Thursday, March 24, 2022

SURDAS

 ஸூரதாஸ்  -   நங்கநல்லூர் J K  SIVAN  


ஒரு நாடகமன்றோ நடக்குது !

கோகுலத்தில் எப்போதும் ஒரு   வீட்டிலிருந்து தான் செய்திகள்  பரவும் .  அன்று ஒருநாள்  அப்படி ஒரு செய்தி  காற்றை விட வேகமாக எங்கும் பரவி விட்டது.   அட,  அப்படி என்ன  பரபரப்பான செய்தி?
அந்த கருப்பு பையன்  உட்கார்ந்திருந்தவன்  தவழ்ந்தவன்  எதையாவது  பிடித்துக் கொண்டு நின்றவன், திடீரென்று  எழுந்து  நடக்க ஆரம்பித்து விட்டான். இப்போது  ஸார் அம்மா கையை பிடிச்சுண்டு  நடக்க ஆரம்பித்து விட்டார்!

உடம்பு முழுதும் நீலமேக சியாமள வர்ணம்.
என்ன என்ன ஆபரணங்கள்   உண்டோ  அதெல்லாம் அவன் மேல் பார்க்கலாம். எனக்கு எண்ணிப்பார்க்கக்கூட முடியாது. எண்ணம் கொள்ளாத அளவு மனம் நிரம்பிய ஆபரணங்கள்.
தலையில் அலை அலையாக, சுருண்ட திரண்ட கேசம். அதன் மேல் தலையை சுற்றி கிரீடம் போல் ஒரு ப்ரோச். அதில் மயில் இறகு. ஒரு அழகான பெரிய மயில் அளித்த பரிசு அவனுக்கு.
அழகிய கால்கள். அதில் கொலுசு தண்டைகள் .
அவனை அவன் நகைக்காக கடத்திக்  கொண்டு போவதை விட அவன் அழகுக்காகவே கடத்திப் போக எண்ணற்ற கோபியர்கள்!!

யசோதா அவனது மெத்து மெத்தென்ற சிறிய கைகளை தன் இருகைகளால் பிடித்துக் கொண்டு குனிந்து நிற்கிறாள். எதிரே அவன் பிரயாசைப் பட்டு ஒரு காலை மெதுவாக தூக்கி வைக்க பார்க்கிறான். ஒரு கால் தூக்கியாயிற்று. இன்னொன்று இன்னும் தரையில் அழுந்தி இருக்கிறது. தூக்கிய கால் இப்போது தரையில். தரையில் இருந்தது தூக்கியாகிவிட்டது. ஒரு சில அங்குலங்கள் அவன் நகர்ந்து விட்டான்.  அட கண்ணன் நடக்கிறானே .

ரெண்டு ரெண்டு அடியாக. அடடா என்ன கொள்ளை அழகு. யசோதா இந்த உலகத்திலேயே இல்லை. அவ்வளவு சந்தோஷம் முகத்தில். அவளுக்கு மட்டுமா. அத்தனை கோபியர்களுக்கும் தான். எழுதும் எனக்கும்,  படிக்கும் உங்களுக்கும் கூட தான்.

மூன்று உலகையும் ஆகாயத்தையும் அளந்த கால்களை கொண்டவனா ரெண்டு அடி எடுத்து வைக்க பிரயாசைப் படுகிறான். எல்லாம் மாயாவியின் நடிப்பு. நம்மை மகிழ்விக்க.

''ருணுக் ஜுணுக் கிளிங் க்ளாங்''  -- சங்கீத ஒலியாக வேத நாதமாக அவன் காலில் அணிந்த தண்டை கொலுசு சப்திக்கிறது. அவன் ஒவ்வொரு அடியாக எடுத்து வைக்கும்போது. மனது கிலேசம் கலைந்து பரவசம் அடைகிறது. ஞானத்தின் எல்லையை தொடுகிறதே.

பாவம் அந்தச்  சின்ன கண்ணன். குழந்தைப் பயல். நாலைந்து அடி எடுத்து வைத்ததில் களைத்து போய் விட்டது. அப்படியே தொபுக்கடீ என்று  அம்மா யசோதை கையைப் பிடித்தபடி தரையில் உட்கார்ந்து விட்டு சிரிக்கிறது. விஸ்வரூபத்தின் விளையாட்டுச்  சிரிப்பு.

குழந்தையை '' கால் வலிக்கிறதா கிருஷ்ணா,  என்று அம்மா யசோதை பிடித்து விடுகிறாள். அடுத்த கணம் எழுந்து நிற்கிறான். நடக்க ஆசை வந்துவிட்டது. எது நடக்கிறதோ, எது எப்படி நடக்க வேண்டுமோ, எது நடந்தாக வேண்டுமோ, எது நடக்க கூடாதோ எல்லாம் அனுசரித்து நம்மை வழி நடத்துபவன் நடக்க ஆரம்பித்து விட்டான்.

கலகலவென்று அத்தனை பெண்களும் சிரிக்க அவனும் தலையாட்டி கைகொட்டி சிரிக்கிறான்.
ஆட்டுவிப்பவன் அல்லவா? ஆடாது அசங்காது வா கண்ணா !

ஸூர்தாஸ் என்ன அற்புத கற்பனை சக்தி கொண்டவர். கண்ணன் முதலில் நடை பயின்றதை பற்றி நாம் எவராவது இதுவரை சிந்தித்து இருக்கிறோமா? அவர் சிந்திக்க காரணம் என்ன ? அவர் மனதில் அவன் நடந்து காட்டி இருக்கிறான். கண் இல்லை உனக்கு. அதற்காக தான்  உன் மனக்கண்ணில் தோன்றுகிறேன் என்று சொன்னானோ!

 

 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...