விதுர நீதி - நங்கநல்லூர் J K SIVAN
1 நெஞ்சில் துயரமும் பயமும்.
எவ்வளவு பெருமை பெற்ற எவராலும் வெல்லமுடியாத மஹா வீரர்கள். ராஜசூய யாகம் புரிந்து உலகமுழுதும் சக்ரவர்த்தியென ஏற்கப்பட்டவர்கள். கேவலம் ஒரு சூதாட்டத்தில் சகலமும் இழந்து, சர்வ சக்தியும் ஒடுங்கி, அடிமைகளாக தலைகுனிந்து நிற்கிறார்கள். விதியின் கொடுமை.
மிகவும் மனம் ஒடிந்து போய் கண்ணீர் ப்ரவாஹத்தோடு பாண்டவர்களின் தாய் குந்திதேவி சிலையாக நின்றாள் .நடந்தவை யாவும் ஒரு கனவு போலவே வெகு சீக்கிரமாக முடிந்து போய் விட்டதே. பாண்டவர்களுக்கு வனவாசமா!!
''அம்மா, குந்தி, விதியை யார் வெல்ல முடியும். நீ என்னோடு என் குடிசைக்கு வா'' என்று விதுரர் அழைத்தபோது அவள் மனம் கொஞ்சம் நிம்மதி பெற்றது. இந்த ஹஸ்தினாபுரத்தில் இப்படியும் ஒரு நல்லவரா என்று தோன்றியது.
ஹஸ்தினாபுரத்தில் கௌரவர்களின் அரண்மனை அந்தப்புரத்தில் மற்ற ராணிகள், பெண்கள் அனைவரும் கதி கலங்கி பயத்தால் பீடிக்கப்பட்டு இருந்தார்கள். திரௌபதிக்கு நேர்ந்த அவமானம் தாங்க முடிய வில்லை. ''நிராதரவான ஒரு அபலைப் பெண்ணை ஆடை அவிழ்த்து சபையில் அனைவர் முன்னே மானபங்க படுத்த முயற்சியா?''
அவளைப் போலவே தாங்களும் பெண்கள் என்பதால் இதை ஜீரணிக்க முடியாமல் மனதிற்குள் கௌரவர்களை சபித்தார்கள். கண்களை மூடிக்கொண்டு மௌனமாக அழுதார்கள். நடந்ததையெல்லாம் கேட்டு அறிந்த கண்ணற்ற சக்கரவர்த்தி திருதராஷ்டிரனுக்கும் மனசாக்ஷி கொஞ்சமாய் இருந்ததோ, என்னவோ, அதன் உறுத்தல் சமாளிக்க முடியவில்லை.
''உடனே இங்கே என் தம்பி விதுரனை வரச்சொல்'' என்று தூதுவனை அனுப்பினான்.
''ஜனமேஜயா, கேள், விதுரன் வந்ததும் மூச்சுவிடாமல் திருதராஷ்டிரன்
''என்ன ஆச்சு தம்பி, யுதிஷ்டிரன் அவன் சகோதரர்கள், திரௌபதி என்ன சொன்னார்கள், செய்தார்கள் சொல்.''
''திரும்பிக்கூட பார்க்காமல் யுதிஷ்டிரன் கானகம் நோக்கி நடந்தான். அவனை நிழலாக பின் தொடர்ந்து சகோதரர்களும் கண்ணீர் வழியும் கண்களை கூந்தல் மறைக்க, திரௌபதியும் சென்றார்கள். ஒருவார்த்தை கூட எவரும் கௌரவர்களைப் பற்றியோ உன்னைப் பற்றியோ குறை கூறவில்லை. ரிஷி தௌம்யர் கையில் தர்ப்பைகளோடு யமனைப் பற்றி வரும் சாம வேத மந்த்ரங்களை உச்சரித்தவாறு அவர்கள் பின்னால் சென்றார்.''
''விதுரா, எதற்காக உணர்ச்சிகளை காட்டாமல் யுதிஷ்டிரனும் பாண்டவர்களும் சாதாரண மனிதர்களைபோல் சென்றார்கள்?''
