Sunday, March 27, 2022

 தம்பிரான் தோழர் -  நங்கநல்லூர் J K  SIVAN

சுந்தர மூர்த்தி நாயனார்.

திருத்துருத்தி தெரியுமா?

திருத் துருத்தி என்கிற  க்ஷேத்ரத்தைப் பற்றி நினைத்துக் கூட  பார்ப்பதில்லை. எங்கே இருக்கிறது? காவேரி நதியின் வடகரையில் தென் கரையிலும் எண்ணற்ற  ஸ்தலங்கள் இருக்கிறதல்லவா. இது தென் கரையில் ஒரு சிவாலயம்.  திருத்துருத்தி என்ற பெயர்  தெரியாவிட்டாலும்  அநேகமாக எல்லோரும் அறிந்த பேர் அதற்கு உண்டு. அது தான் ''குத்தாலம்" . திருநெல்வேலி தென்காசி அருகே உள்ள  நீர்வீழ்ச்சி வேறே. அது குற்றாலம். இந்த குத்தாலத்தில் கோவில் குளத்தில் வேண்டுமானால் குளிக்கலாம். மாயவரம் எனும் மயிலாடுதுறை யிலிருந்து  கும்பகோணம் போகும்  பாதையில் 9 கி.மீ தூரம். அருகே உள்ள சில அற்புத ஸ்தலங்கள் பெயர் சொல்கிறேன்.  திருவேள்விக்குடி, திரு எதிர் கொள்பாடி, திருமணஞ்சேரி.  குத்தாலத்தில் சிவன் பெயர்  உத்தரவேதீஸ்வரர், சொன்னவாறு அறிவார் என்று அர்த்தம்.  கற்றளி மகாதேவர். அம்பாள்   மிருதுமுகிழாம்பிகை, பரிமள சுகந்த நாயகி, அரும்பன்ன வனமுலையாள்.

ஒரு சிவா ராத்திரி சமயம்  இரவு ஒன்பது மணிக்கு மேல் குத்தாலம் சென்றது நினைவிருக்கிறது.  பெரிய பழைய கால கோவில்.  உள்ளே சென்றால் வெளியே வர மனம் வரவில்லை. 

திருவாவடுதுறை தலத்தில் அம்பாள் பசு வடிவம் நீங்கப் பெற்று சுய உருவம் அடைந்ததும் சிவபெருமான் காட்சி அளித்தார். ஆனால் திருமணம் நடைபெறவில்லை. அம்பாளுக்கு இன்னொரு முக்கிய வேலை காத்திருந்தது.  பக்கத்திலே இருந்த  குத்தாலத்தில் தவம் செய்து வந்த பரதமா முனிவரின் விருப்பம் நிறைவேற்ற   யாக குண்டத்தில் இருந்து  பெண்ணாகப் பிறந்தாள். ஈஸ்வரனை திருமணம் செய்து கொள்ளும் பொருட்டு தினமும் காவிரிக்குச் சென்று ந்தியில் நடுவிலிருந்த மணல் மேட்டில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தாள். 8-ம் நாள் இறைவன் அங்கு லிங்க வடிவில் இருந்து வெளிப்பட்டு அம்பிகையின் கரம் பற்றினார். அம்பிகை நாணம் கொண்டு "சாத்திரங்களில் கூறப்பட்டுள்ளபடி தாய் தந்தையர், உற்றார் உறவினர் சூழ என்னைத் திருமணம் முடிக்க வேண்டும்" என்று கூறினாள். உன் விருப்பப்படியே நம் திருமணம் நடக்கும் என்று ஈசன் கூற அம்பிகை முனிவரின் ஆசிரமம் அடைந்தாள். இனைவன் தாமே சொல்லிய விதியின்படி தான் திருமணம் செய்து கொள்வதாக அம்பாளுக்கு வாக்களித்து அதன் படியே நடந்து கொண்டதால் இறைவன் நாமம் சொன்னவா ரறிவார் என்றாயிற்று.

