பேசும் தெய்வம் - நங்கநல்லூர் J K SIVAN
119. கல்கத்தாவில் நூறு நாட்கள்.
மஹா மஹோபாத்யாய விருது வெள்ளைக்கார அரசாங்கம் அளித்த போதும் அதை வேண்டாமென திரஸ்கரித்த பஞ்சானன தாரக ரத்ன பட்டாச்சாரியார் மஹா பெரியவாளை கல்கத்தாவில் ஒரு சபையில் கௌரவித்து வரவேற்புரை வழங்கினார் என்று முந்தைய கட்டுரையில் எழுதியிருந்தேன்.
ஸ்ரீ பட்டாச்சார்யாவின் பேச்சு சமஸ்க்ரிதத்திலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கப்பட்டு 1935ல் செப்டம்பர் மாதம் பத்திரிகைகளில் வெளிவந்தது. அவர் என்ன பேசினார் என்பதன் சுருக்கம் கீழே அளிக்கிறேன்:
''காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத் குரு ஸ்ரீ சங்கராச்சார்யர் அவர்களே, தாங்கள் பரமேஸ்வரனே மனித உருவில் அவதரித்து அத்வைத உபதேசம் அளித்த ஆதி சங்கரரின் குரு பரம்பரையில் பீடத்தை அலங்கரிப்பவர். சாதுக்களின் தலைவர். இங்கே கல்கத்தாவில் வாழ்பவர்களாகிய நாங்கள் சனாதன தர்மத்தை சரியாக அறியாதவர்களாக இருக்கிறோம். துன்பக்கடலில் ஆழ்ந்து தவிக்கிறோம். இந்த நிலையில் உங்களது பிரசங்கம், உபதேசம், கருணை மிகுந்த சொற்கள் எங்களை நல்வழிப்படுத்துகிறது. சரியான பாதையை காட்டுகிறது. தர்மத்தை பின்பற்ற தெளிவாக சொல்லித் தருகிறது. உங்களது கல்கத்தா வருகை என்பது நாங்கள் செய்த பாக்யம். தங்களைக் கண்ணார காணும்போது பரமேஸ்வரனே மனித உருவில் வந்தது போல் இருக்கிறது உங்களது தாமரை திருவடிகளில் சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து சில வார்த்தைகளை சொல்ல விழைகிறேன்.
கௌட பிரதேசத்தில் இந்த கல்கத்தா நகரம் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது. சரித்திர முக்யத்வம் எதுவும் இல்லை. வராஹமிஹிரர் எழுதிய ப்ரம்மசம்ஹிதை எனும் பழைய நூலை அலசினால், ரெண்டாயிரத்து ஐநூறு வருஷத்துக்கு முன்பே இந்த பிரதேசம் முக்யத்வம் எதுவும் அற்ற வெறும் பரந்த வெற்று நிலமாக இருந்தததாகத் தான் தெரிகிறது. ஏதோ அங்கொன்றும் இங்கொன்றுமாக சில மக்கள் கூட்டம் வசித்திருக்கிறது . வசதிகள் பெருகாத காலம். பின்னர் வெள்ளைக்காரர்கள் காலத்தில் தான் அவர்களை ஒன்று சேர்த்து நகரமாக்கியிருக்கிறார்கள். இந்த பிரதேசத்தில் தங்களைப் போல் எந்த மகானின், ஆச்சார்யரின் விஜயத்தாலும் பரிசுத்தமடையவில்லை. ஆதிசங்கரர் ஸ்தாபித்த காஞ்சி காமகோடி மடத்தின் 68வது பீடாதிபதியாக தங்களின் வருகையால், இந்த நகரம் புனிதமடைந்திருக்கிறது என்பது நாங்கள் செய்த பூஜா பலன், பூர்வ ஜென்ம பாக்யம். ஆதிசங்கரரின் குரு பரம்பரை வழி தோன்றல், நீங்கள் அவரைப்போலவே பாரத தேசம் முழுதும் விஜயம் செய்து, காசிக்கு புனித பயணம் செயதீர்கள்.சக்ர பிரதிஷ்டைகளை சாஸ்த்ரோக்தமாக செய்து வருகிறீர்கள், பல்லக்கில் பல இடங்களுக்கு விஜயம் செய்து எல்லோரையும் ஆசிர்வதிக்கிறீர்கள். தற்காலத்தில் பிரயாணத்துக்கு எல்லா வசதிகள் இருந்தும் புராதனமான இந்த பல்லக்கு பிரயாணத்தை மேற்கொள்கிறீர்கள். பெரும்பாலும் நடந்தே செல்கிறீர்கள். தங்கள் தாமரை திருப்பாதங்களை தரிசிக்க எத்தனையோ ஜன்மாக்களில் நாங்கள் புண்யம் செய்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் இப்படிப்பட்ட ஒரு அதிர்ஷ்டம் எங்களுக்கு நேர்ந்திருக்காது. ஒருவன் எத்தனையோ காலம் கழித்த பின்னர் தான் புண்ய க்ஷேத்ர தரிசனம், புண்ய தீர்த்தங்களில் ஸ்னானம் செய்யும் பலன், வாய்ப்பு கிடைக்கும் என்று பாகவதம் சொல்கிறது. ஆனால் தங்களைப் போல் புண்ய புருஷரை, மகாத்மாவை, பரிபூரண ஞானியை ஒரே ஒரு முறையாவது தரிசனம் செய்தால் அத்தனை புண்யமும் கை மேல் பலனாக கண்ணார கிடைக்கிறது என்கிறது.
