Friday, September 25, 2020

svkarai agraharam

                                           



   சரித்திரம்  படைத்த சாம்பவர் வடகரை  -  2       J K  SIVAN  

 
சென்னையிலிருந்து தென்காசிக்கு நிறைய ரயில்  வண்டிகள் எழுமூரிலிருந்து செல்கின்றன.  நான் பயணிக்கும்போது புதிதாக பொதிகை எனும் ஒரு வசதியான ரயில் வண்டி  தாம்பரத் திலிருந்து  2019 அக்டோபர் 10ம் தேதியிலிருந்து புறப்பட்டது.   நாம்  அமர வேண்டிய  பெட்டி  எங்கே நிற்கும் என்று தேட ஒரு பலகை வைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு  ரயிலிலும்   பெட்டிகள்  வந்து நிற்கும் இடம்  காட்டும்.  புது வண்டியாகையால்  சரியாக  சொல்ல முடியவில்லை.  தாம்பரம் ரயில் நிலைய  கடைக்காரர்கள்,  சிகப்பு சட்டை போர்ட்டர்கள்  மூலம்   பெட்டி யைத் தேடி  பெட்டி படுக்கைகளை சுமந்து  அங்கேயும் இங்கேயும் அலைவது வயதானால் சிரமம் தான்.  பாவம்  என் புத்தகப் பையை வேதநாராயணன் தன்னுடைய பெட்டியோடு சேர்த்து  தூக்கி வந்து உதவினார்.  அதே போல்  தாம்பரம் ஸ்டேஷன்  பாலம் படி ஏறி  எத்தனையாவது பிளாட் பாரத்தில்  பொதிகை எக்ஸ்பிரஸ் நிற்கும் என்பதிலும் சந்தேகம் வந்துவிட்டது  புதிதாக அறிமுகப்படுத்தியதால்  ஒருவர்  ஆறாவது  இன்னொருவர்  எட்டாவது என்று  சொல்லி  ரெண்டு முறை படிக்கட்டுகள் கீழும் மேலும் சுமையோடு ஏறுவது  ரயில் பிரயாணம் சுகமானதல்ல  என்று நிரூபித்தது.  பொதிகை  சாதுவாக  எனக்கு எதிரே  அடுத்த நடைமேடையில் நின்றுகொண்டிருந்ததை  அதன் பெயர் அடையாளம் காட்டி படிக்கட்டு ஏறி அடுத்த நடைமேடை இறங்கி  பெட்டி  தேடி அமர்ந்தோம்.  இதற்குள் எனது ஒரு பாட்டில் தண்ணீர் காலியாகி விட்டது. 

ஸ்ரீ    S .R . கிருஷ்ணன்,  ஏற்கனவே சில நாட்களுக்கு முன்பே  சாம்பவர் வடகரை  சென்று  அவர்  புதுப்பித்த பழைய பெரிய  அரண்மனையில்,(அதை எப்படி  வீடு என்று சொல்லமுடியும்?)   தங்கி இருந்ததால் எங்களை வரவேற்று உண்ணவும் உறங்கவும்  அங்கே  வசதியாக இருந்தது.  

சாம்பவர்  வடகரைக்கு சென்றதும் வெளி உலகத்தோடு தொடர்பு அறுந்து விட்டது.  அங்கே இன்டர்நெட் டவர்  வசதி இல்லை.  மொபைல்  போன் வேலை செய்யவில்லை.  அதை  நான் வரவேற்றேன் ஏனென்றால் அந்த ஊரில் அமைதியாக  ஓரிரு  நாட்கள் தங்கும்  அமைதியை , சுகத்தை,  வெளி தொடர்பு எதுவும் கெடுத்துவிடக்கூடாது என்ற  பேராசை.   மூன்று நாட்கள் கிட்டத்தட்ட அற்புதமாக செலவழிந்தது.

ரயில்களைத் தவிர  நிறைய  பஸ்கள் தென்காசிக்கு செல்கிறது. அவரவர் விருப்பப்படி பயணம் செய்யலாம்.   ரயில்  தென்காசி ஜில்லாவுக்கு  ஆறு  ஏழு மணி நேரத்தில் கொண்டு சேர்த்து விடுகிறது.   தென்காசியிலிருந்து  ஏறக்குறைய  ஆறு கி.மீ.  தூரத்தில்  உள்ள  பழைய அற்புத கிராமம்  தான்   சாம்பவர் வடகரை அக்ரஹாரம். ஆய்க்குடி வழியாக கிராமப் பாதை சாம்பவர் வடகரைக்கு கூட்டிச்  செல்கிறது.

என்ன பேரு  வைக்கலாம் எப்படி அழைக்கலாம்  என்று நமது முன்னோர்கள் சிலர்  ஆராய்ந்து  சாம்பவர் வடகரை என்று நாமகரணம் சூட்டினார்கள்  என்றாலும்   அதையும் தாண்டி  ஒரு சுவாரஸ்யமான  புராண கதை இருக்கிறதே.

