Tuesday, March 15, 2022

BAGAVAN RAMANA MAHARSHI

                                                       

ஒரு  அதிசயப் பிறவி  -  நங்கநல்லூர்  J K  SIVAN 

எத்தனையோ  அற்புத விஷயங்கள் நம் கண்ணெதிரே நடந்தாலும் நாம் மறந்து போய்விடுபவர்கள். காலையில் சாப்பிட்டதே இரவு ஞாபகம் இல்லை.  ஆகவே  பகவான்  நமது நிலையை உணர்ந்து அவ்வப்போது யாராவது ஒரு அருமையான மனிதரை பிறக்கவைத்து அவர் மூலம் நமக்கு ஞானம் புகட்டுகிறார். இன்னொருவரை படைத்து அந்த ஞானியின்  உபதேசங்களை எழுதி எதிர்காலத்து உபயோகமாக இருக்கும்படி செய்கிறார். நமக்கு வேதங்கள், புராணங்கள், இதிகாசங்கள்,  ஸ்தோத்திரங்கள், கவிதைகள்,  மஹான்களின் வாழ்க்கை சரித்ரங்கள், உபதேசங்கள் எல்லாம் இப்படித்தான்  நமக்கு கிடைத்தும்  நாம் அவற்றை பயன்படுத்திக் கொள்ள மறக்கிறோம்.

வெங்கட்ராமனுக்கு எந்த முன் அனுபவமும் கிடையாது.  அவனுக்கு என்ன நடந்தது என்பது அவனுக்கே  தெரியாது.  ஏதோ  ஒரு ஆச்சர்யத்தை  தந்தது. அவனுக்கு யாரும்  குரு கிடையாது. எவரும் அவனுக்கு  எதுவும் போதிக்கவில்லை. அவனும் எங்கும் எதுவும் யாரிடமும் சென்று கற்றுக் கொள்ள செல்லவில்லை. 

அவன் நடந்ததைச் சொல்ல  அதைக் கேட்ட தேவராஜ முதலியார்  என்பவர்  22.11.1945ல்  தன்னுடைய  டையரியில் எழுதியது  ஒன்றே அவன் என்ன சொன்னான் என்று வெளி உலகம் அறிய  உதவுகிறது.  

“வீட்டில்  அறையில் கை கால்களை  நீட்டி மல்லாக்கப்   படுத்தேன். செத்துப் போவது போல் தோன்றியது.  ஆம்  நான் அன்று  செத்து விட்டேன்.  இதோ யாரோ வந்து என் உடம்பை தூக்கிக்கொண்டு போய் எரிக்கப்  போகிறார்கள்.  

 ஆனால்  '' நான் ''  சாகவில்லையே.  ஆத்மா என்கிறார்களே  அது உள்ளே இருந்து எழுந்தது. நான் அதாகி விட்டேன். நான் கீழே கிடக்கும் உடல் அல்ல. புது பிறவி. புது மனிதன். ஏதோ என்னுள் இருந்த ஒரு  சக்தி என்னை ஆட் கொண்டது.''

வெங்கட்ராமனுக்கு முன்னால்  எத்தனையோ யோகிகள் நூற்றுக்கணக்காண வருஷங்களாக   ஆத்ம விசாரம் சிந்தித்து எழுதி இருக்கிறார்கள். பாடி இருக்கிறார்கள்.  அவர்களுக்கு அது சுய அனுபவம்  இல்லை.  அதெல்லாம் வெங்கட்ராமனுக்கு ஒன்றுமே  தெரியாது.   அவன்   ஒரு சாதாரணமான  பள்ளிக்கூடம் செல்லும் சிறுவன்.  வெங்கட்ராமன் மேலே  சொன்னது எல்லாம் அவன்  திடீரென்று ஒருநாள்  சுயமாக அனுபவித்தது. அதை அவன் மறக்கவில்லை, அதைப்பற்றியே ,அவன் தன்னுடைய  அனுபவத்தை பற்றியே ,  விடாமல்  நன்றாக   ஆராய்ந்து  கொண்டே இருந்தான் என்பது தான் அவனை மற்றவர்களிடமிருந்து பிரித்துக்  காட்டுகிறது.

ஏன் அவன் பெற்றோரிடம் இது பற்றி சொல்லவில்லை?.   
ஓஹோ  அதை விளக்குவதற்கான  ''வார்த்தைகள்'' அவனிடம் அப்போது இல்லையா?  
ஆனால்  அன்று முதல்  பெற்றோரும் மற்றோரும்  வெங்கட்ராமனிடம் ஏதோ மாற்றம் இருப்பதை கவனிக்கத்  தவறவில்லை..  
 சாப்பாட்டில் கவனம் இல்லை. விளையாடும் நண்பர்களை தேட வில்லை. படிப்பில் புத்தி போகவில்லை. பள்ளியில் ஆசிரியர்களும் வீட்டில் பெற்றோர்களும் இப்போது வெங்கட்ராமனை பற்றி  கவலை கொண்டனர்.  என்ன ஆயிற்று திடீரென்று இந்த  வெங்கட்ராமன் பையனுக்கு ?  ஏதோ பிரமை பிடித்தவன் போல் இருக்கிறானே எப்போதும்.

