Wednesday, September 30, 2020

HAMPI

 



ஒரு  அற்புத  கலைக் களஞ்சியம் J K  SIVAN 









நெஞ்சில் இடம்பிடித்த  ஒரு  ஊர்  வட  கர்நாடகாவில்   பெல்லாரியில்  இருந்து  80  கி.மீ.   பெங்களூரிலிருந்து  420 கி.மீ.  தூரத்தில் உள்ள  ஹம்பி.  ஹோஸ்பேட்டிலிருந்து  8 கி.மீ. 

 உலகத்தில் ஒரு  சிறந்த பழங்கால அடையாள சின்னம் துங்கபத்ரா நதிக்கரையில்  ஒதுங்கி அமைதியாக  தனது   புகழ் மிக்க  சரித்ரத்தை  சத்தம் போடாமல்  வெளிப்படுத்துகிறது. அங்குள்ள  விட்டலன் கோவிலின் சிற்ப அழகுக்கு ஈடு உண்டா?   அங்கே இருக்கும்   56 இன்னிசை எழுப்பும் கல் தூண்களுக்கு தான் இணையுண்டா?  ஸ  ரி க ம  தூண்கள்  என்று பெயர் கொண்ட அவற்றை மெல்லிதாக தட்டினாலே போதும்.  வீணை தோற்றது.  கவனிப்பாரற்று சிதைந்த புராதன சின்னம் ஹம்பி.

ஹம்பி நாம் நினைப்பது போல் விஜயநகர காலத்திய சிற்பக் கோயில் இல்லை. முதலாம் நூற்றாண்டை சேர்ந்தது. மூன்றாம் நூற்றாண்டில் அசோகனின் அதிகாரி அதை  ஆண்டிருக்கிறான். ஹம்பியின் புராணப்பெயர்  கிஷ்கிந்தா க்ஷேத்ரம்., பம்பா க்ஷேத்ரம், பாஸ்கர க்ஷேத்ரம்,  இங்கே துங்கபத்ரையின் முந்தைய பெயர் பம்பா. அதன் தென் கரையில் தான் ஹம்பி உள்ளது.  பம்பாவை ஹம்பே என்பார்கள் கன்னடத்தில். அதிலிருந்து புறப்பட்டது ஹம்பி.    இங்கே  ஹஸாரா  ராமர் கோவில் உண்டு.  ராமர் கிருஷ்ணன் காலத்திய அடையாளங்கள் இங்கே காணப்படுகிறது. சுவர்களில்  இராமாயண நிகழ்ச்சிகள்  சிலையாக காண்கிறதே.

எட்டடி  உயர  கணேசர் கண்ணைப்  பறிக்கிறார். இடுப்பில் நாகம் சுற்றி இருக்கும். அது தான் BELT . சதுர் புஜம்.  ஒரேகல்லில் ஆன சிலை.  விஜயநகர  ராஜா  ராணி வசித்த  59000 சதுர மீட்டர் தடுப்பு  கொண்ட   தாமரை மஹால் அரண்மனை பெண்டிர் வசித்த பகுதி சிதிலமடைந்துள்ளது.  சரித்திர சிறப்பு மட்டுமல்ல  அருங்கலை நிறைந்த அற்புத  உல்லாச பயண ஸ்தலம். 

14ம் நூற்றாண்டில் விஜயநகர சாம்பிராஜ்யத்தின் தலைநகரம் ஹம்பி.  உலகத்தில்  சீனாவின்  பீகிங் நகரத்திற்கு அடுத்து விஸ்தாரமான, விசாலமான நகரம் ஹம்பி.  ராம லக்ஷ்மணர்கள் அடிக்கடி விஜயம் செய்த ஸ்தலம்.  கம்பியின் மலைக்குகைகளில்  சுக்ரீவன் வாழ்ந்ததாக  சொல்வார்கள்.  இங்கே உள்ள  ஹேமகூட சிகரத்தில் தான்  சிவன் தவமிருந்த போது  அவர் கவனத்தைக்கலைத்த  மன்மதனை  நெற்றிக்கண்ணால் எரித்த இடம்.  ஹனுமானின் ஜென்ம ஸ்தலம் அஞ்சனாத்ரி  மலை ஹம்பியில் தான் உள்ளது.1060 படிகள் கொண்ட  ஆஞ்சநேயர் ஆலயம்.   அங்கேயே  அவர் தாய்  அஞ்சனாவிற்கும் கோவில்.

