Wednesday, March 9, 2022

 



''இது என் சக்தி இல்லை.''    நங்கநல்லூர்  J K  SIVAN  

நாம்  தான்  ரொம்ப கெட்டிக்காரர்கள்.  அதனால் தான் நாம் செய்யும் காரியங்கள் வெற்றியடைகிறது . நினைத்தது நடக்கிறது என்று மார் தட்டிக் கொள்கிறோம்.  ஆனால் 
உண்மை அதுவல்ல.    நாம் செய்யும் ஒவ்வொரு காரியமும், எண்ணமும்  நமது முயற்சியால்  ஏற்படுவதல்ல.  நாம் என்ன செய்யவேண்டும், எதை செய்யக்கூடாது  என்பதை தெய்வம் சில சமயங்களில் அல்ல, பல சமயங்களில்,  குறிப்பாக சொல்கிறது. அதை அசரீரி என்போம்.  எங்கோ யாரோ நம் காது பட எதையோ சொல்வார்கள். அது நம் காதில் விழுவதே  தெய்வச்செயல்.   மனதில் அதே போல்  இவ்வாறு செய்,  செய்யாதே, வேண்டாம், என்று ஒரு சிறு குரல்  அறிவுறுத்தும். அதன் பெயர்  தான் மனசாக்ஷி .  இதையெல்லாம்  புரிந்துகொள்ளும் சூக்ஷ்மம் நமக்கு இருந்தாலும் நாம் பயன்படுத்திக் கொள்வதில்லை.  
                           
இதே மாதிரி  ஒரு விஷயம் நடந்தது.  அதை  அதிர்ஷ்டம்  என்று சொல்வதா, இல்லை, தெய்வச்செயல் என்று  புரிந்து கொள்வதா?   இது தான் நான் குறிப்பிடும்  காட்சி:

சிலர்  கூடி  நின்று   ரகசியமாக பேசுவது  அந்த  பக்கமாக வந்த  அர்ஜுனன் காதில்  விழுந்தது.  
''நாளைக்கு  இதோ இந்த மாளிகை  தீபற்றி எரியும்.'' துரியோதனனின்ஆட்கள் இதற்கு  தயார் செய்யப் பட்டுவிட்டார்கள்.    அவர்கள் பேசியது பாண்டவர்கள்  விருந்தினராக  தங்க வைக்கப்பட்ட  ஒரு புதிய விசேஷ மாளிகை பற்றி.

அர்ஜுனன் இதை  புறக்கணிக்கவில்லை.   விரைவில்  இந்த  சேதியை   மற்ற   பாண்டவர்க்கு அர்ஜுனன்   அறிவிக்க   உடனே அவர்கள் செயல் பட்டனர்.  நேரம்  நழுவுகிறதே.  ஒரே நாளில்,  ஒரு  இரவில்   இங்கிருந்து எப்படி தப்புவது?.  வெளியே  செல்ல  ஏதாவது மார்க்கம் கண்டு பிடிக்க வேண்டும். 

''இதை என்னிடம் விட்டுவிடுங்கள்  இது இனி என் பொறுப்பு ''  என்றான்   பீமன்.
 நம்பகமான  சிலர்  உதவியை நாடி மாளிகையிலிருந்து வெளியே  ஆற்றங் கரை  வரை  சுரங்க பாதை  அமைத்தாக  வேண்டும்.  ஒரே நாளில்!  

துரியோதனனின்  ஒற்றர்களுக்கு  தெரியாமல் இதை செய்ய வேண்டும்.  அசுர வேகத்தில் வேலையை  ஆரம்பித்தனர் பாண்டவர்கள்.  சோர்ந்து விட்டனர். பீமன்  மனம்  கண்ணனை  வேண்டியது.

  “கிருஷ்ணா,  நீயே  எனக்கு உதவ வேண்டும்” என்று  மனதார வேண்டிக்கொண்டு   சுரங்கம்  தோண்ட ஆரம்பித்தான்  பீமன்.  அன்ன  ஆகாரமின்றி  செயல் பட்டான்.  நேரம் ஓடிக்கொண்டிருந்தது.
“இந்தா,  எதாவது  கொஞ்சம்  ஆகாரம்  சாப்பிடு”  என்று தாய் குந்தி  வற்புறுத்தினாள்.
"எனக்கு  நேரமில்லை. விரைவில்  இது முடிந்தாக வேண்டும்” .
 சுரங்க பாதை  அமைப்பதில்   துடியாக இருந்தான்  பீமன்.
அதே நேரத்தில் த்வாரகையில் என்ன நடக்கிறது?
"கிருஷ்ணா  நீ  ஏன் ஏதோ யோசனையில் இருக்கிறாய்?. இலையில்  வைத்த  உணவு  தொடப்பட வில்லையே"  என்றாள் ருக்மணி.   எப்படி எண்ணம்  வேலை செய்கிறது பாருங்கள்.
"என்  நண்பன்  பீமன்  என்னை நினைத்து  ஆகாரமின்றி  செயல் படுகிறான்.  அவன்  வெற்றிகரமாக வேலையை  முடிக்கும் வரை எனக்கும்  ஆகாரம் இல்லை"  என்றான்  கண்ணன்.

மறுநாள்  குறிப்பிட்டபடி அந்த புதிய அரக்கு மாளிகை  தீப்பற்றி  எரிந்து  சாம்பலாகியது.  அதற்குள் இருந்த  ஆறு  பேரின்  உருத் தெரியாத கருகிய  உடல்கள்  இருந்ததைக் கேட்டு  துரியோதனன்  மகிழ்ந்தான்.

ஆனால் ஆற்றின்  மறு கரையில்  பாண்டவர்களும்  குந்தியும்  ஏதோ  ஒரு  கிராமத்தில் கிருஷ்ணனை நன்றியுடன்  நினைத்து கொண்டு உணவைத்  தொட்டனர்.

"பீமா,  உன் பலத்தாலும்  அசுர  வேகத்தாலும்   தான்   ஒரே  நாளில்  இரவில்  நாம்  அனைவரும்  உயிர் தப்பினோம்.  இதை நன்றியுணர்வோடு  ஒரு அம்மா  நான் எப்படி சொல்வேன்?  என்றாள் குந்தி.  

"தாயே, அந்த  சக்தி  என்னுடையது  இல்லை,  கிருஷ்ணனிடம்  இருந்து வந்ததால்  அவனுக்கே  நமது நன்றி உரித்தாகும்" என்றான்  பீமன்.  

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...