தம்பிரான் தோழர் - நங்கநல்லூர் J K SIVAN
''பறந்து போன பசி''
சத்யம் சிவம் சுந்தரம் என்றால் எனக்கு என்ன அர்த்தம் தோன்றுகிறது தெரியுமா? ''சுந்தரரிடம் சிவனுக்கு இருந்த அன்பு நட்பு, ப்ரேமைபோல் வேறு எந்த பக்தனிடமும் இல்லை என்பது தான் சத்யம்.''
18 வயதே வாழ்ந்த சுந்தரர் தான் 2நடந்து சிவன் கோயில்களை பார்த்தவர் என்று யாராவது கின்னஸ் புஸ்தகத்தில் போட்டிருக்கலாம். ஒவ்வொருத்தர் நடையாக நடந்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடிக்க அலைகிறார்களே. முடிகிறதா?
எதிரே நீண்ட சாலை. சீர்காழியிலிருந்து செல்லும் பாதை. இதோ ஒரு சின்ன ஊர் வந்துவிட்டது. அதன் பெயர் திருக்குருகாவூர். வெகு தூரம், வெகு நேரம் நடந்து வந்த சுந்தரர் பசியோடு மெதுவாக நடக்கிறார்.
இரு மருங்கும் நிழல் தரு மரங்கள்.எங்கும் பச்சை பசேல் என்று நெல்வயல்கள். காய்கறி தோட்டங்கள். வண்டுகள் ரீங்காரம், பறவைகள் இனிய கானம் குளிர்ந்த காற்று, மண் தரையில் நடந்து கொண்டிருந்த சுந்தரருக்கு ஆனந்தத்தை தந்தன. அவர் தான் ஏற்கனவே வாய் நிறைய ஓம் நமசிவாய எனும் ஐந்தெழுத்து மந்திர பேரானந்தத்தில் திளைத்தவாறு நடக்கிறாரே. ஆனாலும் வயிறு ஞாபகப்படுத்தியது. பசியும் தாகமும் . வெகு நேரம் நடந்த களைப்பு. பசி கண்ணை இருட்டியது. எங்கேனும் தங்க இடம் கிடைக்குமா?
சிவனுக்கு தெரியாதா சுந்தரர் நிலைமை? தூர ஒரு மரநிழலில் ஒரு ஓலை வேய்ந்த வீடு. வாசலில் திண்ணை யில் சில மண் பாத்திரங்களில் நீர் மோர், குடிநீர் பணியாரங்களுடன் உடல் முழுதும் விபூதி வெள்ளை வெளேரென்று அணிந்த ஒரு பிராமணர் கண்ணில் பட்டார். சிறிய தண்ணீர்பந்தல்.
''ஆஹா வெயிலில் நடந்து செல்லும் பசியோடு உள்ள பாதசாரிகளுக்கு எப்பேர்ப்பட்ட கைங்கர்யம் ''
''அப்பாடா, ஓம் நமசிவாயம். ஹரஹர சிவனே போற்றி '' என்று சுந்தரர் அந்த திண்ணையில் அமர்ந்தார். வீட்டுக்கார பிராமணர் உள்ளே சென்று செம்பு நிறைய குளிர்ந்த நீரும் ஒரு பனை ஓலை விசிறி எடுத்து வந்தார். சுந்தரருக்கு பக்தியோடு விசிறினார். சிரம பரிஹாரம் நடந்த பின் ''இன்று இங்கேயே அதிதி போஜனம் செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டு அந்த பிராமணர் சுந்தரரை உள்ளே அழைத்து கூடத்தில் அமர்த்தி, எதிரே தலை வாழை இலை விரித்தார். ஒரு பாத்திரம் நிறைய சுடச் சுட மல்லிகைப்பூ போல அன்னம், சில பாத்திரங்களில் நிரம்ப உணவு பதார்த்தங்கள் எடுத்து வந்து தானே சுந்தரருக்கு பரிமாறினார். சுந்தரர் பிராமணரின் உபசாரத்தை மனமுவந்து ஏற்று உணவேற்றார். திண்ணையில் மேல் அங்கவஸ்திரத்தை விரித்து கையை தலைக்கு வைத்து சற்று கண்ணயர்ந்தார். அப்போது தான் தான் கண்டு அதிசயித்து, ஆனால் மறந்து போன ஒரு விஷயம் சுந்தரர் கவனத்தை ஈர்த்தது.