''யுதிஷ்டிரன், உன் மக்கள் சகலத்தையும் அபகரித்துக்கொண்டபோதிலும் துளியும் வருந்த வில்லை. நீதி, நேர்மை, நியாயத்தை கைவிடவில்லை. மக்களிடம் தங்கள் சோகம், வெறுப்பு, கோபம் எதையும் காட்டவில்லை. பீமன் மட்டும் தனது முஷ்டியை காட்டிக்கொண்டே என்னை வெல்ல இங்கு எவரும் இல்லை என்று சொல்லிக் கொண்டி ருந்தான். அர்ஜுனன் மண்ணை வழியெல்லாம் தூவிக்கொண்டே சென்றபோது அவன் மனதில் என் அம்புகள் எண்ணற்றவையாக இந்த மண் துகள்களைக் காட்டிலும் அதிகமாக வந்து இவர்களை துளைக்கும் என்ற எண்ணம் மேலோங்கி இருந்தது. திரௌபதியின் கண்ணீர், அவள் மானத்தை மறைக்கும் ஒற்றை வஸ்த்ரம், கலைந்த கூந்தல் எதைக் குறித்தது என்றால் ''13 வருஷங்களுக்குப் பிறகு இப்படித்தான் என்னை இந்த நிலைக்கு ஆளாக்கியவர்கள் அத்தனைபேர் மனைவிகளும் தள்ளப்படப்போகிரார்கள், ஒரே வித்தியாசம், அவர்கள் புருஷர்கள் அப்போது உயிருடன் இருக்கமாட்டார்கள்'' என்றாள் . தௌம்யர் தர்ப்பையுடன் தென் மேற்கு திசை நோக்கி யம மந்திரத்தை சொல்வது, பின்னால் வரும் யுத்தத்தில் இறந்த கௌரவர்களுக்கு அவர்கள் குடும்ப வாத்யார்கள் இந்த யம மந்திரத்தை சொல்ல வேண்டி வரும் என்று காட்டத்தான் .
''அண்ணா, பாண்டவர்கள் மன நிலை புரிந்ததா உனக்கு. எதிர்காலம் அவ்வளவு சுபிக்ஷமாக இருக்கப் போவ தில்லை உன் மக்களுக்கு'' என்றான் விதுரன்.
பாண்டவர்கள் வனவாசம் துவங்கச் சென்ற போது துர் சகுனங்கள் நிறைய தோன்றின. நிலம் நடுங்கியது. மேகமின்றி மின்னல் வீசியது. எரி நட்சத்திரங்கள் விழுந்தன. க்ரஹணம் திடீரென்று நிகழ்ந்தது. பறவைகளும் மிருகங்களும் கூக்குரலிட்டன. மரங்கள் சாய்ந்தன. சில வீடுகள் இடிந்தன. இன்னும் என்னென்னவோ அப சகுனங்கள் திருதராஷ்டிரா''
ஆகாயத்தில் ரிஷிகள் சிலர் தோன்றி ''இன்றிலிருந்து 14 வருஷத்தில் கௌரவர்கள் பீமார்ஜுனர்களால் அழிவது நிச்சயம் என்றனர்.''
துரியோதனன் கர்ணன் சகுனி ஆகியோர் உடனே ராஜ்யத்தை துரோணரிடம் ஒப்படைத்து நீங்கள் தான் காக்கவேண்டும் என்றனர்.
