உயிர் காத்த புலவர்
தமிழ்நாடு பல தமிழ் ராஜாக்களை பார்த்திருக்கிறது. நாடு பல பிரிவுகளாக இருந்த சமயம். ஒவ்வொரு பிரிவுக்கு ஒரு ராஜா. திருக்கோவலூரும் அடுத்த சில பகுதிகளும் மலையமானாடு என்று பெயர் கொண்டு நாளாவட்டத்தில் சுருங்கி மலாடு ஆகிவிட்டது. மலாடு ராஜாக்கள் பரம்பரை பெயர் மலையமான். சிற்றரசர்கள். தான தர்மம் வீரம் ரெண்டுக்கும் பேர் போனவர்கள். பெரிய ராஜாக்கள் சேர சோழ பாண்டியர்களுடைய படையில் ஒரு சேனாதிபதியாக ஒரு மலையமான். காரி என்று பெயர். யாருக்கு படைபலம் வேண்டுமோ அங்கே சேர்ந்து கொண்டு எதிரிகளை வாழ்த்துவதில் மஹா சாமர்த்தியசாலி. இப்படி உதவியதால் மூவேந்தர்கள் மலையம்மனுக்கும் முடி சூட்டி கௌரவிக்க வேண்டினார்கள். மலையமான் காரி முடி சூட்டப்பட்டு மலையமான் திருமுடிக் காரி எனும் கடையெழு வள்ளல்களில் ஒருவன் ஆனான். மலையமான் இப்படி பலம் மிகுந்த சிற்றரசனாக இருந்து யாருக்கு வேண்டுமோ அவர்களுக்கு உதவுவது தனக்கு ஆபத்து என்று சோழ ராஜா கிள்ளிவளன் நினைத்தான். ஆகவே மலையமான் வம்சத்தையே அழிக்க முடிவெடுத்தான். காரி மறைந்ததும் அவனுடைய சிறு பிள்ளைகள் இருந்தார்கள். இவர்கள் விஷப்பாம்புகள் இவர்களை முளையிலேயே கிள்ளி விடவேண்டும் என்று கிள்ளிவளவன் நினைத்தான். அந்த சிறுவர்களை சிறைபிடித்து யானைக்களில் இடற வைத்து கொல்ல ஏற்பாடு பண்ணினான்.
யார் சோழ ராஜாவை தடுக்கமுடியும். காரியிடம் பரிசுகள் பெற்ற புலவர்கள் ஒன்றுசேர்த்து ஆலோசித்து கோவூர் கிழாரை அழைத்து விஷயம் சொல்லி எப்படியாவது கிள்ளிவளவன் முடிவை மாற்றி மலையமான் திருமுடிக்காரியின் குழந்தைகளை காப்பாற்ற வேண்டினார்கள்.
கோவூர்கிழார் அதை தலையாய கடமையாகக் கருதி, கிழார் நாவிலிருந்து எழும் சொற்களுக்குப் படைப்பலம் மிக்க அரசர்களும் அஞ்சுவார்கள்.
மலையமான் குழந்தைகள் கட்டப்பட்டு அழுதார்கள். யானை அவர்களை இடற தயாராக நின்றுகொண்டிருந்த சமயம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த கிள்ளிவளவன் அருகே கிழார் சென்றார்.
அழுது அழுது குரல் கம்மிய சிறுவர்கள் யானையுள்ள திக்கை நோக்கினர். குழந்தைகளுக்கு யானை என்றால் பிடிக்குமே. அப்போது அவர் கள் அழுகை சிறிது நின்றது. அந்த யானையைப் பார்த்தபோது அவர்களுக்கு சந்தோஷம். அந்த யானை தங்களைக் கொல்லப்போகிறது என்பது தெரியாத சிறுவர்கள். அழுத குழந்தைகள் சிரித்ததைப் பார்த்த கோவூர்கிழார் கண் ணில் நீர் துளித்தது. வளவனை நோக்கிப் பேசத் தொடங்கினார்.