அவனது  அண்ணாவுக்கு ரொம்ப கோபம்.   ''என்னடா  உன் மனதில்  நீ  பெரிய  யோகிராஜ்  என்று எண்ணமோ? '' என்று கேலி செய்தார். சீண்டினார். வெங்கட்ராமன்  அவரையே அவர் வார்த்தையையே  லக்ஷியமே பண்ணவில்லை.  அவனது சிந்தனை நூல் அறுகாமல்  தொடர்ந்தது. 

ஒருநாள்  வீட்டில்   பள்ளிப் பாட  புத்தங்களை வீசி எறிந்துவிட்டு  தனிமையில் அமர்ந்து  ஏதோ சிந்தனையில் இருந்தான்.  அது  ஆத்ம தியானம் என்று அவனுக்கு தெரியாது. தன்னை மறந்தான். அண்ணா இதை பார்த்துவிட்டு சும்மாவா இருப்பார்?  எரிச்சலில் கத்தினார்:
“எப்பேர்ப்பட்ட  மகா யோகிடா   நீ, உனக்கு எல்லாம்  எதற்கடா, பள்ளிக்கூடம், பாட  புத்தகம் இதெல்லாம்?'
வெங்கட்ராமன் அதை கண்டுக்கவே இல்லை. அவனைத்   திருத்த  அண்ணா எடுத்த முயற்சிகள் வீண்.
வெங்கட்ராமன் மனதில் சிந்தனை  விடாமல்  நிற்காமல் ஓடியது.

''ஒருவேளை அண்ணா சொல்வதில் அர்த்தம் இருக்கிறதோ?  அது  சரியோ?  பாடங்கள், வாத்தி யார்கள், புத்தகங்கள்..... இதெல்லாம் அவசியமில்லையோ? 
எனக்கு நேர்ந்த அனுபவத்திற்கு பிறகு இதிலெல்லாம் அர்த்தம் இருக்கிறதா? 
மின்னல்  மாதிரி ஏதோ ஒன்று பளிச்சென்று மனதில் புகுந்தது
 ''அருணாச்சலம்''  அருணாசலா''.......இது எங்கே இருக்கிறது.?  ஏன் என்னை இப்படி தொடர்ந்து ஈர்க்கிறது?
தியானம் செய்து  கொண்டிருந்தவன் கண்ணைத்   திறந்தான்.  புத்தகங்களை வாரி எடுத்தான். அறையை விட்டு வெளியேறினான்.   அண்ணாவிடம் சென்றான்.

''அண்ணா,  எனக்கு இன்னிக்கு  ஸ்பெஷல் கிளாஸ் இருக்கு பிசிக்ஸ் PHYSICS  பாடத்தில்.  ஸ்கூல் போறேன்'' 
''சரி,  வெரி  குட்.   போய்ட்டு வா.   இந்தா  அப்படியே  ஸ்கூல் போகிற வழியில் என் காலேஜூக்கு  போ.   இந்த ஐந்து ரூபாய் எடுத்துண்டு போய்  என் காலேஜ் பீஸையும் FEES  கட்டிட்டு வா ''.  

நண்பர்களே,  அண்ணா கொடுத்த  காலேஜ் பீஸ்  ஐந்து ரூபாய்  இன்று காலை  வரை காலேஜுக்கு போய் சேரவில்லை.
வெங்கட்ராமன் நேராக ரயில்வே நிலையம் சென்றான். சஅப்போதெல்லாம் ஜிகுபுகு  புகை வண்டி ரயில் தான். ஏதோ ஒரு  டிக்கெட் வாங்கினான்.   வண்டியில்  ரெண்டாம் வகுப்பில்  உட்கார்ந்தான். வண்டி  கோ வென்று கத்திவிட்டு கிளம்பியது.  எங்கோ இறங்கி எப்படியோ  சுற்றி அலைந்து ஒருவழியாக   1.9. 1896 அன்று வெங்கட்ராமன்   திருவண்ணாமலை போய் சேர்ந்தான் .

அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தில்  பெரிய  லிங்கம் முன் நின்றான்.   எத்தனையோ  மஹான்கள், சித்தர்கள், நாயன்மார்கள்,  பக்தர்கள்  நின்று கண்குளிர தரிசித்த   பழங்கால பரமேஸ்வரன்.  

