Thursday, March 17, 2022

ANNA PURNI



 

அன்னபூரணி அர்த்த நாரீஸ்வரி  மாதா -  நங்கநல்லூர்  J K   SIVAN 

பகவான்  ரமண  மகரிஷி அற்புதமாக  நீதி, புராண கதைகள் ஜன ரஞ்சகமாக சொல்வார். அதில் ஒன்றைச்  சொல்கிறேன். இது அர்த்தநாரீ ஸ்வரர் சிவபெருமான்  பார்வதி தேவி பற்றியது. 
கைலாசத்தில் எப்போதும் ரிஷிகள் யோகிகள், ஞானிகள் தேவர்கள் சந்தேகங்கள் தீர்த்துக்கொள்ள, உபதேசம் பெற,   சிவ தர்சனம் பெற வருவார்கள். அவர்கள் விருப்பத்தை பூர்த்தி செய்யவே  பரமேஸ்வரனுக்கு நேரம் சரியாக இருக்கும்.  அருகிலே அமர்ந்திருந்த உமாதேவிக்கு கணவனின்  நேரம் கிடைப்பதே  குதிரைக் கொம்பாகிவிட்டது.  தனிமையில் அவரோடு விளையாட,  பேச,  ஞானம் பெற விழைந்தாள். 
ஒரு நாள் சாயங்காலம் அற்புதமாக  மலயமாருத தென்றலில்  வாச மலர்களின் நறுமணம் எங்கும் வீசி மனதுக்கு ரம்யமாக   பார்வதி பரமேஸ்வரர் ஏகாந்தமாக சில கணங்கள் இருந்த போது  பார்வதிக்கு சிவன் கண்ணைப் பொத்தி கண்ணாமூச்சி  ஆட  எண்ணம் வந்தது.  விளையாட்டாக  சிவன் பின்னால்  வந்து இரு கரங்களாலும் பரமேஸ்வரன் கண்களை மூடினாள்.  'நான் யார்  என்று சொல்லுங்கள்?''  என்று விளையாடினாள்.

சிவனின் கண்கள் சூர்ய சந்திர அக்னி நயனங்கள்,த்ரிநேத்ரங்கள், என்பதால்  அந்த ஒரு கணம்  பிரபஞ்சம் ஸ்தம்பித்து விட்டது.  கைலாசத்தில் அரை நிமிஷ காலம் என்பது மற்ற உலகங்களில் பல  லக்ஷம் வருஷங்கள் என்பதால் சூரிய ஒளி, சந்திர ஒளி,  அக்னி எதுவுமின்றி காரிருளில்  அவை  பல காலம் தவித்தன.

ரிஷிகள் ஓடிவந்தனர். என்ன காரணம் ?ஏன் இப்படி  காரிருள் சூழ்ந்தது? என்று அறிய, அதிலிருந்து  மீட்பு  பெற  சிவனிடம் ஓடிவந்தார்கள்.  உமையின் விளையாட்டால்  பேரிழப்பு  நேர்ந்ததற்கு  சிவன் வருந்தினார். 

அதற்குள் பரமேஸ்வரன்  கௌரியின் விளையாட்டால் நேரும்  அனர்த்தத்தை உணர்ந்தவராய்  அடுத்த கணமே ''கௌரி  போதும் போதும் உன் விளையாட்டு. என் கண்களை மூடாதே, உடனே  உன் கரங்களை விலக்கு''  என்று கட்டளையிட்டார்.  அவள்  கைகளை அகற்றியதும் பழையபடி  எங்கும்  ஒளிமயமானது. 
''ரிஷிகளே  இதனால் எத்தனை காலம்  இருளில் கழிந்தது?'' என்று வினவினார் பரமேஸ்வரன்.
''அரை நொடி  காலம் தேவியார் கண்களை மூடியதால் பல லக்ஷம் வருஷங்கள் உலகங்கள் எல்லாம்  இருளில் துன்புற நேர்ந்தது'' என்றார்கள்  ரிஷிகள்.
கருணை மிக்க  சர்வேஸ்வரன்  ''தேவி, நீ  லோக மாதா என்பதால் இந்த காரியம்  நீ செய்திருக்கக் கூடாது. என் காரியங்களில் நீ பிரவேசிக்க கூடாது அம்மா.  உன் விளையாட்டால்  இந்த தவறு நேர்ந்து விட்டது. நீயே  கருணை உள்ளம் கொண்ட  தாய் அல்லவா? பிற உயிர்களுக்கு துன்பம் விளைவிக்க லாமா? ”.

''சம்போ,  மகாதேவா,  நீங்கள் சொல்வது  வாஸ்தவம். என் பிழைக்கு  நான் என்ன  ப்ராயச்சித்தம்  செய்ய வேண்டும் என்று நீங்கள் தான் கட்டளையிட வேண்டும்.''

''அம்பா,  நான் இன்றி நீ என்ன தவம் செய்ய இயலும்? நீ தர்ம ஸம்வர்த்தனி .  பூலோகத்துக்கு கர்ம பூமி என்று பெயர். தவம், ப்ராயச்சித்தங்களுக்கு  பொருத்தமான இடம்.  உன்னால் மற்றவர்களும் பயன் பெற நீ அங்கே சென்று  தவம் புரிவாய். உன் வரவால் பூமி சுபிக்ஷம் பெறட்டும்.  தர்மம் பரவட்டும்.  