''துரியோதனா , பிராமணர்கள் நிறைய பேர் என்னிடம் பாண்டவர்கள் சாதாரண மனிதர்கள் அல்ல, அவர்களை அழிக்க முடியாது என்ற போதிலும் என்னால் முடிந்ததை உங்களுக்காக நான் செய்வேன். ஆனால் விதி கொடியவன் , எனக்கும் துருபதனுக்கும் ஏற்பட்ட பிணக்கில், அவன் ராஜ்யத்தை இழந்து என்னிடம் பாதி ராஜ்யம் தானம் பெற்றது அவன் மறக்கவில்லை. யாகம் செய்து ஒரு புதல்வனைப் பெற்றான். என்னை எதிர்ப்பதே அவன் குறிக்கோள், அவன் சகோதரி திரௌபதி. எனவே அந்த விரோதம் நமக்கு எதிராக செயல்படும். திருஷ்டத்யும் னனை தவிர வேறு எவரும் எனக்கு ஈடில்லை. கொல்ல முடியாது. வெல்வேன்' என்றார் துரோணர்
இப்போதெல்லாம் திருதராஷ்டிரன் சிந்தனை எதிர்காலத்தை பற்றியே இருந்தது. எப்படி அவன் மக்களை காப்பது? கவலை அவனை அடிக்கடி வாட்டியது.
ஒரு நாள் சஞ்சயன் ''மகாராஜா, பாண்டவர்களை தான் சூதாட்டத்தில் எல்லாம் இழக்கச் செய்து கானகம் விரட்டி விட்டீர்களே. உலகமே இப்போது உங்கள் வசம். எதிர்ப்பார் யாருமே இல்லை. இருந்தும் எதற்காக கவலையோடு இருக்கிறீர்கள்'' என்றான்.
"சஞ்சயா, பாண்டவர்களை விரோதித்துக்கொண்டு அவர்கள் பக்கம் இருக்கும் பெரும் சேனையை கண்டு யார் கவலை கொள்ளமாட்டார்கள் சொல்?''
"மகாராஜா, தவறான செய்கை, சர்வ நாசத்தை உண்டு பண்ணும். பீஷ்மர், துரோணர், விதுரன் தடுத்தும் அந்த பெண் திரௌபதியை சபையில் ஒற்றைத் துணியோடு இழுத்து வரச் செய்தது மன்னிக்க முடியாத குற்றம். அழியப்போவனுக்கு தான் அநீதி, நீதியாக, அக்ரமம் நியாயமாக தோன்றும். தானே வரவழைத்து கொண்டார்கள் உன் மக்கள் இந்த நாசத்தை. துர்யோதனனும், கர்ணனும், துச்சாதனனும் செய்தவை, பேசியவை எல்லாம் இனி வரப்போகும் வினாசத்துக்கு அறிகுறிகள். ''
''புரிகிறது சஞ்சயா, யாரேனும் ஒருவனாவது என் மக்களில் பிழைப்பானா?'' நடந்த தவறுகளை கொஞ்சமாவது சரிக்கட்ட தான் நான் திரௌபதிக்கு மூன்று வரம் கொடுத்தேன். அவள் இரண்டை கேட்டாள் . இழந்த எல்லாவற்றையும் திருப்பி அளித்து அவர்களை அனுப்பினேன். இருந்தும் என் மனதில் பாண்டவர்கள் திரௌபதிக்கு நேர்ந்த அவமானத்தை மறக்க மாட்டார்கள், மன்னிக்க மாட்டார்கள் என்று தெரிந்து விட்டது. அங்கே தான் ஆரம்பமானது என் மக்களின் நாசம்.
அர்ஜுனனுக்கு உயிர்த்தோழன் அந்த கிருஷ்ணன். அவன் சக்தி எனக்கு தெரியும். அதை எதிர்த்து என் மக்கள் என்ன செய்வார்கள்?'
உயிர் குடிக்கும் யமனாக வரும் பீமனின் சூறாவளி வேகத்தை எரிமலை பலத்தை எப்படி எதிர்கொள்வார்கள்?' அவன் சபதத்தை கேட்டாயா'' எப்படி வெறும் கையாலேயே அந்த ஜராசந்தனை கொன்றான்'' ஹும்ம்... எவ்வளவோ சொன்னான் விதுரன் என் காதில் ஏறவில்லை. பிள்ளைப் பாசம் என் கண்ணை மறைத்தது என்று சொல்லமுடியாது. எனக்கு தான் கண்ணே இல்லையே, என் மனதை இரும்பாக்கி நியாயத்தை மறைத்தது.''
விதுர நீதியை இந்த பின்னணியில் இனி அறிவோம்.
No comments:
Post a Comment