Friday, March 25, 2022

RAMAKRISHNA PARAMAHAMSA

 


மனிதருள் தெய்வம் -  நங்கநல்லூர்  J K  சிவன் 
ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் 


முதல்  அனுபவம்:


பழைய விஷயங்கள்  படிக்கவோ நினைக்கவோ இனிக்காது  என்று யார் சொன்னது.  அதன் ருசி அனுபவித்தவர்களுக்கு தான் தெரியும். 

பல நூறு வருஷங்களுக்கு முன் நடநத ஒரு சம்பவம் சொல்லட்டுமா?
அன்று  அம்பாளின்  ஆயுத பூஜா வைவபம், சரஸ்வதி பூஜை எல்லாமே.  கல்கத்தாவில்  காளி  கோயிலில்  துர்கா பூஜை  அற்புதமாக நடக்கும் என்பது உலக பிரசித்தம்.  எண்ணற்ற  பக்தர்கள்  கூடுவார்கள். 

ஒரு  சிறு  பையனுக்கு  ஏழி லிருந்து  9க்குள் வயது இருக்கலாம். நரங்கலான  ஒல்லிப் பையன். கமார்புகூர்  கிராமத்திலிருந்து  அருகே  ஒரு  ஊருக்கு  நடந்தவன்.  அவன் கையில் ஒரு சின்ன ஓலைக் கூடையில் அரிசிப்பொரி வைத்துக்கொண்டு  வழியெல்லாம்  தின்று கொண்டு  நடந்தான்.  எங்குமே  நடந்து தான்  செல்லும் காலம் அது.  குழந்தைகள் கூட பல மைல்  தூரம் நடந்தார்கள் அப்போது. 

மேலே  கருமையோடு ஒரு பெரிய  மேகக் கூட்டம்  பெருத்துக்கொண்டே வந்தது. எந்தநேரமும் பெரிய மழை பொழியலாம். எதையும் கண்டு பிரமிப்பது அவன் வழக்கம்.  அப்படியே  சுய நினைவு இன்றி மரக்கட்டையாகி விடுவான்.  பிறகு தானே  சுதாரித்து எழுந்து விடுவான். அருகில் இருப்பவர்கள் அவன் மயக்கமடைந்து விட்டான் என்று அஞ்சுவார்கள். அவனோ  இந்நேரங்களில்  தன்னுள் வேறொருவரை கண்டு  ஆனந்த பரவசம் அடைபவன்.

கமார்புகூருக்கு   சில மைல்  தூரத்தில் ஆனூர் என்ற ஒரு ஊர். அங்கே  ஒரு வெட்டவெளியில் ஒரு மண் திட்டு. அதற்கு ஒருபுறம் சிகப்பு வர்ணம். அதை விசாலாக்ஷி  அம்மன் ஆலயம் என்று அந்த ஊர் மக்கள் வணங்குவார்கள். அதை சுற்றி வருவார்கள். வேண்டுவார்கள்.  சில  மாடு மேய்க்கும் பையன்கள்  அந்த மண் திட்டைச்  சுற்றியே அலைவார்கள்.  ஏன் என்றால்  விசாலாக்ஷி தரிசனம் செய்ய   வரும் பக்தர்கள்  காசு எல்லாம் அந்த மண் மேட்டில் போடுவார்கள். அதை அந்த பையன்கள் எடுத்துக்கொண்டு  இனிப்பு வாங்கி சாப்பிடுவார்கள். இந்த கோவிலுக்கு  கோபுரமோ, சிலையோ, சுற்று சுவரோ எதுவும்  கிடையாது. வானமே கூரை. தரை  கர்பகிரஹம். 

ஒருநாள் இந்த  ஊருக்கு  மேலே சொன்ன பையன் மற்ற பெண்களோடு  வந்தான். வழியெல்லாம் அவன்  பாடிக்கொண்டே வந்தான். நன்றாக  சாமி பாட்டெல்லாம் பாடுவானே.  அவன் குரல்  நன்றாக இருக்கும்.  கூட வந்த பெண்கள்  அதை கேட்டு ரசித்துக்கொண்டே நடந்தார்கள்.   விசாலாக்ஷி கோவிலாகிய அந்த மண்  மேடு வந்த உடனே  அவன் குரல் நின்றது.  நின்றான். கை கால் மரக் கட்டையாயிற்று. கண்களில் தாரை தாரையாக  நீர். வெயில் சுட்டெரித்ததால் மயக்கமோ?  பெண்கள் என்ன செய்வது என்று  கலவரம் அடைந்தனர். முகத்தில் தண்ணீர் தெளித்தனர்.  

கூட வந்த  பெண்களில் ஒருவள் பெயர்  பிரசன்னா. அவளுக்கு ஒரு யோசனை தோன்றியது.  விசாலாக்ஷி அம்மா  விசாலாக்ஷி  என்று  அவன் காதில் கூவினாள் 

 பையன் கண் திறந்தான்.  முகம் பிரகாசித்தது.  ''கதாதர்,  என்னடா  ஆயிற்று உனக்கு?'  என்று அவனை சூழ்ந்து கொண்டு கேட்டார்கள்.    

''ஆஹா   என்ன  தேஜஸ். அந்த திவ்ய  தரிசனத்தில்  என்னையே,  ஏன்  இந்த  உலகமே எனக்கு  மறந்து போனது''    

ஸ்ரீ  ராமகிருஷ்ண  பரமஹம்சர் இதற்கு மேல்  அவரது இந்த முதல்   திவ்ய  அனுபவம், நிர்விகல்ப சமாதி பற்றி   வேறெதுவும் சொல்வதில்லை. சொன்னதில்லை. 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...