ராமாயண காலத்தில்  ராம லக்ஷ்மணர்கள் ஜாம்பவான் ஹனுமாரோடு  கூட்டமாக  தென் பொதிகை மலை பக்கம் வந்து தான்  இலங்கைக்கு பயணமானார்கள்.  பொதிகை மலையில் அகஸ்தியரை பார்த்தார்கள். தரிசித்தார்கள். அகஸ்தியர் தான் அப்போது அவர்களுக்கு  குற்றாலத்துக்கு அருகே இருக்கும் இந்த ஊரை நோக்கி சென்று சிவ தரிசனம் பெறுங்கள் என்று அனுப்புகிறார்.

அந்த காலத்தில் இந்த பிரதேசம் ஒரு பயங்கர  காடு. சிவனுக்கு அபிஷேகம் பூஜை எல்லாம்  செய்ய ஜலம் வேண்டுமே.   தண்ணீர்  எங்கும்  இல்லையே என்ன செய்வது என்று யோசிக்கிறார்கள்.  ஹனுமான் இருக்கிறானே எதற்கு கவலை?  ஹனுமான் நீ தான் தண்ணீருக்கு  ஏதாவது ஒரு வழி செய்யவேண்டும் என்று கேட்கிறார்கள்.

 ''இதோ நான் கொண்டுவருகிறேன்''  என்று கூறிய  ஹனுமான் சற்று தூரத்தில் இருக்கும்  அச்சங் கோவில் செல்கிறார் . அந்த மலையை வாலால் சுழற்றி  ஒரே  அடி .   மலை பிளவு படுகிறது. குபுகுபுவென்று  சுவையான  சுத்தமான   நீர்  சுனையாக  தோன்றி  வெள்ளமாக பெருகி  ஹனுமானின் வாலைத்  தொடர்ந்து செல்கிறது.   வால்  வழிகாட்டுகிறது.   ராமர் லக்ஷ்மணன் சுக்ரீவர்  தென்பக்கமாகவும்,  ஜாம்பவான் வடக்கு பக்கமாகவும்  இருந்து கொண்டு நடுவே  ஹனுமான் கொண்டுவந்த நீரை  எடுத்து  சிவனை வழி  படுகிறார்கள்.  ஹனுமான் கொண்டுவந்த நதி தான் ஹனுமான் நதி.   சாம்பவர் வடகரையில்  இன்றும் இருக்கிறது. மழைக்காலத்தில் வெள்ளம் பெருகி ஓடுகிறது.அங்கங்கே  பாலம் குறுக்கே   அமைத்திருக் கிறார்கள்.  

 ' ஜாம்பவான் நீ  வடக்கு கரையில்  காவலாக   இரு '' என்று ராமர் சொல்லியதால்  அந்த இடம் தான்  ஜாம்பவான் வடகரை,  சாம்பவர் வடகரை என்று காலப்போக்கில் தேய்ந்து விட்டது.   ஊரின் நடுவே மேற்கிலிருந்து கிழக்காக    மேலே சொன்ன   ஹனுமான்  நதி  கோவிலை உத்தர வாகினியாக சுற்றி ஓடிக்கொண்டிருக்கும்.  ஆற்றின் மேற்குப்புறம் பிராமணர்கள் குடியிருப்பும் ஆற்றின் கிழக்குப்புறம்  மற்ற குடும்பங்கள்  வாழ்ந்த  குடியிருப்புகளும்  தோன்றின.   பிராமணர்கள் குடியிருப்பு களுக்கு   பொதுவாக "அக்ரஹாரம்" என்று  பெயர்..

மஹாகவி  பாரதியார்  வாழ்க்கை சம்பந்தப்பட்ட  கடைய நல்லூர் தாலுகாவை சேர்ந்த இந்த கிராமம் ஒரு பஞ்சாயத்து நிர்வாகத்தை கொண்டது.   திருநெல்வேலியிலிருந்து 60 கி.மீ.  தூரத்தில் இருக்கும் ரயில்  நிலையம் தென்காசி.   விமானம் வழியாக வருவோர்கள் மதுரை வரை பறக்கலாம். அப்புறம் தரையில்  பஸ் , ரயில், சொந்த வண்டி. வாடகை வண்டி.  பஸ், இதில் சௌகர்யமோ அப்படி வந்து சேரலாம்.  தென் காசி யிலிருந்து  ஆய்க்குடி வரை பஸ்  சுரண்டை கிராமம்  வழியாக செல்கிறது. அங்கே இறங்கியும்  ஒன்றிரண்டு கி.மீ. தூரம் காலாற நடக்கலாம்.

இந்தியா சுதந்திர நாடாகியபோது  1956ல் மாற்றம் பெரும் வரை திருவாங்கூர்  ராஜாக்களின் சமஸ்தான கட்டுப்பாட்டில் இருந்தது.

இன்னும் சொல்கிறேன்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...