தணியாத சுதந்திர தாகம் J K SIVAN
இன்று ஒரு மகத்தான நாள். ஒரு சிறந்த இந்தியன் பிறந்த நாள். எழுந்து நின்று தலை வணங்குவோம். பிரபல பெயர் கொண்ட தியாகி. ‘வ. உ. சி’ தான் அந்த இந்தியன். சிவாஜி நடிப்பால் பலபேருக்கு அறிமுக மானவர்.
19ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் இந்தியாவின் மிக முக்கியமான வக்கீல்களில் ஒருவர். வெள்ளைய னிடமிருந்து தாய் நாடு சுதந்திரம் பெற போராடி, செக்கிழுத்து சுதந்தரம் வருவதற்கு முன்பே மறைந்தவர். அவர் குடும்ப வாரிசுகள் பரம ஏழைகளாக வாழ வைத்து விட்டோம். அதிர்ஷ்டமுள்ள சில குடும்பங் களோ ஒன்றும் செய்யாமல், ''எப்படியோ'' உலகில் சிறந்த முக்கிய செல்வந்தர்களாக இருக்கும்போது, உண்மையாக உழைத்து உயிர் விட்ட வ.உ.சி, பாரதியார், வ.வே. சு. சுப்ரமணிய சிவா போன்றவர்களின் குடும்பங் கள் ஏனோ தெருவில் நிற்பதற்கு நமது கவனக் குறைவும் நன்றி மறந்த தன்மையும் தான் காரணம். 90 பெர்ஸன்ட் மார்க் வாங்கிய அவர் வம்சாவளி ஒரு பெண்ணுக்கு மேற்கொண்டு படிக்க பணவசதியில்லாமல் தடுமாறுகிறார் என்று மேலே படிக்க முடியாமல் கண்ணில் நீர்த்திரை.
தூத்துக்குடி - கொழும்புவிற்கு சுதேசி கப்பல் அமைத்த கப்பலோட்டிய தமிழன். புரட்சி மனப்பான்மையும், ஆங்கிலேய ஏகாதிபத் தியத்தை எதிர்க்கும் துணிச்சலும் அவரது மூலதனம். அவரது ‘பாரிஸ்டர் பட்டம்’ பறித்தார்கள். கவலைப்படவில்லை அவர்.
தூத்துக்குடி செல்லும் வழியில் ஓட்டப்பிடாரம் கிராமத்தில் செப்டம்பர் 5, 1872ல் பிறந்தவர். தந்தை உலகநாதம் பிள்ளையும் வக்கீல் தான். நவம்பர் 12, 1906ல், ‘சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் நிறுவனம் துவங்கினார். ரெண்டு நீராவிக் கப்பல்கள். “எஸ்.எஸ்.கலிலியோ, எஸ்.எஸ். லாவோ”, வாங்கினார். அவரது கம்பெனி, ஆங்கிலேய அரசாங்கம் ஆதரித்த BISN பிரிட்டிஷ் இந்தியா ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனிக்கு போட்டி என்று கருதி அவரை துன்புறுத்தியது ஆங்கிலேய அரசாங்கம். கட்டணத்தை குறைத்து அவரை நஷ்டப்படுத்தியது. தளரவில்லை வஉசி. கப்பல்கள் ஏலத்தில் விற்கப்பட்டன.வ உசி , நாட்டில் சுதேசி இயக்கத்தை விரிவாக்கவும், தவறான ஆங்கிலேய அரசாங்கத்தைப் பற்றி இந்திய மக்களிடையே விழிப்புணர்ச்சி ஏற்படுத்துவதில் கருத்தாக இருந்தார்
திருநெல்வேலியிலுள்ள ‘கோரல் மில்ஸ்’ தொழிலாளர்களின் ஆதரவைப் பெற்றார். ஆங்கிலேய அதிகாரிகள் ஏற்கனவே அவர் மீது கொண்ட கடுப்பினால் வெறுப்பினால், அவர் மீது தேசத்துரோக குற்றச்சாட்டை வைத்து மார்ச் 12, 1908 அன்று அவரைக் கைது செயது. சிறையில் அடைத்தனர். தென் ஆப்ரிக்காவிலிருந்த மகாத்மா காந்தியும், வ.உ.சியின் பாதுகாப்பிற்காக, மேலும் நிதி சேகரித்து இந்தியாவுக்கு அனுப்பினார். வ உ சி கோயம்புத்தூர் மத்திய சிறையில் 9.7.1908 முதல் 1.12.1910 வரை துன்பம் அனுபவித்தார். தக்க பராமரிப்பு, உணவு, எண்ணைய் அரைக்கும் வலுவான மரச் செக்கு மாட்டுக்குப் பதிலாக இழுப்பது கடின வேலை இருந்த தால் உடல்நிலை குன்றிய வ உ சி 1.12.1912ல் விடுதலை செய்தார்கள். பரம ஏழையாக சென்னைக்கு 2 குழந்தைகளோடு வந்தார். சுப்ரமணிய சிவா, வ வே சு அய்யர், பாரதியார் ஆகியோர் பழக்கமானார்கள் .. பாடுபட்டு தேடிய சுதந்திரத்தைப் பார்க்காமலே யே வ உ சி தூத்துக்குடி யிலுள்ள இந்திய தேசிய காங்கிரஸ் அலுவலகத்தில் 18.1்1.36அன்று காலமானார்.
இப்போது அவருக்கு சிலைகள் இருக்கிறது, மத்திய அரசாங்கம் ஒரு தபால் தலை வெளியிட்டது. தூத்துக்குடி துறைமுகம் அவர் பெயரை தாங்குகிறது. தெருக்களில் அவர் பேர் தெரிகிறது. அவரது வாரிசுகள் பரம ஏழைகளாக எந்த உதவியும் சலுகையும் பெறாமல் தவித்துக் கொண்டு தான் இன்னும் இருக்கிறார்கள் . நேரு குடும்பம் போல் வாழ அதிர்ஷ்டம் இல்லை.
No comments:
Post a Comment