ஒளவையார் - நங்கநல்லூர் J K SIVAN
பாட்டி சொல் தட்டாதே.
நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந்நன்றி
'என்று தருங்கொல்?' எனவேண்டாம் - நின்று
தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்
தலையாலே தான்தருத லால்.
யாரையாவது நாம் பார்க்கும்போதே இவர்களுக்கு நாம் எந்த விதத்தில் ஏதாவது ஒரு அளிக்க முடியும்? என்ற எண்ணம் மேலோங்கி நிற்க வேண்டும். அதுவே அப்புறம் பழக்கமாகிவிடும்.. என்னால் நிறைய படித்து மணிக்கணக்காக உட்கார்ந்து அதை யோசித்து எனக்குத் தெரிந்த வழியில் கொஞ்சம் எழுத முடிகிறது. அவ்வளவு தான் . வேறொன்றும் என்னால் இயலாது. எந்த உதவி செய்தாலும் ஒருவர்க்கு உதவி செய்யும்போது, அதற்கு ப்ரதியுபகாரமும், நன்றியும் எப்போது கிடைக்கும் என்று கருதி செய்தால் அந்த உதவியால் எந்த பயனும் இல்லை. மன நிறைவு கிடைக்காது. எப்படிப்பட்ட நீராக இருந்தாலும், தழுவியது, அழுக்கு, நல்ல நீர், சாக்கடை நீர், எதுவானாலும் வேர் மூலம் உண்டாலும், நன்கு தளராது வளர்ந்துள்ள தென்னை மரம் அந்நீரை சுவையான இளநீராக தந்து விடும். அதுபோல ஒருவர்க்கு செய்த சிறு உதவியும் பெரிய விதத்தில் நமக்கு ஒரு காலம் நிச்சயம் நன்மை பயக்கும். எவ்வளவு அருமையான சிந்தனை பாட்டிக்கு!
நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்
கல்மேல் எழுத்துப்போல் காணுமே – அல்லாத
ஈரமிலா நெஞ்சத்தார்க் கீந்த உபகாரம்
நீர் மேல் எழுத்துக்கு நேர்.
நாம் அப்படி உதவி செய்தவர்கள் ரொம்ப நல்லவர்களாக அமைந்து விட்டால் ஆஹா அதைவிட பாக்யம் வேறெதுவும் இல்லை. நல்லவர்களுக்கு செய்யும் உதவி, கல்லின் மேல் எழுத்தைச் செதுக்குவது போன்றது. எத்தனை கோவில்களில் ஆயிரம் ஆயிரம் வருஷங்களுக்கு முன்பு கல்லில் செதுக்கி வைத்திருக்கும் கல்வெட்டுகளை பார்த்து வியந்து போகிறோம். அது எவரும் அறியும் வண்ணம் என்றும் நிலைத்திருக்கும். அப்படியல்லாது இரக்கமற்றவர்களுக்கு, தகாதவர்களுக்கு செய்யும் உதவி எவர்க்கும் பயன்தராது. அது நீரின் மேல் எழுதும் எழுத்துக்களைப் போன்று பயனின்றி அந்த கணமே நிலைக்காமல் போய்விடும். பாட்டி எனக்கும் உன்னை மாதிரி தமிழ் பேச, எழுத சொல்லித்தருகிறாயா?
இன்னா இளமை வறுமைவந் தெய்தியக்கால்
இன்னா அளவில் இனியவும்-இன்னாத
நாளல்லா நாள்பூந்த நன்மலரும் போலுமே
ஆளில்லா மங்கைக் கழகு.
இளமையில் வறுமையும், இயலாத முதுமையில் செல்வமும் பெற்றால் அதனால் ஆபத்து தான் விளையும். நன்மை இல்லை. அதை அனுபவிக்க முடியாது. அது பருவமில்லாத காலங்களில் பூக்கும் பூக்களைப் போன்றது. அதைப் போல் துணைவனில்லாத பெண்களின் அழகும் வீணே. இன்னும் பெண்களுக்கு நமது பாரத தேசத்தில் முழுமையாக பாதுகாப்பு இல்லை என்பது மனதை நெருடும் உண்மை.
அட்டாலும் பால் சுவையில் குன்றா(து) அளவளாய்
நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர்
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு
சுட்டாலும் வெண்மை தரும்.
நற்பண்பு,நல்ல குணம் நல்ல பழக்கம், ஒழுக்கம், இல்லாதோரிடம் எவ்வளவு தான் அவர்கள் குறையை ஒதுக்கி விட்டு நாம் பழகினாலும் அவர்களால் நம்முடைய நல்ல நம்பகமான நண்பர்களாக முடியாது.. ஆக மாட்டார்கள். நம் நிலை தாழ்ந்தாலும் நற்பண்புள்ளோர் சிறந்த, நல்ல, உண்மையான நம்பகமான நண்பர்களாகவே பழகுவர். அவர்கள் நட்பு எவ்வளவு காய்ச்சினாலும் சுவை குன்றாத பாலைப் போன்றது. தீயிலிட்டு சுட்டாலும் மேலும் மேலும் வெளுக்கும் சங்கினைப் போன்றது இப்படிப்பட்ட நல்லவர்களுடைய நமது சிநேகம்.
அடுத்து முயன்றாலும் ஆகும்நாள் அன்றி
எடுத்த கருமங்கள் ஆகா – தொடுத்த
உருவத்தால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம்
பருவத்தால் அன்றிப் பழா.
மிக பருமனாக, உயரமாக, நெடிது வளர்ந்த மரம், கிளைகளோடு நிறைய இலைகளோடு, சரியான குறித்த பருவத்தில் மட்டும் பூக்கும், பழங்களைத் தரும். அது போல மேன்மேலும் நாம் எவ்வளவு தான் முயன்றாலும், நாம் செய்யும் கார்யங்கள் தகுந்த காலம் கூடினால் மட்டுமே பயன் தரும். இதை நம்முடைய வாழ்வில் நாம் பலமுறை முயன்று தோற்று அனுபவம் பெற்றவர்கள்.
இன்னும் வரும்.
No comments:
Post a Comment