"மகாராஜாவுக்கு ஒரு விண்ணப்பம். திருச் செவி சாய்த்தருள வேண்டும்"
"இப்பொழுதே சொல்லவேண்டுமா? அரண் மனைக்குள் சென்றபிறகு சொல்லாமே" என்றான் கிள்ளி வளவன்.
"இல்லை. இப்பொழுதே கேட்டருள வேண்டும். இதைக் கேட்டுவிட்டு இப்போது தொடங்கி யிருக்கும் காரியத்தைச் செய்யலாம்" என்றர் புலவர்.
புரவலனாயினும் புலவர் சொல்லை மறுப்பதற் குத் துணியவில்லை. அந்தக் காலத்துப் புலவர் பெருமை அது!
"சரி; சொல்லுங்கள்"
"நீங்கள் பரம்பரையாகப் புகழ் பெற்ற சோழர் குடியில் உதித்தவர்கள். சிபிச் சக்கரவர்த்தியின் பரம்பரையில் தோன்றியவர்கள். சிபியின் பெரு மையை இன்று இதிகாசம் ஓதுகின்றது. அவன் தனக்குச் சம்பந்தமில்லாத ஒரு புறாவின் உயிரைக் காப்பாற்றுவதற்காகத் தன் உடம்பையே அரிந்து கொடுத்தான். பிறர் துன்பத்தைப் போக்கவே தான் துன்பத்தை ஏற்றுக்கொண்டான். அவன் குடியிற் பிறந்த நீங்கள் இத்தகைய காரியத்தை யோசித்தல்லவா செய்யவேண்டும்? இவர்கள் யார்? உங்கள் குடிக்குச் சமானமான குடியினர்களா? அல்லவே. புலமையையே தமக்குச் சொத்தாக உடையவர் களது வறுமையைப் போக்கி ஆதரிக்கும் மலையமான் குடியிற் பிறந்தவர்கள். இவர்களுக்கு வரும் துன்பம் புலவர்களுக்கு வரும் துன்பமே யாகும்."
தன்னுடைய பயத்தினால் அக் குழந்தைகளைப் பகைப் பிண்டமாகக் கருதிய கிள்ளிவளவனுக்குக் கோவூர்கிழார் அவர்களை வள்ளன்மையுடைய குடி யினரென்பதை ஞாபக மூட்டினார். அதுமட்டுமன்று; புலவரைக் காக்கும் குடியை அழித்தால் புலவர் கூறும் பழிக்கு ஆளாக நேருமென்ற அச்சத்தையும் அவர் குறிப்பாக உண்டாக்கினார்;
'ஏதேது! இந்தக் குடியினரால் விளையும் பயம் போக வேண்டுமென்று எண்ணி ஒரு காரியம் செய்தால் புலவர்கள் வாயில் விழவேண்டும் போலிருக்கிறதே! அவர்கள் பழிக்கு ஆளாவதைவிட இவர்கள் பகைக்கு ஆளாவதேமேல்' என்ற எண்ணங்கூட அவன் மனத்தில் உண்டாயிற்று.
கோவூர்கிழார் சோழனிடம் " அரசே, உங்கள் குடிக்குத் தகாத காரியம் இது; உங்க ளுடைய தண்டனைக்குரியவர்களும் அல்லர் இவர்கள். இவை கிடக்கட்டும். இந்தக் குழந்தைகளைச் சற்றுக் கண்திறந்து பாருங்கள். முகத்தில் பால் வடிகிறது. தம்மை இப்போது கொல்லப் போகிறார்களென்று கூட அவர்களுக்குத் தெரியாது. அவ்வளவு பச்சைப் பசும் பாலகர்கள். ஏதோ புதிய இடமாக இருக்கிறதே என்று வெருவி அழுகிறார்கள். அதற்குள் அந்த யானையைப் பார்த்தவுடன் அழுகை போய்விடுகிறது. உயிரை வாங்க வந்த யானையை இவர்கள் விளையாட்டுப் பொருளாக நினைக்கிறார்கள். இவ்வளவு பேதைமையை யுடையவர்கள்! பாவம்! பச்சைப் பசுங்கொழுந்துகள். இவர்களையா நீங்கள் கொல்லத் துணிந்தீர்கள்! இதோ பாருங்கள் இவர் கள் நிலைமையை."