காஞ்சிபுரம்  உன்னதமான  புண்ய ஸ்தலம். நீ அந்த பூலோக ஸ்வர்கத்துக்கு சென்று  என்னை தியானம் செய்து தவம் புரிவாய்.  நான் தக்க சமயத்தில் வந்து உன்னை சேர்கிறேன். அது வரை உன் தாமரை இதயத்தில் குடி கொண்டிருப்பேன். என்னை பிரிந்த  வருத்தம் உனக்கு வேண்டாம். நான் உன்னுள் இருப்பேன்''

 தன்னுடைய தோழிகளோடு  உமா தேவி  பூலோகம்  சென்றாள் .

பாரத தேசத்தில் காசியில்  அப்போது பஞ்சம். மழை பொய்த்து விட்டதால் வறட்சி.  எங்கும்  பசி பட்டினி.  அம்பாள் இதை அறிந்து முதலில் காசிக்குச்  சென்றாள் . அங்குள்ள  ஜீவர்கள் பசிப்பிணியாழ்  வாடுவதை அவளால் பொறுத்துக்  கொள்ள முடியவில்லை.  பசியைத்  தீர்க்க முடிவெடுத்தாள். அன்னபூர்ணா என்ற உருவில்  ஒரு மாளிகையை சங்கல்பத்தால் உருவாக்கினாள் .மிகப்பெரிய  உணவு சமைக்கும் பாத்திரங்கள் அவளை அடைந்தன. ஆயிரக்  கணக்கானவர்களுக்கு  இரவும் பகலும்  இடைவிடாது  வயிறார உணவளித்தாள்  அன்ன பூரணி.
அன்னபூரணியின் தொண்டு  நாடெங்கும்  சேதியாகப்  பரவியது .  காசி ராஜாவின் பண்டக சாலை  ஏற்கனவே   காலி, எப்படி  மக்களின் பசித்துயர் தீர்ப்பது என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்த வனுக்கு  அன்னபூரணியைப் பற்றிய விஷயம் காதில் விழுந்ததும் ஆச்சர்யம்.  அதிசயித்தான்.

ஒரு ராஜா என்னால் முடியாததை எப்படி ஒரு பெண் வெற்றிகரமாக சமாளிக்கிறாள் அவளை யார் என்று கண்டறிய வேண்டும் என்று மாறுவேஷத்தில் மந்திரிகளோடு  புறப்பட்டான்.   

அவளைக்  கண்டு அரிசி தான்யம் கடனாக பெற்று மக்களுக்கு உதவ எண்ணம்  காசி ராஜாவுக்கு.  
'ராஜா, கடன் உதவி எதுவும் இங்கே இல்லை. யார் வேண்டுமானாலும்  எப்போது வேண்டுமானாலும் வந்து வயிறார உண்ணலாம்''

ராஜா மந்திரிகள் எல்லோரும் வயிறார உண்டார்கள்.  எடுக்க எடுக்க  அன்னபூரணியின் பாத்திரம் அன்னம் ஊற்றாக பொங்கி வளர்ந்து  வருவதைக் கண்டு ஆச்சரியப் பட்டார்கள். இவள் சாதாரண பெண் அல்ல  தெய்வீகம் நிரம்பிய சக்தி தேவதை என்று உணர்ந்து   அம்பாளை வணங்கினார்கள். அம்பாள்  அவர்களுக்கு தனது சுய உருவில் தர்சனம் அளித்தாள்.   காசி   ராஜாவிடம்   ''மகனே,  உன் பக்தியை  மெச்சினேன்.  நான் காசிக்கு வந்து வெகு காலம் ஆகிவிட்டது.  இனி உன் ராஜ்யத்தில் பஞ்சம் இருக்காது. சுபிக்ஷம் ஒன்றே நிலவும்.  யாரும் பசியால் வாடமாட்டார்கள். இனியும் நான் இங்கே  தொடர்ந்து இருக்க முடியாது.  என் தவத்தை  நிறைவேற்ற  காஞ்சி நகரம் செல்லவேண்டும். உன் குடி மக்களை  சந்தோஷமாக ,நல்லாட்சி தந்து ரக்ஷிக்கவேண்டியது உன் கடமை'' என்றாள். 

''பரதேவி, உங்கள் கட்டளைப்படி நடப்பேன். நீங்கள் இங்கு தொடர்ந்து உங்கள் தரிசனம் நாங்கள் என்றும் பெற  அருள வேண்டும்''  இதுவே  எங்கள் வேண்டுதல்.. 
''நான் காசியில்  விஸ்வநாதனோடு  அன்னபூரணியாக என்றும் இருப்பேன் கவலைப்படாதே'' என்று சொல்லி உமாமகேஸ்வரி காஞ்சிபுரம் சென்றாள் .

இன்றும்  ஆயிரக் கணக்கானோர்  தினமும் இலவசமாக உணவு காலையிலிருந்து மாலை வரை  அன்னபூர்ணா தேவி ஆலயத்தில் வயிறார பெறுகிறார்கள்.  நான் தான் இன்னும் அங்கே சென்று கை  நனைக்க  பாக்யத்தைப்  பெறவில்லை. கூடிய சீக்கிரம் பெறுவேன் என்று உள்ளுணர்வு சொல்கிறது.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...