ஹிந்து சனாதன தர்மம், பக்தியும் குலையாமல் இருந்த காலம். அப்போது வெள்ளைக்காரன் ஆட்சி தற்போது இருப்பது போல் இல்லாமல் கடமை உணர்ச்சி, நேர்மை நியாயத்தோடு நடந்தது என்று தோன்றுகிறது.
மஹா பண்டிதர்களை, கல்வி சாஸ்திரங்களில் சிறந்தவர்களை அடையாளம் கண்டு மஹா மஹோபாத்யாய விருது அளித்தது. அப்படி விருது பெற்று நாம் மறந்து போனவர்களில்ஒருவரை இன்று அறியப் போகிறோம்.
திருக்கோஷ்டியூர் உங்களுக்கு நன்றாக தெரியும். ஸ்ரீ ராமானுஜர் எல்லோரையும் அழைத்து ரஹஸ்யமான அஷ்டாக்ஷர மந்திரத்தை எல்லோருக்கும் உபதேசித்த கோவில் உள்ள இடம். அங்கே 19ம் நூற்றாண்டின் மத்தியில் பிறந்தவர் பிரம்மஸ்ரீ ஹரிஹர சாஸ்திரிகள். வேத வித்துகள் வம்சம். 20 வயது வரை பிறந்த ஊர் திருக்கோஷ்டியூரிலேயே தாத்தாவிடம் பாடம் கற்று வளர்ந்து பின்னர் அந்த ஊரில் இருந்த பண்டிதர் ஸ்ரீ வேதாந்தச்சாரியாரிடம், நாடகம், தர்க்கம், வியாகரணம், காவ்யம் பயின்றவர். 21 வயசில் திருவிடைமருதூர் சென்று அண்ணா வாஜ பேயர் என்கிற சாஸ்திரிகளிடம் வியாகரணம் முழுமையாக கற்றார்.
அப்புறம் மன்னார்குடி ராஜு சாஸ்திரிகளிடம் ( மஹாபெரியவாளின் குரு, மன்னார்குடி பெரியவா என்று அவரால் அழைக்கப்பட்டவர்) சென்று உத்தர, பூர்வ மீமாம்சம், ஸ்ம்ரிதி, புராணம், ஸ்ரௌதம் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றார்.
மன்னார்குடியிலிருந்து கும்பகோணம் வந்தவர் அங்கே ப்ரம்மானந்தீயம், ப்ரம்மவித்யாபரணம், சித்தாந்த பிந்து, ப்ரம்ம ஸூத்ர வ்ருத்தி ஆகிய நூல்களை பரிசோதித்து அச்சிட உதவினார். அவரால் பரிசோதிக்கப்பட்ட இந்த நூல்கள் கும்பகோணம் அத்வைத சபையால் ''ந்யாயேந்து சாகரம்'' என்ற புத்தகமாக வெளிவந்து ரெண்டாம் பாகத்தில் உள்ளன.
கும்பகோணத்தில் வசித்த காலத்தில் அவர் தான் மேலே சொன்ன சபையின் முக்கிய அதிகாரி, ஆய்வாளர். அவரால் நன்றாக வளர்ந்தவை தான் கும்பகோணம் அத்வைத சபை, காளஹஸ்தி அத்வைத சபை. பத்து வருஷங்களுக்கு மேல் முக்கிய பரிக்ஷாதிகாரி.
அப்புறம் சிதம்பரத்தில் ஒரு சமஸ்க்ரித பாடசாலையில் ஆசிரியர். அப்போது தென்னகத்தின் பல பகுதிகளிலிருந்து வந்து அவரிடம் கல்வி பெற்றவர்கள் பலர். முக்கிய ஒரு சில பெயர்கள் சொல்கிறேன்:
தேதியூர் சுப்பிரமணிய சாஸ்திரிகள்
,நூரணி அனந்தகிரிஷ்ண சாஸ்திரிகள்
கருங்குளம் கிருஷ்ண சாஸ்திரிகள்,
இஞ்சிக்கொல்லை ஜெகதீச சாஸ்திரிகள்
போலகம் ராம சாஸ்திரிகள்
மைசூர் சமஸ்தானத்தில் ஒரு கல்லூரில் வேதாந்த ஆசிரியராக பனி புரிந்தது பல வருஷங்கள். இவரது சிறப்பை கவனித்த வெள்ளைக்கார அரசாங்கம் அவரை மஹாமஹோபாத்யாய விருது கொடுத்து கௌரவித்தது. நாம் இவரைப் பற்றி அறிந்து கொள்வதை கோட்டை விட்டு விட்டோம். எத்தனையோ அத்வைத கிரந்தங்களை அச்சிட்டு வழங்க உதவிய இவரை சிஷ்யர்கள் சீடர்கள் நினைவில் வைத்திருக் கலாம். இவருடைய வம்சா வழி யினராவது இவரது புகைப்படமாவது நமக்கு அளித்து நாம் அவரை நமஸ்கரிக்க உதவலாம்.
No comments:
Post a Comment