ஆதி சங்கரர் வாழ்ந்த காலத்தில் இந்த புனித பாரத தேசத்தில் சனாதன தர்மம் பௌத்தர்கள், ஜைனர்களால் க்ஷீணமடைந்திருந்தது. அதை மீண்டும் புத்துயிர் பெற்று நிலைநாட்ட ஆதி குரு அவதரித்தார். தற்காலத்திலும் பலரின் தடங்கல்களால், தடைகளால், செயல்களால் நமது தர்மம் தாழ்வுற்று வருகிறது. ஆதி குரு சங்கரரைப் போலவே தாங்களும் தக்க நடவடிக்கை எடுத்து இடையூறுகளை போக்கி நமது தர்மத்தை எல்லோரும் கடைப்பிடிக்க உதவுகிறீர்கள். உங்களை எப்படிப் பாராட்டுவது என்று எங்களுக்குத் தெரியவில்லை. எனக்கு வார்த்தைகள் வரவில்லை, தொண்டை அடைத்துப் போய்விட்டது. என் தேஹம் நடுங்குகிறது. பரிபூர்ண சந்தோஷத்தில் திளைக்கிறேன். கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருகுகிறது. இந்த புனித நன்னாளில் தர்மத்தை நிலை நாட்டி வரும் பரமாச்சாரியார், மஹா பெரியவா உங்கள் விஜயத்தால் மகிழ்ந்து நாங்கள் ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர என்று மட்டுமே உரக்க முழங்கி வரவேற்க முடிகிறது. ''
இதை தொடர்ந்து ஜன வெள்ளத்தின் கரகோஷம், எங்கும் ஜயஜய சங்கர ஹரஹர சங்கர கோஷம் வானைப் பிளந்தது. பட்டாச்சாரியார் பெரியவாளுக்கு நமஸ்காரம் பண்ணி விட்டு பாத பூஜை செய்தார். மற்றவர்களும் தொடர்ந்தார்கள். மஹா பெரியவா அனைத்து பண்டிதர்களுக்கும், கற்றறிந்த விதவான்களையும் கௌரவித்து ஆசிர்வதித்து உபதேசம் செய்தார்.
1935ம் வருஷத்திய சாரதா நவராத்ரி 28ம் தேதி செப்டம்பர் ஆரம்பித்தது. அக்கௌன்டன்ட் ஜெனெரல் M . சுப்பிரமணியம் என்பவர் இல்லத்தில் நவராத்ரி பூஜை விமரிசையாக நடத்த ஏற்பாடு செய்திருந்தார்கள். நவராத்ரி ஒன்பது நாளும் வங்காளிகள், குஜராத்திகள், மார்வாரிகள், கல்கத்தா வாழ் தென்னிந்திய மக்கள், என்று ஆயிரக்கணக்கானோர் வருகை தந்து மஹா பெ
ரியவா தரிசனம் பெற்றார்கள் .
ரியவா தரிசனம் பெற்றார்கள் .
அக்டோபர் 6 அன்று ஸரஸ்வதி பூஜை. சண்டி ஹோமம் நிறைவு பெற்றது. 7ம் தேதி விஜய தசமி அன்று மஹா பெரியவா யாத்திரை தொடர்ந்தது. அந்த நூறு நாட்களும் ஆனந்த பொன்னாட்கள். கல்கத்தாவில் இருந்த வங்காளிகள் தவிர வசித்த மஹாராஷ்ட்ரர்கள், குஜராத்திகள், ஆந்திரர்கள், கேரளா மலையாளிகள், தமிழர்கள், என்று பல வாரியான பக்தர்கள் மஹாபெரியவா மடத்தின் பரிவாரத்தோடு சௌகர்யமாக தங்குவதற்கு அற்புதமான வசதிகள் செய்து தந்தார்கள். கல்கத்தாவில் மஹா பெரியவா இவ்வாறு நூறு நாட்கள் வாசம் செய்தார்.
No comments:
Post a Comment