பிராமணர் கொண்டு வந்த பாத்திரத்தில் இருந்த உணவு எல்லாமே சுந்தரர் முழுதும் சாப்பிட்டு முடித்தும் கூட அதே அளவு எப்படி மீண்டும் பாத்திரத்தில் நிறைந்தது? விருட்டென எழுந்து உள்ளே பிராமணரைத் தேடினார். அந்த வீடு காலியாக எவருமின்றி இருந்தது. சுவற்றில் பார்வதி பரமேஸ்வரன் ரிஷபவாகனத்தோடு தரிசனம். அதிசயத்துடன் வெளியே வந்தால் திண்ணையில் தண்ணீர்பந்தல் இருந்த சுவடே காணோமே.
''ஆஹா, பசுபதி அல்லவோ பசி தீர்த்திருக்கிறான். எனக்கு விசிறியிருக்கிறான்?'' நன்றியுணர்ச்சில் கண்களில் ஆனந்த கண்ணீர் சோர ஒரு பதிகம் பிறந்தது..அதில் ரெண்டு மட்டும் தருகிறேன்.
''இத்தனை யாமாற்றை
அறிந்திலேன் எம்பெருமான்
பித்தரே என்றும்மைப்
பேசுவார் பிறரெல்லாம்
முத்தினை மணிதன்னை
மாணிக்கம் முளைத்தெழுந்த
வித்தனே குருகாவூர்
வெள்ளடை நீயன்றே.''
பாடுவார் பசிதீர்ப்பாய்
பரவுவார் பிணிகளைவாய்
ஓடுநன் கலனாக
உண்பலிக் குழல்வானே
காடுநல் லிடமாகக்
கடுவிருள் நடமாடும்
வேடனே குருகாவூர்
வெள்ளடை நீயன்றே.''
எங்கே இருக்கிறது திருக்குருகாவூர்.? திருக்கருகாவூர் இல்லை. அது வேறே. இது சீர்காழி - திருமுல்லைவாய் பாதையில் உள்ளது.இப்போது யாரையாவது இந்த பேர் சொல்லி கேட்டால் இங்கே இல்லை அன்று அங்கே இருக்கும்போதே சொல்லிவிடுவார்கள். அதன் பெயர் இப்போது திருக்கடாவூர் . திருக்கடவூர் இல்லை. அது வேறு.
கடா என்றால் காளை . ரிஷபம். சிவனுக்கு இங்கே வெள்ளடைநாதர் என்று பெயர். அது வெள்விடை என்று தான் இருந்தது. வெள்ளை விடை என்றால் வெள்ளை ரிஷபம். அதன் மேல் காட்சி அளிக்கும் பரமேஸ்வரன். ஸ்வேத ரிஷபேஸ்வரர். காவிரி வடகரை சிவ ஸ்தலங்களில் 13வது. அம்பாள் காவியங்கண்ணி. முதலாம் குலோத்துங்கன், முதலாம் இராசேந்திரன், விக்கிரம சோழன் ஆகியோர் காலத்திய கல்வெட்டுக்களில் இத்தலத்து இறைவன் பெயர் வெள்ளடை மகாதேவர், குருகாவூர் வெள்ளடையப்பன் எனக் காண்கிறோம். கோயிலுக்கு நிபந்தங்கள் ஏற்படுத்திய செய்திகளைச் சொல்கிறது..
No comments:
Post a Comment