கிள்ளிவளவன் பார்த்தான். கோவூர்கிழார் கூறிய வார்த்தைகள் அவன் நெஞ்சிலே உறைத் தன. "பாவம்! இளங்குழந்தைகள்" என்று அருகி லுள்ளார் முணுமுணுக்கும் ஒலியும் காதிலே பட்டது. அதுகாறும் முள் செடியாக பாவித்திருந்த அவர்களது இளமை அப்பொழுதுதான் சோழன் கண் ணிலே பட்டது. அவன் மனத்திலே ஒரு குழப்பம் உண்டாயிற்று. அதை அவனது முகக்குறிப்பால் புலவர்பிரான் உணர்ந்துகொண்டார்;
"ஏதோ நான் சொன்னேன். எல்லாவற்றையும் யோசித்துப் பாருங்கள். அப்பால் உங்கள் இஷ்டம்போல் செய்யுங்கள்" என்று விநயமாகக் கூறினார்.
கிள்ளிவளவன் மனம் உருகியது.
"நிறுத் துங்கள். அந்தக் குழந்தைகளை விட்டுவிடுங்கள்"
அரசனது கட்டளை குழந்தைகள் உயிரை காத்தது. கோவூர் கிழார் விரைவாக ஓடி அந்த இளஞ்சேய்களைக் கட்டி யணைத்துக் கொண்டார். ஆனந்தத்தால் அவர் கண்களில் நீர் பெருகியது. அந்தச் சிறுவர்கள் யாரோ ஒரு புதிய மனிதர் தம்மை யணைப்பதனால் பயந்துபோய் அழுதனர். அழுதால் என்ன? அவர் தம் உயிர்கள் அன்று காலன் வாயிலிருந்து மீண்டன. புறநானூறு, 46-ஆம் செய்யுள் கோவூர் கிழார் எழுதிய மேற் சொன்ன சம்பவத்தை பாடலாக தருகிறது.
''நீயே புறவின் அல்லல் அன்றியும் பிறவும்
இடுக்கண் பலவும் விடுத்தோன் மருகனை,
இவரே புலன் உழுது உண்மார் புன்கண் அஞ்சித்
தமது பகுத்து உண்ணும் தண்ணிழல் வாழ்நர்,
களிறு கண்டு அழூஉம் அழாஅல் மறந்த
புன்தலைச் சிறாஅர் மன்று மருண்டு நோக்கி
விருந்திற் புன்கண் நோவுடையர்,
கேட்டனையாயின் நீ வேட்டது செய்ம்மே.''
அர்த்தம்: ''இதோ பாரு , கிள்ளிவளவா, நீ தான் புறாவின் துன்பம் மட்டுமல்லாமல் மற்றவர்கள் துன்பங்கள் எல்லாவற்றையும் நீக்கிய சோழ பரம்பரையில் வந்தவன். இச்சிறுவர்களின் மூதாதையர், கற்றவர்களது வறுமையைக் கண்டு அஞ்சி, தமது உணவைப் பங்கிட்டு உண்டு, அவர்களுக்குக் குளிர்ந்த நிழலாக விளங்கி வாழ்ந்தவர்கள். திருமுடிக்காரி மாதிரி ஒரு ஆள் கிடைப்பது குதிரைக் கொம்பு.பாவம் அவன் மக்கள் இந்த குழந்தைகள்.
ஆனால் இங்கே, கொல்ல வரும் யானையைக் கண்டு அழுது, பின்பு அழுகையை மறந்து, பொலிவிழந்த தலையுடைய இச்சிறுவர்கள், மன்றத்தை மருண்டு நோக்கி வாழ்வில் முன்பு அறியாத புதிய துன்பத்தை அடைந்திருக்கின்றனர். நான் கூறிய அனைத்தையும் நீ கேட்டாய் என்றால், இனி நீ என்ன நினைக்கிறாயோ அதையே செய். '
No comments:
Post a Comment