இங்கே ஒரு விருக்ஷம். உத்தால மரம் என்ற ஒரு வகை ஆத்தி மரம். அம்மரம் குடையாக அமைய அம்பாளைத் திருமணம் செய்து கொள்ள சுவாமி மணவாளநாதராக எழுந்தருளினார்.  அந்த மரத்தினடியில் இன்றும் இரண்டு பாதுகைகள் இருக்கிறது.   இதுவே காரணமாகி இந்த க்ஷேத்ரம்  லம் உத்தாலவனம்  ஆகி, நாளாவட்டத்தில் தேய்ந்து போய் குத்தாலம்.  தேவாரப் பதிகம் பாடப் பெற்ற காலத்தில் துருத்தி என பெயர்.  துருத்தி என்றால் ஆற்றின் இடையில்   மடு, திட்டு, தீவு என்று  அர்த்தம். திகத்தின் 3-ஆவது பாடலில் "பொன்னியி னடுவு தன்னுட் பூம்புனல் பொலிந்து தோன்றும் துன்னிய துருத்தி யானைத் தொண்டனேன் கண்ட வாறே"   என்கிறார்.   இவ்வூர் கி.பி. ஏழாம் நூற்றாண்டில் காவிரி நதியின் இடையில் ஒரு தீவாக இருந்திருக்கலாம்.

சுந்தரரும் இத்தலத்து இறைவன் மேல் பதிகம் பாடி இருக்கிறார். செய்து கொடுத்த சத்தியத்தை மீறி பரவையைப்   பிரிந்து சென்றதால் இரண்டு கண்களையும் இழந்து உடல் நலிந்து திருத்துருத்தி வந்திருக்கிறார். காஞ்சிபுரத்தில் இடகண் பார்வையைப்  பெற்றாலும், நலிந்த உடலுடன் இத்தலத்திற்கு வந்து இங்குள்ள இறைவனை மனமுருகி வேண்டி தன்னை மன்னித்தருளும்படி வேண்டினார்.

''பரமேஸ்வரா,   எனக்கு  இன்னொரு கண்ணும் தா  உன்னைக் கண்ணார காண்டு பாட ஆசை''.  நீ அருள் புரியவேண்டும்''  என்கிறார்  சுந்தரர்.
 
''சுந்தரா,  முதலில்  ஆலயத்தின் வடக்கே உள்ள  தாமரைக் குளத்தில் போய்  ஸ்னானம் பண்ணிவிட்டு வா''.

''அப்படியே  செய்கிறேன் ப்ரபோ''

குளத்தில் ஸ்னானம் செய்துவிட்டு  எழுந்த சுந்தரருக்கு கண் பார்வை வந்து விட்டது. எழும்போது முன்னிலும் பளபளக்கும் திருமேனியுடன் திகழ்ந்தார். அப்போது, திருத்துருத்தியையும், திருவேள்விக்குடியையும் இணைத்து, "மின்னுமா மேகங்கள்" எனத் தொடங்கும் திருப்பதிகம் பாடினார்.  பத்து பாடல்களையும் தர விருப்பம் தான். ரொம்ப நீளமாகிவிடும் இந்த பதிவு என்பதால் மேலே சொன்ன பாடலை மட்டும் தருகிறேன்.

இன்னொரு விஷயம். சுந்தரமூர்த்தி நாயனாரின் பிணி தீர்த்ததால்  இந்த  தாமரைக்  குளத்திற்கு கு சுந்தர தீர்த்தம் என்று பெயர் ஏற்பட்டது. தீர்த்தக்கரையில் சுந்தரருக்கு கோயில் இருக்கிறது. அதில் சுந்தரர்   ஒற்றைக் கண் மட்டும் உடையவராக தரிசனம் கொடுக்கிறார். சென்று பாருங்கள். அது ஸ்னானம் செய்வதற்கு முன்பு. அப்புறம்  இங்கே  ரெண்டாவது கண்ணும் பார்வை  பெற்றுவிட்டது.பதிகம் ஒலித்தது.