இங்குள்ள 7ம்  நூற்றாண்டு கட்டப்பட்ட 160 அடி  உயர  கோபுரம் கொண்ட  விருபாக்ஷ ஆலயத்தின் எதிரே ஒன்று கி.மீ தூர, நீளம் கொண்ட,   ஹம்பி கடைத்தெரு.  நடப்பதற்கு சுகமான தெரு.   தெருவின் கிழக்கு மூலையில்  பெரிய  நந்தி சிலை. ஐநூறுக்கும் மேற்பட்ட  சரித்திர சான்றான  ஓலைச்சுவடுகள் நிறைய  ஹம்பியைப் பற்றி சொல்கிறது.

கிருஷ்ண தேவராயர் காலத்தில் 15ம் நூற்றாண்டில்   தான் அநேக  ஹிந்து கோவில்கள் கட்டப்பட்டன. புனரமைக்கப் பட்டன. அவற்றில் ஒன்று  ஹஸாரா ராமா கோவில்.  

பரமேஸ்வரன்,  கிருஷ்ணன் ஆலயங்கள்  இன்னும்  சிவன் மற்றும் கிருஷ்ணர் கோயில் இப்போதும் உயிர்ப்புடன் வழிபாட்டில் தொடர்ந்து வருகிறது.   உலகெங்கிலிருந்தும்  ஹிந்துக்கள் வழிபாட்டுக்கும்  சுற்றுலா  உல்லாசப்பயணத்திற்கும் கலையை ரசிக்கவும்  விடாமல்  எறும்பு போல்  சாரி சாரியாக  வருகிறார்கள்.

ஹம்பி மலையில்  ஒரு  அழகான  ஆலயத்தில் இருப்பவர்  மால்யவந்த ரகுநாதர். அங்கிருந்து பார்த்தால், ஹம்பி பள்ளத்தாக்கின் ஒட்டுமொத்தக் காட்சியும் காணக்கிடைக்கும். பாறைக்குன்றுக் கூட்டங்களும், தென்னையும், வாழையும், வயல்களும் துங்கபத்திரையின் வளைந்த ஓட்டமுமாய்க் கண்ணுக்கினிய  குளு  குளு  காட்சிகள்.

கிருஷ்ண தேவராயருக்கு அப்புறம் வந்த ராஜா அச்சுத ராயர். அவர் கட்டியது அச்சுதராயர் ஆலயம்   போடி நடையாக அங்கிருந்து நடந்தால் விட்டலன் ஆலயம் தரிசனம் தரும்.சிறந்த கலைச்சிற்ப  வேலைப்பாடு கள்   நுணுக்கங்கள் நிறைந்தது.

ஹம்பியில் எல்லாமே இருக்கிறது.  யானை கொட்டடி, படைகள் தங்குமிடம், காசு பட்டறை, மசூதி, நவராத்ரி விழா மேடை,  படிகள் நிறைந்த குளம்,  சிவாலயம்,  ஒரே கல்லில் நரசிம்மர், ஒரே கல் விநாயகர்,  மண்டபங்கள்,  இன்னும் என்னென்னவோ.  ஜம்மென்று  இங்கே  துங்கபத்ரா  ஸ்னானம் பண்ணலாம்.   புரந்தரதாசர்   ராம கீர்த்தனைகள் இயற்றியது இங்கே தான். பட்டாபிராமன் கோவில்.   இன்னும் என்னென்னவோ ஸ்வாரஸ்யமான  விஷயங்கள் கொண்டது.  .   ஹம்பியில் முழுதும் சுற்றி பார்க்க குறைந்தது நாலு நாள்  தங்குவது  சமயோசிதம். அபூர்வங்கள் நிறைய  இருக்கிறது.

விஜயநகர சாம்ராஜ்ய காலத்தில்  தலைநகரான ஹம்பியை சுற்றி    ஏழு வரிசை கொண்ட கோட்டைகள்  இருந்தது.  ஹம்பியை பற்றி  ஆயிரம் பக்கங்களுக்கு குறையாமல் எழுத  நிறைய  சமாச்சாரம் இருக்கிறது.  யார் படிப்பார்கள்?



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...