ஜெகஜோதியாக தீபங்கள் எரிந்தது.  மலர் வில்வ    மாலைகள் சூட்டிக்கொண்டு   அருணா சலேஸ்வரர்  சிவலிங்கமாக  வெங்கட்ராமனைப் பார்த்தார்.  அவன் மனதில் புகுந்து  குடி கொண்டார். அப்போதிலிருந்தே  வெங்கட்ராமன் பேசாமல் மௌனமானான். எங்கெங்கோ  ஆலயத்தில் இருந்து பார்த்து  விட்டுகடைசியில்   மலைக்குகை ஒன்றை  தனது   இருப்பிடமாக்கிக் கொண்டான்.  
ஒரு சாதாரண பள்ளிக்கூட பையன் இவ்வாறு ஒரு  கோவணாண்டி  மௌன சாதுவானான்.  அவனுக்கு மௌன விரதம் தெரியாது. அவன் அதெல்லாம் நாடவோ, தேடவோ இல்லை.  பேசவில்லை. தனக்குள்ளேயே  எப்போதும் சிந்தனையில் மூழ்கியவன். சில வருஷங்கள் இப்படி ஓடியது.  அவன் தபஸ்  எதுவும் செய்யவில்லை.

''  நீ  யாரப்பா, எந்த ஊர், உன் தாய் தந்தை யார்?  எதற்குமே எவருக்குமே பதில் இல்லை. மௌனம்.   ப்ராமணப்பையனாக இருக்கிறானே. இப்படி மௌன விரதம் மேற்கொண்டிருக்கிறானே என்று ஒரு சாமியார் அங்கே வந்தபோது  அதிசயித்து  உனக்கு  சன்யாசம் தீக்ஷை தருகிறேன் என்று சொன்னார்.  பதிலே இல்லை.  யோசித்து சொல். அப்புறம் வருகிறேன் என்று அவர் போய் விட்டார்.  

யாரோ ஒரு முதியவர்  சில புத்தகங்களை அவன் முன்னே  குகை வாயிலில் போட்டுவிட்டு  ''இது இங்கே இருக்கட்டும்  வந்து எடுத்துக் கொள்கிறேன்'' என்று சொல்லிவிட்டு  சென்றார்.  அதில்  ஒரு புத்தகத்தை எடுத்து பிரித்தான். அந்த பக்கத்தில்    அருணாசலேஸ்வரர்  யாருக்கோ   யாரிடமோ  ஒரு காலத்தில்  கொடுத்த வாக்கு காணப்பட்டது:

 “இந்த அருணாசலேஸ்வர மலையை சுற்றி  மூன்று யோஜனை தூர வட்டத்திற்குள் யாரெல்லாம்  வசிக்கிறார்களோ , அவர்களுக்கு  நிச்சயம்  மோக்ஷம் உண்டு. அதற்கு  எந்த தீக்ஷையும், வேண்டாம் ''
என்று அதில் எழுதி இருந்தது.
 
''உனக்கு சன்யாசம் தருகிறேன் யோசித்து பதில் சொல்'' என்று  கூறி  விட்டு சென்ற சன்யாசி திரும்பி  வருகிறார். வெங்கட்ராமன் அந்த புத்தகத்தின் பக்கத்தை அவரிடம்  காட்டுகிறான்:  பார்த்து விட்டு  பேசாமல் போய்விடுகிறார்.

ஒரு நாள்  ஒரு ஸமஸ்க்ரித  பண்டிட்,  புலவர், கவிஞர், குருவாக பல பேருக்கு உள்ளவர் வருகிறார்.  இந்த இளைய  பிராமண சுவாமி வெங்கட் ராமனை பார்க்கிறார்.  அவருக்கு  ஏதோ  ஆன்மீக சந்தேகம். அதை மெளனமாக  இந்த இளைய சுவாமி  எதிரில்  அமர்ந்தபோதே  நிவர்த்தி செய்து கொள்கிறார்.  பரம சந்தோஷம் அவருக்கு  உடனே  சமஸ்க்ரிதத்தில் ஒரு ஸ்லோகம் இந்த இளைய சுவாமி பற்றி எழுதுகிறார்.  அவரை  ' மஹரிஷி' என்று போற்றுகிறார்.  தனது சிஷ்யர்களை அழைத்து இனி ''இந்த இளைய ஸ்வாமியை'' மகரிஷி என்றே அழைக்கவேண்டும் என்று சொல்கிறார். தானே  இளைய சுவாமியின்  சிஷ்யனாகிவிட்டார்.  அவரைத்தான்  காவ்ய  கண்டா, கணபதி முனி  என்று நாம் அறிகிறோம்.  

ஒரு முக்கியமான விஷயம்.  தனது  பெயரை ஒரு முறை கூட  அந்த மௌன சுவாமி சொல்லவில்லை. எல்லாவற்றையும் மறந்துவிட்டார். எங்கும் தனது பெயரை  எழுதவில்லை.  ஒரு உடம்புக்கு  தானே பெயர். நான் ஆத்மா, உடம்பு இல்லையே , எனக்கு பெயரும் உருவமும் எதுவும்  இல்லை.'' என்பது அவர் கோட்பாடு.  அவர் சச்சிதானந்த  ஸ்வரூபம் .  54 வருஷம் அருணாச்சலேஸ்வரர் நிழலில்  வாழ்ந்த   அந்த வெங்கட்ராமன் தான் பிற்காலத்தில்  நாம் வணங்கும்   பகவான் ரமண மகரிஷி.


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...