மின்னுமா மேகங்கள் பொழிந்திழிந் தருவி
  வெடிபடக் கரையொடுந் திரைகொணர்ந் தெற்றும்
அன்னமாங் காவிரி அகன்கரை உறைவார்
  அடியிணை தொழுதெழும் அன்பராம் அடியார்
சொன்னவா றறிவார் துருத்தியார் வேள்விக்
  குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன்
என்னைநான் மறக்குமா றெம்பெரு மானை
  என்னுடம் படும்பிணி இடர்கெடுத் தானை.  

அர்த்தம் புரியவேண்டுமா?  இந்த காவேரி ஆறு இருக்கிறதே, அது எப்படி வந்தது என்றால்  இடி இடித்து மின்னல் தோன்றி  ஜோ  என்று  மேகங்கள் விடாது மழை பெய்து, அது   காவேரி அருவியாக  பாய்ந்து ஓடி,  அலைகள் கரையை  ''ஹா''  என்று  மோத, அன்னப்பறவைகள்  ஆற்றில்  உற்சாகமாக  மிதக்க,  அந்த காவேரியாற்றின்  அகலமான  கரை மேல்  ஆனந்தமாக  எழுதினருளியிருக்கும் சிவனே,  திருத்துருத்தி யிலும் , திரு வேள்விக்குடியிலும் , வீற்றிருப்பவராகிய தலைவா,  உனது  திருவடி யினைத் தொழுது துயிலெழுகின்ற அன்பையுடையவராகிய அடியவர்கள் வேண்டிக்கொண்ட வகைகளை எல்லாம் நன்கு உணர்ந்து அவைகளை முடித்தருளுகின்றவனே , என் உடம்பை வருத்திய  பிணியாகிய  கண்பார்வைப்  துன்பத்தைப் போக்கியவா, எம் பெருமானே , குற்றமுடையேனும் , நாய்போலும் கடையேனும் ஆகிய யான் உன்னை மறக்கமுடியுமா  சொல்?

குத்தாலம் சிவன் கோவில் ஊருக்கு நடு நாயகமாக  5 நிலை இராஜகோபுரத்தோடு மேற்கு நோக்கி நிற்கிறது. இரண்டு பிரகாரங்கள்.  உள்ளே நுழைந்தவுடன் கொடிமரம், பலிபீடம். வலதுபுறம் தல விருட்சமான மேலே சொன்ன  உத்தால மரம். அதை சுற்றி பீடம். மூலவர் சந்நிதி  பார்த்து விருக்ஷம் அமைந்துள்ளது.  பக்கத்திலேயே தெற்குப் பார்த்த அம்பாள் சந்நிதி உள்ளது.  ரெண்டு சந்நிதிகளுக்கும்  தனித்தனியே  ப்ரஹாரம் .

பரமேஸ்வரன் அம்பாளை கல்யாணம் பண்ணிக்கொள்ள வரும்போது கூடவே வந்த பிள்ளையார் இங்கே  "துணைவந்த விநாயகர்" என்ற பெயருடன் அம்பாள் சந்நிதிக்கு செல்லும் வழியில் வெளிப் பிரகாரத்தில் தென்மேற்கு மூலையில் அருள் பாலிக்கிறார். உட்பிரகாரத்தில் வலஞ்சுழி விநாயகரையும்  கிழக்குப் பிரகாரத்தில் மேற்கு நோக்கி எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ சுப்ரமணியனையும் அற்புத  கலையழகுடன்  தரிசிக்கலாம்.
இப்படிப்பட்ட  துருத்தி  ஆலயத்தில்  சுந்தரர் நன்றியோடு புதிதாக கிடைத்த கண்ணிலும்  ஆனந்தகி கண்ணீரோடு பாடினால் அங்கே  ஆலயத்தில் அப்போது குழுமியிருந்த அனைத்து பக்தர்களும் இந்த அதிசயத்தை கண்டு  எவ்வளவு வியந்து போயிருப்பார்கள். கண்ணுக்கும் அதிசயம், செவிக்கும் விருந்து அல்லவா?

சில நாள் ஒவ்வொரு ஊரக நடந்து சென்று திருவாரூர் எல்லை வந்துவிட்டார் சுந்தரர்.நாமும் அவர் பின் செல்வோம்.



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...